தூக்க நேர்ச்சை

பங்குனி மாதம் குமரிமாவட்டத்தில் பகவதிக்குரியது.சித்திரை தொடங்கியதும் பெருந்தெய்வங்களின் விழாக்கள் ஆரம்பிக்கும். பகவதிகள் பத்தாம் நூற்றாண்டு முதலே சாக்தத்தில் இணைந்து சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டாலும் சடங்குகளிலும் கொண்டாட்டங்களிலும் இன்றும் நாட்டார் தெய்வங்கள்தான்.

மார்ச் 24 ஆம் தேதி நண்பர் கெ.பி வினோத் ஊருக்குவந்திருந்தார். அவருடைய மனைவின் ஊர் இட்டகவேலி. அங்கிருந்து நடைதூரத்தில்தான் நான் பிறந்த ஊரான திருவரம்பு. இட்டகவேலி முடிப்புரை நீலகேசி அம்மன் கோயிலுக்கு முப்பதாண்டுகளுக்கு முன்னால் நான் திருவிழாவுக்குச் சென்றிருக்கிறேன். அதன்பின் சென்றதில்லை. வருகிறீர்களா என்றார். அவருடன் மாலை ஐந்துமணிக்கு கிளம்பி இட்டகவேலி சென்றேன்

நீலகேசி அம்மன் எனக்கும் ஒருவகையில் குலதெய்வம்தான். நீலகேசி அம்மனின் பல வடிவங்கள் குமரிமாவட்டத்தில் பல குடும்பங்களில் வெவ்வேறு கதைகளுடன் வழிபடப்படுகின்றன. இட்டகவேலி நீலகேசி அம்மன் இரண்டு நாயர்குடும்பங்களுக்குச் சொந்தமான குடும்பக் கோயிலாக இருந்தது. பெரிங்கோட்டுவீடு என்ற வீட்டைச்சேர்ந்த ஓர் இளம்பெண் மாற்றாந்தாய் கொடுமையால் ஒரு குளத்தில் விழுந்து உயிர்விட்டாள் என்றும், அந்தக்குளத்தின் கரையிலேயே அவளை நிறுவி நீலகேசியம்மனாக வழிபட ஆரம்பித்தார்கள் என்பதும் கதை.

அந்த நாயர் குடும்பங்கள் இன்றும் உள்ளன. இந்த நிகழ்ச்சி பதினேழாம்நூற்றாண்டின் இறுதியில் நடந்திருக்கலாம். சிறிய குடும்பக் கோயிலாக இருந்த இடம் இன்று பெரிய கோயிலாக மாறியிருக்கிறது. எல்லா சாதியினரும் கூடும் பெரிய திருவிழாவாக அது மாறியும் விட்டது. கோயிலுக்கு முடிப்புரை [கூந்தல்வீடு] என்று பெயர். ஏனென்றால் கோயிலில் அம்மனுக்கு சிலை கிடையாது. அம்மனின் கூந்தல் என்று மயிற்பீலிக்கற்றைகள்தான் வைத்து வழிபடப்படுகின்றன.

இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயில் புதியதனாலும் நீலகேசி என்ற தெய்வம் மிகத்தொன்மையானது. பொதுவாக அகாலமரணமடைந்த பெண்ணை வழிபட ஆரம்பித்து அந்தப் பெண் தெய்வத்தை ஒருகட்டத்தில் நீலகேசி என்பார்கள். தென் கேரளத்தில் நீலகேசி அம்மன் பல இடங்களில் வழிபடப்படுகிறாள். பெரும்பாலான இடங்களில் முடி தான் வழிபடப்படுகிறது. முடி பல்வேறுபொருட்களால் செய்யப்பட்டதாக இருக்கும்.

நீலகேசி என்ற அம்மன் ஒரு வனதேவதையாக இருக்கலாம். நீலகேசி என்பது காட்டை வர்ணிக்கும் ஒரு சொல். காடு மலையின் நீலக்கூந்தல் அல்லவா? சமண, பௌத்த மதங்களில் கேசி என்றபெயர் அதிகம் காணக்கிடைக்கிறது. குண்டலகேசி,நீலகேசி போன்றவை தமிழின் காப்பியமரபில் பெயர்கள். சமணமும் பௌத்தமும் கூந்தலை மழிக்கும் மதங்கள் – ஆணுக்கும் பெண்ணுக்கும். அவற்றில் கேசிகளுக்கு என்ன வேலை?

கெ.பி.வினோத்

கேசி என்று முடியும் பல பகவதிகள் கேரளம் முழுக்க உள்ளன. இந்த தெய்வங்களின் வரலாற்றை ஊகத்தில் இருந்தே சொல்லமுடியும். இவை புராதன பழங்குடித்தெய்வங்கள். காட்டை மாபெரும் கூந்தல் எனக்கண்ட மகத்தான பழங்குடிக் கற்பனையில் உதித்தவை. நெடுங்காலம் அவை புராதன இந்துமதத்தின் தெய்வங்களாக இருந்திருக்கலாம். பின்னர் கிமு இரண்டாம் நூற்றாண்டுவாக்கில் இங்கே சமணமும் பௌத்தமும் பரவியபோது அவை இந்தத் தொல்தெய்வங்களையும் உள்ளிழுத்துக்கொண்டன.. அவ்வாறாக இவை சமண, பௌத்த இலக்கியங்களுக்குள் நுழைந்தன.

சமணர்களும் பௌத்தர்களும் இந்த நாட்டார் தெய்வங்களைப் பயன்படுத்திய விதம் கவனிக்கத்தக்கது. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசி காப்பியத்தின் கதையே சிறந்த உதாரணம். இதில் வரும் நீலகேசியின் கதை புராதனமான ஒரு செவிவழிக்கதை. ஒரு வணிகனால் கொல்லப்பட்ட அவள் மனைவி பேயுருவம் கொண்டு அவனைக் கொன்றாள். அதன்பின்னும் கோபம் தீராமல் அவள் பலரைப் பழிவாங்குகிறாள். அவள் ஒரு சமண முனிவரைக் கொல்லப்போக அவர் அவளை நல்வழிப்படுத்துகிறார்

நீலகேசி அவரிடமிருந்து சமண மெய்ஞானத்தைக் கற்றுக்கொண்டு ஊர் ஊராகச் சென்று பிற சமயத்தவர்களை எல்லாம் வென்று சமண மதத்தை நிலைநாட்டுகிறாள். நீலகேசி ஒரு நாட்டார்கதையில் ஆரம்பித்து சமணத்தின் தீவிரமான தத்துவ விவாதத்துக்குள் செல்கிறது. அதாவது ஒருநாட்டார்தெய்வத்தின் நாவில் சமணசிந்தனைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மக்கள் அறிந்த ஒரு தெய்வம் வந்து அவர்களுக்குப் புதிய சிந்தனைகளைச் சொல்லிக்கொடுக்கிறது.

சமணமும் பௌத்தமும் அழிந்தபின் கேசிகள் மீண்டும் இந்துப்பெருமரபுக்குள் வந்தனர். சாக்த தெய்வங்களானார்கள். அப்படியே நீடிக்கிறார்கள். ஆனால் அவர்களின் முன்வடிவங்களில் இருந்த எல்லா வழிபாடுகளும் இன்றும் தொடர்கின்றன. அதில் முக்கியமானது தூக்கம் என்னும் வழிபாடு

தூக்கம் விசித்திரமான ஒரு சடங்கு. காளைவண்டி நுகம் போன்ற ஒரு பெரிய சட்டம். அது ஒரு நீண்ட தடியில் பொருத்தப்பட்டு ஒரு வண்டியில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நுகத்தில் இருபக்கமும் இருவரைக் கயிறால் கட்டி வைத்திருப்பார்கள். அவர்களின் கைகளில் ஒருவயதுக்குள் உள்ள குழந்தைகள் கொடுக்கப்படும். தடியின் மறுபக்கத்தை அழுத்திக் கீழே கொண்டுவரும்போது நுகப்பகுதி ஒருபனைமர உயரத்துக்கு மேலே செல்லும். அப்படியே கோயிலை ஒருமுறை சுற்றிவருவார்கள்

இது ஒரு வேண்டுதல். குழந்தைமரணம் அதிகமாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. இது ஒருவகை செயற்கை மரணத்தை அம்மன் முன் நடித்துக்காட்டுவதுதான். கண்ணுக்குத்தெரியாத கரம் வானில் இருந்து வந்து குழந்தையை மேலே தூக்கி கொண்டுசெல்கிறது– கோழிக்குஞ்சைப் பருந்து கொண்டுசெல்வது போல. குழ்ந்தை திரும்பி வந்துவிடுகிறது. மரணத்தை ஏமாற்றியாகிவிட்டது.

தன்னை வருத்திக்கொண்டு கடவுளின் கோபத்தைக் குறைக்கும் சடங்குகள் இல்லாத மதங்களே உலகில் இல்லை. அதன் வேர்கள் பழங்குடி நம்பிக்கைகளில் உள்ளன. தூக்கச்சடங்கு அதில் ஒன்று. ஆகவேதான் இன்று அடித்தள மக்கள்தான் அதிகமாக இதில் பங்குகொள்கிறார்கள்.

முடிப்புரை முன்னால் உள்ள வயல்வெளியில் பச்சைப்பந்தல் என்னும் பந்தலில் அம்மனைக் கொண்டுவந்து பிரதிஷ்டைசெய்து அதைச்சுற்றி இந்த வழிபாட்டை நடத்துகிறர்கள். கூட்டம் ஜேஜே என்றிருந்தது. காலைமுதல் இரவு வரை நிகழ்ச்சி. நூற்றைம்பது குழந்தைகள் வேண்டுதலுக்கிருந்தன. வரிசைப்படி பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருந்தார்கள். தூக்கவண்டியில் கட்டப்படுபவர்கள் நாற்பத்தோருநாள் விரதமிருந்துதான் அதைச்செய்யவேண்டும். நீலக் கச்சை கட்டி விபூதிகுங்குமத்துடன் காட்சியளித்தனர்.

தூக்கப்படும் குழந்தைகள் கதறியழுது காலையும் கையையும் ஆட்டி ரகளைசெய்தனர். வியர்த்த உடலுடன் திமிறும் குழந்தையை வெறும் கையில் ஏந்திக்கொண்டு அந்தரத்தில் செல்வது திகிலூட்டும் அனுபவம்தான். ஆனால் தூக்குபவர்கள் பலர் அந்தரத்தில் குழந்தையை முத்தமிட்டுக் கொஞ்சியபடியே செல்வதைக் காணமுடிந்தது. மரணத்தின் பேரன்பு!

கூட்டம் முழுக்க வட்டார மனிதர்கள் . பௌடர் போட்ட நாட்டுப்புற அக்காக்கள். சிரிக்கும் கன்னிகள். குறுகுறுப்பான சின்னப்பெண்கள். சட்டைபோடாத இளைஞர்கள். போதைகனக்கும் கண்களுடன் பேர்வழிகள். சின்னவயதில் பார்த்து மறந்த முகங்களைப் போலப் பல. வெள்ளை ஆடை அணிந்த அம்மச்சிகளைப்பார்த்தபோது இன்னும் இருபது வருடங்களில் இந்த வம்சமே அற்றுப்போய்விடுமே என நினைத்துக்கொண்டேன்.

சுடச்சுட இனிப்புச்சேவு வாங்கிச் சாப்பிட்டபின் திரும்பிவந்தேன். ஒருநாள் கழித்து கொல்லங்கோடு தூக்கம். திருவனந்தபுரத்தில் இருந்து மதுபால் வந்திருந்தார். நான் எழுதி அவர் இயக்கப்போகும் ஒழிமுறி என்ற படம் ஏப்ரல் 12 முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. அதற்காகக் கொல்லங்கோடு தூக்கத்தை படம்பிடித்தார். இட்டகவேலி தூக்கத்தை விடப் பத்து மடங்கு பெரிய விழா கொல்லங்கோடு. இங்கே நுகத்தில் நான்குபேர் நான்கு குழந்தைகள். மொத்தம் ஆயிரத்தைநூறு குழந்தைகள் நேர்ச்சைசெய்யப்பட்டிருந்தன. காலைமுதல் மறுநாள் காலைவரை ஆகும் என்றார்கள்

பெரும்கூட்டம் கேரளத்தின் மலைப்பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். கேரளத்தின் இப்பகுதி மக்களைப்போல வசீகரமான கரியநிறம் கொண்டவர்களைப் பார்க்கமுடியாது. பல பெண்கள் பேரழகிகள். தூக்கம் முழுக்கமுழுக்கக் கொதிக்கும் வெயிலில் நடைபெற்றது. மலையாளத்திலும் தமிழிலும் அறிவிப்புகள் ஒலித்துக்கொண்டே இருந்தன

கொல்லங்கோடு தூக்கத்தின் சிறப்பம்சம் தூக்கக்கஞ்சி என்னும் உணவு. புழுங்கலரிசிக் கஞ்சி. ஆனால் கஞ்சியுடன் காய்ச்சில் போன்ற கிழங்குகளையும் காய்கறிகளையும் போட்டுக் கிண்டியிருப்பார்கள். விசித்திரமான சுவை கொண்ட கஞ்சி. இந்தத் திருவிழாவின் அடித்தளச் சமூகச் சார்புக்கு இதுவே ஆதாரம். எளிய மக்களின் விருந்து ஆக இருந்திருக்கலாம். கொதிக்கக் கொதிக்க எரிவெயிலில் குடித்த கஞ்சி அபூர்வமான சுவையுடன் இருந்தது

தென்திருவிதாங்கூர் மண்ணின் இறந்தகாலத்தின் சுவை. மரணத்தின், அதை வெல்லும் வாழ்க்கையின் மாறாத சுவை

http://www.youtube.com/watch?v=n9RpIju848A

[கெ.பி.வினோத் செல்பேசியில் எடுத்தது]

இட்டகவேலி

http://www.youtube.com/watch?v=LI-T-cSH3ik

கொல்லங்கோடு தூக்கம்

http://www.youtube.com/watch?v=f0Am9buRJms

முந்தைய கட்டுரைதுபாய் நிகழ்ச்சி அழைப்பிதழ்
அடுத்த கட்டுரைசந்திரசேகரர் – கடைசியாக சில கடிதங்கள்