பளிங்கறை பிம்பங்கள்

மணிமேகலை தமிழில் அதிகமாக விவாதிக்கப்படாத ஒரு காவியம். அஸ்வகோஷரின் புத்தசரிதம் காவியமாக கொள்ளப்பட்டாலும் அது வரலாற்றுநூலே. மணிமேகலைதான் பௌத்தமரபில் எஞ்சியிருக்கும் ஒரே சுதந்திரமான முழுமையான காவியம். இருந்தும் அது அதிகமாக விவாதிக்கப்படாமைக்கு முக்கியமான காரணத்தை அதைச் சிலம்புடன் ஒப்பிட்டால் அறியலாம். சிலம்பு பாட்டிடையிட்ட உரையுடைச்செய்யுள் என்னும் வடிவத்தில் அமைந்தது. அதிலுள்ள அழகான பகுதிகள் எல்லாமே கானல்வரி, வேட்டுவர் வரி, ஆய்ச்சியர் குரவை போன்ற பாடல்கள்தான். மணிமேகலை முழுக்க முழுக்க ஆசிரியப்பாவில் அமைந்தது, கிட்டத்தட்ட உரைநடைபோன்றது அந்த யாப்பு.

மணிமேகலை

சிலம்பு நாடகத்தன்மை மிக்கது. மணிமேகலையில் நாடகச்சுவை மிகமிகக் குறைவு. ஆகவே சிலம்பில் உள்ள உணர்வெழுச்சிகள் எதுவும் மணிமேகலையில் இல்லை. சிலம்பு பெரும்பாலும் வாழ்க்கையைச் சித்தரிப்பது. மணிமேகலை வாழ்க்கையைச் சித்தரிப்பதில்லை என்றே சொல்லலாம். அதன் பெரும்பகுதி நேரடியான தத்துவ விளக்கங்கள் மட்டுமே.

ஆனால் இவையனைத்தையும் விட முக்கியமான ஒரு காரணமுண்டு. சிலம்பு யதார்த்தத்தின் எல்லையை மீறாத கவித்துவத்துடன் உள்ளது. மாறாக மணிமேகலை மந்திர மாயக்கதைகளால் ஆனது. இந்த அம்சம் இருபதாம் நூற்றாண்டில் மணிமேகலையைப் பின்னுக்குத்தள்ளியது. ‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத’ நூலாக மணிமேகலையைத் தமிழறிஞர்கள் கருதநேர்ந்தது.

சொல்லப்போனால் பௌத்தம் இங்கே பகுத்தறிவாளர்களுக்கு உகந்த மதமாகவே இருந்தது. தமிழிலக்கியங்கள் சுவடிகளில் இருந்து மீட்டு எடுக்கப்பட்ட காலகட்டமும் பௌத்தம் பகுத்தறிவுக்கு உகந்த ஒரு தத்துவ மதமாக முன்வைக்கப்பட்ட காலமும் ஒன்றே. ஆனால் அந்தச் சித்தரிப்புக்கு நேர் மாறானதாக இருந்தது மணிமேகலை. அதன் புராணத்தன்மை எந்த இந்துநூலையும் விட அதிகம். ஆகவே அது கண்டுகொள்ளப்படவில்லை.

எழுபதுகளில் தமிழில் படிமம் என்னும் கருத்து அறிமுகமாகியது. இலக்கியத்தின் எல்லா வர்ணனைகளையும் உருவகங்களையும் கதைகளையும் படிமம் என்னும் இலக்கிய உத்தியாக அணுகலாமென்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் இந்த வாசிப்புமுறை நவீன இலக்கியத்துக்குள்ளேயே புழங்கியது. அந்த வாசிப்பு மரபிலக்கியத்துக்குப் போடப்படவில்லை. ராவணனின் பத்துத் தலைகள் படிமம் என்ற வகையில் எதை உணர்த்துகின்றன என்றோ சிலப்பதிகாரத்தின் இட்டசித்தி பவகாரிணி போன்ற குளங்கள் என்ன உட்பொருள் கொண்டவை என்றோ பேசப்படவில்லை.

ஆகவே அந்த வாசிப்புக்குள் மணிமேகலை வரவில்லை என்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. அப்படி மணிமேகலையின் தொன்மங்கள் படிமங்களாக வாசிக்கப்பட்டிருந்தால் மணிமேகலை மிகப்பெரிய ஒரு திறப்பை அடைந்திருக்கும். என் கருத்தில் அப்படிப்பட்ட ஒரு சிறந்த வாசிப்பு பிரேம் அவர்களால் நானும் நண்பர்களும் நடத்திவந்த ‘சொல்புதிது’ இதழில் வெளிவந்தது. கண்ணகி அறுத்து எறிந்த ஒற்றைமுலையே மணிமேகலையின் கையில் அட்சயபாத்திரமாக ஆகியது என்று பிரேம் சொன்னார். தாய்மையையும் கருணையையும் அறுத்து வீசிக் கண்ணகி விடுதலை அடைந்தாள். தாய்மையையும் கருணையையும் கண்டடைந்து மணிமேகலை விடுதலை பெற்றாள் என்றார் பிரேம். அபூர்வமான ஒரு வாசிப்பு அது.

மணிமேகலையின் படிமங்களின் ஆழம் என் வாசிப்பில் எழுச்சிமிக்க தருணங்களை அளித்துள்ளது. அதில் ஒன்று உதயகுமரனுக்கும் மணிமேகலைக்கும் இடையேயான உறவு. கண்ணகி மதுரையை எரித்தபின் மலைமேல் அமர்ந்த சேதி நாடெங்கும் பரவுகிறது. மாதவி கோவலனின் மகளாகிய மணிமேகலையுடன் தன் பொருட்களை எல்லாம் போதி மரத்தின் கீழ் அறவண அடிகள் முன்னர் தானம் செய்து துறவறம் ஏற்கிறாள்.

இந்நிலையில் மணிமேகலை ஒரு தாசிப்பெண் என்றும், அவளை அடையலாம் என்றும் மணிமேகலையின் பாட்டியும் மாதவியின் தாயுமான சித்ராபதி சோழனின் மகனான உதயகுமரன் மனதில் ஆசையை மூட்டுகிறாள். அந்நாளில் பூம்புகாரில் இந்திரவிழா நடைபெறுகிறது. அன்று நாடகப்பெண்டிரின் ஆடலும் பாடலும் நடக்கின்றன. மாதவியும் மணிமேகலையும் அவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ஊர் மக்கள் பழித்துப் பேசுகின்றனர்.

சித்ராபதி மாதவியின் தோழியான வயந்தமாலையை அழைத்து மாதவியை அழைத்து வருமாறு கூறுகிறாள். மாதவியைக் காணச்சென்ற வயந்தமாலையிடம் மணிமேகலையை ‘காவலன் பேரூர் கனையெரி ஊட்டிய மாபெரும் பத்தினி மகள்’ என்று குறிப்பிடுகிறாள் மாதவி. தன் மகள் என்றல்ல கண்ணகியின் மகள் என்றே அவளை அறிமுகம் செய்கிறாள்.

அந்த அடையாளம் சூட்டல் முக்கியமானது. இனி அவள் கணிகை அல்ல என்கிறாள். அவள் பத்தினியின் மகள். அதைவிட முக்கியமானது அவள் ஒரு மன்னனின் நகரை எரித்தவளின் வழிவந்தவள் என்ற குறிப்பு. அது உதயகுமரனுக்கு ஒரு எச்சரிக்கையும் கூட.

அப்போது அதைக்கேட்டுக்கொண்டெ மாலை தொடுத்துக்கொண்டிருந்த மணிமேகலை கண்ணீர்விடுகிறாள். கண்ணீர் பட்டுப் பூமாலை நனைகிறது. மாலை அசுத்தமாகிவிட்டது. வேறு மலர்களைக் கொய்து கொண்டுவந்து புதிய மாலைகட்டு என்று மாதவி ஆணையிடுகிறாள். மணிமேகலை தன் தோழி சுதமதியுடன் மலர் கொய்வதற்காக உபவனம் செல்கிறாள்.

அவள் செல்வதை உதயகுமரன் கேள்விப்படுகிறான். ‘மதுமலர்த் தாரோன் மனமகிழ்வு எய்தி ஆங்கு அவள் தன்னை என் அணித்தேர் ஏற்றி ஈங்கு யான் வருவேன்’ என்று வஞ்சினம் சொல்லிக் கிளம்பிச்செல்கிறான். . அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணிய மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள். உபவனத்துக்குள் வரும் உதயகுமரன் பளிங்குச்சுவர்கள் வழியாகத்தெரியும் அவளை பளிங்குச்சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களாக நினைக்கிறான். சுற்றிச்சுற்றி வந்து ஓவியங்களைப் பார்த்து அவற்றின் அழகில் பிரமிக்கிறான்.

‘ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் காவி அம் கண்ணி ஆகுதல் தெளிந்து தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇ’ மீண்டான் என்கிறார் சாத்தனார். மணிமேகலை தன்னை ஏமாற்றிவிட்டாள் என உணர்ந்ததும் மணிமேகலையை உதயகுமரன் வசைபாடுகிறான். கற்புதான் இலள், நல் தவ உணர்வு இலள், வருணக்காப்பு இலள், பொருள்விலையாட்டி’ என்று இழிவு செய்கிறான்.

உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள். அத்தனை இழிவு செய்தபின்னும் தன் மனம் உதயகுமரனை காதலிப்பதைச் சொல்கிறாள். புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம் இதுவோ அன்னாய் காமத்து இயற்கை?’ என்று வியக்கிறாள்.

மணிமேகலையில் மிக நுட்பமான இடம் இது. இது நேரடியான ஒரு வாழ்க்கைச்சித்தரிப்பு அல்ல. ஆனால் வாழ்க்கையின் உண்மையைச் செறிவாக்கிப் படிமமாக முன்வைக்கும் இலக்கிய உத்தியின் மிகச்சிறந்த வடிவம் இது. ஆணுக்கும் பெண்ணுக்குமான உளப்போராட்டத்தின் சித்திரம் இதில் உள்ளது. இரு கூரிய வாட்கள் போல ஆணின் அகமும் பெண்ணின் அகமும் உரசிச்செல்லும் தருணம் இது.

ஆண் அகந்தையே வடிவாக இருக்கிறான். வெறும் காமத்தால் அவன் அவளை நாடி வருகிறான். உடைமைவெறியால் அவளைக் கொண்டுபோக முனைகிறான். அவளோ அவனுடைய அவமதிப்பால் சுருங்கிச் சிறுக்கிறாள். தன்னை மறைத்துக்கொள்கிறாள். மாயத்தோற்றம் அளித்து அவனை அலைக்கழிக்கிறாள். ஆனால் அந்த மாயத்தோற்றங்களுக்குள் அவள் அத்தனைக்குப்பிறகும் அவன் மேல் காதலுடன் இருக்கிறாள்.

அந்தப் பளிக்கறை தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான படிமங்களில் ஒன்று. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே என்றும் இருக்கும் பளிங்கு அறையல்லவா அது? பெண் தன்னை அதற்குள் ஒளித்துக்கொள்கிறாள். வெளியே அந்தப் பளிக்கறை அவளைப் பலநூறு பிம்பங்களாகக் காட்டுகிறது. அன்னையாக, தோழியாக, எஜமானியாக இன்னும் என்னென்னவோ ஆக. அந்த பிம்பங்களை தடவித் தடவிப் பரிதவிக்கிறான் ஆண். அதற்குள் இருக்கும் பெண்ணை அவனால் அறியவே முடியவில்லை.

அவள் தன்னை ஏமாற்றிவிடுவதாக நினைக்கிறான். அவளை வெறுக்கிறான். அவமதிக்கிறான். ஆனால் அந்தப் பளிக்கறைக்குள் செல்ல அதன் வாசல்களைத் திறக்க மிக எளிய ஒரு வழி உண்டு என அவன் அறிவதில்லை. அவளை அதற்குள் ஒளியச்செய்த தன் அகந்தையை முறிப்பதுதான் அது. அது அவனால் முடியாது. அவன் தோற்று விலகும்போது அவள் உள்ளுக்குள் இருந்து அவனுடைய காதலுக்காகக் கண்ணீர் வடிக்கிறாள். எவ்வளவு பெரிய நாடகம்!

லா.ச.ராமாமிருதம்

நான் சின்னப்பையனாக இருக்கும்போது லா.ச.ராவின் ஒரு சிறுகதைத் தொகுதி கையில் கிடைத்தது. அதில் ஆடுபுலிஆட்டம் என்று ஒரு கதை. ஓர் ஆணும் பெண்ணும் ஆடுபுலி ஆட்டம் விளையாடுகிறார்கள். ஆண் கட்டுமஸ்தான உடம்புடன் கண்களில் காமமும் வெறியும் துலங்க இருக்கிறான். அவள் கருமையாக பெண்மையின் குதூகலத்துடன் இருக்கிறாள். அவர்கள் விளையாடும்போது அவனை அவள் எளிதில் தோற்கடிக்கிறாள். அவனால் அந்த ஆட்டத்தின் நுட்பங்களை உள்வாங்க முடியவில்லை.

அவன் முதலில் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறான். அவள் தன்னிடம் தோற்றுப்போவதாக விட்டுத்தரவேண்டும் என நினைக்கிறான். அவள் ஜெயித்துக்கொண்டே இருக்கிறாள். ஒவ்வொரு வெற்றிக்கும் அவள் கைகொட்டிச் சிரித்துக் கெக்கலிக்கிறாள். அவன் முகம் மாறிக்கொண்டே போகிறது. கோபம் அவனுக்குள் கொதிக்கிறது. ஒருகட்டத்தில் மொத்த ஆடுபுலிக்கட்டத்தையும் அப்படியே தூக்கி வீசுகிறான். அவளை இழுத்துப்போட்டு அடிக்கிறான். அவள் அலற அலற மிதித்துத் துவைக்கிறான்.

அவன் வெறி தணிகிறது. அவளுடைய கண்ணீரைப் பார்க்கிறான். மெல்ல மெல்ல இளகுகிறான். மீண்டும் ஆடுபுலிக்கட்டைகளை எடுத்து வைக்கிறான். அவளையே பார்க்கிறான். அவள் முறைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவன் அவளை மெல்ல சமாதானம் செய்கிறான். அவள் முறுக்கிக்கொள்ள அவன் தணிந்து போகிறான். மன்னிப்புக் கோரி கொஞ்சி சிரிக்க வைக்கிறான். மீண்டும் ஆடுபுலி ஆட்டம். தாயக்கட்டைகள் உருளும் ஒலி.

நான் இந்தக்கதையை அதன்பின் வாசித்ததில்லை. கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன் வாசித்த நினைவில் சொல்கிறேன். கதைகளை இவ்வாறு நினைவிலிருந்து சொல்வது என்னைப்பொறுத்தவரை மிக முக்கியமானது. எளிதாகக் கதையை எடுத்து மீண்டும் வாசிக்கமுடியும் என்றாலும் அதைப் பலசமயம் செய்வதில்லை. காரணம், நானும் ஒரு கதைசொல்லி என்றவகையில் வாசித்த அந்தக்கதை இத்தனை நாட்களில் என் அகத்தில் எப்படி உருமாறியிருக்கிறது, அக்கதையில் எவை என்னுள் தங்கியிருக்கின்றன, எவை என்னிடமிருந்து உதிர்ந்துவிட்டன என்பது எனக்கு என்னைக் காட்டக்கூடியது.

எல்லா வாசகர்களிடமும் அவர்கள் வாசித்த இலக்கியப்படைப்புகள் அப்படி அவர்களுடைய கதைகளாகத் தன்வயப்பட்டிருப்பதைக் காணலாம். கதைகள் வாய்மொழி மரபில் அப்படி உருமாறிய ஒரு வடிவில்தான் சேமிக்கப்படுகின்றன. ஒருசமூகமே ஒட்டுமொத்தமாக அப்படி ஒரு பொதுவான சுருக்கவடிவத்தை உருவாக்கிக்கொள்கிறது. பல புராணக்கதைகளின் நாட்டார் வடிவங்களில் இதைக் காணலாம்.

முப்பதாண்டுகளுக்கு முன் எனக்கு லா.ச.ராமாமிருதத்தின் அந்தக்கதை என் அப்பாவுக்கும் அம்மாவுக்குமான உறவை அப்படியே சித்தரிப்பதாகத் தோன்றியது. அந்த லீலையில்தான் நான் பிறந்தேன் என்பது பின்பு தோன்றிய எண்ணம். எங்களூரில் ஆண் பெண்ணை இழுத்துத் தெருவிலிட்டு அடிப்பதும் அவர்கள் மறுநாளே கூடிக்கொள்வதும் அன்றாடம் காணும் காட்சி. ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவில் உள்ள அந்த மூர்க்கம் என்றும் எனக்கு பிரமிப்பூட்டுவது.

பின்னர் எல்லோரா குகைகளுக்குச் சென்றிருந்தபோது அங்கே உமையும் சிவனும் தாயம் விளையாடும் சிலைகளைப் பார்த்தேன். மீண்டும் மீண்டும் அச்சிலைகள் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டிருந்தன. அவை ராஷ்டிரகூடர் காலத்துக் கலைகளின் முத்திரை. அம்மை அலட்சியமாக நெளிந்த இடையுடன் கை ஊன்றிக் குறும்பாகச் சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். பெரும் தோள்களை ஒடுக்கி மிகக்கவனமாக அப்பன் காய்களை உருட்டுகிறான். அவன் முகத்தில் பதற்றம்.

அப்போதுதான் நான் லா.ச.ராவின் கதையை முழுமையாகப் புரிந்துகொண்டேன். நான் அப்படி அர்த்தப்படுத்திக்கொண்டேன் என்று சொல்ல வரவில்லை. உண்மையில் லா.ச.ரா.வே அவரது கதையில் அந்த ஆடுபுலி ஆட்டம் ஆடுபவர்களுக்கு உமையின் சாயலையும் சிவனின் சாயலையும் மிகத் துல்லியமாக அளித்திருந்தார் என்பதை நினைவுகூர்ந்தேன். அவர் காட்டியது ஆண்பெண் லீலையை மட்டுமல்ல, பிரபஞ்சலீலையையும் கூடத்தான்.

நுண்ணிய அகந்தையின் ஆடல் அது. அந்த ஆடுபுலிக்கட்டத்தில் மோதிக்கொள்வது அகந்தைகள்தான். வன்முறையின் வடிவான ஆணின் அகந்தை. அந்த வன்முறையைச் சீண்டி, உச்சம் கண்டு, தோற்கடித்துச் சிரித்து நிற்கும் பெண்ணின் அகந்தை. முடிவற்ற விளையாட்டு.

சாத்தனாரின் பளிக்கறையின் இன்னொரு வடிவம் இந்த ஆடுபுலிக் கட்டம். சக்தி தன்னை பிரம்மாண்டமான, முடிவிலாத தோற்றங்களாக ஆக்கிக்கொண்டு சிவனை வெல்கிறாள் என்கிறது தேவிபாகவதம். அதனால்தான் அவளுக்கு மகாமாயை என்று பெயர்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான இந்த மாயாவிளையாட்டைத் தமிழிலக்கியம் சொல்லிச் சொல்லிப் பார்த்திருக்கிறது. தமிழிலக்கியத்தில் மிக அதிகமாகப் பேசப்பட்ட கரு இதுதான். கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் முதல் இன்று வரை. ஆண் பெண் உறவைத் தமிழிலக்கியம் இந்த அளவுக்குப் பேச என்ன காரணம்? நமக்கு ஆண் பெண் உறவு மிகச்சிக்கலானதாக இருக்கிறது என்பதனாலா? இருக்கலாம். ஆனால் அது உலகமெங்கும் அப்படித்தானே?

நம்முடைய சமூகச்சூழல் ஒருமுக்கியமான திருப்புமுனையில் இருக்கிறது. அது மானுட உறவுகளை ஆழமாக மாற்றியமைக்கிறது. அதனால்தான் இந்த அளவுக்கு நாம் ஆண் பெண் உறவின் மாயையையும் விளையாட்டையும் பார்க்கிறோமா? ஆமாம். அது உண்மை. ஆனால் அது மட்டும் அல்ல.

நெடுங்காலமாக ஆண் பெண் உறவென்பது இயற்கையின் தோற்றத்துக்கான் உருவகமாக நம் மனதில் படிந்துள்ளது. இந்தப் பிரபஞ்சமே மாபெரும் ஆண்பெண் லீலை என நம் மரபு சொல்லிச் சொல்லி நம்முள் ஏற்றியிருக்கிறது. சாதாரணமாக நம்முடைய நாட்டுப்புற உரையாடல்களிலேயே இந்த வகைப்பேச்சுக்களை நாம் காணலாம். ஒரு பெருமழையை ஒரு கூடலாக விவசாயிகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வசந்தகாலத்தை பூமி பூப்படைந்து நிற்பதாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

நம் இன்றைய நவீனக் கவிதைகளில் எல்லாமே இயற்கையின், பிரபஞ்சத்தின் மாபெரும் ஆடல் ஆண் பெண் உறவு என்ற உருவகம் வழியாகவே அணுகப்படுகிறது. ஏன் சினிமாப்பாடல்களில்கூட ‘இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி’ என நாம் சாதாரணமாகப் பாடிக்கொண்டிருக்கிறோம்.

இந்த அடிப்படை மன உருவகமே நம்மை மீண்டும் மீண்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான மாயாவிளையாட்டை இத்தனை தூரம் கவனிக்கச்செய்கிறது.சிலசமயம் தன்னியல்பாலேயே ஒரு நுண்ணிய பாலியல் முடிச்சை மட்டும் தொடக்கூடிய ஒரு கதையை நம் வாசிப்பு பிரபஞ்ச தளத்துக்குக் கொண்டுசென்று விடுகிறது.

வண்ணதாசன்

உதாரணம் வண்ணதாசனின் ஒரு கதை. கனிவு என நினைக்கிறேன். அது நெல்லையில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிள்ளைவாளின் கதை. ஆச்சி நல்ல கறுப்பு. களையான பெரிய முகம். உருண்ட உடல். பெரிய மூக்குத்தியும் நகைகளுமாகக் குடும்பமாள வந்தவள். அடக்கமும் மென்மையும் கொண்டவள்.

அவள் மேல் ஆயானுக்குக் காமம். ஆனால் கூடவே ஒவ்வொருமுறையும் அந்த உறவுக்குப்பின் இனம்புரியாத கோபம் எழுகிறது. தினசரி அடி உதை. தான் ரசித்து ஆளும் ஒரு உடல்மீது அத்தனை வெறுப்பு எப்படி எழுகிறதென அவருக்கே தெரியாது. ஆச்சியால் அழ மட்டுமே முடிகிறது. அந்த விருப்புவெறுப்பின் அலை ஆயானைப் போட்டு சுழற்றியடிக்கிறது.

ஆயானுக்கு எஸ்டேட்டில் கங்காணி வேலை. அங்கே துரைதான் நிர்வாகி என்றாலும் புதியதாக துரைசானி வந்ததும் எல்லாம் அவள் கைக்குச் செல்கிறது. துரை கொஞ்சநாள் ஊரில் இல்லை. மிக இயல்பாக துரைசானிக்கும் ஆயானுக்கும் உறவு ஏற்படுகிறது. துரைசானியின் உடல் உறை உருவி வந்த நாகம் போல. வாழைத்தண்டுபோல வெண்மை. அவளுடைய வேகம் தீப்பிழம்பு போல ஆயானை அள்ளிக்கொள்கிறது.

ஆயான் அன்று இரவு திரும்பும்போது அவரது நண்பரான வாட்ச்மேன் சொல்கிறார் ‘ஆயான் இப்போது நிறைந்ததா? இனிமேலாவது ஆச்சியை வாழவிடு’ ஆயான் பேசாமல் போகிறார். ஆனால் அதன்பின் உண்மையிலேயே ஆச்சியுடனான உறவு சீரடைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் நெருங்குகிறார்கள். ஒன்றாக இணைந்த மனத்துடன் வாழ ஆரம்பிக்கிறார்கள்.

வெகுநுட்பமாக,தனக்கே உரிய பூடகத்தன்மையுடன் இந்தக்கதையை வண்ணதாசன் சொல்லியிருப்பார்.. முதல் வாசிப்பில் இந்தக்கதை ஆணின் அகங்காரமும் காமமும் தீயும் காற்றும்போல இணையும் சித்திரத்தை அளிக்கும் கதை என்ற எண்ணமே எனக்குள் வந்தது. அவனுடைய காமம் அடைதலாக, வெற்றிகொள்ளுதலாக அவனுக்குள் செதுக்கப்பட்டிருக்கிறது. அது அவனை அடையும்தோறும் மேலே தேடச்சொல்கிறது.

பின்னர் எப்போதோ ஒருமுறை ஏதோ ஒரு பயணத்தில் இந்தக்கதை நினைவில் மீண்டபோது சட்டென்று புன்னகைத்துவிட்டேன். ஆமாம், மரபில் தழல்நிறமானவள் உமை, கருநிறமானவள் காளி. இங்கே அது தலைகீழாகியிருக்கிறது. உமையின் தண்மையும் காதலும் ஆணுக்குத் தேவையாகிறது. கூடவே காளியின் வெம்மையும் காமமும் தேவையாகிறது. ஒன்று பிறிதைசமன் செய்கிறது.

இதுவும் ஒரு ஆடுபுலியாட்டம். இந்தக் களத்தில் இரு பெண்களைக் காயாக நகர்த்தி ஆண் ஆடுகிறான். தன் அகங்காரத்தைக் காமத்தாலும் காமத்தை அகங்காரத்தாலும் நிறைத்துக்கொள்கிறான். விசித்திரமான அந்த மாயாநடனத்தை ஒரு நவீனச்சிறுகதைக்குள் கண்டேன்.

மணிமேகலை ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். ஆயிரத்தைநூறாண்டுகளாக ஓடி வந்துகொண்டிருக்கிறது நதி. சாத்தனார் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே கண்ட அந்தப் பளிங்கறையின் மீது விரிந்த பிம்பங்களை நாம் இன்னும் எழுதிமுடிக்கவில்லை.

உண்மையில் அந்தப் பளிக்கறை தாண்டி உள்ளே ஊறிய பெண்ணின் கண்ணீரைத்தான் சுற்றிச்சுற்றிவந்து, தடவித்தடவிப்பார்த்து, மீண்டும் மீண்டும் ஏமாந்து, மெல்ல எழுத முயன்றுகொண்டிருக்கிறோம்.

நானும் எழுதுவது அதையே. மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறேன். என்னுடைய நைனிடால் என்ற கதையை நினைவுறுகிறேன். அவள் எப்போதும் நைனிடால் என்ற ஊரைக் கற்பனை செய்துகொண்டிருக்கிறாள். சொல்லிச் சொல்லி அந்த ஊர் ஒரு மந்திரமாக மாறி நாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. நைனிடாலுக்குச் சென்றால் எல்லாம் சரியாகிவிடும். அவளுக்கும் கணவனுக்குமான உறவில் மங்கி மங்கி வரும் வண்ணங்கள், ஓய்ந்து விட்ட சங்கீதம் எல்லாம்.

க்ணவனை சொல்லிச் சொல்லிக் கிளப்பிக்கொண்டு நைனிடால் வருகிறாள். அழகிய நகரம். அழகிய ஏரி. பனிமூடிய மலைச்சிகரங்கள். எங்கும் காதலிளம் தம்பதிகள். ஆனால் அவள் மிக அந்தரங்கமாக உணர்கிறாள், நைனிடால் பூமி மீதுதான் இருக்கிறது. வேறு எங்கும் இல்லை.

இங்கே என் வீட்டருகே ஒரு மின்னழுத்தமானி இருக்கிறது. அங்கே தொலைவில் கோதையாறு மின்னுற்பத்திச் சாலையில் இருந்து மின்சாரம் கிராமங்களும் மலைகளும் தாண்டி இங்கே வந்துசேர்கிறது. கண்ணுக்குத்தெரியாத ஒரு நதி போல மின்சாரம். நான் இந்த மின்னழுத்தமானியில் இருந்து என் வீட்டுக்கும் ஓர் இணைப்பை இழுத்துக்கொள்கிறேன். என் வீட்டுக்கு ஒளிக்காக. நான் இருப்பது தெரிய.

நன்றி

[12-4-2012 அன்று துபாய் அமீரகத்தமிழ் மன்றத்தில் ஆற்றிய உரை]

மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைஇரவு – ஒரு வாசிப்பு
அடுத்த கட்டுரைஉப்புநீர் – கடிதங்கள்