தியாகையரின் கீர்த்தனைகள் திராட்சைப்பழம் போல அப்படியே ரசிக்கலாம், முத்துசாமி தீட்சிதருடையது வாழைப் பழம் போல சற்று உரிக்க வேண்டும், சியாமா சாஸ்த்ரிகளுடையது தேங்காய் போல நார் உரித்து ஓடுடைத்துத்தான் காய் பெறவேண்டும் – ராம் .
நேற்று சனிக்கிழமை ஈரோட்டில் ராமுடன் ஒரு மரபிசை, பாடல்கலை மற்றும் இசைவடிவம் குறித்தும் மோகனரங்கனுடன் கவிதை, படிமம் குறித்தும் பத்து நபர்களுக்கிடையே ஒரு சந்திப்பு. அங்குதான் ஷர்மா மேற்சொன்ன உவமையைச் சொன்னார்.
கலைப்பொருட்கள் நிறைந்த நண்பர் விஸ்வத்தின் பழமை மாறா குளிர்ந்த பழைய வீட்டில் நடந்தது இந்தக் கவிதை / இசை அரங்கு. வரும்பொழுதே உற்சாகத்துடன் குதித்தோடி வந்தார் ஷர்மா, சந்தித்தவுடன் அனைவரும் அவரது உற்சாகம் படரப் பெற்றோம். “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா” என்ற பாடலில் துவங்கி கன்னட, மலையாள, தெலுங்குப் பாடல்கள், ‘ஒரு நாள் போதுமா’ போன்ற திரைப்பாடல்கள் என ராமின் குரலில் மூழ்கினோம்.
இசையை முறையாகப் பயின்ற ஒருவன் எந்த ஒலிபெருக்கி மற்றும் மின் கருவிகளும் இன்றி நேரில் நம்முன் பாடுவது ஒரு அலாதியான அனுபவம். இது பாடலுக்கு ஜீவன் கூட்டுகிறது. பதிவு செய்யப்பட்டதையோ, மேடையில் ஒலிபெருக்கி வழியாகவோ நாம் கேட்கும் இசையனுபவம் அது முழுமையானது (perfect), பிசிறில்லாமல் கச்சிதமாக இசையில் தேர்ந்த ஒரு நிபுணரால் நிகழ்த்தப்பட்டது என்றாலும் ஒரு சுமாராகப் பயிற்சி பெற்ற சாதாரணக் கலைஞர் நம்முன் நேராக உயிருடன் பாடுவதை ஒப்பிடும்பொழுது அது ஒரு மாற்று குறைவே. இங்கு ஷர்மா ஆண்டுக்கணக்கில் தேர்ச்சி பெற்ற முறைப்படி சங்கீதம் பயின்ற குரல் வளம்மிக்க ஒரு பாடகர், அதுவும் நேரில். ஆதலால் இசைகேட்டல் அனுபவம் பதிவொலியைவிடப் பன்மடங்கு உயர்வானது ஜீவனுடையது என்பதை சொல்லத் தேவையில்லை. திரையில் தெரியும் பழத்திற்கும், உள்ளங்கைப் பழத்திற்கும் உள்ள தூரம்.
பாவம் குறித்தும், மனோ தர்மம் குறித்தும், ரக்தி ராகங்கள் குறித்தும் விளக்கியபடியே பாடினார். இது ஒரு முழுவதுமான கணக்கீட்டுக் கலை எனக்கூறி மனோதர்மத்திலும் கூட இந்த எல்லைக்குட்பட்டே பாட முடியும் என விளக்கினார். நமக்கு ஒரு குழந்தையின் பெயரறிந்து அழைத்து மடியில் தவழ விடுவதைப் போன்ற அனுபவம் இது. பாட்டும் முன் வாய்க்கவிருக்கும் போதை கலந்த த்யான அனுபவம் குறித்தும், உதாரணமாக குழலிசை மாலியின் கதை குறித்தும் விளக்கினார். இது போல கோபாலகிருஷ்ண பாரதி த்யாகையரை சந்தித்த கதை, ‘ஆபோகி’ ராகத்தில் கிருபாநிதி பாடலை தான் படைத்திருப்பதால் த்யாகையரை இந்தராகத்தில் இனி இயற்ற வேண்டாம் என்ற வேண்டுகோளை அவர் ஏற்றது, எந்தரோ மகானுபாவுலு போன்ற கிளைக்கதைகள்.
அடுத்தது மோகனரங்கன் நவீனக் கவிதைகளின் மேல் ஒரு சாதாரண வாசகன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விரிவான பதில் சொன்னார். புதுக் கவிதைகளிலேயே நவீன கவிதைகளுக்கும் வானம்பாடிகள் போன்ற கவிதைகளுக்கும் உள்ள வேறுபாடு, தேவைப்படும் பயிற்சி, எத்தனிப்பு, நுண்ணுணர்வு குறித்தும் பேசினார். பிரமிளின் வண்ணத்துப் பூச்சியும் கடலும், நகுலனின் எந்த சுவரில் எந்த சித்திரத்தைத் தேடுகிறாள் என்ற அம்மா கவிதை, இசையின் குள்ளக் காதல், இளங்கோ கிருஷ்ணனின் மலைநகர் எக்ஸ்பிரஸ் போன்ற கவிதைகளை கூட்டாக வாசித்தோம். இக்கவிதைகளின் சாவி துவாரத்தைக் காட்டினார், நாங்களே திறந்தோம். கவிதை அனுபவமும் பாடல் அனுபவத்திற்கு இணையாகவே இருந்தது.
அனைவருக்கும் இசை குறித்தும், கவிதை குறித்தும் ஒரு மறு அறிமுகம். இவைகள் மறுபடியும் அழகாக முகம் காட்டியது, புன்னகைத்தது.