வாசலில்…

நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்… எனக்கு இலக்கிய அறிவு என்பது முற்றிலும் கிடையாது, எந்த இலக்கியங்களையும் நான் முழுமையாகப் படித்த்து இல்லை. எனக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை நீங்கள் யார் என்று கூடத் தெரியாது. ஆனால் வரலாற்று சம்பவங்கள், நிகழ்வுகள் மீது எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். சிறு வயதில் சமூக அறிவியல் பாடத்தைப் பின்னாலிருந்து முன் பக்கம் வரை படிப்பேன்.

இணைய தேடுதலில் கிடைத்த, தங்களின் இந்தியப் பயணம் முழு கட்டுரை என்னை வெகுவாக பாதித்தது… உங்கள் விளக்கமும், அதை சார்ந்த குறிப்புகளும், உரைநடையும் என்னைக் கவர்ந்தது. வெவ்வேறு மனிதர்கள், வேறுபட்ட கலாச்சாரங்கள்… இது என் தேசம், என் மூதாதையர் பிறந்த மண் என கூறும் போது உடல் சிலிர்க்கிறது. எனக்குள் அது ஒரு மன மாற்றத்தையும் கொண்டு வந்து உள்ளது…

உங்களின் பயண அனுபவம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் என் போன்ற கத்துக்குட்டிகளுக்கு… மனதுக்குள் நிறைய கேள்விகள், நிறைய குழப்பங்கள்… ஏதோ மாற்றம் எனக்குள்… (நிச்சயம் காதலினால் அல்ல!!! உங்கள் எழுத்தினால்) ஆனால் இந்த மாற்றம் பிடித்துள்ளது… நான் எதை வாசிக்க வேண்டும் எதை விட வேண்டும் என்று தெரியவில்லை… சிறு குழந்தை கையில் கிடைக்கும் எல்லா மிட்டாய்களையும் ஒன்றாக,ஒரே நேரத்தில் சுவைப்பது போல் அனைத்தையும் சுவைக்க ஆசையாக உள்ளது… இது சரியா???? நேரம் இருப்பின் பதில் அளிக்கவும்…

அன்புடன்
முகமது யாசின்

அன்புள்ள யாசீன்,

எந்தத் துறையாக இருந்தாலும் கற்றுக்கொள்வதுதான் மனிதனின் பேரின்பம். அது சாக்ரடீஸ் சொன்ன ஒரு பதில். அதிலும் ஒரு புதிய துறையைக் கண்டடைவதென்பது மிகப்பெரிய அனுபவம். என் அனுபவத்தில் இலக்கியமோ கலையோ அந்த முதல் திறப்பு நிகழும்போது உள்ள பெரும் பரவசம் பிறகு வருவதே இல்லை. வாழ்த்துக்கள்

உங்கள் வாசிப்புலகைக் ‘கன்னாபின்னாவென்று’ வைத்துக்கொள்வதே நல்லது. மாடுமேய்க்கும் பையனாக வாழ்ந்த இளம்பருவத்தில் நானெல்லாம் என்னென்னவோ சாப்பிடுவேன். அன்னாசிச்செடியின் குருத்து, புறாமுட்டை… அதுதான் இளமைப்பருவப் பசியும் ருசியும். அந்த வேகம் நாக்கிலும் வயிற்றிலும் மனதிலும் இருக்கவேண்டும்

அதேபோல வாசியுங்கள்.எல்லாவற்றையும் வாசியுங்கள். ஆனால் ஒரு விதி, உங்களுக்கு வாசிப்பில் ஒரு சவாலை அளிக்காத நூலை வாசிக்காதீர்கள். அடுத்த முறை அதேமாதிரி நூலைத் தேடிச்செல்லாதீர்கள்.

உங்கள் ரசனைக்கேற்ற பயணநூல்கள் பல உள்ளன. உதாரணமாக காகா காலேல்கர் எழுதிய ஜீவன்தாரா. இந்தியாவின் எல்லா நதிகளிலும் நீராடுவதற்காகச் சென்ற அனுபவங்களின் பதிவு. ராகுல சாங்கிருத்தியாயனின் ஊர்சுற்றி புராணம் அதேவகையான இன்னொரு நூல்

இலக்கியமா வரலாறா எது உங்களை அதிகம் கவர்ந்து உள்ளே கொண்டுபோகிறது என்று நீங்களே கவனியுங்கள். ஒரு கட்டத்தில் அங்கே உங்களை திசைதிருப்பிக்கொள்ளுங்கள். அது உங்கள் பாதை

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கியவட்டம் நாராயணன்
அடுத்த கட்டுரைபாண்டிச்சேரியில் காந்தி உரை – ஏப்ரல் 9