அன்புள்ள நண்பர்களே,
இன்று ‘அறமெனப்படுவது’ என்னும் தலைப்பில் பேச என்னை அழைத்திருக்கிறார்கள். அடிப்படையான வினா இது. எவை வாழ்க்கையின் ஆதாரமான தத்துவநிலைப்பாடுகளை விளக்க முயல்கின்றனவோ அவையே அடிப்படைக் கேள்விகள். இதைப்போன்ற அடிப்படை வினாக்கள் எழும்போதெல்லாம் நாம் நம் ஆசிரியர்களை இயல்பாக நினைவுகூர்கிறோம். நான் நித்ய சைதன்ய யதியை நினைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நம் ஆசிரியர்கள் நம்மிடம் அடிப்படை விஷயங்களைப் பற்றியே உரையாடுகிறார்கள். இல்லை, அவர்கள் எதைப்பற்றி உரையாடினாலும் அதெல்லாம் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன.
நித்யா ஒருமுறை குருகுலம் வழியாக நடந்துகொண்டிருந்தார், கீழே சமையலறையில் யாரோ டீ போடும் வாசனை. ‘அங்கே டீ போடுகிறவன் முன்னரே தண்ணீரில் சீனியைப் போட்டுவிட்டான். டீ சுவை கெட்டுவிட்டது’ என்றார் நித்யா. சுவையறியும் மூக்கு. அவரது எல்லாப் புலன்களும் உலகச்சுவைக்காகத் திறந்திருந்தன. ஒரு நல்ல அவியல் வைக்கத்தெரியாதவனால் எப்படி அத்வைதத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று கேட்டவர் அவரது குரு.
இது ஓர் அன்றாட விஷயமாக இருக்கலாம். ஆனால் நித்யா தொடர்ந்துசென்றார். ‘அப்பா தன் பிள்ளைக்கு பொம்மையைக் கொடுத்து பத்திரமாக விளையாடு என்று சொல்வது போல இந்த உலகம் நமக்களிக்கப்பட்டிருக்கிறது. இதை நம் உச்சம் வரை சென்று அறிவதும் அடைவதும் நம் கடமை. இந்த உலகில் இருந்து மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் அடைவதென்பது மனிதனின் சலுகை அல்ல. மனிதனின் உரிமைகூட அல்ல. அது அவன் கடமை, பொறுப்பு.’
அடிப்படை விஷயங்களை அன்றாடவாழ்க்கையின் எந்தப்புள்ளியில் இருந்தும் தொடங்கலாம் என்று நித்யா சொல்வதுண்டு. எதை நாம் ஆழமாக வினவிக்கொண்டாலும் அது அடிப்படை வினாவாக ஆகும். ஓர் அடிப்படை வினாவை எழுப்பிக்கொள்வது எப்படி? நித்யா அதை எப்படிச்செய்வார்? அவரது அருகிருந்து அதை நான் கவனித்திருக்கிறேன். அதுவே நான் அவரிடம் பெற்ற கல்வி.
நித்யா அந்தச் சொல்லையே முதலில் கவனிப்பார். அதுதான் ஆணிவேர். நாம் சாதாரணமாக ஒன்றைச் சிந்திக்கும்போது அதன் சமகால, அன்றாடப் புழக்கத்தைக்கொண்டே புரிந்துகொள்ள முயல்வோம். அறம் என்ற சொல்லுக்கு இன்று இங்கே என்ன அர்த்தம் என்பதே நம் கேள்வியாக இருக்கும். இன்னும் கொஞ்சம் விரிவாகப்போனால் அதன் வரலாற்றுப்புலம் சார்ந்து யோசிப்போம். வரலாறென்பது நம் கண்ணுக்கெட்டியதூரம் வரைதான். மொழி அதற்கும் அப்பால் செல்கிறது. அடிவேர் வரை செல்கிறது. ஆகவேதான் தத்துவத்தில் மொழியை எப்போதும் சிந்தனையின் அடிப்படை அலகாகக் கொள்கிறார்கள்.
அது ரஸ்ஸலின் வழி. இந்திய ஞானமரபில் நெடுங்காலமாக மீமாம்சகர்கள் அதையே கடைப்பிடித்தனர். அதற்கு வியாகரணம், சந்தஸ் என்னும் இரு முறைகளை வைத்திருந்தனர். இலக்கணம், ஒலியமைதி. ஒரு அறம் என்ற உருவகம் ஒரு ‘பேக்கேஜ்’. அதில் அறம் என்னும் சமூக அமைப்பு, சமூக ஆசாரம், சமூக நம்பிக்கை ஆகியவை உள்ளன. அவை எல்லாம் அச்சொல்லில் அடங்கியிருக்கின்றன. அச்சொல் அவற்றைக் கட்டும் பொட்டலமல்ல. அந்தக் கருதுகோள் ஒரு மரம் என்றால் அதன் விதை அது.
‘இவ்ளோ பெரிய விமானத்துக்கு எப்டிடா பெயிண்டடிப்பாங்க?’ என்று ஒரு பைத்தியம் கேட்டபோது ‘மேலே போறப்ப சின்னதாயிடும்ல. அப்ப அடிச்சிருவாங்க ‘ என இன்னொரு பைத்தியம் பதில் சொன்னதாகச் சொல்வார்கள். எதுவும் கொஞ்சம் மேலே, கொஞ்சம் தூரத்தில் சென்றால் சிறிதாகிவிடுகிறது. எளிமையாகக் கையாளக்கூடியதாக ஆகிவிடுகிறது. காலத்தில் பின்னகரும்போது விடைகள் கைக்கடக்கமாக ஆகிவிடுகின்றன. காலத்தில் பின்னகர சொல் ஒன்றே சுட்டுவழி.
சொல் என்பது சிலை, பொருள் என்பது தெய்வம். அளவிடமுடியாத ஒன்று அளவிடக்கூடியதாக நம்முன் அமர்ந்திருக்கிறது. காளிதாசன் சொன்னார் ‘சொல்லும்பொருளும் போல அமைந்தவர்கள் பார்வதிபரமேஸ்வரர்’ என. பிரிக்கமுடியாதவர்கள். ஒருவருக்கொருவர் ஊக்கவிசையானவர்கள்.
நித்யாவின் வழிமுறைப்படி நானும் அறம் என்ற சொல்லையே எடுத்துக்கொள்கிறேன். எந்தக் காலத்தில் இச்சொல் தமிழில் புழக்கத்தில் வந்தது? மொழியாராய்ச்சியில் அச்சொல்லை நோக்கிக் கேட்கவேண்டிய முதல்வினா அது காரணப்பெயரா இடுகுறிப்பெயரா என்பதே. காரணப்பெயர் என்றால் அது பின்னாளில் இங்கே வந்தது.
உதாரணமாக, புரட்சி. பாரதி உருவாக்கிய சொல்லாட்சி. பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பிய அரசியல் கிளர்ச்சிகளில் இருந்து பிறந்தது. முழுமையான மாற்றம், ஒட்டுமொத்தமான மாற்றம், தலைகீழான மாற்றம் என்பதைச் சுட்டுகிறது. புரள்வது என்ற சொல்லின் நீட்சியாக வந்தது. நாம் படிப்படியான மாற்றத்தையே அறிந்திருக்கிறோம். புரட்சி நமக்கு ஒரு புதிய செய்தியே.
இடுகுறிச்சொற்கள் அக்கருத்துக்கு இடப்பட்ட ஒலிக்குறிப்புகள் மட்டுமே. ஒரு குழந்தை உடலும் உயிருமாகப் பிறப்பதுபோலக் கருத்து சொல்லும் பொருளுமாகவே மானுட மனதில் உருவாகிறது. அதற்கு சொல்லால் பெயரிடப்படுவதில்லை. அந்தச் சொல்லே அதைக் கொண்டு செல்கிறது, விரியச்செய்கிறது.
இடுகுறிச்சொற்களை ஆராயும்போது சிறந்த வழி என்பது அச்சொல்லின் அருகே உள்ள சொற்களை கவனிப்பது. எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி அதற்கு மிகச்சிறந்த சாதனம். அதன் அகரவரிசை நமக்கு ஒரு சொல் கூடவே கொண்டுவரும் பிற சொற்களை சுட்டிக்காட்டி அபாரமான மனவெளிச்சங்களை அளிக்கிறது.
அறம் என்ற சொல்லின் அருகே அமர்ந்த சொல் அறுதல். அதுவே அதன் மொழிமூலமாக இருக்கலாம். அற்றம் என்றால் இறுதி. அற்றுபடி என்றால் திட்டவட்டம். அதாவது அறுத்துச் சொல்லுதல், வரையறைசெய்து சொல்லுதல், கடைசியாகச் சொல்லுதல் என்ற தொனியில் இச்சொல் பிறந்திருக்கலாம்.
அறம்பாடுதல் என்கிறோம். பெரும் துன்பப்பட்ட கவிஞன் அதற்குக் காரணமானவர் அழியும்படியாகப் பாடும் பாடல். நந்திவர்ம பல்லவனை அவன் சகோதரன் அறம்பாடிக் கொன்றான் என்று நம் தொன்ம மரபு சொல்கிறது. அங்கே வரும் அறம் என்பது தர்மம் அல்ல. எதிக்ஸ் அல்ல. அது இறுதிதான். அறப்பாடுதல், அறும்படி பாடுதல். அற்றம் வரும்படி பாடுதலே அங்கே அறமாக சொல்லப்படுகிறது.
அறம் என்பது இதுதான். ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக்கொண்ட நடத்தைகள். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை. அதுவே அறம்.
நாம் நம் மொழிமரபில் அறம் என்ற சொல்லின் பிறப்புச்சூழலைப் பார்க்கையில் சங்க காலம் கண்ணுக்கு முன்விரிகிறது. புறநானூற்றுக்காலம் என்பது பெருங்குடி மன்னர்களான மூவேந்தர் சிறுகுடிமன்னர்களான வேளிர்களை, கடல்சேர்ப்பர்களை, குறவமன்னர்களை அழித்தொழித்துப் பேரரசுகளை உருவாக்கும் போர்ச்சூழல் என்பதுதான் வரலாறு. சங்கம் மருவியகாலத்தில் முடியுடை மூவேந்தர் மட்டுமே எஞ்சுகிறார்கள். அந்தப்போர்ச்சூழல் எல்லாவகை வன்முறையையும் அனுமதிக்கிறது.
எரிபரந்தெடுத்தல் என்று சங்க இலக்கியம் பேசும் போரழிவுகள் கொடூரமானவை. எதிரிநாட்டுப்பெண்கள் அறுத்தெறிந்த தாலிகள் சாலைகளில் மலையாகக் குவிகின்றன. புகை நகரை மூட பெண்களின் கண்ணீரில் யானைக்கால் வழுக்குகிறது. எதிரிநாட்டு ஊருணிகளை யானை வைத்து அழிக்கிறார்கள். வீடுகளை எரிக்கிறார்கள். எதிரி மன்னனின் பல்லைக்கொண்டுவந்து சுவரில் பதிக்கிறார்கள்.எல்லாமே அறம்தான்.
இன்றைய நம் அறவுணர்ச்சி கூசுகிறது. ஆனால் அறம் என்பது மெல்லமெல்ல சமூகத்தால் விரிவாக்கம் செய்யப்பட்ட ஒரு கருத்து என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அறம் என்ற கருத்து ஒரு சிறு மக்கள் குழுவில் உருவாகிறது. அது அவர்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. ஒரு குடும்பத்துக்குள் உருவாகும்போது அது குடும்ப அறம். குடும்பம் குலமாக ஆகும்போது அது குல அறம். குலம் நாடாக ஆகும்போது அது அரசியல் அறம். நாடுகள் மானுடமாகும்போது மானுட அறம்.
சங்ககாலத்தில் நாம் காண்பது குல அறங்கள் அரசியலறங்களாகத் திரளும் ஒரு பெருநிகழ்வை. போர்வெறியைக் கொண்டாடக்கூடிய, கொலையை கொள்ளையை அனுமதிக்கக் கூடிய, சங்ககாலத் தமிழ்ச்சமூகம் கொஞ்சம்கூட அனுமதிக்காத ஒன்றுண்டு. நன்னன் என்பவன் செய்த பெண்கொலை. ஒரே ஒரு பெண்ணைக் கொன்ற நன்னன் என்ற குறுநில மன்னனைப் புலவர்கள் மீண்டும் மீண்டும் சாபமிட்டுப் பாடியிருப்பதைக் காணலாம். தன் மக்களாலேயே நன்னன் ஒதுக்கப்பட்டான். ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்றே வரலாற்றில் அறியப்பட்டான்.
அது மானுட அறம். என்னதான் இருந்தாலும் ஒருபோதும் செய்யக்கூடாத விஷயம் அது என தமிழ்ச்சமூகம் நினைத்தது. அவ்வாறு ஒரு சமூகம் நினைப்பவற்றின் அளவு பெருகப்பெருக அச்சமூகம் மானுட அறம்நோக்கி நகர்கிறது. கால-இட-சூழலை மீறிய அறத்தையே நாம் ‘அறம்’ என்கிறோம்.சங்கப்பாடல்களில் பொருண்மொழிக்காஞ்சியில் மானுட அறம் நோக்கிய தேடலை, விவாதத்தைக் காண்கிறோம். ஆனால் சங்கம் மருவிய காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அந்த அறத்தை வந்தடைந்திருப்பதைக் காணலாம் . அரைசியல் பிழைத்தோர்க்குக் கூற்றாக வரும் அறம் என்பது அதுவே.
அந்த அறம் ஒரு பலிவாங்கும் போர்க்கடவுளாக உருவாகி வந்திருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரக் காலகட்டத்தில் பெருமன்னர்கள் உருவாகிவிட்டிருந்தனர். அவர்கள் கட்டற்ற அதிகாரமுள்ளவர்கள். குறுங்குடிமன்னர்கள் குல அறத்தால், ஆசாரமரியாதைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் பெருங்குடிமன்னனுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவன் தவறுசெய்தால் தட்டிக்கேட்பது எது? அதுவே அறம். மானுட அறம். கூற்றாக அது வந்து வாசலில் நிற்கும் என்கிறார் இளங்கோ.
அதையே வள்ளுவர் ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்றார். அந்த அறம் நோக்கி நம் சமூகம் நகர்ந்ததை நாம் வள்ளுவர் வழியாகப் பார்க்கிறோம். அறன் வலியுறுத்தல் என்று வள்ளுவர் சொல்வது மானுட அறத்தையே. இல்லறம் துறவறம் என்னும் சிறிய அறங்களுக்கு அப்பால் கோபுர உச்சிபோல மானுட அறம் எழுகிறது.
அறத்துக்கு மாற்றாக மறத்தைக் கூறும் ஒரு வழக்கம் நம்மிடம் உள்ளது. ஆனால் சங்ககாலத்தில் மறம் உயர்ந்த விழுமியமாகவே இருந்தது. அது அறத்தின் எதிர்மறைச்சொல் அல்ல. மறுத்தல், மறுத்து நிற்றல் என்பதே மறம். அது வன்முறை என்றும் ஆகவே அறத்துக்கு எதிரானது என்றும் கண்டவர் வள்ளுவர். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை என அந்த எதிரீட்டை அவர்தான் உருவாக்கினார். அது அவரது சமண அறம்.
அந்தத் தேடலின் உச்சியில் கம்பராமாயணம் நிகழ்ந்தது. அறத்தின் மூர்த்தியான் என கம்பன் ராமனைச் சொல்கிறான். ராமனின் குணம் அல்ல அறம். ராமன் அறத்தின் உடல்வடிவம். அறம் ராமனைவிட மேலானது. தருமம் பின் இரங்கி ஏக என்று சொல்லும்போது கம்பன் அதை ஒரு தனி இருப்பாக, தனி ஆளுமையாக உருவகிக்கிறான். அதுவே நம் மரபின் உச்சகட்ட அறத்தரிசனம்.
நாம் நினைப்பதுபோல நம் மன்னர்கள் முற்றதிகாரம் கொண்டவர்கள் அல்ல. அவர்களைக் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் சான்றோர் அவைகள் இருந்தன. சிற்றரசர்சபைகள் இருந்தன. தமிழகத்தின் மாபெரும் முடிமன்னனாகிய ராஜராஜனே சிற்றரசர் சபைக்குக் கட்டுப்பட்டு இருப்பதை நீங்கள் பொன்னியின் செல்வனிலேயே வாசிக்கலாம். கொடும்பாளூர் வேளார்கள், பழுவேட்டரையர்கள் என அந்த சபையில் பல சிற்றரசர்கள் இருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து மன்னனைத் தலைவனாக அங்கீகரிக்கவேண்டும்.அவ்வாறு அங்கீகாரம் பெற்றவனே மன்னன்.ஆகவேதான் அவனுக்குக் குலசேகரன் — குலங்களைத் தொகுத்தவன்– என்ற அடைமொழி உள்ளது. குல அறத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பழைய மன்னன் மானுட அறத்தால் ஆளப்படுபவனாக ஆவதையே நாம் இலக்கியங்களில் காண்கிறோம்.
என் அண்ணா பொதுவாகக் குடும்பத்திற்குள் உதவிகள் செய்யக்கூடியவனாக இருந்தார். என் அம்மாவுக்குத் தோழியாக இருந்த ஒரு பெண்மணிக்கு அவர் உதவிகள் செய்வதுண்டு. படுகிழவி. ஒருமுறை அண்ணா சென்றபோது அவள் பழைய சாக்கைப் போர்த்திக்கொண்டு இருப்பதைக் கண்டார். உடனே ஒரு கம்பிளியை வாங்கிக்கொடுத்தார். அடுத்தமுறை போனபோது கிழவி அதே சாக்கைப் போர்த்திக்கொண்டிருந்தாள். ‘என் மூத்தமகனின் பிள்ளை தரையிலே கிடக்கிறது. அதற்குக் கொடுத்துவிட்டேன்’ என்றாளாம்.
அண்ணா இன்னொரு கம்பிளி வாங்கிக்கொடுத்தார். ஆனால் மறுமுறை செல்லும்போது அதுவும் இல்லை. ‘மகளுக்குக் கம்பிளி இல்லை. அவளுக்குக் கொடுத்தேன்’ மூன்றாம் முறையும் கம்பிளி வாங்கிக்கொடுத்தார். அதுவும் ஒரே வாரத்தில் ஒரு பேரனுக்குக் கொடுக்கப்பட்டது. அண்ணா சொன்னார் ‘ஆயிரம் முறை வாங்கிக்கொடுத்தாலும் இப்படித்தான் நடக்கும்…பிறந்தநாள் முதல் தனக்கென எதையும் தேடாத வாழ்க்கை…குழந்தையாக இருக்கும்போதே குழந்தை வளர்க்க ஆரம்பித்திருப்பாள்…அந்த நாள் முதல் அன்னைதான். கொடுத்துத்தான் பழக்கம்.’
அது குல அறம். தன் குலத்துக்காகத் தன்னை அர்ப்பணித்த வாழ்க்கை. அதற்குமேல் ஓர் அறம் உண்டு. அதுவே மானுட அறம். என் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள டீக்கடையில் அய்யப்பண்ணன் என்பவர் டீ குடிக்க வருவார். நூறுவயது தாண்டியவர். விவசாயி. அய்யப்பண்ணனுக்கு பொய்கையாறு அணை இன்று இருக்கும் இடத்தில் வயல் இருந்தது. அங்கே செல்ல புலியூர்க்குறிச்சியில் பஸ் இறங்கி எட்டுமைல் நடக்கவேண்டும்.
அய்யப்பண்ணன் ஓட்டலில் நுழைந்து காலையுணவு சாப்பிடப்போகும்போது பஸ் வந்துவிட்டது. அடுத்த பஸ் மதியம்தான். ஆகவே பாய்ந்து ஏறிவிட்டார். கையில் தூக்குப்போணியில் பழையது இருக்கும் தைரியம். மதியம் வரை வெயிலில் வேலைசெய்துவிட்டு பசிவெறியுடன் சாப்பிட வரும்போது பார்த்தால் ஒரு நாடோடி அவரது போணிச்சோற்றை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். அருகே நின்ற கம்பைப் பிடுங்கிக்கொண்டு அய்யப்பண்ணன் ஓடி வந்தார்.
நாடோடிக்கும் பயங்கரமான பசி போல. அவன் போணியை வழித்து நக்கிக்கொண்டிருந்தான். பசியாறிய முகத்துடன் ஏறிட்டுப்பார்த்தான். ‘எப்டி நான் அவன அடிப்பேன்…பசியாறின மொகத்தில உள்ளது மகாலச்சுமியில்லா?’ என்றார் அய்யப்பண்ணன் என்னிடம். அய்யப்பண்ணனின் அந்த மனவிரிவே மானுட அறம்.
நண்பர்களே, மானுட வரலாறென்பது அறத்தின் பரிணாம வளர்ச்சிதான்.
நன்றி
[14-4-2012 அன்று குவைத் முத்தமிழ்மன்றத்தில் ஆற்றிய உரை]