‘சயன்ஸே சொல்லுது!’

அன்புள்ள ஜெ,

காந்தியின் சனாதனம்-4 இல் சீர்திருத்த அணுகுமுறையின் செயல்பாட்டை அடிப்படை விதிகளாக சுருக்கிச் சொல்லியிருந்தீர்கள்.

ஆனால் மதப்பற்று காரணமாகத் தங்கள் மதம் ஐரோப்பிய சிந்தனையையும் அறிவியலையும் விட ஆழமானதும் உயர்ந்ததுமாகும் என வாதிடுவார்கள். அதற்கான விளக்கங்கள் எல்லாமே ஐரோப்பிய தத்துவத்தையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.

‘உருவ வழிபாடு’ திரியில் சுட்டப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் ‘சிலை வழிபாடு பிரசெண்டேஷனில்’ நான் கண்டது நீங்கள் மேல் சொன்ன வரிகள்தான் என்று நினைக்கிறேன். மேலும் சிக்கல் என்னவென்றால் சில ஐரோப்பிய விஞ்ஞானிகளே அறிவியலையும் மதத்தையும் இணைத்து ‘அறிவியலுக்கு வெளியே கருத்து’ கூறுகிறார்கள். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் காட்டி மதத்தில் எதையாவது நிறுவ முயல்வது போல் ஆபத்தானது வேறொன்றுமில்லை. அது போல் செய்பவர்கள் மதத்தின் அறிவியலின் அடிப்படைகளை உண்மையில் உணர்ந்தவர்களா என்பது சந்தேகமே.

மதத்துக்கு அறிவியல் விளக்கம், மதம் அறிவியலை விட உயர்ந்தது என வாதிடுதல், (அதேபோல் அறிவியலைக் கொண்டு மதத்தை முற்றிலும் நிராகரித்தல்) முதலிய செயல்பாட்டைச் செய்யாமல் நாம் இந்து மதத்தைக் கண்டுகொள்ளும் ஒரு புள்ளி உண்டு என்று நினைக்கிறேன். அந்தப் புள்ளியில் நின்று ‘நான் ஒரு இந்து’ எனக் கூறிக்கொள்வேன். மேலே செல்ல முயல்வேன்.

பரிணாமவாதமும் இந்திய மதங்களும்’, ‘உருவ வழிபாடு’ திரிகளில் என் விவாதங்களில் ஒலிப்பது இத்தகைய கூறுகளே என்று நினைக்கிறேன். இந்தக் கூறுகளைத் தொட்டு யாரும் எதிர்வினை ஆற்றாததால் உங்களிடம் கேட்கிறேன்.

இது குறித்து உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

அன்புடன்,
ராஜா.

அன்புள்ள ஜெ,

நான் முந்தைய கடிதத்தை அவசரமாக எழுதிவிட்டேன். மன்னித்து விடுங்கள். உங்கள் கருத்துக்களை அறிய தளத்திலேயே தேடி இருக்க வேண்டும். இனிமேல் விசேச கவனம் கொள்கிறேன். ஆனால் இன்னொரு நோக்கில் ஓர் எழுத்தாளருக்கு ஒரு வாசகன் தன் தடுமாற்றத்தையும் சிந்தனைகளையும் இயல்பாக எழுத எல்லா உரிமைகளும் உண்டு என்றே நினைக்கிறேன். சரிதானே?

உங்கள் தளத்தில் ‘அறிவியல்’ என்று தேடினேன். முழுமையறிவும் கென் வில்பரும் கண்டவுடன் தாவோ ஆஃப் ஃபிஸிக்ஸ் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். இடையே கேள்வி பதில் பகுதிகளில் கீழ்க்கண்ட வரிகளை வாசித்தேன்.

மதத்தின் உருவகங்களையும் அறிவியலின் ஊகங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளையும் ஒன்றாகக் காண்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரு சாரார் உற்சாகம் மீதூற மதம் சொல்வதையெல்லாம் அறிவியல் ஆதரிக்கிறது என்று சொல்கிறார்கள். மறுசாரார் கொதித்தெழுந்து மதம் கூறும் எதையுமே அறிவியல் ஆதரிக்காது என்று ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தைய முதிரா அறிவியல்வாதம் பேசுகிறார்கள். இப்படிச் சொல்ல இவர்கள் மதத்தை அறியவேண்டியதில்லை என்றும் நம்புகிறார்கள். இரு எல்லைகள். இரண்டுமே இருவகைப் பற்றின் மூலம் உருவாகும் மூடத்தனங்கள்.

தாவோ ஆஃப் பிஸிக்ஸ் நூலிருந்து ஒரு கதை. நெப்போலியன் கணித மேதை லேப்லாஸிடம் ‘திருவாளர் லேப்லாஸ், நீங்கள் பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பெரிய புத்தகம் எழுதியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதன் சிருஷ்டிகர்த்தாவைப் பற்றி ஒன்றையும் கூறவில்லையே’ என்று கேட்கிறான். ‘அப்படி ஒரு கருதுகோள் எனக்குத் தேவைப்படவில்லை’ என்று பதிலளிக்கிறார். இது போன்ற பாவனைகளே நவீன அறிவியலின் தொடக்கம்.

மேலும், அணு இயற்பியல் சார்பியல் கொள்கை போன்றவை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘அதிர்ச்சியை’ அளித்தன. நமது புலன்களும் மொழியும் சிந்தனைகளும் தடுமாறின. ஆனால் அந்தத் தடுமாற்றம் ஒரு அழகான விவேகத்தையும் அளித்தது. நம் முன் விரிந்து கிடக்கும் பிரபஞ்சம் ஒரு பெரும் புதிர். நம் புலன்களும் மொழியும் புரிதல்களும் தடுமாறும் இடங்கள் எல்லாம் மிக இயல்பானவை. நன்கு நிறுவப்பட்ட அறிவியல் உண்மைகள் மாற்றம் செய்யப்படலாம். திருத்தப்பட்டுத் துல்லியமாக்கப் படலாம்.

(ஐன்ஸ்டீன் உண்மையாகவே கண்ணீர்த் துளி சிந்த நேர்ந்தால் எந்த அறிவியலாளனும் ‘உண்மையாக’ அதிர்ச்சி அடையப்போவதில்லை. இன்னொரு தளம் திறந்து கொண்டது என்றே இயல்பான பரவசமும் ஆர்வமும் கொள்வான். ஏனெனில் பேரியற்கையின் முன் அவன் அறிவியல் குழந்தைத்தனமானது என்பதை உள்ளூர நன்கு அறிவான்.)

பெருவெளி முன் தன் எளிய முறைமைகளையும் கருவிகளையும் மட்டுமே துணைக்கு வைத்துக்கொண்டு நிற்கும் திராணி கொண்டவனே நவீன அறிவியலாளன். ‘அறிவியல் பொது புத்திக்கு’ சிக்காத சில தளங்கள் திறந்து கொண்டவுடன் மதம் நோக்கி ஓடுவதெல்லாம் நகைப்புக்குரியது. அது சிலருக்கு மிகுந்த பரவசம் அளிக்கிறது. நம் ஞான மரபில் சொல்லப்பட்டதைத்தான் பாவம் நவீன அறிவியல் நிறுவிக்கொண்டிருக்கிறது என்பது போன்ற தொனி.

எந்தக் கருத்தையும் அறிவியல் சோதனைகளின் மூலமே பரிசோதிக்க இயலும். அது திட்டவட்டமாக வகுத்துக் கொண்ட வழி. அதன் தவறுகளும் திருத்தங்களும் தடுமாற்றங்களும் வளர்ச்சியும் பிரபஞ்ச தரிசனமும் அதன் உள்ளே இருந்தே வர இயலும். வேறு எதையும் அது ‘துணைக்கு’ அழைக்க முடியாது.

தூய அறிவியல்வாதம் செய்வது மூடத்தனம் அல்ல. அவர்கள் மதத்தை அறியவேண்டியதில்லை என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்டுதான் நிற்கிறார்கள். நீ மதத்தையும் அறிய வேண்டும் என்று சொல்வது அவர்கள் கருவிகளைப் பிடுங்குவதற்குச் சமம்.

காப்ரா முடிவுரையில் எவ்வளவுதான் நவீன அறிவியல் பார்வையும் கிழக்குப் பார்வையும் ஒன்றுபோல இருந்தாலும் பெரும்பாலான அறிவியலாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார். மிக நல்ல விஷயம்.

நித்ய சைதன்ய யதி தாவோ ஆஃப் ஃபிஸிக்ஸ் நூலை நிராகரித்து முக்கியமான கடிதங்கள் எழுதியிருக்கிறார் என்று கூறியுள்ளீர்கள். அவை வாசிக்கக் கிடைக்குமா?

அன்புடன்,
ராஜா.

அன்புள்ள இளையராஜா,

நீண்டகடிதம், ஆகையால் நேரமெடுத்துக் கொஞ்சம் தாமதமாக பதிலளிக்கிறேன்.

இன்று ஆன்மீகத்தையோ மதத்தையோ பண்பாட்டையோ பேசுபவர்கள் அறிவியலை இழுத்துக்கொள்கிறார்கள். மூன்றுவகைகளில்.

ஒன்று, அறிவியலின் உதாரணங்களைப் பயன்படுத்துகிறார்கள். அறிவியலைப் படிமங்களாகக் கொண்டு ஆன்மீகத்தையும் மதத்தையும் பண்பாட்டையும் விளக்குகிறார்கள்.

உதாரணமாக, எளியமுறையில் இறைவனை மின்சாரத்துடன் ஒப்பிடுவதையே சொல்லலாம். மின்சாரம் கண்ணால்பார்க்கமுடியாதது, ஆனால் செயல்களாக வெளியாவது. ஆண்டவன் அதைப்போலத்தான் என்கிறார்கள்.

இரண்டாவதாக, அறிவியலின் கொள்கைகள் தங்கள் நம்பிக்கைகளையும் மரபுகளையும் ஆதரிக்கின்றன என்று கண்டுபிடிக்கிறார்கள். பொதுவான இடங்களைத் தேடி எடுத்து முன்வைக்கிறார்கள். உயர்ந்த அறிவுநுட்பத்துடனும் இது செய்யப்படுகிறது, அசட்டுத்தனமாகவும் செய்யப்படுகிறது.

விபூதி பூசினால் சளிபிடிக்காது என்றவகையிலான ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ பாணி விளக்கங்களைச் சுட்டிக்காட்டலாம். அவை இன்று வைரஸ் போலப் பெருகி நாட்டை வலம் வருகின்றன.

மூன்றாவதாக, அறிவியலின் உச்சநுனியில் ஒரு புதிர் அல்லது எல்லை தட்டுப்படுமென்றால் அதை அறிவியலின் தோல்வி என்று கொண்டாடுகிறார்கள். அந்தத் தோல்வி நிகழும் இடத்தில் தங்களிடம் விடை உள்ளது என முன்வைக்கிறார்கள்.

உதாரணமாக, மீண்டும் மீண்டும் உயிர் என்பது என்ன என்ற வினாவை சிலர் எழுப்பிக்கொள்வதைக் காணலாம்.

ஆனால் இதெல்லாம் இந்து மதத்தைச்சேர்ந்தவர்கள் செய்யும்போதுதான் நம்மூரில் முற்போக்கினர் பொங்குவார்கள். இந்தப்போக்கு உலகளாவியது. திட்டவட்டமான அறிவியல் மறுப்புத்தன்மைகொண்ட கிறிஸ்தவக் குறுங்குழுக்களும், அடிப்படைவாத இஸ்லாமியரும் இன்னும் தீவிரமாக இதையே செய்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள எல்லா கிறிஸ்தவப் பிரச்சாரக்கூட்டங்களிலும் உலக அறிவியலே கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்து உருவாக்கியதுதான் என்று சொல்லப்படும். தொடர்ந்து, ரயில், செல்பேசி முதலிய அறிவியல் கருவிகளை உவமையாகக்கொண்டு கிறித்தவம் விளக்கப்படும்.

ஆச்சரியம் என்னவென்றால் அமெரிக்க மதப்பிரச்சாரகர்கள் அங்கும் இதைத்தான் செய்கிறார்கள் என்பதே.

அறிவியல் கொள்கைகளை மதத்துக்கு ஏற்பத் திரிப்பது மேலை அறிவுலகுடன் ஒப்பிட்டால் இங்கே ஒன்றுமே இல்லை. அங்கே அறிவியலாளர்களை வாடகைக்கு எடுத்து, பிரம்மாண்டமான நிதி மற்றும் அமைப்பு பலத்துடன், திட்டமிட்டு மதம்சார் போலி அறிவியல் வளர்த்தெடுக்கப்படுகிறது.

உதாரணமாக டார்வினுக்கு எதிராகப் படைப்புவாத [Creationism] நோக்கை அறிவியல் கொள்கையாகக் காட்டுவதற்காக எழுதிக்குவிக்கப்படும் நூல்களைச் சொல்லலாம்.

இன்றுவரை கிறித்தவ உலகம் அறிவியலாளர்களிடம் பெருவெடிப்புக்கு முன்னால் என்ன இருந்தது என்று சொல்லாமலிருந்தால் நாம் ஒத்துப்போகலாமே என்று மன்றாடிக்கொண்டிருக்கிறது. அந்த மர்மத்தையே தங்கள் இடமாக அது கொண்டாடுகிறது.

இந்த விஷயத்தைப்பற்றிக் கடந்த நாலைந்தாண்டுகளில் மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறேன். இப்போது யோசிக்கையில் இதை நாம் ஏன் செய்கிறோம் என்ற வினா எழுகிறது. அந்தக்கோணத்திலேயே யோசிக்கிறேன்.

உலகமெங்கும் இன்று கல்வி என அளிக்கப்படுவது அறிவியல்கல்வி மட்டுமே. மெல்லமெல்ல மற்ற கல்விகள் அனைத்துமே பயனற்றவை எனப் புறந்தள்ளப்பட்டுவிட்டன. மேலைநாடுகளாவது இலக்கியம், சிந்தனை போன்றவற்றுக்கு ஆரம்பநிலையில் ஒரு முக்கியத்துவத்தை அளிக்கின்றன. கீழைநாடுகள் ‘முன்னேற்ற வெறி’ யில் அறிவியலை அனைத்து நோய்களுக்கும் மருந்தான சஞ்சீவி போலத் தழுவிக்கொண்டுவிட்டன.

மதம்சார்ந்த கல்வி இன்றில்லை. பண்பாட்டுக்கல்வி இல்லை. இலக்கியம், கலைகள், வரலாறு, தத்துவம் எதுவுமே முக்கியமல்லாமலாகிவிட்டிருக்கின்றன. சென்ற முப்பதாண்டுகளில் இந்தியப்பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட எல்லா மாற்றங்களும் அறிவியல்தவிர்த்த கல்விகளைப் படிப்படியாகக் குறைப்பனவாக மட்டுமே இருப்பதைக் காணலாம்.

உண்மையில் இது அறிவியல்கல்விகூட அல்ல. அறிவியல் அதன் விரிந்த தளத்தில் தத்துவத்தையும் பண்பாட்டையும் எல்லாம் தொட்டுச்செல்வது. இங்குள்ளது வெறும் தொழில்நுட்பக்கல்வி மட்டுமே.

இப்படித் தொழில்நுட்பத்தையும், அடிப்படை அறிவியலையும் தவிர வேறு எதையுமே அறியாத ஒரு தலைமுறை உருவாகி வந்தபின் அவர்களிடம் மதத்தையோ தத்துவத்தையோ பண்பாட்டையோ பற்றிப்பேசுவதற்கு வேறு வழியே இல்லை என ஆகிவிட்டிருக்கிறது.

அறிவியலின் குறியீடுகள் வழியாகப்பேசினால்தான் அவர்களுக்குப் புரிகிறது. அறிவியல் ஒன்றை ஆதரிக்கிறது என்றால் மட்டுமே அவர்கள் அதை மதிக்கிறார்கள். அறிவியலை விடப் பெரியது என்று சொன்னால் மட்டுமே அதை வியக்கிறார்கள்.

ஆகவேதான் மதம், பண்பாடு, இலக்கியம், கலை அனைத்துமே வெகுஜனத்தளத்தில் பேசமுற்படுகையில் அறிவியலைக்கொண்டு பேசுகின்றன.

அறிவியல் மானுட அறிதலின் ஒரு கோணம் மட்டுமே. அந்த உணர்தல் நம் சமூகத்தில் இருந்தால் இந்த நிலைக்கான தேவையே இருந்திருக்காது.

மதத்தின் தரப்போ பண்பாட்டின் தரப்போ அறிவியலை சாட்சிக்கு இழுக்கும்போது அதை ஏளனமாகப் பார்க்கும் அறிவியல்தரப்பினர் முதலில் யோசிக்கவேண்டியது அறிவியல் மட்டுமே மானுட அறிதலின் ஒரே வழி என நிறுவப்பட்டுள்ள இன்றைய சூழலின் மூர்க்கமான ஒற்றைப்படைத் தன்மையைப்பற்றித்தான் . அது உருவாக்கும் அழிவுகளைப்பற்றித்தான்.

பெரும்பாலும் தங்களை நவீனமானவர்களாக காட்டிக்கொள்ளவே நம்மவர்கள் இந்த விஷ்யத்தில் ‘தூய’ அறிவியலின் தரப்பை எடுக்கிறார்கள். அவர்களுக்கு அறிவியலின் தரப்புக்கு அப்பால் எதுவும் தெரியாதென்பதும் அறிவியலை ஒரு நவீன மதமாக கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்பதும் மேலதிக காரணங்கள்.

அறிவியலின் உலகளாவிய மேலாதிக்கத்தை முன்வைத்த காலகட்டத்தை நவீனத்துவ யுகம் என்று அடையாளப்படுத்துகிறார்கள். அதன் அழிவுப்போக்கை, அதன் எல்லைகளை உணர்ந்து அதற்கு மாற்றாகவும் மேலாகவும் உள்ள அறிதல்முறைகளை நோக்கி கவனம் குவித்ததன்மூலமே பின்நவீனத்துவம் உருவாகியது.

நவீனஅறிவியலை ஐயப்படுவதும் நிராகரிப்பதும் பின் நவீனத்துவச் சிந்தனைகளின் அடிப்படையான கூறாகவே இருந்துகொண்டிருக்கிறது. அது இன்றைய உலகநோக்கில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

ஆகவே உங்கள் கடிதத்தில் உள்ள அறிவியல்வழிபாட்டு நோக்கைப்பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வேன்.

அறிவியல்நோக்கு மையமானது, முதன்மையானது என்ற எண்ணத்தை நீங்கள் தவிர்த்துப்பார்த்தீர்கள் என்றால் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கமுடியும். மனிதனின் அடிப்படைக் கேள்விகள், அவற்றின் பதில்களைப்பற்றிய முன்ஊகங்கள் ஆகிய இரண்டும் அறிவியல், தத்துவம்,கலை ஆகிய அனைத்துக்குமே பொதுவானவைதான். அவற்றின் அறிதல்முறையும் நிரூபணமுறையும்தான் வேறுவேறானவை.

அறிவியல் தன்னுடைய வினாக்களையும் முன்ஊகங்களையும் அறிவியல் என சொல்லப்படும் ஒரு தர்க்கச்சூழலுக்குள் இருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளுமென்று எவரும் சொல்லமுடியாது. அவை அறிவியலாளனின் ஆழ்மனத்தில் இருந்து பிறக்கக்கூடியவை. அவற்றின் வேர்கள் மானுடத்தின் கூட்டுமனத்தில், பண்பாட்டுக்குறியீடுகளில் உறைகின்றன. அந்த ஆழத்தில் அறிவியலும் தத்துவமும் கலையும் எல்லாம் ஒன்றே.

ஆகவே ஒரே வினாவுக்கு இவை அளிக்கும் பதில்களை ஒப்பிடுவதோ, அல்லது ஒரு துறையின் பார்வையை இன்னொன்றைக்கொண்டு புரிந்துகொள்ளமுயல்வதோ ஒன்றும் பெரும்பிழை அல்ல. ஓர் அறிவியல் கண்டுபிடிப்பின் பண்பாட்டுவேரை தேடிச்செல்வதோ அல்லது ஒரு பண்பாட்டுக்கூறின் அறிவியல்நீட்சியை ஆராய்வதோ மிக மிக அடிப்படையான விஷயம். அது அறிவியலின் ‘புனிதமான உண்மையை’ பிற துறைகள் ‘திருடிக்கொள்ளும்’ முயற்சி அல்ல.

உதாரணமாக ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் இன்றும் அறிவியல் பிரபஞ்ச ஆய்வாளர்கள் வினவும் அடிப்படை வினாக்களை தானும் எழுப்பிக்கொள்கிறது. இன்றைய பிரபஞ்சவியல் சென்று முட்டிநிற்கும் திகைப்பை தானும் பதிவு செய்கிறது.

ஓர் ஆய்வாளன் ரிக்வேதத்தின் அந்தப்பாடலை இன்றைய பிரபஞ்சவியலுடன் ஒப்பிட்டு ஓர் ஆய்வைச்செய்தானென்றால் உடனே அதை மதத்தையும் அறிவியலையும் கலந்துகட்டி அடிப்பது என்று சொல்வதென்பது அறியாமை மட்டுமே.

இந்த அறியாமைக்கூற்றுக்கள் நம்மிடையே உருவாவதற்கான முக்கியமான காரணம் நாம் அறிவியலை உள்ளூர தொழில்நுட்பம் என்று புரிந்து வைத்திருப்பதே. அறிவியலுக்கு கலையிலும் தத்துவத்திலும் மானுடப்பண்பாட்டின் எல்லா தளங்களிலும் வேர் உண்டு. எல்லா இடங்களிலிருந்தும் அது தன் வேர்நீரை எடுத்துக்கொள்கிறது.

ப்ரிஜோ காப்ரா அவரது நூலில் கீழைநாட்டு மதங்களில் உள்ள பிரபஞ்சவியலை நவீன அறிவியலின் பிரபஞ்சவியலுடன் மேலோட்டமாக ஒப்பிடுகிறார். அதற்காக கீழைஞானங்களின் பிரபஞ்சவியலை அறிவியல் கொள்கைகளுக்கேற்ப எளிமைப்படுத்திவிடுகிறார் என்பதே நித்யாவின் குற்றச்சாட்டு. அவரது தொகைநூல்களில் அக்கடிதங்கள் உள்ளன.

அப்படி ‘எல்லாமே இங்கே இருக்கிறதுதான்’ என்றோ ‘அன்னைக்கே நம்மாள் சொல்லிட்டான்’ என்றோ எளிமைப்படுத்தி அணுகாமல் இந்திய மெய்ஞானமரபின் அடிப்படை கருதுகோள்களை அறிவியல் கருதுகோள்களைக்கொண்டு புறவயமாக ஆராய்வது அவசியமான ஒரு விஷயம்தான்.

உதாரணமாக, நவீன உளவியல் கருதுகோள்களைக் கொண்டு இந்திய சிற்பங்களை ஆராய்வது பல உள்வெளிச்சங்களை அளிக்கும் என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். நம் தாந்த்ரீக மதத்தின் சடங்குகளையும் குறியீடுகளையும் உளவியல் கருதுகோள்களைக்கொண்டு பொதுவான தளத்தில் எளிதில் விளக்கமுடிகிறது.

ஆனால் மெய்யியல் மற்றும் கலைமரபின் கொள்கைகளை அறிவியல் ஆதரிக்கிறது அல்லது நிரூபிக்கிறது என்று வாதாடுவது கூடாது. அது ஒரு தாழ்வுமனப்பான்மையை மட்டுமே காட்டுகிறது. அது உண்மையில் மெய்யியலையும் கலையையும் சிறுமைப்படுத்துவதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைநிதீஷ்
அடுத்த கட்டுரை‘ஒரு அதிர்வு இருக்குதுங்க!’