திரு ஜெமோ,
தூக்க நேர்ச்சை கட்டுரையில் கொடுக்கப்பட்ட காணொளியைக் கண்டேன். பச்சிளம் குழந்தைகள் கதறக் கதற உயரே கொண்டு செல்வது மூடத்தனத்தின் உச்சம்! “தன்னை வருத்திக்கொண்டு கடவுளின் கோபத்தைக் குறைக்கும் சடங்குகள் இல்லாத மதங்களே உலகில் இல்லை.” என்ற சப்பைக்கட்டு வேறு. எந்த மதம் என்றாலும் மூடத்தனம் மூடத்தனம்தானே! ஒன்றுமே அறியாத சிசுக்களை வாட்டுவது அரக்கத்தனம் அல்லவா! சீற்றம் இதுபோன்றவைகளைக் காணும்போது எழாதா? ஒரு புறத்தில் அறம், ஆன்மீகத்திற்குப் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் கை, இதையெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்யாமல் போகிறபோக்கில் பதிவு செய்துவிட்டு நகர்வதேன்?
வாசகன்
வெங்கிராம்.
அன்புள்ள வெங்கிராம்,
உங்கள் தார்மீக வேகத்தின் உள்ளுறை புரிகிறது.
நான் தனிப்பட்ட முறையில் எவருடைய மதநம்பிக்கைகளையும், ஆசாரங்களையும் விமர்சிப்பதில்லை. அப்படி விமர்சிக்கும் அளவு, திருத்த முயலும் அளவு நான் விடுதலை பெற்றவன் அல்ல. சாமானியன்.
நான் என் சொந்த வாழ்க்கையில் எந்த மதநம்பிக்கையையும் கொண்டவன் அல்ல. எந்த ஆசாரங்களையும் வழிபாட்டையும் செய்பவன் அல்ல. நான் அத்வைதி. ஆனால் அத்வைதத்தின் அடிப்படையில் உலகை மாற்றியமைக்க நான் முயல மாட்டேன். ஏனென்றால் அதுவே அத்வைதத்துக்கு நேர் எதிரான வேலை.
அந்த மக்கள் அந்தச்சடங்கை உயர்வானது என முன்வைத்து வாதாடினால் இல்லை,அதை நான் ஏற்க மாட்டேன் என மறுப்பேன். பிறரது பிள்ளைகளைக் கண்டிப்பாக அப்படித் தூக்க வேண்டும் என அவர்கள் சொன்னால் அது அறமல்ல என எதிர்ப்பேன்.
கொஞ்சநாள் முன்னால் ஒரு வெள்ளைக்காரர் இந்தியர்கள் குழந்தைகளுக்குக் ‘கதறக்கதறக் காது குத்துவதைப்பற்றியும் இப்படித்தான் என்னிடம் கேட்டார். இதையே சொன்னேன்.
புரிந்துகொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
உங்கள் தார்மீகத்தின் உள்ளுறை என நான் சொன்னது குழந்தைகள், குறிப்பாக அடித்தள மக்களின் குழந்தைகள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை.
ஜெ