மேலெழும் விசை

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களின் வருகைக்காக மிக ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். :)

குறுந்தொகை குறித்து நீங்கள் ஆற்றிய உரையின் காணொளி ஒரு பெரிய திறப்பு எனக்கு. பழந்தமிழ்ப் பாடல்களின் வாசிப்பு குறித்து நீங்கள் எனக்குச் செய்யும் இரண்டாவது பேருதவி இது. சங்கச்சித்திரங்கள் தான் என்னை பழந்தமிழ் வாசிப்பிற்குள் இழுத்து வந்தது. (அதன் மூலமாக என் வாழ்க்கைத்துணையையும்).இந்த உரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. நன்றி.

நானும் காயத்ரியும் “அணிலாடு முன்றில்” என்றொரு வலைப்பதிவை நடத்தி வருகிறோம். பழந்தமிழ்ப் பாடல்கள் குறித்த எங்களின் கட்டுரைகள் இடம்பெறும் தளம். உங்கள் குறுந்தொகை உரை தந்த பாதிப்பில் ஒரு கட்டுரையை அத்தளத்தில் நேற்று எழுதினேன், நீண்ட நாட்களுக்குப் பிறகு. நேரமிருக்கும் பொழுது படிக்கவும்.

சித்தார்த்.

கூதளம்

அன்புள்ள சித்தார்த்,

கூதளம் என்று குமரிமாவட்டத்தில் சொல்லப்படும் செடி இது. இங்குள்ள மழைக் காட்டில் பெருமளவு பூத்துக் கொட்டிக்கிடந்தது. பின்னர் கம்யூனிஸ்டுபச்சை என்று சொல்லப்படும் இன்னும் ஆவேசமாக வளரும் செடி – ஆப்ரிக்காவில் இருந்து வந்த களைச்செடி என்று சொல்கிறார்கள் – எழுபதுகளில் பரவி இதைக் குறைத்தது. கம்யூனிஸ்டுபச்சையைப் பார்த்தீனியம் கட்டுப்படுத்துகிறது.

கூதளம் ஒரு கொடி. எங்கே எந்தக் கொம்பு நடப்பட்டாலும் அங்கே பற்றிக்கொண்டு மேலே ஏறும். ஏறுமாடங்கள் குடில்கள் கட்டுவதில் பெரிய சவாலே கூதளம் ஏறிப்படர்வதுதான். ஆனால் அதிக உயரம் ஏறாது. அதிகபட்சம் ஆள் அளவுக்கு. ஆனால் இலை தழைத்து மூடும்.

இந்த இயல்பில் இருந்தே குமரிமாவட்டத்தில் ‘கூதறப்பய’ என்ற வசை உள்ளது. ஒட்டிக்கொண்டு மேலேறி, நச்சி வாழ்பவன் என்று பொருள்.

இந்த இயல்புடன் கூதளம் ஆடிய மலை என்ற சொல்லாட்சியை இணைத்தால் வருவது அந்த முடவனின் மன நிலையின் பிரம்மாண்டமான சித்திரம். மலையுச்சித் தேனை நோக்கி அவன் மனம் மலைக்காடெங்கும் கூதளம் மேலெழத் தவிப்பதுபோலத் தவிக்கிறது போலும்.

ஜெ

முந்தைய கட்டுரைசந்திரசேகரர் – கடைசியாக சில கடிதங்கள்
அடுத்த கட்டுரைதெய்வத்தின் முகங்கள்