வினோபா, ஜெபி, காந்தி

வணக்கம் சார்.

உங்களிடம் நான் துபாயில் இந்தக் கேள்வியைக் கேட்க நினைதேன், ஆனால் முடியவில்லை. அதனால் தான் கடிதம்.

எமர்ஜென்சியின் பொது ஜேபி ஏன் வினோபா பாவே போல் அல்லாமல், அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்தார், வினோபாபாவே மேல் ஜேபி மரியாதை வைத்திருந்தார், இருவருமே காந்தியவாதிகள், இருந்தும் ஏன் இந்த முரண். வினோபா பாவே எமர்ஜென்சியை மக்களின் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கச்செய்யும் வழியாகப் பார்க்கிறாரா. அல்லது அவர் பசுவதையை அரசு எதிர்த்து சட்டம் கொண்டுவரும் என எண்ணி அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாரா? அதைப் போல் மார்க்சியர்கள் காந்தியவாதியான ஜேபியை தங்கள் முன்னோடியாகக் கொள்கின்றனர், ஆனால் காந்தியை அப்படிச் சொல்லுவது இல்லை. இது ஏன் சார்?

உங்கள் வரலாற்று நாயகன் கட்டுரையிலும் இவர்களின் முரண் தெளிவாக இல்லை. நேரம் கிடைத்தால் பதில் அளியுங்கள்.

நன்றி
கார்த்திகேயன்

வினோபா பாவே

அன்புள்ள கார்த்தி,

நான் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் வினோபா, ஜெபி இருவருமே உயிருடனிருந்தனர். அரசியலார்வம் கொண்ட அக்காலகட்டத்தில் இருவரையுமே கூர்ந்து கவனித்திருக்கிறேன். அன்று உருவான மனப்பதிவு இன்றும் அப்படியே நீடிக்கிறது.

காந்தியை நாம் மிக நுணுக்கமாக இணைக்கப்பட்ட இருவேறு பண்புநலன்களின் கலவை என்று சொல்லலாம். ஒன்று காந்தியின் புரட்சிகரம். இன்னொன்று காந்தியின் ஆன்மீகம். சுவாமி விவேகானந்தர், நாராயணகுரு ஆகியோரிலும் இந்த இரு அம்சங்களையும் காணலாம். இவற்றின் நடுவே உள்ள முரணியக்கமே அவர்களின் ஆளுமையை உருவாக்கியது.

நேர் மாறாக அரவிந்தரிடம் ஆரம்பத்தில் புரட்சிகரம் இருந்தது. அதை முழுமையாகக் கைவிட்டு அவர் ஆன்மீகம் பக்கமாகச் சென்றார்.

விவேகானந்தர், நாராயணகுரு, காந்தி போன்றவர்களைப் பின்தொடர்பவர்கள் தங்கள் இயல்புக்கு ஏற்ப அவர்களிடமிருக்கும் இரு அம்சங்களில் ஒன்றை மட்டுமே தங்களுக்கென எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் இன்னொரு அம்சத்தை நிராகரிக்கக்கூட செய்கிறார்கள்.

வினோபாவை காந்தியின் ஆன்மீகத்தின் வாரிசு எனலாம். ஜெபியையும் ராம் மனோகர் லோகியாவையும் ஜெ.சி.குமரப்பாவையும் காந்தியின் புரட்சிகரத்தின் வாரிசுகள் எனலாம்.

காந்தி முதன்முதலாக தனிநபர் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தபோது அவர் அதற்காக வினோபாவையே தேர்ந்தெடுத்தார். முதல் தனிநபர் சத்தியாக்கிரகியாக தேசத்தின் முன் நிற்க சஞ்சலமற்ற ஆன்மீக வல்லமை தேவை. அது வினோபாவிடம் உண்டு என காந்தி நினைத்தார்

ஆனால் அந்த ஆன்மீக வல்லமை தனிநபரின் கடைத்தேற்றத்துக்காகப் பயன்படக்கூடாது, தேச சேவைக்காக, மக்களுக்காகப் பயன்படவேண்டும் என காந்தி நினைத்தார். ஆகவேதான் எல்லாவகையிலும் ஒரு யோகியும் துறவியுமான வினோபாவை அரசியல்போராட்டத்தில் முன்னிறுத்தினார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

அந்தப் பாடத்தை வினோபா கற்றுக்கொண்டார். ஆகவேதான் அவர் பூதான இயக்கத்தை ஆரம்பித்தார். அதன் அத்தனை குறைபாடுகளுடனும் அது ஒரு மகத்தான இயக்கம்தான். அதன் சாதனைகளுக்கு நிகராக வேறெந்தத் திட்டமும் சாதிக்கவில்லை, அரசாங்கத்தின் நிலச்சீர்திருத்த திட்டங்களோ இடதுசாரிகளின் நிலமீட்புப் போராட்டங்களோகூட!

ஆனால் இந்திய அரசின், குறிப்பாக நேரு மற்றும் பட்டேலின், ஒத்துழையாமையால் பூதான இயக்கம் வீழ்ச்சி அடைந்தது. தானமாக வழங்கப்பட்ட நிலங்களை பதிவுசெய்துகொடுக்கக்கூட அரசு ஆர்வம் காட்டவில்லை. அரசூழியர்களின் ஆணவம் மெல்லமெல்ல அவ்வியக்கத்தை செயலிழக்கச்செய்தது.

ஆன்மீகமான எழுச்சியால் இயக்கத்தை ஆரம்பித்த வினோபா மிகச்சீக்கிரத்திலேயே அதிலிருந்து மன விலக்கம் கொண்டார். அவர் தொடர்ந்து போராடியிருக்கவேண்டும். வழங்கப்பட்ட நிலங்கள் பதிவுசெய்து அளிக்கப்படும்வரை உறுதியாக நின்றிருக்கவேண்டும். காந்தி அதைத்தான் செய்திருப்பார்.

வினோபாவின் அந்த மன விலக்கம் அவர் போராளியோ புரட்சியாளரோ அல்ல என்பதிலிருந்து வந்தது. புரட்சியாளர்களுக்குத் தணியாத ஒரு நன்னம்பிக்கை இருக்கும். மானுட இருளும், வரலாற்றின் வல்லமையும் தெரிந்தாலும் அந்த நம்பிக்கை அணையாமல் கூடவே இருக்கும்.

இந்திரா

எத்தனை சோர்வூட்டும் தோல்வியையும் அவர்கள் அந்த நம்பிக்கையால் தாண்டுவார்கள். எத்தனை பெரிய சவாலையும் துணிவுடன் சந்திப்பார்கள். அவர்களின் மொத்த ஊக்கமும் அந்தத் நன்னம்பிக்கையின் ஒளியாலானதுதான்.

புரட்சியாளர்கள் தோல்வி அடைவதே இல்லை. அவர்கள் ஒருவகையில் குருடர்கள், உண்மையின் ஒருபக்கத்தை மட்டுமே பார்க்கக் கற்றவர்கள். ஆனால் அந்தப் புனிதமான அப்பாவித்தனமே மானுடத்தை வாழவைக்கிறது.

காந்தியிடமிருந்த அந்தப் புரட்சிகரம் ஜெ.பி.க்கும் இருந்தது. ஜெ.பி.யின் வாழ்க்கையில் அவரது எல்லா கனவுகளும் கலைந்திருக்கின்றன. ஆனால் அவர் சாகும் கணம் வரை போராடிக்கொண்டே இருந்தார். நம்பிக்கையைக் கடைசிக்கணம் வரை தக்கவைத்திருந்தார்.

சோர்ந்து குளிர்ந்து கிடந்த இந்தியாவில், சுயநலமே பேரறமாகத் திகழ்ந்த இந்தியாவில், வாழ்ந்துகொண்டு ஜெ.பி. முழுப்புரட்சி பற்றி கனவுகண்டார் என்றால் அவர் எவ்வளவு பெரிய அசடாக இருந்திருக்கவேண்டும். காந்தியின் அளவுக்கே ஆழமான அசட்டுத்தனம் அல்லவா அது?

வினோபா பொதுவாழ்க்கையில் இறங்கிய கொஞ்சநாளிலேயே சலித்துச் சோர்ந்து ஒதுங்கிவிட்டார். ஆசிரம வாழ்க்கையில் அடங்கித் தனக்குள் சுருண்டுகொண்டார். அத்தகைய மனிதர் எப்போதும் ஆட்சியாளர்களுக்கு சாதகமானவர். ஏனென்றால் அவர் ஒரு பிம்பம் மட்டுமே. அப்பிம்பத்தை சரியாகப் பயன்படுத்த ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.

இந்திரா மிக நுட்பமாக வினோபாவைப் பயன்படுத்திக்கொண்டார். பவ்னாரில் இருந்த வினோபாவின் ஆசிரமத்துக்கு அவர் சென்று வினோபாவின் காலடி பணிவார். அது தேசமளாவிய செய்தியாக ஆகும். வினோபாவுக்கு நாட்டில் நடப்பதென்ன என்று தெரியாது. அவர் தூக்கி வளர்த்த பெண் இந்திரா. ஆகவே அவர் இந்திராவுக்கு ஆசியளிப்பவராகவே இருந்தார்.

மாறாக, கடைசிவரை கொந்தளித்துக்கொண்டே இருந்தார் ஜெ.பி. புரட்சிகரமனநிலையை இழக்கவே இல்லை. ஆன்மீகமான எதிலும் அவரால் அமர முடியவில்லை. கடைசிவரை அவர் அணையவில்லை. ஆகவேதான் தன் தந்தையிடம் பெருமதிப்புக் கொண்ட குடும்பநண்பராக இருந்தாலும் ஜெ.பி.யை இந்திரா சிறையிலடைத்தார். சிறுநீரகக் கோளாறு கொண்டிருந்த ஜெ.பி. சிறையில் சாகவேண்டும் என ஆசைப்பட்டார்.

ஜெ.பி. அவரது கொந்தளிக்கும் புரட்சிகரத்தன்மையால் எப்போதும் கனவுகாண்பவராக இருந்தார். நிதானமற்றவராக, ஒட்டுமொத்தப்பார்வை அற்றவராக வாழ்ந்தார். காந்தியிடமும் நாராயணகுருவிடமும் இருந்த ஆழத்து அமைதி, ஆழத்து மன விலக்கம் அவரிடம் அமையவே இல்லை.

வினோபா, ஜெ.பி. இருவர் நடுவே உள்ள வேறுபாடு இதுதான். முக்கியமான வேறுபாடு இது. அவர்களின் அடிப்படை இயல்புகள் சார்ந்தது.

ஜெ

முந்தைய கட்டுரைசந்திப்புகள் – சில கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறமெனப்படுவது – கடிதங்கள்