அன்புள்ள ஜெ,
துபாய் நிகழ்ச்சியில் உங்களையும் நாஞ்சில் அவர்களையும் சந்தித்தது பேருவகை. கூடத்தில் நுழைந்ததும் முதலில் உங்களைக் கண்டேன். அதிகம் பேர் உங்களை சுற்றிலும் இல்லாதது ‘நாம் சந்திக்க ஒரு வாய்ப்பு’ என்று மகிழ்ச்சி. உடனேயே உங்களிடம் வந்தும்விட்டேன். வந்த பிறகு சுரேஷின் அதே தயக்கம் எனக்கும்
உங்களிடம் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொண்டதும், நீங்கள் மேலும் பேசத் தயாராக இருந்தது உள்ளுக்குள் பெருமகிழ்ச்சி கலந்த சங்கடம். நீங்கள் மிக இயல்பாகப் பேசத் தயாராக இருந்தது மகிழ்ச்சி; நான் என்ன பேசுவது எங்கே தொடங்குவது என்று குழம்பியது சங்கடம். ஆனால், அப்போது எனக்கிருந்த பதட்டமும், தயக்கமும் இப்போது நினைக்கும் போதும் வருந்தச் செய்கிறது, நல்ல ஒரு தருணம் முழுமை ஆகாதது போல் ஒரு வருத்தம். நாம் பெருமதிப்பு கொண்டிருக்கும் மனிதர்களைச் சந்திக்கும் நேர் அறிமுகத் தருணம் இப்படித்தான் அமையும் போலும். ஆனால், நீங்களும், நாஞ்சில் ஐயா அவர்களும் பேசியதை முதல் வரிசையில் அமர்ந்து கேட்டது….என்ன சொல்வது …மனதில் நிரம்பி வழிகிறது நிறைந்த தருணங்களாக.
நிகழ்ச்சி முடிந்ததும் ‘உலோகம்’ பற்றி இலங்கைத் தமிழர் ஒருவர் கொண்டு வந்த விவாதம் முழுக்க, உங்கள் அருகில், நீங்கள் பேசப் பேச நின்று கேட்டுக் கொண்டிருந்தபோது, மனதுள் ஒரு திறப்பு. உலோகம் மனதுள் ஒரு சரியான இடத்தில் சென்றமர்ந்தது.
அலுவலுக்காக துபாய் வந்திருக்கும் இந்த மூன்று மாதங்களில், சிறந்த தருணங்களாக உங்களோடு நிகழ்ச்சியில் செலவிட்ட மூன்று மணி நேரங்கள். நன்றி ஜெ!
நண்பர் ஒருவரிடம் பேசும் போது, புனைவிலக்கியம் பற்றிப் பேச்சு நகர்ந்தது. எது ‘படைப்பு’ எது ‘தயாரிப்பு’ என்று நான் தெளிவாகச் சிந்திக்க முற்பட்ட போது (இதனடிப்படை, உங்கள் வலைத்தளத்தில் வாசித்தறிந்து என்னுடைய இலக்கிய வாசிப்பில் உணர்ந்து கொண்டவை) இந்த உதாரணம் மனதில் முளைத்தது….வாசகனைத் திருப்தி செய்யும் வர்த்தக நோக்கம் கொண்ட ‘தயாரிப்புகள்’ மனிதனால் உருவாக்கப்படும் தோட்டம் போல; ஆனால் ‘படைப்பு’ என்பது ‘காடு’ போல. அது மனிதனால் திட்டமிடப்பட்டு உருவாவதன்று. மனிதக் கண்களுக்கு அங்கே ஒரு கட்டின்மையே தெரிகிறது. ஆனால், இயற்கையின் ஒரு ஒழுங்கு அங்கே எப்போதும் இருக்கிறது. ஒரு உயர்ந்த படைப்பு என்பது அப்படிப்பட்டதே. தோட்டம் எத்தனை அழகாய் இருப்பினும், ஒரு காட்டிற்கு இணையாவதில்லை. காட்டின் வசீகரமும், பயங்கரமும் ஒரு தோட்டத்திற்கு வருவதில்லை.
(இதே உதாரணம் நீங்கள் அல்லது வேறு யாரேனும் முன்பே எங்கேனும் சொல்லி, நான் அறியாமல் இருக்கலாம் என்ற தயக்கதோடே எழுதுகிறேன்…..)
கடிதம் முடிக்கும் முன் ஒரு கேள்வி ஜெ, மிகக் குறைவாகவே தூங்குவீர்கள் போல.. ( சராசரியாக மூன்று, நான்கு மணிநேரங்கள் மட்டுமே, மதிய வேளையில் ஒரு கோழித்தூக்கம் போடுவீர்கள் போல, அதுவும் தோது இருந்தால் …)….களைப்பு ஏதும் இல்லாமல் செயல்பட முடிகிறதா….உங்கள் அசுரத்தனமான (தேவர்கள் உழைப்பதே இல்லையோ?!) உழைப்பு வேகம், மன உத்வேகம் உங்கள் எழுத்தில் அறிகிறேன்…இருந்தும் அல்லது அதனாலேயே இக்கேள்வி மனதில் எழுகிறது. எஸ்.ரா அவர்களை சந்தித்த போதும் இதே கேள்வி எனக்கிருந்தது….
நன்றியும், நிறைவும், மகிழ்ச்சியுமாக,
வள்ளியப்பன்.
அன்புள்ள வள்ளியப்பன்
நன்றி
பொதுவாக இதேபோல நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது உடனடியாக நன்றாக உரையாடும் வாய்ப்பு நிகழ்வதில்லை. அதை ஒரு அறிமுகம் என்றே சொல்ல வேண்டும். அடுத்தமுறை சந்திக்கும்போது தயக்கமில்லாமல் பேச அது உதவலாம்.மீண்டும் சந்திப்போம்.
நான் நன்றாகவே தூங்கக்கூடியவன். தினம் ஏழரைமணி நேரமாவது. இரவில் இரண்டுமணி முதல் காலை ஆறரைமணி வரை. மதியம் மீண்டும் இரண்டுமணி நேரம். ஆனால் கொஞ்சம் தூங்காவிட்டாலும் உற்சாகமாக இருப்பேன். காரணம் நான் இப்போது எனக்குப் பிரியமில்லாத எதையும் செய்யவேண்டியதில்லை என்ற நிலையில் இருக்கிறேன்.
ஜெ