ஒளியைவிட வேகமாகச்செல்லும் துகளான நியூட்ரினோ பற்றிய பரபரப்பான அறிக்கையை OPERA என்ற குழு சென்ற ஆண்டு வெளியிட்டது. உலகம் முழுக்க பெரும் பரபரப்பை உருவாக்கியது இது. ஐன்ஸ்டீனின் பிரபஞ்ச உருவகமே காலாவதியாகப்போகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.
இப்போது அந்தக் கணக்கிடலில் பெரிய பிழைகள் நிகழ்ந்துவிட்டன என்றும், அதைக் கருத்தில்கொள்ளாமல் அவசரமாக அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டார்கள் என்றும் ஏறத்தாழ நிரூபணமாகிவிட்டது. இது நான் ஏற்கனவே ஓரளவு ஐயப்பட்டதுதான் – என் கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன். குளிர் அணுஇணைவு பற்றிய செய்தியும் இப்படித்தான் ஆகியது என்பதை நினைவுகூர்ந்திருந்தேன்.
இப்போது குழுவின் நிர்வாகிகள் பிழைக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஆய்வாளார்கள் நடுவே உள்ள மோதல்தான் ராஜினாமாவுக்குக் காரணம் என்கிறார்கள். உண்மை தெரியவில்லை.
இது ஒரு மோசடியாக இருக்காதென்றே நினைக்கிறேன். ஆய்வின் பிழை மட்டுமே. இத்தகைய ஆய்வுகள் பெரும் நிதியாதாரம் தேவையானவை. அவற்றைத் திரட்ட ஒரு வகை அதிரடி விளம்பரம் தேவைப்படுகிறது போலும்.