காலையில் ஷார்ஜா விமானநிலையத்தில் குவைத்துக்காக விமானம் ஏறும்போது தூக்கக் கலக்கத்தில் போதைகொண்டவன் போல இருந்தேன். நானும் நாஞ்சிலும் ஒரு காபி சாப்பிட்டோம். எங்களுக்காக ஒரு பிலிப்பைன் பெண்மணி அவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு இயந்திரத்தை ஓட்டி வடித்து எடுத்து ஆளுயர டம்ப்ளரில் காபியை கொடுத்ததனால் பத்துடாலர், ஐநூறு ரூபாய், இழப்பை மனம் தாங்கிக்கொண்டது.
ஷார்ஜா விமானநிலையம் எர்ணாகுளம் பேருந்துநிலையம்போல ஒரே மல்லுமொழியில் தளும்பிக்கொண்டிருந்தது. மல்லுக்கள் வளைகுடாவைக் கொள்ளையடித்துத் திரும்புகிறவர்கள் போலத் தெரிந்தார்கள். ஐம்பத்திரண்டு இஞ்ச் டிவி என்பது இந்தியாவில் ஐம்பதாயிரம்ரூபாய்தான். அதை ஏன் கட்டிச்சுமந்து ஊருக்குக் கொண்டு செல்கிறார்கள் என்று புரியவில்லை. நிறைய படிக்காத முகங்கள். சிலர் தன்னம்பிக்கையுடன், சிலர் தேவைக்குமேலான பதற்றத்துடன்.
பலவகையான அராபியர்களைப் பார்த்தேன். விதவிதமாகத் தலையில் துண்டு போட்டவர்கள். சும்மா வழியே செல்லும்போது கொடித்துணி தலையிலே விழுந்தது போல, ஜாக்ரதையாக மடித்துப் போட்டுக்கொண்டதுபோல, சிமின்ட் சுமப்பவர்கள் போட்டுக்கொண்ட பிளாஸ்டிக் தாள் போல, கடனுக்கு ஒளிய போட்டுக்கொண்டதுபோல…அராபிய மொழியை இப்போதுதான் கேட்கிறேன். உடனடியாக அதன் ஒலியழகு கவர்ந்தது.
நான் காதால் கேட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் என் செவிக்கு இன்றுவரை அழகிய மொழியாக இருந்தது சம்ஸ்கிருதம்தான். அர்த்தத்துக்கு அப்பால் வெண்கலநாதம் ஒன்று அதற்குண்டு. அராபிய மொழி அதைப்போலவே ஒலியழகுள்ளதாகத் தெரிந்தது. ஒரு இனிய பறவைக்குரல் போல. அத்தனைபேரும் மெலிதாக அகவியபடியே இருப்பது போலிருந்தது.
விமானமேறிய மறுகணம் தூங்கிவிட்டேன். நாஞ்சில்நாடன் கவலைப்படும் வேலையை எனக்காகச் சேர்த்து அவரே செய்தார். அவரது புகழ்பெற்ற பேக்கிங்கை சரியாகச் செய்தாரா என்ற கவலை, ஆவணங்களைச் சரிபார்த்தல், சகபயணிகளை ஐயத்துடன் கூர்ந்து கவனித்தல், விமானசேவையில் மது கொடுக்கப்படாத அரபுக்கொடுமையை எண்ணி நெஞ்சோடு கிளத்தல்.
நான் கண்விழிக்கும்போது விமானம் குவைத்தில் இறங்கிக்கொண்டிருந்தது. குவைத் விமானநிலையத்துக்கு வெளியே குவைத் முத்தமிழ் மன்றத்தைச் சேர்ந்தவர்களும் என் நண்பர்களும் வந்திருந்தனர். குவைத் தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பில் உள்ள பழமலை கிருஷ்ணமூர்த்தி, ஜெயபாலன் ஆகியோர் வந்திருந்தனர். நண்பர்கள் சித்தார்த், ஜெயகாந்தன், மாதவன்பிள்ளை ஆகியோர் உற்சாகமாகக் கையசைத்தனர். சம்பிரதாயமான வரவேற்பு. தேசியக்கொடிச்சின்னமுள்ள மேலாடை அணிவித்துப் பூங்கொத்தும் லட்டும் கொடுத்து வரவேற்றார்கள். ‘வசந்த் டிவி வசந்தகுமார் மாதிரி இருக்கீங்க’ என்று நாஞ்சில் என்னிடம் சொன்னார்
கார்களில் ஏறி குவைத் ஹயாத் என்ற தங்கும் விடுதிக்குச் சென்றோம். உயர்தரமான தங்குமிடம். காலையுணவை அங்கேதான் சாப்பிட்டேன். வரும் வழியிலேயே லட்டு சாப்பிட்டதனால் நான் கொஞ்சமாக சாப்பிட்டேன். சந்தித்த கணம் முதலே பேச ஆரம்பித்தோம். இலக்கியம்தான். ஒருவேளை கேட்கக் கேட்க சந்தேகம் பெருகக்கூடிய ஒரேதுறை இலக்கியமாக இருக்கலாம்.
குவைத்தை சுற்றிப்பார்த்தோம். வில்லுப்பாட்டுக்கோல் போலத் தோன்றிய குவைத்கோபுரங்கள் பிரம்மாண்டமானவை என அருகே சென்றால்தான் தெரிந்தது. கோபுரம் மீதேறிச்சென்று நகரின் பிரம்மாண்டமான கடல்முகத்தைப் பார்த்தோம். ஆச்சரியமாக நாங்கள் வந்திறங்கியநாள் முதல் மிகவும் இதமான வானிலை நிலவியது. காற்றில் நீர்த்துளிகளுடன் வானம் மூடியே இருந்தது- டிசம்பரில் சென்னை இருப்பது போல. கடலும் ஆழ்நீலமாகத் தெரிந்தது.
முதல்நாள் மதியம் மாதவன்பிள்ளை வீட்டில் சாப்பிடச்சென்றோம். அன்று விஷூ தினம். மாதவன்பிள்ளை வீட்டில் நல்ல நாஞ்சில்நாட்டுச் சாப்பாடு செய்திருந்தார்கள். அவரது மனைவி சுப்புடு முன்னால் பாடும் இளம்பாடகி போல பீதியுடன் இருந்தார். நாஞ்சில்நாடன் சாப்பாட்டை முகம்மலர்ந்து பாராட்டியதும் அவரது நிம்மதி தெளிவாகவே தெரிந்தது. சாப்பாடு துபாய்க்குள் ஒரு நாஞ்சில்நாட்டை உருவாக்கிக் காட்டியது.
அன்றுமாலை குவைத்வாழ் ஓவியரான கொண்டல்ராஜின் ஓவியக்கண்காட்சிக்குச் சென்றோம். மலேசியத்தூதர் வந்திருந்தார். கொண்டல்ராஜின் ஓவியங்களுடன் அவர் இந்தியாவிலிருந்து வரவழைத்த ஓவியங்களும் அவரது மாணவர்கள் வரைந்த ஓவியங்களும் இருந்தன. கொண்டல்ராஜின் பெயர் புகழ்பெற்ற காலண்டர் ஓவியரான கொண்டையராஜுவை நினைவுறுத்தியது. பதற்றமும் உற்சாகமுமாக இருந்தார். ஓவியங்கள் ஒருவகைக் குழந்தைத்தன்மையுடன், ஏக்கத்துடன் தமிழகத்தின் இப்போதில்லாத பசுமைக்காலகட்டத்தைச் சித்தரிப்பவை. பளீரென பச்சைவெயில் பரந்த சாலைகள், பூத்த மரங்கள், எளிய மனிதர்கள். அந்தப்பாலையில் தமிழகம் கனவில் ஒளிரும் ஒரு பசுந்தீவாக இருக்கிறது போலும்.
கண்காட்சி ஒரு வாரமாக நடந்து வந்தது. அதை ஒட்டிய ஓவியப்போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு தூதர் பரிசுகளை வழங்கினார். நானும் நாஞ்சிலும் சில சொற்களைச் சொல்லி விழாவை முடித்து வைத்தோம். கொண்டல்ராஜ் நாஞ்சில்நாடனை ஓவியமாக வரைந்திருந்தார். அதை அவருக்கே பரிசாக அளித்தார்.
இரவு அறைக்குத்திரும்பி நள்ளிரவு தாண்டும் வரை நானும் சித்தார்த்தும் ஜெயகாந்தனும் பேசிக்கொண்டிருந்தோம். ஜெயகாந்தன் ஈரோடு கொடுமுடியைச் சேர்ந்தவர். சம்ஸ்கிருதம்,வேதாந்தம் அறிமுகம் கொண்டவர். மிகச்சிறந்த வாசகர். அபூர்வமாகவே அவரைப்போலப் பலதுறை வாசிப்பு கொண்ட, ஆனால் எதுவும் எழுதாத, வாசகர்களைக் காண்கிறோம்.
ரே பிராட்பரியின் ஒரு கதையில் பிகாஸோ வருவார். கடற்கரை மணலில் ஒரு குச்சியால் பிரம்மாண்டமான ஓவியமொன்றை வரைவார். வரைய வரைய அதைக் கடல் அழித்துவிடும். அந்த ஓவியத்துக்கு வாழ்க்கையே இல்லை. சிரித்தபடி ஓவியர் செல்ல, பார்த்தவர் அது தன் நினைவில் மட்டுமே வாழ்கிறது என்ற எண்ணத்தின் பீதியுடன் நிற்பார். எழுதாத வாசகர்கள் தங்களுக்குள் எழுதி எழுதி, காலம் அழிக்க விட்டுவிட்டு சிரிக்கிறார்கள் போல.