அன்புள்ள ஜெயமோகன்,
திண்ணையில் உங்களது பகவத் கீதை பற்றிய இரண்டு பகுதி கட்டுரைகளையும் படித்தேன்.
இவ்வளவு சிறந்த விளக்கத்தைத் தந்தமைக்கு நன்றிகள் பல. உங்கள் கட்டுரையைப் பல கோடி தமிழர்களும் படிக்க வேண்டும், பலன் பெற வேண்டும் என்பது என் ஆசை. நடந்தால் நல்லது. இந்திய ஞான மரபில் எல்லைகள் எதுவும் என்றுமே கிடையாது. பிற்சேர்க்கைகளான பல இடையீடுகள் சுமார் 5000 வருடங்களுக்குள் தோன்றியவைகள் ஆகும்.
வேதாந்தம் யாரையும் செயல்படாமல் தூங்கச்சொல்வதல்ல. விழித்தெழு, செயல்படுவாயாக , என்பதே வேதாந்தம். பூர்வ மீமாம்சை பற்றி எழுதியிருந்தீர்கள். இறைச்சக்தியை மறுப்பதும் வேதாந்தத்தின் ஒரு பகுதியே ஆகும். வேதாந்தம் என்பது all inclusive ஆகும். ஏனெனில் வேதாந்தம் ஒரு மூல நூல் இல்லை. எல்லைகள் இல்லாததே வேதாந்தம். உங்கள் பணி தொடர எல்லாம் வல்லான் அருள்புரியட்டும்.
அன்புள்ள
சு பாலச்சந்திரன்
அன்புள்ள ஐயா ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் தங்கள் கீதை உரையை முழுவதுமாகப் படித்தேன். ஆழ்ந்த தத்துவ விவாதங்கள் கொண்டதாக இருந்தது, அவை மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. கீதையைப் படிக்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆவல், தங்களின் இந்த உரைக்குத் தலைவணங்கி நன்றி கூறுகிறேன்.
விவாதம் இன்னும் எவ்வாறு விரிவடைகிறது என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. மற்ற யோகங்களையும் தொடர்ந்து படிக்க நீங்கள் “தமிழில்” எந்தெந்த நூல்களைப் பரிந்துரைபீர்கள்.
நன்றி
அன்புடன்,
பாலாஜி
அன்புள்ள பாலாஜி
கீதைக்குத் தமிழில் நல்ல உரை சுவாமி சித்பவானந்தரின் உரைதான். [ராமகிருஷ்ண தபோவனம்] நல்ல உரையை வாசிக்கவேண்டும் என்பதுபோல மட்டமான உரையை வாசிக்காமலிருப்பதும் முக்கியம். பல உரைகள் அபத்தக்களஞ்சியங்கள்- உதாரணம் மஞ்சள்நிறத்தில் பெரிய அளவில் அனேகமாக இலவசமாக வழங்கப்படும் நூலான ஜெயதயால் கோயந்தகாவின் உரை
ஜெ