முதலில் நாகர்கோயிலைச் சேர்ந்த வாசகரான மாதவன்பிள்ளைதான் அறிமுகமானார். ஒருமுறை என் வீட்டுக்கு மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார். தொடர்ச்சியாக இணையதளத்தையும் நூல்களையும் வாசிப்பவர். அன்று பேசிப் போனபோது ‘ஒருமுறை அவசியம் குவைத் வரவேண்டும் சார்’ என்றார். ‘கண்டிப்பாக’ என்றேன். அப்படி என்னை உலகம் முழுக்க அழைக்கிறார்கள். சிலவே பயணமாகக் குதிர்கின்றன. ஆனால் சிலநாட்களுக்குப்பின் அவர் கூப்பிட்டுக் குவைத்துக்கு என்னை அழைக்க ஏற்பாடுகள் செய்வதாகச் சொன்னார்.
குவைத்தில் என் நண்பர் சித்தார்த் இருக்கிறார். அவரும் சேர்ந்துகொண்டார். மேலும் நல்ல வாசகர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த அழைப்பு வழியாக அவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டார்கள். ஒரு குழுவாகத் திரண்டார்கள். குவைத் தமிழ்ச்சங்கம் சார்பில் என்னையும் நாஞ்சிலையும் குவைத்துக்கு அழைத்தனர். குவைத் அழைப்பை அறிந்தபின்னர் துபாய் வாசக நண்பர் சென்ஷி என்னையும் நாஞ்சில்நாடனையும் அங்கே அழைக்க முயற்சி எடுத்துக்கொண்டார்.
வாசகர் குழும நண்பர்கள் இணைந்து பேசி, துபாய் அமீரகத் தமிழ்மன்ற அமைப்பின் சார்பில் ஆசீஃப் மீரான் என்னை அழைத்தார்.
நேராக துபாய்க்குத்தான் சென்றோம். இதில் பல சந்தேகங்கள் தயக்கங்கள். விமானப்பயணச்சீட்டில் என் பெயர் jeyamohan என இருந்தது. என்னுடைய எல்லா ஆவணங்களிலும் என் பெயர் Jayamohan தான். அதைத் திருத்தினேன். கடைசியாக ஒரு பீதி. விமானச்சீட்டு ஷார்ஜாவுக்குத்தான். துபாய்க்குச்செல்லும் பயணச்சீட்டு இல்லை. கடைசிநிமிட திகில் விசாரணைக்குப்பின் இரு ஊர்களும் பக்கம்பக்கம்தான் என்ற உண்மையைப் புரிந்துகொண்டேன்.
இந்த ஊர்கள் எல்லாமே எனக்கெல்லாம் தாத்தா பாட்டி பெயர்களைப்போல. எழுபதுகளின் இறுதியில் எங்களூரில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். சென்று வருபவர்கள் வினோதமான மணம் கொண்ட வாசனைத்திரவியங்கள் [எறும்புக்கண்ணன் மருமொவ எதுக்குலே சாமிதாஸு பெஞ்சாதி மாதிரி மணக்குதா?] சபைநடுவே அவிழ்ந்து விழும் பாலிஸ்டர் லுங்கிகள், பெரிய பானசோனிக் டேப் ரிக்கார்டர்கள். மாபெரும் பெட்டிகளுடன் [மச்சினா நான் அந்த பெட்டிக்குள்ள கேறி இருக்கேன்ல…என்னையும் கூட்டிட்டுப் போ] ஊர்களுக்குத் திரும்பி கலாச்சார அதிர்ச்சிகளை உருவாக்கினார்கள். அவர்களின் ஊர்கள் ஷார்ஜா, துபாய், ஓமன், கத்தார்…சிலசமயம் ஏதோ மந்திரம்போல ராஸ் அல் கைமா! சிலநூறுமுறை சொல்லிப்பார்க்கச்செய்யும் அர்த்தமின்மை கொண்ட பெயர்கள்.
ஆகவே ஷார்ஜாவுக்கு வந்தபோது மேலமணக்குடிக்கு வந்த அளவுக்கே அன்னிய உணர்வு ஏற்பட்டது. வரும் வழியில் திருவனந்தபுரம் விமானநிலையம்தான் வெளியூராகத் தோன்றியது. என் கடவுச்சீட்டில் எமிக்ரேஷன் கிளியரன்ஸ் தேவை என்று இருப்பதாகச் சொல்லி இருபதுநிமிடம் யார் என்ன என்றெல்லாம் விசாரித்தார்கள். நாஞ்சில்நாடன் அவர் சாகித்ய அக்காதமி விருதுபெற்றவர் என்று சொன்னார். ஓ என்றார்கள். கடைசியில் பார்த்தால் அந்த முத்திரையே இல்லை. ஏன் அப்படிச்செய்தார்கள் என்று விசாரித்தால் தமிழர்களின் புலப்பெயர்வைக் கட்டுப்படுத்த மலையாளிகள் பொதுவாக முயல்வதுண்டாம்.
விமானநிலையத்தில் நண்பர்கள் வந்திருந்தார்கள். சென்ஷியை ஏற்கனவே கோவையில் சந்தித்திருக்கிறேன். ஆசிஃப் மீரானை அப்போதுதான் பார்த்தேன். சத்யா இணையம் வழியாக நன்றாக அறிமுகமானவர். நேரில் வட இந்திய நடிகர் மாதிரி இருந்தார். சித்தனாத பூபதி அப்படி கனத்த குரல் கொண்டிருப்பார் என நினைக்கவே இல்லை. குழுமத்தில் நிறைய எழுதிக்கொண்டிருந்தவர். ஆசிஃப் மீரானின் வீட்டுக்குச்சென்று தங்கினோம். செல்லும் வழியில் கார்த்திக்கை ஏற்றிக்கொண்டோம். அவர் என் இரவுணவுக்கான பழங்கள் வாங்கி வந்திருந்தார்.
ஆசிஃப் ஷார்ஜாவில் தனியாகத்தான் இருந்தார். அவரது வீடு வசதியானது. எல்லாரும் அமர்ந்துபேச ஒரு நீண்ட கூடமும் இருந்தது. நாங்கள் சென்றது எங்கள் நேரத்துக்கு இரவு பத்தரை. அவர்கள் நேரத்துக்கு ஒன்பது மணி. போகும் வழியிலேயே பேச ஆரம்பித்தோம். வீட்டிலும் பேசிக்கொண்டிருந்தோம். இத்தகைய சந்திப்புகளில் முக்கியமான அம்சமே அரட்டைதான். இருபத்தைந்தாண்டுகால இலக்கியவாழ்க்கையில் நினைவில் நீடிப்பவை பெரும்பாலும் சந்திப்புகளே. எண்பத்தாறில் பவா வீட்டில் நான் சந்தித்த எஸ்.ராமகிருஷ்ணனின் பிம்பத்தை இன்றுகூட அவரது முகத்தில் இருந்து என்னால் விலக்கிக்கொள்ள முடியவில்லை.
இரவு ஒருமணிக்குத் தூங்கினோம். காலையில் ஆசிஃப் மீரான் மின் கட்டணம் கட்டவில்லை என்றார். அதற்கு அவர் கிளம்பும்போது கூடவே சென்றோம். செல்லும்வழியில் அவர் வீட்டு முகப்பில் இருந்த தென்னிந்திய உணவகத்தில் தென்னிந்திய காபி. காலை ஒளியில் நகரங்கள் எல்லாமே அழகாகவே இருக்கும். கட்டிடங்கள் தியானத்தில் இருப்பவை போலத் தோன்றும். சாலைகளில் கார்கள் பாதரசத்துளிகள் போல உருண்டோடும். நகரைப் பார்த்தபடி சுற்றிவந்தோம்.
ஆசிஃப் மீரான் எப்போதும் உற்சாகமானவராக, மெல்லிய கிண்டல்கள் நிறைந்தவராக இருந்தார். சட்டென்று நம்மைக் கவர்பவர்கள் அத்தகைய மனிதர்கள். மனித வாழ்க்கைக்கு அப்படிப்பட்ட நாலைந்து சிரிப்புகளுக்கு அப்பால் பெரிய மதிப்பேதும் இல்லை என நம்புகிறவன் என்பதனால் எனக்கு அவர்களைப்பிடிக்கும். நான் அத்தகையவன் என்பது என் நம்பிக்கை.
பாரசீக பாணியில் அமைக்கப்பட்ட மசூதியையும் ஒரு சந்தைக்கூடத்தையும் கண்டோம். வாசல்வளைவுகளும் கும்மட்டங்களும் கொண்ட கட்டிடங்கள் எல்லாவற்றிலும் பெண்மையழகு கலந்திருப்பதாகத் தோன்றியது. மெல்லிய தீற்றல்களாக அமைக்கப்பட்டிருந்த சுவர்வரைவுகள் அந்தப் பெண்மைச்சாயலை இன்னும் அதிகரித்துக்காட்டின.
பகலில் சத்யா வந்தார். அவரது காரில் கிளம்பி துபாய் நகரின் புறச்சுற்றுப்பாதை வழியாகச்சென்றோம். இன்றைய தகவல் யுகத்தில் இத்தகைய நகரங்களை இவற்றின் எல்லாத் தகவல்களுடனும் நாம் இணையத்தில் பார்த்துவிடலாம். ஆகவே இவ்வகைக் குறிப்புகளில் தகவல்களுக்கு முக்கியத்துவமேதும் இல்லை. முக்கியமானது இப்பயணங்களில் நாம் அடையும் நேரடி அனுபவம். இருபக்கமும் விரிந்த பாலைவனம் ஆரம்பத்தில் அளித்த ஒரு புதுமையை சீக்கிரமே இழந்து மனதை இனம்புரியாத வெறுமையில் நிறைத்தது. அந்த அனுபவத்தை சரியாக மொழியில் சொல்லவும் முடியாது. ஏதாவது ஒரு புனைகதையில் ஒரு கதாபாத்திரத்தின் குரலாக அது நம்மை விட்டு வெளியே ஒலிக்கும்போது நம்மால் எழுதிவிடமுடியும்.
பாலைவனப்பாதை முழுக்க இருபக்கமும் வேலியிட்டிருக்கிறார்கள். ஒட்டகங்கள் இப்பக்கம் வராமல் இருக்க. முழங்கால் உயரமான ஏதோ முட்செடி சிதறி பரந்து கிடக்க ஆங்காங்கே பெரிய மணல் மேடுகள். காற்று காரின் மீது மெல்லிய மணல்பொழிவை உருவாக்கிக்கொண்டிருந்தது.
துபாய் உயிர்க்காட்சியகத்திற்குச் சென்று இரண்டுமணிநேரம் சுற்றிப்பார்த்தோம். பாலைவனத்து உயிர்களில் ஓணானும் பாம்பும் முக்கியமானவைபோல. பல்வேறுவகையான ஓணான்களும் அவற்றை உண்ணும் பாம்புகளும் கண்ணாடி அறைகளுக்குள் கண்கள் விழித்திருக்க கையளவாகக் குறுக்கப்பட்டு அவற்றைச் சூழ்ந்திருந்த பாலைவனத்தில் அசைவிலாது கனவில் அமர்ந்திருந்தன. இரவு நீங்காத செயற்கை குகைகளுக்குள் வௌவால்கள். கூரையே வானமாக ஆன பெரியகூடத்தில் பாலைவனப்பறவைகள்.
உயிர்க்காட்சியகத்தில் என்னுடைய மிகப்பெரிய அனுபவம் என்பது கண்ணாடித்தடுப்புக்கு அப்பால் கிடந்த சிவிங்கிப்புலியை அரை இஞ்சுக்கு இப்பால் நின்று பார்த்தது. தரையில் அமர்ந்து அதன் மூக்குடன் என் மூக்கை ஒட்டவைத்து கண்களுக்குள் பார்த்தேன். மிருகங்களின் கண்களுக்குள் இருப்பது இயற்கையின் ஒட்டுமொத்தம் நமக்கு அளிக்கும் புனிதமான பொருளின்மை.
மாலை சத்யாவுடன் ஒரு தொகைஉணவுவிடுதிக்குச் சென்று சாப்பிட்டோம். நான் அராபிய உணவு சாப்பிட ஆசைப்பட்டேன். கீரையைத் துருவிய மாமிசத்துடன் வேகவைத்து அரைக்கப்பட்ட பயறுடன் சேர்த்து உண்டபோது விசித்திரமாக, நன்றாகத்தான் இருந்தது. நாஞ்சில்நாடன் ‘நல்லாத்தான் இருக்கு..’ என ஒரு சிறு இழுப்புடன் சொன்னார். உயிர்க்காட்சிசாலையில் கொஞ்சதூரம் நடந்தமையால் துணிந்து சாக்லேட் கேக்கை வாங்கிச் சாப்பிட்டார்.
மாலை துபாய்நகருக்குள் நுழைந்தோம். சுற்றிலும் பாலைவனம் இருக்க எதற்கும் பயன்படாமல் அணையில் நீர் தேங்கிக்கிடப்பது போலத்தான் எனக்கு துபாய் தோற்றமளித்தது. அதிபிரம்மாண்டமான கட்டிடங்கள். நியூயார்க் நினைவுக்கு வந்தபடியே இருந்தது. நியூயார்க் பல வருடங்களில் படிப்படியாக உருவாகிவந்த நகரம். அதை சில வருடங்களில் கட்டி எழுப்பியதுபோலிருந்தது. எங்கும் செல்வம். கோடானுகோடி ரூபாய் மதிப்புள்ள செல்வம். அந்தப் பணத்தில் ஆப்ரிக்க நாடுகளில் லட்சக்கணக்கான ஏக்கருக்கு விவசாயம் செய்திருக்கலாம். இந்தியாவில் பெரும் தொழிற்புரட்சியை உருவாக்கியிருக்கலாம்.
சாலையோரம் வளர்க்கப்பட்டிருந்த புல்வெளிகளே துபாயின் மனநிலைக்குச் சான்று. மிக அதிகமாக தண்ணீர் கோரும் கொரியப்புற்களாலான புல்வெளிகள். புல்வெளி மாபெரும் காட்டைவிட அதிகமாக நீர் கோருவது. நான் பார்த்தபோதெல்லாம் நீர் இறைத்துக்கொண்டிருந்தார்கள். மொத்த நீரும் பெட்ரோலியத்தை எரித்துக் கடலில் இருந்து வாற்றி எடுக்கப்பட்டது.
துபாயில் ஓரிடத்தில் ஒரு ஷேக்கின் மகளால் உருவாக்கப்பட்ட செயற்கைக் காடு சாலையின் இருபக்கமும் இருந்தது. எல்லாமே பசுமைமாறாக்காடுகளைச் சேர்ந்த தாவரங்கள். பசுமை சட்டென்று கண்ணையும் கருத்தையும் குளிரச்செய்தது. அதுவரை இருந்த எண்ண ஓட்டங்களின் வேகம் மட்டுப்பட்டு இனிய விஷயங்களை நினைக்க ஆரம்பித்தேன்.
துபாய்நகர் நடுவே கடலை உள்ளே கொண்டுவந்து பெரிய ஒரு கடலோடை செய்திருக்கிறார்கள். அதில் செல்வந்தர்களின் கேளிக்கைக் குறுங்கப்பல்கள் ஒளிவிட்டு மிதந்தன. துல்லியநீலம் கொண்ட கடல். நதிகள் கலக்காததனால் கடலின் நிறமே அதிநீலமாக இருந்தது. கடலை நோக்கியபடி மாபெரும் விடுதிகள், உயர்தரக் குடியிருப்புகள். துபாயின் மிக மிக செலவேறிய பகுதி இது. அங்கே ஈச்சைமரத்தின் வடிவில் கடலை நிரப்பி ஒரு செயற்கைக் குடியிருப்பு நகரை உருவாக்கும் பெரும்திட்டம் இருந்ததாகவும் நிதிநெருக்கடியால் அது கொஞ்சம் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும் சொன்னார்கள்.
பொதுவாக துபாய் முழுக்கவே பெரும் கட்டிடங்கள் பலவும் முக்கால்வாசி கட்டி நிறுத்தப்பட்ட நிலையில் இருந்தன. அமெரிக்க நெருக்கடியை ஒட்டி உருவான தேக்கம் நின்று இப்போதுதான் வேலைகள் மீண்டும் ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார்கள். கட்டிட வேலைக்காக வந்து தங்கியிருந்த இந்தியத்தொழிலாளர்கள் பலர் இப்போது இல்லை.
ஆசிஃப் வந்து சேர்ந்துகொண்டார். துபாய்மையம் என்னும் இடத்துக்குச் சென்றோம்.துபாயின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் துபாய்’ அதன் இன்றைய பெயர் ‘புர்ஜ் கலிஃபா’. உலகின் உயரமான கட்டிடம் இது என்று சொல்கிறார்கள். தொடர்ச்சியாக இந்த வகையான ‘–லேயே’ வகைக் கட்டிடங்களைக் கண்டு மேலே ஏறிக்கொண்டிருக்கிறேன். நான் பார்த்தவரை மலேசியாவின் இரட்டைக்கட்டிடங்கள்தான் இவ்வகைக் கட்டிடங்களில் அழகானது. புர்ஜ் கலிஃபாவை அதற்கு அடுத்தபடியாக அழகான கட்டிடம் எனலாம்.
இந்தவகைக் கட்டிடங்களின் சிறப்பான அனுபவம் என்பது அவற்றின் மேலே நின்று பார்க்கும் காட்சி அளிக்கும் ஒட்டுமொத்தமான விரிவுதான். முதலில் எளிய ஆர்வமாக ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையும் கவனமும் விரிய நாம் காட்சியில் அமிழ்கிறோம். காட்சியில் இருந்து சிந்தனைக்குள் வரும் பிரம்மாண்டம் ஆச்சரியமானது. எண்ணங்கள் விரிகின்றன. பெரிய கனவுகள், பெரிய நினைப்புகள். எதுவும் பெரிதல்ல என்று தோன்றிவிடுகிறது. பெரும்பாலான சமண ஆலயங்களும் மடங்களும் மலையுச்சியில் இருப்பது இதனால்தான் போலும்.
நகர்நடுவே ஒரு பெரிய வணிகமையத்துக்குச் சென்றோம். நான் பார்த்ததிலேயே மிகப்பெரிய மீன்தொட்டி அங்குதான். அதுவும் ஒற்றைக்கண்ணாடியாலானது. ஒரு பெரிய குளம், ஆனால் பக்கவாட்டிலானது. கூட்டம்கூட்டமாக மீன்கள் மிதந்து சென்றன. பறக்கும் ஆலிலை போல திரச்சி. பல உடல்களினாலான ஒரே மீன் போல சுழன்ற நவரைக்கூட்டம். கூட பெரிய பால்சுறாக்கள். பால்சுறாவாக இருந்தாலும் சுறா சுறாதானே என்று தோன்றியது அதன் கம்பீரத்தைப்பார்த்தபோது.
அந்த மாலுக்கு வெளியே கடலுக்குள் ஒளிநீர்விளையாட்டு போட்டார்கள். இசைக்கேற்ப ஊற்றுகள் பீச்சியடிக்கும் கலை. சில உச்சவெடிப்புகளில் நீர் நூறு அடி வரைக்கும் கூட சீறி எழுந்தது. நீரும் ஒளியும் ஒன்றாகும் கணம் எப்போதுமே பெரும் பரவசத்தை அளிக்கக்கூடியது.
இரவில் நகரம் ஒளிவிட ஆரம்பித்தபின்னர் திரும்பினோம். வழியில் ஓங்கிய கட்டிடங்கள் மிதக்கும் நகரம் போல நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே வந்தேன். இன்று எனக்கு அற்புதமாக இருக்கும் இந்த உலகம் நாளைய தலைமுறைக்கு ஆச்சரியமல்லாமல் இருக்கும். என்றும் ஆச்சரியமளிப்பது மேலும் மேலும் கனவுகண்டு தன்னைத்தானே தாண்டிச்செல்லும் மனிதனின் சிருஷ்டிகரமும் அதில் என்றுமுள்ள பேராசையும்தான்.
நித்யா ஒருமுறை சொன்னார், ’பேராசையைப்பற்றி எதிர்மறையாகச் சொல்கிறார்கள். ஆனால் கலையில் உள்ள பேராசைக்கு எவ்வளவு ஆற்றலிருக்கிறது! பேராசை இல்லாவிட்டால் செவ்வியல்கலையே இல்லை’. மனிதசாதனைகளைப் பார்க்கையில் பேராசையே மனிதனை முன்னியக்குகிறதா என்ற எண்ணமும் ஏற்படுகிறது. காந்தி சொன்னவை எல்லாம் ஒருகணம் மறந்து போகிறது!
திரும்பி ஆசிஃப்பின் வீட்டுக்கு வந்தோம். அங்கே நண்பர்கள் பலர் வந்திருந்தனர். இணையத்தில் குசும்பன் என்ற பேரில் எழுதும் நண்பர் வந்திருந்தார். கார்த்திக் எங்கள் குழும நண்பர். பினாத்தல்கள் என்றபேரில் பதிவுஎழுதும் சுரேஷ். இரவு ஒருமணி வரை பேசிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் நாஞ்சில்நாடன் சொக்கி விழ ஆரம்பித்ததும் முடித்துக்கொண்டோம்.
https://plus.google.com/photos/111557504746543187475/albums/5731485220874868785