அன்புள்ள ஜெ,
கருத்துக்களாக விளக்க முடிபவற்றைக் கட்டுரையாக எழுதிவிடலாம். ஆனால் அனுபவங்களை, வாழ்க்கையை அவ்வாறு எழுதிவிட முடியாது.அதற்குக் கலை மட்டுமே உதவும் என நினைக்கிறேன். ‘மடம்’ குறுநாவலைப் படித்த பிறகு இதுதான் தோன்றியது. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் விதவிதமான அனுபவங்கள் வருகின்றன. நாவல் முழுக்க இழையோடும் அங்கதம் ஒரு புதுவித சுவையைத் தருகிறது. கனபாடிகளின் கூர்ந்த அறிவு அவருக்கு ஞானத்தைத் தரவில்லை. மாறாக அவர் படித்தது எதையுமே படிக்காத சாமியும் பண்டாரமும் ஞானமடைந்தவர்கள்.
இம்மூவரைத் தவிர மற்ற எவருக்குமே ஞானம் குறித்த பிரக்ஞையே இல்லை. இந்த மூன்றாவது தரப்பிற்குள் பல தரப்புகள் எதற்காகச் சண்டையிடுகிறோம் என்றே தெரியாம்ல் சண்டையிடுகிறார்கள்…. மொத்தத்தில் சொல்லால் விளக்க முடியாத அனுபவங்களே இந் நாவலைப் படித்த பிறகு மிஞ்சுகிறது. ‘பிறரைக் கொல்லத்தான் ஆயுதங்கள் தேவை. தற்கொலை செய்து கொள்ள குண்டூசியே போதுமானது’ என விவேகானந்தர் சொன்னதை இந்நாவல் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.
சங்கரன்
அன்புள்ள சங்கரன்,
மடம் நான் நீண்டநாட்களுக்கு முன் எழுதிய குறுநாவல். அதிகம் பேரால் வாசிக்கப்படாதது. வாசித்தவர்களும் அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. வெறும் அங்கதமாக மட்டுமே பலர் வாசித்தனர்.
மடம் என்ற தலைப்பே எனக்கு அந்தக்கதையை உருவாக்கியது. மடம் என்று நேர்ப்பொருளில் அது மடமென்னும் அமைப்பை குறித்தாலும் கதையில் அது மடமையையே குறிக்கிறது. கற்கும்தோறும் விரியும் மடமை. கற்கும் விதத்தில் கற்றால் ஒரு சொல்லே கல்வியாகும் என்பதே அந்தக்கதை.
நெடுநாட்களுக்குப்பின் ஒரு கடிதம் அதைப்பற்றி வந்ததில் மகிழ்ச்சி.
ஜெ
அன்புள்ள ஜெ,
நான் இலங்கையில் இருந்து எழுதுகிறேன். மிகவும் முன்னால் உங்களுடைய பத்மவியூகம் கதையை நான் வாசித்திருக்கிறேன். காலச்சுவடு இதழில். அப்போது அந்தக்கதை எனக்கு வேறு ஒருவகையிலே பிடித்திருந்தது. இப்போது வாசிக்கும்போது ஒவ்வொரு வரியும் அமிலம் மாதிரி நெஞ்சிலே விழுகிறது. இதுவரை இதற்குச் சமானமான ஒரு அனுபவத்தை நான் வாசிப்பிலே அடைந்தது இல்லை.
இந்தக்கதையுடன் சேர்த்து நதிக்கரையில் என்ற கதையையும் வாசித்தேன். எனக்கு உருவான மனக்கொந்தளிப்பை சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை ஜெ.
இந்தக்கதைகளில் போரின் அர்த்தமற்ற இயல்பினை ஒவ்வொரு கதாபாத்திரமும் கசப்புடன் வெறுப்புடன் கண்ணீருடன் சொல்லுகின்றன. ஒவ்வொரு வரியையும் நானே நூறுமுறை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
போரில் மாவீரர்களும் இதிகாசபுருஷர்களும் தொன்மமாக ஆகிறார்கள். அவர்களுடைய சொர்க்கம் அதுதான். ஆனால் அவர்களுக்காக செத்த கோடிக்கணக்கான சாமானியர்கள் எங்கே? அவர்களுடைய இடம் வரலாற்றின் இருட்டான ஆழம்.
போரில் எவனையோ எவனோ கொல்கிறான். இருவருமே ஏதோ விதியால் கட்டப்பட்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஆட்டி வைக்கிறார்கள். ஜெ, இதை நாம் தனிமனிதர்களுக்கு மட்டும் அல்ல நாடுகளுக்கும் இனங்களுக்கும் கூட சொல்லலாம் இல்லையா?
இந்தக்கதைகள் மகாபாரதத்திலே இருப்பதும் எனக்குப் பெரிய மன எழுச்சியை அளித்தது. சரித்திரம் முழுக்க இப்படித்தான் நடந்திருக்கிறதா என்ற எண்ணம் ஏற்பட்டது.
நன்றி ஜெ.
யோகன் கந்தையா
அன்புள்ள யோகன்,
பத்மவியூகம் வெளிவந்தபோது இலங்கையில்தான் அதிகமான எதிர்வினைகளை உருவாக்கியது. நீண்ட நாட்களுக்குப்பின் இந்தக் கடிதம் அந்நாட்களை நினைவுறுத்தியது.
இப்போது நான் திரும்ப வாசிக்க, நினைக்கக்கூட விரும்பாத கதைகள் அவை.
ஜெ