அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,
வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள்.
ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது. ஏனனில் ஒரு எழுத்தாளனும் ஒரு மனிதனே. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் நிறை குறைகளை அவரிடமும் நாம் காணலாம். ஆனால் நாம் எழுத்தாளர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான்.
அவ்வப்போது சந்திக்கும் காதலி எதிர்பார்ப்பில் உருவாக்கும் பிம்பங்கள் அவளை எப்போதும் மனைவியாகப் பார்க்கும்போது உடைவது போல எழுத்தாளர்களை சந்திக்கும்போதும் ஏற்படலாம். நம் மனதில் பல சித்திரங்களை உருவாக்கியிருப்போம் எழுத்தாளர்களைப் பற்றி அவர்களின் படைப்புகளால். ஒரு படைப்பு என்பது ஒரு எழுத்தாளனின் முழு உருவத்தில் ஒரு கற்பனை அல்லது நிஜ சிறு மிகசிறு பகுதியே என்பதை நாம் உணரவேண்டும். ஒரு படைப்பைப் படித்தவுடன் நம் மனது ஏற்படுத்தும் உணர்வுகள் எண்ணங்கள் எல்லாமே ஒரு தனி மனித அனுபவமே என்பதையும் நாம் அறியவேண்டும். பல நேரங்களில் ஒரு ஆசிரியரின் நோக்கத்திற்கு எதிர்மறையாகக் கூட நம் உருவாக்கங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஒரு ஆசிரியரின் எழுத்து வரிகளைக் கொண்டு நம் மனதில் ஒரு வரைக் கலைஞரைப் போல ஒரு கற்பனைச் சித்திரத்தை வரைந்திருப்போம். ஆனால் அப்படிதான் நிஜ எழுத்தாளரும் இருப்பாரா?
இப்போதெல்லாம் நம் நிதர்சன வாழ்வின் இன்றியமையாத பொருளாகக் கணினியும் கைபேசியும் இருக்கையில் பல எழுத்தாளர்களைப் பற்றிப் பல செய்திகளையும் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும் நாம் ஆர்வம் ஏற்பட்டவுடனேயே அறிந்துகொள்கிறோம். ஒரு படைப்பைப் படித்தவுடன் அது மனதில் தங்கி கனிந்து ஆர்வ உந்துதலினால் பல ஆராய்ச்சி செய்து அந்தத் தேடல்களினால் முதிர்ச்சி பெற்றுக் கிடைக்கும் ஒரு சில செய்திகளிலிருந்து காலத்தினால் நம் மனமே உருவாக்கும் கற்பனையையும் கலந்து ஒரு எழுத்தாளரைப் பற்றி நாம் உருவாக்கும் உருவகம் அதை நாமே நினைத்து நெகிழும் தருணங்கள் இப்போது இல்லை.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவலை சென்னையிலிருந்து திருச்சி வருகையில் படித்துமுடித்தேன். அதுவும் அன்று முன்பதிவு இல்லாமல் பதிவில்லா ரயில்பெட்டியில் என் பெருத்த உருவத்தின் ஒரு சிறு பகுதியே அமர இடம் கிடைத்தது. மற்ற எல்லோரும் படுத்து உறங்குகையில் நான் மட்டும் ஒரு தனி உலகத்தில் பயணித்தேன். பல கால்கள் அவ்வப்போது என்னை உதைத்து மலைக்கோட்டை ரயில் பயணத்திற்கு இழுத்தன. இருபதுகளின் மத்தியில் என் வயது அப்போது. திருமணமாகவில்லை. சாதாரணமாக உள்ளுணர்வுகளை எண்ணங்களை அலசுவதை ஆர்வமுடன் படிக்கப் பிடித்த எனக்கு அந்த நாவல் ஒரு தனி அனுபவத்தை அளித்தது. நான் இதே அனுபவத்தை லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘RESURRECTION’ நாவல் படிக்கும் போதும் அனுபவித்தேன். ஆனால் அப்போது நான் கல்லூரி மாணவன்தான்.
அந்தப் பயணத்திற்குப் பிறகு பல ஜெயகாந்தன் கதைகளை நான் தேடித்தேடிப் படித்தேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு ஆறு மாத காலம் நான் சென்னை திருவேல்லிக்கேணியில் வசிக்கவேண்டியிருந்தது. மாலை நேரங்களில் Big Streetஇலிருந்து மவுன்ட் ரோடு ஹிக்கின்பாதம்ஸ் சென்று பல கதைகளைப் படிப்பதுதான் வழக்கம். அது ஒரு வசந்த காலம்.
பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தன் அவர்களைத் திருச்சியிலும் வேறு ஒரு பயணத்திலும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் சற்று உடல் தளர்ந்தவராக இருந்தார். ஆனால் வித்தியாசப் பார்வை முதிர்ந்த நோக்கு லாவகமாக எதிர் நபரைப் புரியவைக்கும் தன்மை எதிலும் குறைவில்லை. அவரின் முன்னுரைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.
பின் பெருமளவு திஜா பாலகுமாரன் பாரதி Huxley, MacLean, RK Narayan, etc சிறிதளவு சுஜாதா வைரமுத்து கண்ணதாசன் PG Woodhouse, Forsyth, etc என்று பல எழுத்தாளர்களைக் கடந்து தங்களை அடைந்தேன். நடுவில் நிறைய ஆன்மீக எழுத்துக்களும் அடங்கும். உங்களை எப்படி அறிந்தேன் என்று ஞாபகமில்லை. ஆனால் ஏதோ ஒரு இணைய விமர்சனத்தில்தான் உங்கள் எழுத்துக்கள் பற்றி அறிந்தேன். பின் உங்கள் இணையதளம். நாவல்கள் பிற படைப்புகள். பின் திருச்சி அருண் விடுதியில் சந்திப்பு.
எனக்குத் தங்கள் கருத்து ஒரு பெரும் வித்தியாசமாகவும் புதுவரத்தாகவும் இருந்தது. நான் என் பதினொன்றாம் வகுப்பிலிருந்து சுயதொழில் செய்யும் வரை பிற மாநிலங்களில் படித்து வேலை செய்த படியால் என் விருப்ப எழுத்துகள் மட்டுமே தமிழில் படிக்கமுடிந்தது. சாதாரண வெகுஜன எழுத்துக்கள் அதன் எண்ண ஓட்டங்கள் எண்ண நிலைகள் என்று கணினி இல்லாத காலத்தில் தெரியவாய்பில்லை. தமிழகத்தில் வந்து குடிபுகுந்து பின் இந்த வெகுஜன எண்ணங்களை அதன் பின்புலங்களை அறியக் கிடைத்தபோது சற்று சோர்வே அடைந்தேன். தாங்கள்தான் ஒரு பரந்த இந்திய உணர்வுடனும் பிரிவினையை ஆதரிக்காமலும் எழுதுகிறீர்கள். அதற்கு மேலும் உங்கள் பார்வை மட்டுமே சரி அப்படியில்லாமல் வேறு எண்ணம் கொண்டவர் நிராகரிக்கவேண்டியவர் என்று பாராமல் பல மன நிலைகளையும் பல பார்வைகளையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். வேற்றுப் பார்வையை புரிதலுக்காக எழுதியவரின் தனி வாழ்வைப் பார்க்கலாம் ஆனால் தனி மனித வாழ்வை சாதாரணமாக எண்ணங்களையும் எழுத்துக்களையும் அலசும் போது விமர்சனத்திற்கு உள்ளாக்கக்கூடாது என்ற அடிப்படை எண்ண ஒற்றுமை தங்கள் எழுத்துக்கள் பிடித்தமைக்கு முக்கியமான காரணம்.
நம் சந்திப்பு ஒரு பத்து இருபது நிமிடங்களே வாய்த்தது என்பதனாலும் வேறு பலபேர் இருந்ததாலும் விரிவாகப் பேச முடியாமல் போனது. ஆனால் நான் முன்னே எழுதியது போல உங்களைப் பற்றிப் பெருமளவு இணையத்தில் அறிந்திருந்தபடியால் எந்தத் தயக்கமும் இல்லாமல் சந்திப்பு இருந்தது. சாதாரணமாக ஆதரவாளர்கள் கூட்டம் பிரபல எழுத்தாளர்களை சுற்றிக்கொண்டு சாமான்ய வாசகர்களை சந்திக்கவிடாமல் இருக்கும். முக்கியமாக அது இல்லாமல் தாங்கள் தனிமையில் இருந்தது மகிழ்ச்சி அளித்தது. அதுவும் திரைத்துறையில் கால்பதித்த பின்னும் பகட்டு இல்லாமல் சாதாரணமாக உரையாடியது பெரும் நிறைவைத் தந்தது. உங்கள் எழுத்துக்களிலிருந்து இப்படிதான் எதிர்பார்த்தேன். சென்னை அல்லாத பிரபலங்கள் இப்படித்தான் சாமான்யர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார்கள். அந்த சந்திப்பின் காரணமாகத்தான் நீலகிரி சந்திப்பிற்குப் பதிவு செய்தேன். நீண்ட விரிவான எண்ணப் பரிமாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துகள்.
அன்புடன்,
திருச்சி வே, விஜயகிருஷ்ணன்
அன்புள்ள விஜயகிருஷ்ணன்,
எழுத்தாளர்களைச் சந்திப்பது பற்றிப் புதுமைப்பித்தன் சொல்கிறார், ‘இரட்டைப்பெண்கள், சாமியார், ஐந்துகால் பசு போல என்னை சந்திக்க வருபவர்கள் வரவேண்டியதில்லை. உரையாடலுக்கு எப்போதும் தயராக இருக்கிறேன்.’
இது ஒரு முக்கியமான வரி. புதுமைப்பித்தன் உண்மையில் எப்போதும் பிரபலமாக இருந்ததில்லை. ஆனால் அவருக்கே இந்தப்பிரச்சினை இருந்திருக்கிறது. எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பியிருக்கிறார்.
எழுத்தாளர்களை அவர்களின் பிரபலம் கருதி சந்திக்க வருபவர்களே அதிகம். ஊடகம் சமூகத்தின் சுவாசமாக இருக்கும் இன்றைய சூழலில் பிரபலமாக இருப்பது மக்களிடையே முக்கியமான ஒரு மதிப்பைப் பெறுகிறது. அதன்பொருட்டே எழுத்தாளர்களைச் சந்திக்க வருகிறார்கள்.
ஜெயகாந்தனும் சுஜாதாவும் அப்படி வருபவர்களைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அதிக புகழ் இல்லை என்பதனால் அப்படி அதிகம்பேர் வருவதில்லை.
இப்படித் தேடி வருபவர்களில் கணிசமானவர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருகிறார்கள். தன்னை வந்து சந்திப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்குத் தன்னுடைய ஒரு கதையோ கதாபாத்திரமோ நினைவில் இருப்பதில்லை என்று சுஜாதா என்னிடம் ஒருமுறை சொன்னார். குத்துமதிப்பாக ‘உங்க கதையெல்லாம் படிப்பேன் சார் சூப்பரா எழுதறீங்க…’ என்று பாராட்டியபின் ‘நீங்க எப்டி சார் எழுதறீங்க? வீட்ல ஒண்ணும் சொல்றதில்லியா?’ என்று பேச ஆரம்பிப்பார்கள்.
என்னிடமும் சிலர் அப்படி பேசுவதுண்டு. ‘எப்டி சார் அவ்ளவு பக்கம் எழுதறீங்க? நான்லாம் போஸ்ட்கார்டு எளுதவே சோம்பல்படுவேன் சார்’ என்பது போல. ஒன்றும் செய்யமுடியாது, மெல்ல கிளப்பி விடுவதைத்தவிர.
இன்னொரு வகையினர் எழுத்தாளர்களிடம் தங்களை உரசிப்பார்க்க வருபவர்கள். தங்கள் அறிவுத்திறன், வாசிப்பு மட்டுமல்ல தங்கள் சமூகத்தொடர்புகளைக்கூட எழுத்தாளர்கள் மீது போட்டுப்பார்ப்பார்கள். தாங்கள் படித்த ஏதேனும் புத்தகத்தை எழுத்தாளர்களிடம் விலாவாரியாக விவரிப்பது, இலக்கியக் கொள்கைகளை விளக்குவது பலரும் செய்வது.
தங்களை மாபெரும் கொள்கை வீரர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் உண்டு. புரட்சியாளர்களாகவும் சமூக சீர்திருத்தவாதிகளாகவும் தங்களை அக்கணம் அங்கேயே உருவாக்கிக்கொள்வார்கள். பல ஆண்டுகளாக இத்தகைய நாடகங்களைப் புன்னகையுடன் கண்டு வருகிறேன்.
இத்தகைய சந்திப்புகள் எழுத்தாளர்களுக்குப் பெரும் தொல்லை. நேர விரயம் மட்டுமல்ல, சுமுகமான மனநிலையை சட்டென்று இல்லாமலாக்கி எழுத்தாளர்களை எரிச்சலானவர்களாக ஆக்கிவிடுகிறார்கள் இந்த வகை வருகையாளர்கள்.
சென்னையில் வாழும் எழுத்தாளர்களுக்கு இந்த வகை வாசகர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவேதான் அவர்கள் எப்போதும் ஒரு தற்காப்பு மனநிலையுடன், கொஞ்சம் கடுகடுப்புடன் இருக்கிறார்கள். ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுஜாதா போன்றவர்களிடம் அந்தத் தற்காப்பு உறை மிக வலுவானது.
நான் என் புகழின் எல்லையாலும் இருக்கும் ஊரின் தொலைவாலும் அந்தக் கட்டாயங்கள் இல்லாமலிருக்கிறேன், அவ்வளவுதான்.
எனக்கு வாசகர் சந்திப்பில் தவறான அனுபவங்கள் அதிகமில்லை. ஒரு தேதியைச் சொல்லிவிட்டு, அந்த தேதியில் என் வேலைகளை எல்லாம் வீணாக்கிவிட்டு, நாலைந்து நாள் கழித்து, ‘அன்னிக்கு வர முடியலை’ என்று சொல்பவர்கள் சிலரைத் தவிர. அவர்களை நான் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொள்வதே இல்லை. எந்தக்காரணத்தாலும்.
[ஆற்றூர் ரவிவர்மா]
எதையும் வாசிக்காமல் வருபவர்களும் உண்டுதான். தானே பேச விரும்பி வருபவர்களும் உண்டு. முன்பெல்லாம் இத்தகையோரிடம் சுந்தர ராமசாமி காட்டும் பொறுமை பற்றி எனக்கு ஆச்சரியம் இருந்தது . இன்று நானே அந்தப் பொறுமையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.
தற்காப்புக்கு அப்பால் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவருமே நல்ல சந்திப்புகளை விரும்பக்கூடியவர்கள். என்னைப்பொறுத்தவரை பொதுவாக அகமுக நோக்குள்ளவர்கள் எனக் கருதப்படும் ஜெயகாந்தன், அசோகமித்திரன், இளையராஜா ஆகியோருடனான எல்லா சந்திப்புகளும் உற்சாகமானவையாக மகத்தானவையாகவே இருந்திருக்கின்றன.
அதற்கு அவர்கள் நம் மீது கொள்ளும் நம்பிக்கை, நமக்கு அளிக்கும் ஏற்பு மிக முக்கியமானது. அதை நாம்தான் ஈட்டிக்கொள்ளவேண்டும். நம்மைத் தவிர்க்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. வழியை நாமே கண்டடையவேண்டும். காரணம் அதன்மூலம் பலன் பெறுபவர் நாமே.
முக்கியமான கேள்வி என்பது எதற்காக எழுத்தாளர்களைச் சந்திக்கவேண்டும் என்பதே. ஒரு வணிகஎழுத்தாளனை அவன் எழுத்துமீதான ஈர்ப்பின் விளைவாகச் சந்திப்பது பெரும்பாலும் ஏமாற்றத்திலேயே முடியும், ஒரு வணிகனையே அங்கே சந்திக்கமுடியும். அவன் உருவாக்கும் பகற்கனவுகளை அல்ல.
பொதுமேடைக்கெனத் திட்டமிட்டு உருவாக்கிக்கொள்ளும் ஆளுமைகளை நேரில் சந்திப்பது முகப்பூச்சு கலையும் அனுபவமாகவே இருக்கும்.
தன் எழுத்தைத் தன் தேடலுக்காக ஆளும் எழுத்தாளனை, எழுத்தினூடாக நேரடியாக வெளிப்படுபவனை சந்திப்பது அவன் எழுத்தைப்போலவே முக்கியமான அனுபவமாகவே இருந்திருக்கிறது. அது நதியைத் தோற்றுவாயில் சந்திப்பதுபோல. நமக்கு அவை எல்லாமே புனிதத் தலங்கள்தானே.
என் அனுபவத்தில் நான் சந்தித்த எழுத்தாளர்கள் வைக்கம் முகமது பஷீர், ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, பி.கெ.பாலகிருஷ்ணன், அசோகமித்திரன், ஜெயகாந்தன் என ஒரு நீண்ட வரிசை. சட்டென்று இக்கடிதத்துக்காக நினைக்கையில் எத்தனை பெரும் ஆளுமைகளை நேரில் சந்தித்துப் பழகியிருக்கிறேன் என எனக்கே பெருமிதமாக இருக்கிறது.
எழுத்தாளன் எழுதியவற்றை நுணுகி வாசித்து அவற்றினூடாக அவன் சென்ற தூரத்தை மேலும் நுட்பமாக அறிவதற்காகவே அவனைச் சந்திக்க வேண்டும். நான் அவர்களை எல்லாம் அவர்களின் மிகச்சிறந்த வாசகனாக, அவர்களிடமிருந்து அறிய விரும்புபவனாக மட்டுமே சென்று பார்த்திருக்கிறேன். அவர்களின் எல்லைகள், வசதிக்குறைவுகள் அனைத்தையும் புரிந்துகொண்டே அவர்களுடனான சந்திப்புகளை அமைத்திருக்கிறேன். நெருக்கம் காரணமாக பின்னர் ஆற்றூர், சுந்தரராமசாமி இருவரிடமும் உரிமைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்
எழுதுபவனின் ஆளுமை மிகச்சிக்கலான ஒன்று. அவனுடைய அன்றாட வாழ்க்கையில் அவனுடைய எழுத்தாளுமை செல்லுபடியாவதில்லை. விற்கமுடியாத வைரங்களை வைத்திருக்கும் ஏழை போன்றவன் அவன். ஆகவே அவன் அன்றாடவாழ்க்கைக்காக ஒரு ஆளுமையை உருவாக்கி வைத்திருப்பான். அசோகமித்திரன் சர்வசாதாரணமான ஒரு மைலாப்பூர் மாமா மாதிரித்தான் முதல்பார்வைக்கு தோற்றமளிப்பார். சுந்தர ராமசாமி மேல்தோற்றத்துக்கு ஒரு உயர்குடி வணிகர்தான்.
அந்த புற ஆளுமைக்கும் அவனுடைய படைப்பாளியின் அந்தரங்கத்துக்கும் இடையே ஒரு மோதலும் சமரசமும் இருக்கும். அதன் சிடுக்குளும் அவனிடம் இருக்கும். அவற்றைக் கடந்துசெல்ல நம்மிடம் பொறுமையும் கூர்மையும் இருக்கவேண்டும். நாம் விரும்புவது போல கற்பனைசெய்திருப்பதுபோல எழுத்தாளர்கள் இல்லையே என்னும் எண்ணம்போல அசட்டுத்தனமானது வேறில்லை.
நூல்கள் ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றல்ல. சுந்தர ராமசாமியின் ஆளுமை அல்லது நித்யாவின் ஆளுமையின் சிறு தெறிப்பே அவர்களின் எழுத்தில் உள்ளது. மனிதன் என்பது ஒரு பெரும் முழுமை. சிந்தனை என்பது விளைவுதான். மனிதன் என்பது அச்சிந்தனை நிகழும் களம். சிந்தனைகளை விட சிந்திப்பதே நாம் முக்கியமாக கற்றுக்கொள்ளவேண்டியது. அதற்கு நேரடி உறவு தேவை.
உலகமெங்கும் சிந்தனைகள் நேரடித் தொடர்பு மற்றும் உரையாடல்கள் வழியாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிந்தனைப்பள்ளிகள் என்று சொல்லப்படுபவை அவ்வாறுதான் உருவாகின்றன. நூல்கள் அவற்றை பின் தொடர்ந்து செல்லக்கூடியவையாகவே இருந்திருக்கின்றன. ரஸ்சலின் நூல்களில் இருந்து டி.எஸ்.எலியட் உருவாகி வந்திருக்கமுடியாது. ரஸ்ஸல் யோசிக்கும் விதமே எலியட்டை உருவாக்கியது. இன்னொரு திசையில் எலியட் வளர்ச்சிபெறச்செய்தது .
வெறுமே வேடிக்கைபார்ப்பது , வெறும் அரட்டை, அகங்கார வெளிப்பாடு ஆகியவற்றுக்கு அப்பால் அந்தரங்கமான நீடித்த தொடர்புகள் மூலமே அது சாத்தியம். மிகச்சிறிய அளவிலேனும் இங்கும் அது நடந்தபடியேதான் உள்ளது. என் வாழ்க்கையில் அச்சந்திப்புகளுக்கு பெரும் முக்கியம் உண்டு. அவையே என்னை உருவாக்கின
ஜெ
எழுத்தாளர்களை அணுகுதல்
எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Apr 28, 2012