அன்புமிக்க ஜெயமோகன் சார் அவர்களுக்கு,
நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது இதுவே முதல் முறை. தாங்கள் சுட்டியிருந்த ம.நவீனின் கட்டுரையை வாசித்து வியப்படைந்தேன். அதற்குக் காரணம் இந்த வரி. /நான் நாவலை வாசித்திருக்க வேண்டும் என்பதற்காக வாசித்திருக்கிறேன். அதை அகங்காரம் என்று சொல்லலாம். ‘வாசித்துமுடித்துவிட்டேன்; இதுதான் கதை’ எனச் சொல்ல மட்டுமே அந்த அகங்காரம் எனக்கு உதவியது. ஒரு நாவலை தட்டையாகப் புரிந்துகொள்ள முயலும் வாசிப்பு அது./
இந்த வரி என்னைத் திகைப்படைய வைத்தது. நான் இதுகாறும் வாசித்த நாவல்களை அவ்வாறுதான் புரிந்துவைத்துள்ளேனோ எனும் சந்தேகம் எழுந்தது. சந்தேகம் உண்மைதான். எனது வாசிப்பு பெரும்பாலும் இணையம் வழிதான். இந்நிலையில் தமிழகத்துக்கு வெளியில் இத்தனை நுட்பமாக ஒருவர் நாவலை விமர்சித்திருப்பது வியப்பளித்தாலும் அதில் உள்ள உண்மையை என்னால் உணர முடிகிறது. அவரது பல கட்டுரைகளிலும் இதையே கண்டேன். தெரியாததைத் தெரியவில்லை என சொல்கிறார். தனது தடுமாற்றங்களைப் பகிரங்கமாகப் பேசுகிறார். எழுத்தாளர்களிடம் இதைக் காண்பது அரிது. உங்களிடம் கண்டுள்ளேன். யாராவது தவறை எடுத்துச்சொன்னால், நினைவிலிருந்து தப்பியதை ஏற்றுத் திருத்திக்கொள்வீர்கள். மேலும் பல கட்டுரைகளில் உங்கள் தொடர்பே அவர் வாசிப்புக்கான தூண்டுகோலாக சொல்லியுள்ளார். உங்களை எப்படிப் பாராட்டுவதெனத் தெரியவில்லை.
நவீனின் கட்டுரை என்னை மீண்டும் மறுவாசிப்பு செய்ய வைத்துள்ளது. என்னை மட்டும் அல்ல. என் தோழியையும். இதுபோன்ற இன்னும் தரமான கட்டுரைகளை நீங்கள் அவ்வப்போது முன்வைக்க வேண்டும். ம.நவீன் போன்ற ஆழ்ந்த வாசிப்பு வர மனதை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என வாசகர்களாகிய எங்களுக்கும் போதிக்க வேண்டும்.
அன்புடன்
வனசுந்தரி
அன்புள்ள வனசுந்தரி,
நவீன் எழுதியதில் ஆச்சரியமாக ஏதும் இல்லை. தமிழின் உண்மையான இலக்கியச் சூழலில் என்றுமே விமர்சனங்கள் அப்படித்தான் இருந்துள்ளன. வ.வே.சு அய்யர் முதல் இன்று க.மோகனரங்கன் வரை. நேர்மையே இலக்கிய விமர்சனத்தின் அளவுகோலாக எப்போதும் இருந்துள்ளது
மாறான போக்குகளை நீங்கள் ஒன்று கல்வித்துறை விமர்சனங்களில் காணலாம். அவை பெரும்பாலும் வெறும் தகவல்தொகைகள். அதேபோல, கட்சிசார்ந்த விமர்சனங்களில் வெறும் குழு மனப்பான்மை வெளிப்படுகிறது. ‘எங்காள் எழுதியது சூப்பர்’ என்றவகை விமர்சனங்கள். உதாரணமாக முற்போக்கு எழுத்தாளர் சங்க விமர்சனங்கள்.
இலக்கிய ஆர்வமே இல்லாமல் எதையோ எழுதி எதையோ பேசி நூல்வெளியிடும் பெருங்கூட்டம் ஒன்று உள்ளது. நாம் முதலில் அறிவது அவர்களை. அவர்களிடம் சொற்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. யாரும் எதையும் எப்படியும் சொல்லலாம். பாராட்டு என்பது சுவாசம் மாதிரி.
நவீன் உண்மையான தமிழிலக்கியப்போக்கை முன்மாதிரியாகக் கொண்டு மலேசியாவில் உருவாகி வரும் ஓர் அலையின் முகப்பில் இருக்கிறார்.
ஜெ