சுப.உதயகுமார் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்த புதிதில் வீட்டுக்கு வந்து என்னை அறிமுகம் செய்துகொண்ட நண்பர். அன்று முதல் அவரது நட்பு அவ்வப்போதான சந்திப்புகள் வழியாக நீடிக்கவே செய்கிறது. கூடங்குளத்தில் அவர் இருந்துவரும் உண்ணாவிரதம் இப்போது எட்டாவது நாளாக நீடிக்கிறது. அவரை எனக்குத்தெரியும். அவர் அதை சமரசமில்லாத தீவிரத்துடன் மட்டுமே செய்வார். அது மனம் கலங்கச்செய்கிறது.
ஒரு அரசியல் தொண்டரின் உண்ணாவிரதம் சகமனித மனங்களைத் தொடும் ஆற்றலை இழந்துவிட்டதா என்னும் ஐயம் அண்ணா அசாரே உண்ணாவிரதத்தைக் கிண்டல் செய்தவர்களின் இணைய பிதற்றல்களை வாசித்தபோதே ஏற்பட்டது. மேலும் அது வலுப்பெறுகிறது. எதையும் அரட்டைக்கொண்டாட்டமாக ஆக்கிக்கொண்டிருக்கும் தலைமுறைக்கு முன்னால் உதயகுமார் உயிரை முன்வைக்கிறாரா?
இந்தநிமிடம் வரை நம்முடைய முக்கியமான அதிகார பீடங்கள் எவையும் அவரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இதுவரை அவரைநோக்கி ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக்குரல் வரவில்லை. மிரட்டல்களும் அவதூறுகளும் மட்டுமே வந்துகொண்டிருக்கின்றன. ஒரு தனி குடிமகனின் உயிருக்குக்கூட ஆட்சியாளர்களே பொறுப்பு என நினைக்கப்பட்ட காலம் போய்விட்டதுபோல.
இந்தச் சூழலில் உதயகுமார் இருக்கும் உண்ணாவிரதம் பொருளிழந்து போகிறது. காந்தியப் போராட்டம் என்பது மனித ஆன்மாக்களுடன் பேசமுனையும் போராட்டம். உயிர்துறப்பதன் மூலம் ஆகப்போவது ஒன்றும் இல்லை.
இன்னும் வலுவாக சமான மனங்களைத் திரட்டிக்கொண்டு, இன்னும் பிரச்சார ஆற்றலை தொகுத்துக்கொண்டு இன்னும் வலுவாக இந்தப் போராட்டத்தை மீட்டெடுக்கலாம். எள்ளி நகையாடும் ஆன்மாவற்ற கும்பலுக்கு முன்னால் அவர் கிடக்கும் அந்தக்கோலம் நெஞ்சைக் கனக்கச்செய்கிறது.