அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்கள் துபாய் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள்.
திரு சந்திரசேகர சரஸ்வதி மற்றும் திரு ஈவே ராமசாமி நாயக்கர் அவர்கள் இருவரையும் பல வேறு தளங்களில் இருந்து பார்க்கலாம் ஆராயலாம் என்றிருந்தாலும் நீங்கள் ஒரு சில மனித சமுதாய பார்வைத் தளங்களில் வைத்து இருவரையும் விமர்சனம் செய்திருந்தீர்கள். என்னைப் பொறுத்தவரையில் ஏற்புடையதாகவே இருந்தது. ஆனால், பெரியார் வகுத்த வழி சற்று இழிவு நிலை அடைந்து இன்று விமர்சனம் என்றாலே அது வசைபாடுவது என்றாகிவிட்டபடியால் எவராலும் தங்கள் சுய எண்ணங்களுக்கு வெளியில் நின்று ஒரு அறிவார்ந்த ஆராய்ச்சி செய்யமுடிவதில்லை. இதன் அடிப்படையில் பார்த்தால் தங்களுக்கு வரும் கடுமையான எதிர் தனிமனித விமர்சனங்களைப் புரிந்துகொள்ளமுடியம்.
இந்த இருவரும் ஒரு சிலரைப் பெருமளவு சுயவாழ்வில் பாதித்திருக்கிறார்கள். தங்களுடைய சமுதாய இழிநிலையை எதிர்கும் மனபலத்தை அளித்து சிலரையும் சலனத்தில் சிக்குண்ட போது வழிகாட்டி சிலரையும் அவரவர் தேடலில் தெளிவை ஏற்படுத்தி சிலரையும் அவர்கள் பாதித்திருக்கிரார்கள். அதனால் மனதளவில் கடமைப்பட்டவர்களாக நினைப்பதால் எந்த விமர்சனத்தையும் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். அவர்களால் நீங்கள் எப்படி உங்கள் தந்தையை அறிவார்த்தமாக எல்லா விஷயங்களிலும் ஏற்காமல் சிலபல காரணங்களுக்காக மதிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியாது. இதில் ஒரு நுண்ணிய செய்தி என்னவென்றால் எவரும் முழுமையாக ஏற்புடைய மனிதரில்லை என்பதே. எல்லோரும் குறை நிறைகளுடனே காணப்படுகிறார்கள். நம் ஆதர்சப் பெரியவர்கள் உட்பட.
இந்த சந்திர சேகரர் போன்றவர்களிடத்தில் அற்புதங்கள் என்ற ஒரு அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பரிமாணமும் இருக்கிறது. நாம் அனுபவித்திருக்கிறோமா என்பதுதான் வேறுவிஷயம். ஆனால் சில விஷயங்கள் இயற்கைக்கு அப்பால் செயல் நடக்கிறது. நான் பல அற்புதங்களை சாட்சியாகப் பார்த்திருக்கிறேன். சந்திரசேகரரிடத்தில் அல்ல ஆனால் வேறு சிலரிடத்தில். அந்த அற்புதங்கள் அவர்களின் உபாதைகளுக்கு நிரந்தரத் தீர்வு தரும்பொழுது அவர்களால் அதை ஏற்காமல் இருக்கமுடிவதில்லை. பின் அவர்களால் விமர்சனத்தில் ஈடுபடுவது கடினமாகிறது.
ஆனால் பிராமணர் அல்லாத எவரேனும் மடத்திற்குச் சென்றால் அங்கு நிச்சியம் ஆன்மீகமில்லை என்பதை உணரலாம். இறைவனால் நாம் வஞ்சிக்கப்பட்டவர்கள் போல் நினைக்கவைத்துவிடுவார்கள். இதுதான் நிதர்சனம். நான் அனுபவித்திருக்கிறேன். ஏனெனில் நான் பிராமணன் அல்ல. ஏன் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் கூத்தைப் பார்த்தால் இறைவனேயில்லை என்று எதிர் வினா வரலாம். ஆனால் ஒரு தனிமனிதக் கட்டுபாட்டில் இருக்கும் இடத்திற்கும்பொதுக் கட்டுபாட்டில் இருக்கும் இடத்திற்கும் வேற்பாடு இருக்கிறது.
இதில் சந்திரசேகரரைப் பாராட்ட வேண்டியது என்னவென்றால் இந்தப் பிரிவனை சிந்தனையை அவர் வெளிப்படையாகவே முன்வைத்தார் என்பதுதான். சமூக நீதியைத் தேடி அங்கு சென்றால் கோபம் மட்டுமே மிஞ்சும். ஆனால் ஆன்மீக நோக்குடன் அவரை அணுகினால் நிச்சியம் வழிகிடைக்கும். சமூக நீதி தேடும் மனநிலையிலிருந்து ஆன்மீகத் தேடலில் உள்ளவரைப் பார்க்கக்கூடாது. இதை உணராமல் விவாதித்தால் கருத்துப் பரிமாற்றம் நடக்காது சண்டைதான் வரும்.
இந்தப் பிரிவினையை இந்திய சனாதன தர்ம சிந்தனை தளத்திலிருந்து பார்த்தால் ஒரு செய்தி உண்டு. இந்த தளத்தில் மறுபிறவி என்பது ஒரு அடிப்படைக் கருத்து. இந்த மறுபிறப்பு ஒவ்வொருமுறையும் உயர் உயிர்களை நோக்கி மட்டுமில்லாமல் நம் சிந்தனை செயல்களுக்கேற்ப உயர்ந்த தாழ்ந்த உயிர்களாகப் பிறக்கிறோம். அதிலும் வெவ்வேறு குடியில் குலத்தில் குடும்பத்தில் நாட்டில் கலாச்சாரத்தில் மதத்தில் பிறக்கிறோம். அதுமட்டுமல்லாமல் வெவ்வேறு அறிவு மன உடல் நிலைகளுடனும் ஆற்றலுடனும் பிறக்கிறோம். இது ஆன்ம வளர்ச்சியை முன்வைத்துக் கர்ம பலன்களுக்கேற்ப நடக்கிறது. அதனால் பேதங்களைப் பார்க்காமல் நடப்பவனே முன்செல்கிறான் என்றும் அப்படி அல்லாமல் செயல்பட்டால் அதற்கேற்ப பிரதிபலனை அனுபவிக்கவேண்டும் என்றும் ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எல்லோரும் ஆன்மீக நிலையிலிருந்து ஆராயப்போவதில்லை. செயல்படபோவதில்லை.
இந்த சிந்தனைத் தளத்தை பெரியாரியர்கள் ஏற்கமாட்டார்கள். அது அவர்களது விருப்பம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே பிறவிதான் என்றால் பிறப்பால் வேறுபடுத்தக்கூடாது என்றால் பல கடந்த கால சமூக அவலங்களுக்காக இன்று எதேச்சையாக ஒருசில சாதியில் பிறந்தமையால் ஒரு சாராரை எதிர்ப்பதும் துன்புறுத்துவதும் எப்படி நியாயப்படுத்தமுடியும். சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்போரை மேம்படுத்தவேண்டும்தான். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்காக வழிவிட வேண்டியதுதான். அதுதான் இந்திய தர்ம சிந்தனையும். ஆனால் அதற்கான வழி யாரையும் அவமதிக்காமல் துன்புறுத்தாமல் இருத்தல்வேண்டும்.
இதில் உண்மை என்னவென்றால் மனித சமூகத்தில் ஒவ்வருவரும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டிப் பிறரைவிட நாம் சிறந்தவர் என்று காட்டி அதானால் சுயலாபம் அடைய நினைக்கிறோம். அதே வேளையில் இந்த அடைந்த நிலைமை நீண்டு இருக்கப் பிறரைத் தாழ்த்தி வஞ்சித்தால்தான் அது நடக்கும். அதற்கான காரணத்தை எக்கணமும் தேடுகிறோம். அது சாதி வேற்றுமை அரசியல் அதிகாரம் பொருள் வசதி அந்தஸ்து சமூக நிலைமை சமூக வட்டம் சமூகக்கூட்டத்தின் வலிமை இன்னும் எத்தனையோ. ஒரு காலத்தில் மதக்கோட்பாடுகளைக் காட்டி வேறுபடுத்தினார்கள். இன்று அதே பிரிவினைகளை சமூகத்தில் காண்கிறோம் காரணங்கள்தான் வேறு. எந்தத் தனி மனிதனும் ஆதிக்க உணர்வுடன்தான் சமூகத்தில் செயல்படுவான். தன்னல விரும்பியான மனிதனின் இயல்பு அதுவாகத்தான் இருக்கமுடியும். அந்த எண்ணம் சூழலுக்கேற்ப வீரியங்கொண்டு வெளிப்படும். இந்த சுயநலப் பிரிவினை ஆதிக்க இயல்பை ஏதோவொரு கோட்பாடைச் சொல்லி அவரவர் கூட்டத்தில் பயன்படுத்திக்கொண்டார்கள் பெரியாரும் பெரியவாளும்.
அன்புடன்
திருச்சி வே. விஜயகிருஷ்ணன்