பளிங்கறை – கடிதங்கள்

ஜெயமோகன் ஐயா ! பளிங்கறை பிம்பங்கள் படித்தேன். எவ்வளவு உணர்ச்சிகரமானது மணிமேகலையின் கதை. பிரேமின் வாசிப்பாக நீங்கள் குறிப்பிட்டது வாசிப்பைத் தூக்கி உயரே கொண்டு சென்றது. மதுரையை எரித்த கண்ணகி மலைமேல் அமர்ந்த சேதி அறிந்து மாதவியும் மணிமேகலையும் துறவறம் ஏற்பது உச்சகட்டம். இரண்டே வரிகளில் குறிப்பிட்டிருந்தீர்கள் அதில் உள்ள இடைவெளியோ இட்டு நிரப்ப முடியாமல் மனதில் சிந்தனைகளும் கற்பனைகளும் குவிந்தபடியே இருக்கின்றன. நன்றி.

ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதுவதற்கான நேரம் இது என்று தோன்றவில்லையா உங்களுக்கு. பாரம் ஒரே பக்கம் அழுத்திக் கொண்டிருக்கிறது. சம நிலைக்கு வேறு ஏதாவது வேண்டும்.

பிரேம்குமார்
மதுரை

அன்புள்ள பிரேம்குமார்

பார்ப்போம். நகைச்சுவை வருமளவுக்கு நாட்டில் விசேஷமாக ஒன்றும் நிகழவில்லை என்று தோன்றுகிறது

ஜெ

அன்புள்ள ஜெ,

உண்மையில் அந்தப் பளிக்கறை தாண்டி உள்ளே ஊறிய பெண்ணின் கண்ணீரைத்தான் சுற்றிச்சுற்றிவந்து, தடவித்தடவிப்பார்த்து, மீண்டும் மீண்டும் ஏமாந்து, மெல்ல எழுத முயன்றுகொண்டிருக்கிறோம்.

அந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழ்ப்பண்பாட்டின், இந்தியப்பண்பாட்டின் அடியில் அஸ்திவாரமாக தோற்கடிக்கப்பட்ட அன்னையரின், ஒடுக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் இருக்கிறது என எப்போதும் சொல்லிவருகிறீர்கள்

ஆனால் எழுதமுயன்றுகொண்டிருக்கிறோம் என்ற வரி கொஞ்சம் ஏமாற்றமளிக்கிறது. லா.ச.ராவோ தி.ஜாவோ நீங்களோ கூட எழுதவில்லையா என்ன?

பாண்டியன்.கெ

அன்புள்ள பாண்டியன்,

பளிங்கறைப்பிம்பங்களுக்கு முடிவில்லை. எண்ணி எழுதி முடிக்க முடியாது. இத்தனை நூற்றாண்டில் அந்த மாயத்தை அறியும் முயற்சிகள் முடிவற்ற சதுரங்க விளையாட்டாக, சுழல்வெளிப்பாதையாக ஆகிவிட்டிருக்கின்றன

எழுத முயல்கிறோம் என்பதே என் எண்ணம்.

ஜெ

முந்தைய கட்டுரைவளைகுடாவில்… 1
அடுத்த கட்டுரைஎன் திரைப்படங்கள்