அன்புள்ள ஜெயமோகனுக்கு,
உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நீண்ட நாள் வாசகன். விஷ்ணுபுரம் வெளியிட்டு, அது ஒரு இந்துத்துவ கொள்கைகளைத் தூக்கி நிறுத்தும் படைப்பு என்று 1999 வாக்கில் வந்த விமர்சனமே நான் உங்களை முதலில் அறியவைத்தது.(“விஷ்ணுபுரம்” என்ற பேரைக் கேட்டு அது ஏதோ “தலபுராணம்” வகையைச் சார்ந்ததாகவே இருக்கும் என்றே நினைத்திருந்தேன்.) ஒரு நீண்ட நாள் வாசகனாக இவ்வளவு காலமும் உங்கள் கருத்துகள் எங்கள் சிந்தனைப் பரப்பை மேலும் மேலும் விரிவடையச் செய்துகொண்டே இருக்கிறது..
எந்த ஒரு விஷயத்திலும் உங்களுடைய வாதம், விவாதம் எப்பொழுதும் அசரவைக்கக் கூடியது…. செய்திகள், அவற்றின் புறக் காரணிகள் எங்களை ஒருபக்கம் சேர்த்தால், நீங்கள் அவற்றை உங்களது பன்முக வாதத்தால் கொண்டு சேர்க்கும் இடம், மலைக்கக் கூடியது. நாங்கள் “இருந்த இடத்தில்” இருந்து மனம் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புறம் நோக்கி நகர்ந்து செல்வதை உணர்ந்துகொண்டே நகரும் தருணங்கள் அவை.
உங்கள் கருத்துக்கள் தடம் பற்றியே எங்கள் சிந்தனைத் தளம் விரிவடைகிறது,” பாம்பு தீண்டிய பாம்பாய்” ஆகிவிடக்கூடாது என்ற எண்ணம் அடிநீரோட்டமாய் ஓடிக்கொண்டே இருந்தாலும். சில காலமாக இந்தக் கேள்விகள் என்னுள் தொக்கி நின்று கொண்டே இருக்கின்றன.என்மன அமைப்புப்படி எனக்கான பதில்கள் எனக்குக் கிடைத்தாலும், இது உங்களையும் சார்ந்தது என்று நினைப்பதால் உங்களிடமும் கேட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.
என்னுடைய கேள்வி இதுதான். உங்களைப் பற்றியோ உங்கள் கருத்துகளைப் பற்றியோ தமிழகத்தின் பல்வேறு சிந்தனைவாதிகளோ, களப்பணியாளர்களோ பொதுவில் வைக்கும் விவாதங்களை உங்கள் வாசகர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
அவதூறுகளை எளிதாக இனம் கண்டு புறக்கணித்து செல்ல முடியும். அவற்றுக்கு யாரையும் தீண்டும் எந்த வலிமையும் இல்லை என்பதே அதன் பலம். தன்னுடைய முதிர்ச்சி இன்மையையும் பரந்த வாசிப்பற்ற தன்மையையும், கருப்பு அல்லது வெள்ளை என்ற இரு வண்ணங்களே உலகில் உண்டென நம்பும் எளிமையையும் ஒருவர் பொதுவெளியில் வைப்பதைப் பற்றி சொல்லுவதற்கு எதுவும் இல்லை. அவர்களுடைய வார்த்தைகளே அவற்றைப் பற்றிப் பேசும்போது அங்கு வேறு ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.
ஆனால் சிந்தனைப் பரப்பை விரிவுகொள்ளச் செய்யும் ஒருவர் உங்களைப் பற்றியோ உங்கள் கருத்துகளைப் பற்றியோ ஒரு விவாதத்தை ஆரம்பிக்கும் போது, அதில் நாங்கள் சொல்லுவதற்கு ஏதாவது உண்டா? அப்படி சொல்ல தொடங்கினால் உங்களுடைய வாசகர்களாக அந்த விவாதத்தை எவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்? இல்லை இவை அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே பதில் சொல்லத் தகுதியானவர் என கொண்டு பார்வையாளனாகவே இருந்துவிட வேண்டுமா? ஆனால் இது எதுவுமே பிரச்சினை இல்லை. உண்மையான பிரச்சினை, வாசகர்களாக ஒத்தகருத்துடையவர்கள் உங்களைத் தற்காத்துப் பேசுவது ஒரு குழுமனப்பான்மையாக முன்னிறுத்தபடுமே?
சில சமகால எழுத்தாளர்கள் இந்தக் குழு மனப்பான்மையைத் தங்களுடைய எழுத்தின் பலவீனங்களுக்கு எதிராகக் கேடயமாக பயன்படுத்துவதைப் பார்த்துப் பார்த்து இந்தக் குழு மனப்பான்மை மேல் மனதிற்கு ஒவ்வா நிலை ஏற்பட்டுவிட்டது. அவ்வாறு உங்களைத்தற்காத்துப் பேசுபவர்கள் சிறப்பாகத் தன் வாதத்தை எடுத்து செல்ல இயலாதபோது அது உங்கள் கருத்துக்களின் பலவீனமாக கொள்ளப்படுமே? சிலவாசகர்கள் உங்கள் மேல் கொண்ட அன்பினால் உங்களை அதீதமாகத் தற்காத்துப் பேசுவது விவாதகள நெறிகளுக்கு ஏற்புடையதாக இல்லையே. அவ்வாறு தற்காத்துப் பேசுபவர்களின் விவாதத் திறமைக் குறைவு, முடிவில் உங்கள் கருத்துகளின் பலவீனமாகக் கருதப்படுமே.
ஒரு வாசகன் எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை அந்த எழுத்தாளனிடமே கேட்பது மிகவும் தவறான செயல் என்றே கருதுகின்றேன். சிந்தனை மரபுக்கே எதிரான செயல். எழுத்தாளனை நிறுவனமயமாக்கும் குறுகிய எண்ணம்தான். ஆனால் எனது கேள்வி, பொதுவாக இந்த வாசக மனநிலையை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள். இவர்களுக்கென்று சொல்ல உங்களிடம் உள்ள வார்த்தைகள் என்ன?
என்மன அமைப்புபடி, எந்த ஒரு வாசகனும் அவன் ஆதர்ச எழுத்தாளனை “காப்பாற்ற” எல்லாம் நினைக்க கூடாது. நீங்கள் காந்தியை சொன்னது போல் “அவருடைய சித்தாந்தங்களுக்கு அந்த பலம் இருந்தால் அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்”. ஒரு விவாதம் முரண்பட்ட புரிதல்களோடு இருந்தால், நாம் எவ்வாறு அதைப் புரிந்துகொண்டோம் என்று விளக்கி அந்தக் கோணத்தில் அந்த எழுத்தாளனின் கருத்தைப் புரிய வைக்க முயலலாம். அந்த முரணியக்கமே எந்தவிவாதத்தையும் முன்கொண்டு செல்லும். அந்த எழுத்தாளனின் எழுத்தில் ஏதேனும் குறைகள் உண்டென நாம் கருதினால், நாம் குறைகளாக உணர்வதை சொல்லி/சுட்டிக்காட்டிப் பின் விவாதத்தைத் தொடர வேண்டும்.
உண்மையில் எந்த ஒரு படைப்பிலும், படைத்து முடித்தவுடனே அந்தப் படைப்பாளியின் பங்கு முடிவுற்றுவிடுகிறது. அந்தப் படைப்பும் அது சார்ந்த கருத்துக்களுமே அங்கு நிலை பெறுகிறது, இல்லையா?. எனவே எந்த ஒரு கருத்தியல் விவாதத்திலும் படைப்பாளியைப் பற்றிப் பேச ஒன்றுமே இல்லாமல் இருக்கலாம். கருத்துகளும் அது சார்ந்த எதிர் கருத்துக்களுமே அங்கு பேசப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன்.போர்க் களத்தில் இரு தேர்ந்த வீரர்களின் வாள்வீச்சு நடக்கும்போது, ஒருகணத்தில் அந்தக் களம் மறைந்து போகும், பின் இரு வீரர்களும் கண் விட்டு மறைந்து போவார்கள்.எஞ்சி இருப்பது வாளின் கூர்மையும் அதை சுழற்றும் லாவகமுமேதான். பின்வருபவர்களுக்கு அவர்கள் கற்றுக் கொடுப்பது அந்தக் கூர்மையும், அந்த வாளின் லாவகமும் அதை பயபடுத்துவதற்கான உச்சபட்ச சாத்தியங்களையும்தானே…
எந்த ஒரு எழுத்தாளனின் கருத்துக்களும் ஒரு விந்தணு போன்றது என்றே கொள்கிறேன். அதைத் தாங்க எனக்கு வலிமை இருந்தால், அது என்னுள் தங்கி, அது வளர்வதற்கான இடமும், சூழ்நிலையும் வாய்த்தால், என் சிந்தனா சக்தி கொண்டு, தன்னை வளர்த்து, ஒரு முழுமையான கருத்தாக உருகொண்டுயரும். அது அந்த எழுத்தாளனின் சாயல் கொண்டிருக்க எல்லா சாத்தியங்களும் உண்டு என்றாலும், அது என்கருத்தாகவுமே இருப்பதால், அதை எங்கும் என்னால் தற்காத்துப் பேச முடியும். அப்படி இல்லாமல் ஒரு எழுத்தாளன் சொன்னான் என்பதற்காகவே எல்லாக் கருத்துகளையும் நான் தற்காக்க முயன்றால், நான் அங்கு அந்த எழுத்தாளனைப் பிரதி செய்யவே முயல்கிறேன். அது இயலாதது, “என்னுள் ஒன்றாய்” ஆகாத ஒன்றை என்னால் தற்காக்க நீண்ட நேரம் முடியாது. ஒரு கட்டத்தில் நான் தோல்வியையே சந்திக்க இயலும்.
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கருத்தையும் நம்முள் ஒன்றாய் ஆக்கி புதிய உயிர் / உரு செய்யும் முயற்சியே இந்தப் படிப்புலக வாழ்க்கையாக இருக்கிறது, இல்லையா?. சில “கரு” தங்க அதன் பலமோ அல்லது என்பலமோ இடம்கொடாது. சிலது தங்கி வளர இயலாமல் அப்படியே இருக்கும், குறைப் பிரசவங்களும் ஏராளம். நன்றி ஜெமோ.
அன்புடன்
சரவணன் விவேகாநந்தன்
சிங்கப்பூர்.
அன்புள்ள சரவணன்,
கிட்டத்தட்ட நான் நினைப்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
நான் இன்னும் கொஞ்சம் விரிவாகவே இதைச் சொல்வேன். எழுத்தாளர்களுக்கு, அல்லது சிந்தனையாளர்களுக்கு விசுவாசமாக இருப்பது மட்டும் தவறு அல்ல. எந்தக் கருத்துநிலைக்கும், எந்த அமைப்புக்கும், எந்தக் கொள்கைக்கும், விசுவாசமாக இருப்பதும் தவறுதான். அதற்காக தற்காப்பு நிலைப்பாடு எடுப்பதும் சிந்தனைத் தேக்கத்துக்கே வழிவகுக்கும்.
என் இரு பெருநாவல்களிலும் இந்தக் கோணத்தையே விரிவாக விவாதித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் அதன் ஆன்மீக தளத்தைப் பேசுகிறதென்றால் பின் தொடரும் நிழலின் குரல் அதன் அறத் தளத்தைப் பேசுகிறது
பிரபஞ்சமும் இயற்கையும் மனமும் முடிவிலிகள். முடிவிலிகளின் முயக்கமான இந்த மாபெரும் இயக்கம் அறிவுக்கு அப்பாற்பட்டது. அதை அறிய ஒருமனிதனுக்கு உதவக்கூடிய ஒன்றே ஒன்றுதான் உள்ளது- அவனுக்கு நிகழும் வாழ்க்கை.
’எந்த மெய்ஞானத்தையும் சொந்த அனுபவத்திலிருந்தே ஆரம்பி’ என்று விஷ்ணுபுரத்தின் ஒரு கதாபாத்திரம் சொல்லும். அதுவே திட்டவட்டமானது, நமக்கானது. நம் வாசிப்பும், சிந்தனையும் எல்லாம் அந்த அனுபவத்துளிகளை இணைத்துக்கொள்ளவும் விளக்கிக்கொள்ளவும்தான்.
அந்த விளக்கத்தை முன்வைத்தே ஒருவர் இன்னொருவரிடம் விவாதிக்கவேண்டும். அந்த விவாதம் மட்டுமே பயனுள்ளது. மற்றவை வெறும் சொற்கள்.
சுய அனுபவங்களை நிராகரித்துக்கொண்டுதான் ஒருவர் ஒரு கொள்கைக்கு, ஓர் அமைப்புக்கு, ஒரு தரப்புக்கு முழு விசுவாசமாக இருக்க முடியும். அது கருத்துலகத் தற்கொலை.
நான் என் அனுபவத்தையே என் வாசிப்பின் மூலம் விளக்கிக்கொண்டு முன்வைக்கிறேன். எனக்கு தல்ஸ்தோயோ, காந்தியோ,சுந்தர ராமசாமியோ, நித்யசைதன்ய யதியோ ஆதாரம் அல்ல. என் அனுபவங்களே என் அடிப்படை. என் அனுபவங்களை விளக்காதபோது இவர்களை நிராகரிக்க எந்த தயக்கமும் இல்லை.
என் வாசகர்களிடமும் இதையே சொல்வேன். என் கருத்துக்களை அவர்கள் நம்ப வேண்டியதில்லை. ஏற்று ஒழுகவேண்டியதில்லை. அவர்களின் அனுபவங்களை விளக்கிக்கொள்ள இவை உதவுகின்றனவா என்று மட்டும் பார்த்தால்போதும். அவ்விளக்கத்தைத் தங்கள் தரப்பாக முன்வைத்தால் போதும்.
எந்த சபையிலும் ஒருவர் தன் அனுபவங்களை நேர்மையாக முன்வைக்கலாம். அவை ஒருபோதும் அர்த்தமற்றவையாகாது, ஏனென்றால் அவை போல பிறிதொன்றிருக்காது. அவை ஒருபோதும் காலாவதியாகாது, ஏனென்றால் வாழ்க்கை திரும்ப நிகழ்வதில்லை
ஜெ