குவைத்தில் நாங்கள் திட்டமிடாது கலந்துகொண்ட நிகழ்ச்சி நாஞ்சில்நாடனின் கம்பராமாயண விளக்க உரை. காலை பத்துமணிக்கு ஜெயகாந்தனின் வீட்டில் ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் முப்பதுபேர் கலந்துகொண்டார்கள். குவைத்தின் முக்கியமான இலக்கிய வாசகர்கள் அனைவருமே வந்திருந்ததாகச் சொன்னார்கள். நாஞ்சில்நாடன் கம்பராமாயணத்தை அவர் பாடம்கேட்டது முதல் ஆரம்பித்து ஒவ்வொரு காண்டத்திலும் சில உதாரணப்பாடல்களை சுட்டிக்காட்டிப் பேசினார். நாஞ்சிலுக்கே உரிய உணர்ச்சிகரமான பேச்சு.
வந்திருந்தவர்களில் பலருக்கு கம்பராமாயண அறிமுகம் இருந்தது ஆச்சரியமளித்தது. புதுக்கவிதை எழுதுபவரான பாம்பாட்டிச்சித்தன் சரசரவென சில கம்பராமாயணப்பாடல்களைச் சொன்னார். அவரது ஊரில் இருந்து கற்றுக்கொண்டாராம். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். குவைத்தில் தமிழ் வகுப்பு நடத்தும் ஆசிரியை ஒருவரும் கம்பராமாயணப்பாடல்களை நினைவுகூர்ந்ததைக் கண்டேன்.
அதன்பின் பொதுவாக இலக்கியம் வரலாறு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நாள்முழுக்க நண்பர்களைச் சந்திப்பதிலேயே செலவாகியது. நாஞ்சில்நாடனின் நண்பரான இசக்கி வந்திருந்தார். ஜெயகாந்தன் வீட்டிலேயே மதிய உணவு. நாஞ்சில் மீதுள்ள பீதியால் வெஜிடபிள் பிரியாணி கவனமாகத் தவிர்க்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.
மதியம் சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்து குளித்து உடைமாற்றி அரங்குக்குச் சென்றோம். குவைத்த்தில் பல தமிழ்ச்சங்கங்கள் இருந்தாலும் சமீபகாலமாக ஆரம்பிக்கப்பட்ட முத்தமிழ்மன்றம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் தீவிரச்செயல்பாட்டாளரான ஜெயபாலன் காஞ்சீபுரத்துக்காரர். அங்கே முப்பத்தொன்று வருடங்களாக இருக்கிறார். நான் சமீபகாலத்தில் அவரைப்போல உற்சாகமே உருவான ஒருவரைப் பார்த்ததில்லை. பரபரப்பாகப் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினார். அவற்றைக் கிளம்பும்போது அச்சுப்போட்டுக் கையிலும் கொடுத்தார். மென்பிரதி கையில் இல்லாததனால் இணையத்தில் ஏற்றமுடியவில்லை.
முத்தமிழ்மன்றத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான பழமலை கிருஷ்ணமூர்த்தி பழந்தமிழ் இலக்கியங்களில் தீவிரமான வாசிப்பு கொண்டவர். எங்கள் பேச்சுகளில் கூடவே இருந்தார். பழந்தமிழிலக்கியம் பற்றிய பேச்சுகளில் மட்டும் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு முன்னால் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள். அன்னிய மண்ணில் தமிழ்க்குழந்தைகள், அதிலும் பள்ளியில் தமிழே பயிலாத குழந்தைகள், தமிழில் பேசிப் பாடுவது ஒரு மனநிறைவை அளித்தது. ஜெயகாந்தனின் மகள் தேஜஸ்ரீ பரதநாட்டியம் ஆடினார். வழக்கமாக இத்தகைய தமிழ்மன்ற நடனங்கள் போலப் பயில்முறை நடனம் அல்ல. மிகத்தேர்ந்த நடனம். துல்லியமான அசைவுகள் . அதைவிடப் பாடலின் பொருள்புரிந்த பாவங்கள், இன்று சிறு பெண்களின் நடனங்களில் அதை அனேகமாக பார்க்கவே முடியாது.
கடைசியாக ஆடப்பட்ட ஸ்வாதித்திருநாள் தில்லானா என்னை மிகுந்த மனக்கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. சுவாதித்திருநாள் என்னை என்றுமே கவர்ந்த கலைஞர். அவருடையது வெறும் பாடல் அல்ல. எல்லாவற்றிலும் தாபமும் தனிமையும் இருக்கும். அவரது சோகம் மிக்க வாழ்க்கையும் அத்தகையது. ஒரு கலைஞன் எப்படிப்பட்ட வாழ்க்கையில் இருக்கக்கூடாதோ அப்படிப்பட்ட வாழ்க்கையில் அவர் மாட்டிக்கொண்டார். மன்னனாக. அவமதிப்புகள், தோல்விகள், தனிமை. ஆனால் எதுவும் கலைஞனுக்கு ஊக்கமருந்துதான் போலும்.
பழமலை கிருஷ்ணமூர்த்தி முதலில் பழந்தமிழ் இலக்கியங்களைப்பற்றி, குறள்பற்றி குறிப்பாக, விரிவாகப்பேசினார். அதன்பின் நான் ‘அறன் எனப்படுவது யாதெனின்’ என்ற தலைப்பில் பேசினேன். கடைசியாக நாஞ்சில்நாடன் ‘இலக்கியம் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் தமிழிலக்கியத்தின் நீண்ட மரபைப்பற்றிப் பேசினார்.
விழாமுடிந்தபின் அறைக்கு சித்தார்த், ஜெயகாந்தன் எல்லாரும் வந்திருந்தார்கள். இரவு ஒரு மணிவரைக்கும் பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் உற்சாகமான வேடிக்கையான விஷயங்கள். கொஞ்சம் இலக்கியம் கொஞ்சம் வரலாறு கொஞ்சம் அரசியல்.
மறுநாள் காலையில் மாதவன்பிள்ளையும் சித்தார்த்தும் வந்திருந்தார்கள். அவர்களுடன் குவைத்தின் அருங்காட்சியகம் சென்றோம். படூயின்பழங்குடிகள் அக்காலத்தில் கையாலேயே செய்துவந்த கூடாரத்துணி நெசவு மற்றும் ஆடைநெசவுக்கலையைப்பற்றிய விளக்கங்களுடன் மாதிரிகளையும் வைத்திருந்தனர். பொதுவாகப் பாலைவனமக்கள் பளீரிடும் நிறங்களையே விரும்புகிறார்கள். கடல்மக்களும் அப்படியே. பாலையிலும் கடலிலும் உள்ள வெறிச்சிட்ட ஒரே நிறத்துக்கு மாற்றாக அவர்களுக்கு நிறங்கள் தேவைப்படுகின்றன போலும்.
குவைத்தை சுற்றிப்பார்த்தோம். துபாய்போல ஒரு அதிநவீன நகரமல்ல. ‘இது புராணத்தில் வரும் வைஜயந்தம். பிரம்மாண்டமான, ஆன்மா இல்லாத நகரம்’ என்றார் ஜெயகாந்தன். ராவணனைத் தேடி இலங்கைசெல்லும் அனுமன் அங்குள்ள செய்குன்றுகளை ‘பாவப்பண்டாரங்கள்’ [பாவக்களஞ்சியங்கள்] என்று சொல்வதை நாஞ்சில் நினைவுகூர்ந்தார்.
குவைத்திலும் துபாயிலும் உள்ள மெல்லிய சங்கடம் அராபியக் காவலர்களும் ஊழியர்களும் நம்மை நடத்தும் விதம். கண்களில் வெறுப்பு பொங்க அலட்சியமாக அவர்கள் சொல்லும் வார்த்தைகள். அனேகமாக உலகில் எங்கும் நாம் இப்படி நேரடியாக அவமதிப்பைச் சந்திக்க நேராது. நான் ஒரு காவல் பெண்ணிடம் என் பாஸ்போர்ட்டை நீட்டினேன். அவள் ஏதோ கைகாட்டினாள். நான் டிக்கெட்டைக் கேட்கிறாள் என நினைத்து அதை நீட்ட மிக அலட்சியமாக ஏதோ சொல்லி மெலிதாகத் துப்பினாள்.
குவைத்தில் நாஞ்சில் கொஞ்சம் பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொண்டார். நான் எதுவும் வாங்க விரும்பவில்லை. எங்கு போனாலும் எதுவும் வாங்குவது என் வழக்கம் இல்லை. குழந்தைகளுக்கும் அந்த எதிர்பார்ப்பில்லாமல் ஆக்கியிருக்கிறேன். நண்பர்கள் வற்புறுத்தி டீத்தூள், பேரீச்சை போன்று சிலவற்றை வாங்கித்தந்தனர். ஜெயபாலனும் சித்தார்த்தின் அப்பாவும் சில பரிசுப்பொருட்களை அளித்தனர். அவர்கள் தந்த பணத்தை விஷ்ணுபுரம் அமைப்புக்கான நன்கொடையாகக் கணக்கில் வைத்துக்கொண்டு அரங்கசாமிக்கு அறிவித்தேன்.
மாலையில் விமானநிலையத்துக்கு நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். உணர்ச்சிகரமாக விடை கொடுத்தனர். ஒவ்வொருமுறை வெளிநாட்டுக்குச் சென்று நண்பர்களைப் பிரிந்து தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மண்ணைப் பிரிந்து வேறெங்கோ செல்வதுபோன்ற அதே மனநெகிழ்வு ஏற்படுகிறது.
விமானம் வானில் எழுந்தபோது நினைத்துக்கொண்டேன். எப்போதும் நினைப்பதுதான். உலகம் முழுக்கத் தமிழினம் பரவிக்கொண்டே இருக்கிறது. நிற, மத அடையாளத்துக்கு அப்பால். அதில் எந்த அளவுக்குத் தமிழ் நீடிக்கும்?
[முற்றும்]