கேரளத்தில் திரிச்சூர் அருகே திருவில்வமலை என்ற ஊரில் ஒரு பெரிய குன்றின்மீது ஒரு குகை உள்ளது. அந்தக்குகைக்கு புனர்ஜனி என்று பெயர், அதாவது மறுபிறப்புக்குகை. இயற்கையாக உருவான குகை அது. நெடுநாட்களாக மழைநீர் ஓடி அங்கிருந்த கனிமங்களைக் கரைத்து உருவான வெற்றிடம் குகையாக ஆகியிருக்கிறது. குகைக்குள் நுழையும் இடம் கொஞ்சம் பெரிதாக இருக்கும். ஆனால் போகப்போக மிகச்சிறிதாக ஆகிவிடும். முற்றிலும் இருட்டு. பெரும்பாலான தூரத்தை தவழ்ந்தே கடக்க முடியும். குகை நம் உடலளவுக்கே இருப்பதனால் ஒருபோதும் பின்னால் திரும்பி வர முடியாது. சில இடங்களில் மேலேறும், சில இடங்களில் கீழிறங்கும். கடைசியில் கிட்டத்தட்ட தலைகீழாக ஒரு சிறிய வெடிப்புவழியாக வெளிவருவோம், குழந்தை கருலிருந்து வெளிவருவதுபோல.
புனர்ஜனி நுழைந்து வருவதென்பது மறுபிறப்பு. பாவங்களை எல்லாம் உதறிவிட்டு முற்றிலும் புதிதாகப்பிறப்பது அது. ஆனால் ஒல்லியானவர்கள் மட்டுமே அப்படிச்செய்ய முடியும். உள்ளே மாட்டிக்கொண்டால் மரணம்தான். சமீபகாலமாக புனர்ஜனி பிரபலமாகி வணிக நோக்குடன் குகையைப் பெரிதாக்கியிருப்பதாகத் தகவல். தமிழகத்திலும் சில கோயில்களின் உட்பக்க சுற்றுப்பிராகாரம் இதேபோல இடுங்கலாக அமைக்கப்பட்டிருக்கும், புனர்ஜனி என்று பெயரும் இருக்கும். சிறிய துளை வழியாக மட்டுமே வெளியே வரமுடியும். காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் அப்படி நுழைந்த நினைவு இருக்கிறது.கர்நாடக சமணக்கோயில்கள் சிலவற்றில் இந்த அமைப்பு உண்டு.
இத்தகைய குகைகளை பிலங்கள் என்கிறார்கள். மலைகளில் உருவாகும் குகைகளுக்கும் பிலங்களுக்கும் உள்ள வேறுபாடு பிலங்கள் என்பவை ஒரு வகையான பாதைகள் என்பதுதான். மண்ணுக்குள் பலவகையான பிலங்கள் இருக்கலாம். பழங்காலப் புராணங்கள் அனைத்திலும் காவேரி தஞ்சை அருகே ஒரு பிலத்துக்குள் நுழைந்து மறைந்து விட்டதாகவும் சோழன் தவம்செய்து அதை மீட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. பெரும் நதிகள் பாயும் சுண்ணாம்பு நிலமான ஆந்திராவில் ஏராளமான புகழ்பெற்ற பிலங்கள் உள்ளன. பல பிலங்கள் நெடுங்காலமாகவே வழிபாட்டிடங்களாக உள்ளன.
ஆந்திரத்தில் பேலம் மாவட்டத்தில் உள்ள பேலம் பிலம் [Belum Caves] இந்தியாவில் உள்ள இயற்கைப்பிலங்களில் இரண்டாவது பெரியது. [முதல்பெரிய பிலம் மேகாலயாவில் உள்ளது]. கோஸ்தனி ஆற்றின் கரையில் உள்ளது இந்தப் பேலம் பிலம். போரா குகைகள் விசாகபட்டினம் அருகே உள்ளன. உண்டவல்லி குகைகள் [Undavalli ] கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ளது. இது ஒரு வைணவத்தலம். யுகாந்தி [Yaganti] குகைகள் என்பவை ஏராளமான சிறு குகைகளின் தொகுப்பு. நரசாப்பேட் அருகே உள்ள குத்திகொண்டா [Guthikonda] க்குகைகளும் புகழ்பெற்றவை. இவற்றுக்கு பொதுவாக அதிக சுற்றுலாப்பயணிகள் செல்வதில்லை. இவற்றில் சில பிலங்கள் பெரும்சாலைகள் அளவுக்கு அகலமானவை, பற்பல கிளைகள் கொண்டவை.
கன்பரா பகுதிக்கு ஒரு சிறப்பு உண்டு. மெல்பர்னில் இருந்து கன்பரா வரும்போது அதை உணரலாம். விரிந்த சமவெளி வழியாக வரும் நாம் சட்டென்று ஒரு பெரிய பள்ளத்துக்குள் இறங்க ஆரம்பிக்கிறோம். பின்னர் நம்மைச்சுற்றி உயரமில்லாத ஒரு மலைத்தொடர் வட்டமாகச் சூழந்திருப்பதை உணர்கிறோம். உண்மையில் அது மலை அல்ல. கன்பரா பகுதி ஆழமான ஒரு பள்ளம். சூழ்ந்திருக்கும் மேட்டு நிலத்தின் விளிம்புதான் பள்ளமாக தெரிகிறது. இப்பகுதி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்தது. கடல் பின்வாங்கி உருவான நிலம் இது.
இந்தப்பகுதி கடலாக இருந்தபோது இந்த நிலத்தில் நீர் உப்புப்படுகைகளைக் கரைத்து உருவாக்கிய பிலங்கள் பல இருந்தன. அவற்றில் ஒன்றுதான் கேரி பிலம் என்று சொல்லப்படும் குகைகள். கன்பராவில் இருந்து வீ ஜாஸ்பர் கிராமத்துக்குச் சென்று ஆறு கிமீ வெளியே சென்றால் கேரி பிலத்தைச் சென்றடையலாம். வீ ஜாஸ்பர் என்ற ஊர் ஆளரவமில்லாத ஒரு பெரும் சமவெளியில் உள்ளது . அந்தக் கிராமத்தில் நூறு வீடுகள் இருக்கின்றன. ஏப்ரல் பதினேழாம் தேதி காலையில் நானும் அருண்மொழியும் மதுபாஷினியும் ரகுபதியின் காரில் கிளம்பி பத்து மணிக்கு அங்கே சென்றுசேர்ந்தோம்.
அந்தச்சமவெளியைப் பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே ஒரு கடலின் அடிப்பகுதியைப்போல. எங்கு நோக்கினாலும் சுண்ணாம்புப்பாறைகள். சுதைப்பூச்சு மழையில் கருகி வரும் சாம்பல்நிறம் கொண்ட பாறைகளின் மீது நீர் ஓடி ஓடி உருவான வகைவகையான வடிவங்கள்.கோடுகள், புரிகள், மடிப்புகள், அலைகள். அதுவரை சாலையில் ஒரு இதமான இளவெயிலும் வெம்மையும் இருந்தது. சமவெளிக்குள் வந்ததுமே காற்று கடுமையாக அடிப்பது தெரிந்தது. குளிரும் இருந்தது.
நாங்கள் வீ ஜாஸ்பர் வந்தோம். மிகச்சின்ன ஒரு கிராமம். கண்ணில் பட்ட ஒருவரிடம் விசாரித்து சற்று தள்ளி இருந்த குகைகளைப் பார்க்கச் சென்றோம். அங்கே ஒரு கொட்டகை. அதன் முன்னால் சில சிறிய கொட்டகைகள், கழிப்பறை. ஏற்கனவே இரண்டு கார்கள் வந்திருந்தன. அவ்வளவுதான். குகைக்குள் கூட்டிச்செல்வதற்காக ஒரு தடித்த வெள்ளையர் இருந்தார், அவர்தான் காவலர் வழிகாட்டி ஆராய்ச்சியாளர் எல்லாமே. குகைகள் கிட்டத்தட்ட அவரது சொந்தவீடு மாதிரி. அந்த அத்துவானக்காட்டில் அந்த இடம் மீது அபாரமான பிரேமை இல்லாமல் அந்த வேலையைச் செய்ய முடியாது. நரைத்த தாடி, நல்ல தொப்பை,நல்ல உயரம். கிட்டத்தட்ட ‘பைவ் மேன் ஆர்மி’ படத்தில் தண்டவாளத்தை பெயர்த்து வைக்கும் குண்டர் போல இருந்தார்.
அருண்மொழி அவரது படத்தை எடுக்க மறந்து விட்டாள். திரும்பும் வழியில் சொல்லிக்கொண்டே இருந்தாள். அவரது ஆர்வக்கோளாறு மொழிதெரியாதவர்களுக்கு கொஞ்சம் சித்திரவதை என்றாலும் அவரது அர்ப்பணிப்பு மிக வியப்பூட்டுவது. இணையத்தில் தேடியபோது கொஞ்சம் சின்ன வயதில் அவர் மாணவ்ர்களுக்கு வீ ஜாஸ்பர் குகைகளை விளக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் கிடைத்தது. சந்தோஷமாக இருந்தது அது
ஆசாமி சரசரவென பேசிக்கொண்டே இருந்தார். ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில். தொண்ணூறு விழுக்காடு புரியவில்லை. ஆனால் பிற வெள்ளையர் குலுங்கிச் சிரிப்பதைக் கேட்டபோது மிக வேடிக்கையாக ஏதோ சொல்கிறார் என்று தெரிந்தது. அருண்மொழி குளிர்கிறது என்று சாக்சைப்போட்டுக்கொண்டாள். ”ஆ, இவர் ஒரு கல்வியாளர்’ என்றார். கல்வியாளர்கள்தான் செருப்புக்கு சாக்ஸ்போடுவார்களாம். இவர்கள் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார்கள் என்றார் மதுபாஷினி. நான் இந்தியா பற்றிய டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியை இப்போது பார்க்கிறேன் மிக நன்றாக இருக்கிறது என்றார். இந்தியர்கள் ‘பிரெய்னி பீப்பிள்’ என்று தோளை தூக்கினார்.
அவரே எங்களை கூட்டிச்சென்றார். குகைக்குள் இறங்கிச்சென்றோம். முதலில் சற்று கண்கள் தடுமாறின, பின்னர் உள்ளே உள்ள வெளிச்சத்துக்கு கண்பழகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு குட்டிக் கலையரங்கம் அளவுக்கு உள்ளே இடமிருந்தது. விசித்திரமான கலைக்கூடம். அந்தக்குகையின் மேல்கூரை சுண்ணாம்புக்கல்லால் ஆனது. சுண்ணாம்பிலிருந்து நீர் ஊறியூறி மெல்லிய சொட்டுகளாக விழுந்துகொண்டே இருக்கிறது. இவ்வாறு வருடக்கணக்காக விழும் சொட்டுகள் அவற்றில் உள்ள உப்பையும் பிற கனிமங்களையும் அப்படியே படிகமாக ஆக்கி தங்க வைக்கின்றன. ஆகவே அவை நீளமான கூம்புகளாகவும் விழுதுகளாகவும் கூரையில் இருந்து தொங்கிக்கிடக்கின்றன. மலேசியாவில் குவாலாலம்பூர் அருகே உள்ள ‘பத்து’ குகைகளில் இதேபோல மாபெரும் கூம்புகளைக் காணலாம். பிரம்மாண்டமான வெண்பன்றி ஒன்றின் அடியில் அதன் ஏராளமான முலைகளுக்குக் கீழே நிற்பதைப்போல் இருந்தது. பலமுலைக்காம்புகளில் பால் சொட்டி நின்றது. பனித்துளி போல ஒளிவிடும் தூய நீர்.
வழிகாட்டி பேசிக்கொண்டே இருந்தார். 1875ல் ஜான் கேரி [John Carey] இந்தக் குகைகளைக் கண்டுபிடித்தார். அன்றுமுதல் ஆய்வாளர்களின் தொடர்ச்சியான கவனத்துக்குரிய ஒன்றாக இந்த இடம் இருந்து வருகிறது. இதில் ஏழு தனி அறைகள் அல்லது கிளைக்குகைகள் உள்ளன. மேலே இருந்து கூம்புகள் தொங்க கீழே பலவகையான கூம்புகள் நிற்க சட்டென்று ஒரு பெரும் சுறாவின் வாய்க்குள் அதன் வெண்பற்கள் நடுவே உலவுவது போன்ற பிரமை எழுந்தது. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி கடலின் அடிநிலமாக இருந்தபோது நீரில் அரித்து உருவான இந்தக் குகைக்குள் பலவகையான அடிக்கடல் உயிர்கள் வாழ்ந்திருந்தன. அவற்றின் சிப்பிகளினால் ஆன சுண்ணாம்புப்படுகை இது. இவற்றில் பலவகையான கனிமங்கள் கலந்து பல வண்ண வடிவங்களை உருவாக்கியிருக்கின்றன.
மிகச்சிறப்பாக, நுண்ணிய கற்பனையுடன் ஒளியமைப்புசெய்யபப்ட்டிருந்தன அக்குகைகள். நேரடியாக விளக்குகளைப்போடாமல் சுண்னாம்புப்படிவப் பாறைகளின் உள்ளே பல ரகசிய மடிப்புகளுக்குள் விளக்குகள் எரிந்தன. சில பாறைகள் தீக்கனல்கள் போல் எரிந்தன. சில தங்கம் உருகி நிற்பதுபோலத் தகதகத்தன. சில இளநீல நிறத்தில் சுடர்விட்டன. வழிகாட்டி எங்களை ஒரு கூம்பை சுட்டிக்காட்டி அது படிகமா என்றார். இல்லை என்றார் ஒரு பெண். ஏன் என்றார். படிகம் என்றால் ஒளிவிடும் என்றார் அவர். அவர் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த ஒரு சிறிய கூம்புக்குள் சுட்டிக்காட்டினார். மேலே சுண்ணத் துகள்கள் திரண்டிருந்தது போல காணப்பட்ட அந்த கூம்புக்குள் உள்ள வெட்டுப்பகுதி கண்ணாடி உடைந்தது போல பளபளத்தது. ”மேல் தோற்றத்தை நம்பக்கூடாது. ஒளி உள்ளே இருக்கும்…”என்று ஒரு தத்துவத்தைச் சொன்னார்
இன்னொரு அறைக்குள் கொண்டு சென்று அங்கிருந்த நாற்காலிகளில் அமரச்செய்தார். அந்த கூடத்தின் நடுவே ஒரு விழுது விளக்கொளியில் ஒரு தங்கத்தூணாக ஜொலித்தது. அதன் கீழே ஒரு உருளைப்பாறை சுடர்விட்டது. இந்தியாவென்றால் அந்த பாறை ஒரு புகழ்பெற்ற லிஙகமாக ஆகியிருக்கும். இயற்கை தானாகவே உருவாக்கும் மிகப்பரவலான வடிவம் என்றால் அது லிங்கம்தான். அந்த வடிவம் அவ்வாறுதான் இயற்கையில் இருந்து எடுக்கப்பட்டது. கா என்றழைக்கும் பறவைக்குக் காக்கா என்று பெயரிடுவது போல ஆதிமனித மனம் இயற்கையின் உள்ளே உறைந்துகொண்டு ஓயாது லிங்கங்களை உருவாக்கும் அந்த ஆற்றலுக்கு அந்த லிங்க வடிவத்தையே அளித்தது போலும்!
வழிகாட்டி எல்லா விளக்குகளையும் அணைத்தார். பின்னர் மெல்ல மெல்ல ஒவ்வொரு விளக்காக போட்டார். விளக்குகள் மாறும் தோறும் அந்த இடம் மாறி மாறி தோற்றம் காட்டியது. பாறைகளின் வடிவங்களும் நிரங்களும் மாறு பட்டன. ஒளி வழியாக அந்த இடமே பயணம் செய்துகொண்டிருப்பதுபோல. அஜந்தா குகைகளுக்குள் உள்ள புத்தரின் சிலை மேல் வலதுபக்கமிருந்து ஒளியை அடித்து காட்டுவார்கள். புத்தர் புன்னகைசெய்வது போலிருக்கும். இடப்பக்கமாக அதே ஒளியை அடித்துக்காட்டும்போது அதே சிலை வருத்தம் கொண்டது போல் இருக்கும். பாறைகள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கின, சட்டென்று புன்னகையில் முகம் மலர்ந்தன. மீண்டும் கனவில் ஆழ்ந்தன.
1957ல் காரியின் குகையில் இப்போது இனமழிந்துபோன நீர்வாழ் உயிரினம் ஒன்றின் முதுகெலும்பு கண்டெடுக்கப்பட்டது. அதற்குப்பின் பாறைப்படிவங்களுக்கான விரிவான ஆய்வுகள் இந்தக்குகையில் செய்யப்படுகின்றன. அந்தச்செய்தியைக் கேள்விப்பட்டபின் எல்லா இடங்களிலும் ஏதோ ஓர் உயிரினத்தின் உடல் பாறையாக மாறிவிட்டிருப்பது போன்ற ஒரு பிரமை உருவானது. அதற்கேற்ப வழிகாட்டி பல இடங்களை கண்டுபிடித்து அவற்றுக்கு தனி விளக்குகள் போட்டு காட்டியிருந்தார். வெள்ளைக்காரர்களின் பிரபலமான சைகையான மலக்குழிக்குள் விரலிடும் ஒருவிரல் முத்திரை போல ஒரு இடத்தை விளக்கமைத்து ஆர்வமாகக் காட்டினார்.
குகைக்குள் பல ஒதுக்குபுறமான இடங்களில் பென்சிலாலும் கரியாலும் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஹாரி டேவிட்சன் லிஸ் பெர்த்தை காதலிக்கும் தகவல் தெரியவந்தது. தமிழ்பெயர்கள் இருக்க வாய்ப்புண்டு என்ற ஆர்வம் ஏற்பட்டது, வரலாற்றுச்சின்னங்களில் பெயர் பொறிக்கும் வேட்கை தமிழர்களிடம் அதிகம்.சேரன் செங்குட்டுவனே அதைச் செய்ததாக பிரபல வதந்தி பாடப்புத்தகங்களில் உண்டு. ஆனால் இத்தனை அக்கறையான வழிகாட்டி இருக்கையில் எப்படி அதை எழுதினார்கள். அருண்மொழி ‘ஜெயன் டேட்டிப்பார்” என்றாள். தேதியைப்பார்த்தேன். ஆச்சரியம், 1892 நவம்பரில் எழுதபப்ட்டது அது. பெரும்பாலான பெயர்கள் நூறு வருடம் பழக்கம் உள்ளபை. ஹாரி டேவிட்சனின் மகனுக்கே எண்பது வயதாகியிருக்கும்!
மீண்டும் குகைமத்திக்குக் கூட்டி வந்து அமரச்செய்து விதவிதமான பாறைகளைக் காட்டினார் வழிகாட்டி. ஒவ்வொரு பாறையும் ஒவ்வொரு கனம். சில பாறைகள் கரிய படிக வடிவம் கொண்டவை. சில பாறைகள் வண்டலே பாறையாக ஆனவை. அவர் சொல்ல்லிக்கொண்டே இருந்த நிலவியல் தகவல்கள் எதுவுமே என் மனதுக்குள் ஏறவில்லை. ஆனால் இதைப்போலவே இயற்கை அற்புதங்களான ஆந்திரமாநிலத்து குகைகள் முற்றிலும் கவனிப்பில்லாமல் கைவிடப்பட்டு கிடக்கும் விதம் மனதை எரியச்செய்தது.
வெளியே வந்தபோது வெளிச்சம் வந்து கண்களில் கொட்டியது. வெளியே நாங்கள் வரவும் ஒரு கடுமையான தூசிப்புயல் அடித்து கடந்து சென்றது. வீ ஜாஸ்பர் தாழ்வான பகுதி என்பதனால் மேலே இருந்து மண்கொட்டும் காற்று அடிக்கடி அடிக்குமாம். மண்புயல் வந்தது போலவே சென்றது. வெயில் உடனே மீண்டு குளிரும் விலகியது. அந்தக்குகைக்குள் அத்தனை நேரம் இருந்திருக்கிறோம் என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்த குகை மீன்களின் புனர்ஜனியாக இருக்கலாம் என வேடிக்கையாக எண்ணிக்கொண்டேன்.