கூடங்குளம் – கடிதங்கள்

“கூடங்குளம்” என்ற நேற்றைய பதிவில், வழக்கத்திற்கு மாறாக, சிறிது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உங்களைக் காண முடிந்தது.

புனைவு எழுத்துக்களில் பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படும் அந்த நிலையை உங்களின் மற்ற இடுகைகளில் இது வரை நான் இந்த அளவு கண்டதில்லை.

பொதுப்பிரச்சினையும் புரிதலும்” என்று உங்களுக்காகவும், எங்களுக்காகவும் கொடுத்த விளக்கங்களைத் தாண்டி இந்த உணர்ச்சி வெளிப்பாடு ஏற்படுமெனின்,

“கூடங்குளம்” பற்றிய உங்களின் மனச்சோர்வு நன்றாகப் புரிகிறது.

எனினும், உங்களின் புரிதலை, எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இதை எழுதுகிறேன். இதற்கான பதிலைத் தனிப்பட்ட முறையிலோ, அல்லது உங்கள் வலைத்தளத்திலோ நீங்கள் கூற வேண்டியதில்லை என்ற புரிதலைத் தாண்டியே இதைக் கேட்கிறேன்.

ஒன்று, “போராடும் தரப்பு சோர்வில்லாமல் இன்னும் தங்களைத் திரட்டிக்கொள்ளமுடியும். காந்திய வழியிலான எந்தப்போராட்டமும் கடைசியில் அதன் இலக்கை அடையத்தான் செய்யும்” என்று சொல்லியிருக்கிறீர்கள்.

ஊடகங்கள் கொடுக்கும் பிம்பங்களையும், காவல் துறையின் அடக்குமுறைகளையும் தாங்கி இது வரை காந்திய வழியில் இவர்கள் போராடியே வருகிறார்கள். எனினும், தற்போதய நிலவரப்படி “மேலிடங்கள்” ஒப்புக் கொண்டிருப்பதாலும், மற்ற முதலாளிகள் இந்த அணுமின் நிலையத்தைக் கோருவதாலும், சில மாதங்களில் இந்த நிலையம் நிலுவையில் வந்து விடலாம்.

அதற்கான சாத்தியங்களே தற்போது அதிகம் என்றும் வெட்கத்தோடு நான் யோசிக்க வேண்டி உள்ளது. காலவரையற்ற போராட்டமல்ல இது. எனவே, “இலக்கு” என்பது அடுத்த மாதமாகக் கூட இருக்கலாம். மற்ற போராட்ட வழிகளைக் கையாள வேண்டும் என்று நான் கூறவில்லை. கால நேரம் தாண்டிய கொள்கைப் போராட்டம் அல்ல இது. காலத்தின் முன் ஓடிச் சென்று ஒன்றை நடக்காமல் செய்ய வேண்டிய அடிப்படை உரிமைப் போராட்டம், அல்லவா?

இந்தக் கூறுகளை உள்ளிடும் பொழுது “காந்தியப்போராட்டங்கள்” செல்லுபடி ஆகாத இடமாக இந்தியாவும், தமிழகமும் மாறிக் கொண்டு இருக்கின்றனவா? உண்மை என்னவாக இருக்குமோ என்று அச்சமாகவும் உள்ளது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

இரண்டு, தான் வசிக்கும் சூழ்நிலை, சுவாசிக்கும் காற்று, பருகும் நீர் போன்ற அடிப்படை எதிர்பார்ப்புகள் கூட இன்றைய மக்களுக்குப் போராடிப் பெற வேண்டிய ஒன்றாகி விட்டதா? மனிதமற்ற அரசாங்கம் மற்றும் முதலாளிகள், “லாபவெறி” கொண்ட மத்திய வர்க்கம், (வெற்றியோ, தோல்வியோ) போராடியே எதையும் கேட்க வேண்டிய மற்றவர்கள் என்ற பாகுபாடுதான் இன்றைய நிலையா? மராத்தான் பந்தயங்கள் ஓடும் போது, “இனி அவ்ளோதான்” என்ற ஒரு நிலை வரும். அது போன்ற ஒரு நிலையாக இதை எடுத்துக் கொண்டு தொடர்வதா, அல்லது உண்மையிலேயே ஒரு “polarized, fragmented society”-யாக நாம் மாறி விட்டோமா? இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

உங்கள் நேரத்திற்கு நன்றி.

டாக்டர் பாபுசுந்தரம்

அன்புள்ள பாபு சுந்தரம்,

எனக்குத் தோன்றியது ஓர் உடனடி மனச்சோர்வுதான். வெயிலில் அலைந்ததனாலும் இருக்கலாம்.

காந்தியப்போராட்டம் நல்ல வழிமுறையா இல்லையா என்பதல்ல பிரச்சினை. ஒரே வழிமுறைதான் என்பதுதான்.

ஆகவே அதை முன்னெடுக்க வேறு வழிகளைக் கண்டறிய வேண்டியிருக்கிறது. குறிப்பாக மாற்று ஊடகங்களை.

இன்று பொதுக்கூட்டம் போன்ற ஊடகங்கள் அழிந்துவிட்டன. செய்தி ஊடகங்கள் தொழிலாக ஆகிவிட்டன. தொழில் நிறுவனங்களின் கைகளில் உள்ளன.

ஊடகம் இல்லாவிட்டால் காந்திய இயக்கம் செயல்பட முடியாது. காந்திய இயக்கம் இந்தியாவில் ஊடகங்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்பது வரலாறு. இந்தியாவில் எல்லா முக்கியமான மாநில மொழி செய்தித்தாள்களும் காந்தியவாதிகளால், காந்தியப் போராட்டத்துக்காக ஆரம்பிக்கப்பட்டவை.

ஜெ

அன்புள்ள ஜெ ,

கூடங்குளம் பற்றிய தங்கள் எழுத்து ஒரு வித ஆறுதலைத் தருகிறது. மனிதநேயமும், கொஞ்சம் அறிவும், தெளிவும் இருந்து விட்டால் வாழ்க்கையின் பல கசப்பான உண்மைகளை ரணமாய்த் தாங்கிக்கொண்டு வாழவேண்டி இருக்கிறது.

பெரும்பாலான மக்கள் தங்களுக்குப் பிரச்சனை வரும் வரை அடுத்தவரின் வலியை, துன்பத்தை ஒரு வார்த்தைக்குள் அடைத்து அதில் விலகியே கவலைப்படாமல் வாழ்கின்றனர். சேனல் நான்கின் ஈழம் பற்றிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கையில், ஒரு நண்பன் வீட்டில் ‘நல்ல நாள்ல இத ஏன் பார்க்கிற ‘ இன்னொருவர் வீட்டில் ‘ இதெல்லாம் பார்க்காத, கெட்டுப் போய்டுவ’ என்றெல்லாம் சத்தம் போட்டனர். கண்ணீருக்கும், மனிதாபிமானத்துக்கும் நாள் நட்சத்திரம் பார்க்கும் உலகமிது .

‘மூட்டு, முதுகு வலியெல்லாம் எதோ நடுத்தர, பணக்கார வர்க்கத்துக்கு மட்டும் தான் வருகிறது’ என்று நம்ப வைக்கும் உலகம். ஏழைக்கும் வருகிறது, மஞ்சத்துணியைக் கட்டிக் கொண்டு அவன் பொழப்பைப் பார்க்கிறான். சோப்பு முதல் படிக்கும் கல்லூரி சீட்டு வரை விற்பனை செய்ய கவர்ச்சி போதை விளம்பரங்களை நம்பும் (மனதுள் ரசிக்கும்) அறிவு ஜீவிகள் இது போன்ற போராட்டங்களை கேலியே பேசுவர். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. ஆனால் ஜனநாயகத்திலோ மக்கள் (காசுள்ள) எவ்வழியோ மன்னன் அவ்வழி !!.

பால்

பால்,

எப்போதும் மக்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். இந்திய சுதந்திரப்போராட்ட காலத்திலேயே ‘சொந்த சகோதரர்கள் பஞ்சத்தில் சாதல் கண்டும் சிந்தை இளகாத’வர்களாகத்தானே இருந்திருக்கிறார்கள்!

அந்த இரும்புச்சட்டையைத் தாண்டிச்சென்று அவர்களைத் தீண்டியாகவேண்டும்.

ஜெ

கூடங்குளம்

4 நாட்களாக வெறுப்பில் உள்ளேன்.

அரசியல் வாதிகள் கபடமாக நடந்தது சிறிதும் வியப்பளிக்கவில்லை.

மக்கள் ஏமாற்றி விட்டார்கள், அத்துணை ஊடகங்களும் பொய்த்தகவலைத் தர, தங்களுக்கு வசதியாக இருப்பதால் அந்தப் பொய்யைத் தெரிந்தே பலரும் உண்மை எனப் பேசத் தொடங்கியுள்ளார்கள். நடுத்தர மக்கள் மட்டும் அல்ல, மேலே கீழே எல்லோருக்கும் இது ஒரு பஞ்சப் பரதேசி பொழுது போகாமல் சர்ச்சில் போராடுகிறான் என்று எண்ணுவது அவர்கள் எண்ணவோட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்கிறது.

தன் சொத்தைத் தவிர அனைத்தையும் இன்றே தின்று தீர்த்து விடும் பசியில் உள்ள சுயநலமிகள் நிறைந்த தேசம் இது.

நாடு எக்கேடு கெட்டால் என்ன, நான் இன்று சௌக்கியமாக இருந்தால் போதும். எனக்கு பாதிப்பு நேராத வரை வெடி வெடித்தால் என்ன, கலவரம் வந்தால் என்ன, கோடிகள் கொள்ளை போனால் என்ன, அணு கசிந்தால் என்ன, நான் உறிஞ்சும் முன் நீ இயற்கையை உறிஞ்சிவிட்டால்? நானே அழித்து விடுகிறேன் என்றெண்ணும் மக்கள்.

ஜப்பானில் அணு உலை பாதித்து ஒரு வருடம் கூட ஆகவில்லை, இருந்தும் இந்தக் கண்மூடித்தனமான பேராசை.

இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த உலையின் பாதுகாப்பைத் தயார் செய்யும், சான்றிதழ் தரும், கசிவு நேர்ந்தால் முதலில் மறைக்கும், மறுக்கும் – பின்னர் வேறு யார் மீதாவது பழி போட்டுவிட்டுத் தூங்கிவிடும்.

விதி மீது பாரத்தைப் போட்டு விட்டுக் கையாலாகாத நாமும் தேடிச் சோறு தினம் தின்னும் கூட்டத்தில் கலந்து விடலாம்.

Regards,
ரமேஷ்

ரமேஷ்,

என்னுடைய எண்ணம் இவ்விஷயத்தில் குழம்பித்தான் கிடக்கிறது.ஜனநாயகமும் அரட்டைமனநிலையும் பிரிக்கமுடியாதவை.

நம்முடைய ஜனநாயகம் எதையும் அரட்டையாக ஆக்க நம்மை பயிற்றுவித்துவிட்டது போல.

ஜெ

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று தங்கள் (23 /03 /12 ) வலைத்தளத்தில் ‘கூடங்குளம்’ பிரச்சனை சம்பந்தமாக தாங்கள் மிகவும் வெறுப்புற்று, கடினமாக எழுதியதைப் படித்தேன். இருந்தபோதிலும் எவ்வளவோ பொது விசயங்களில் தங்களின் கருத்து எனக்கு மிக மிக உடன்பாடாக இருந்தாலும் இந்த விசயத்தில் என்னால் ஏற்க இயலவில்லை.உங்கள் அளவுக்கு இதற்கான காரணத்தை என்னால் எழுதமுடியாவிட்டாலும் என் உள்ளுணர்வின்படியும்,நான் இது பற்றி ஊடகங்களிலும், மற்றவர்களிடமும் தெரிந்து கொண்டபடியும் இச்சூழ்நிலையில் நமக்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்று கருதுகிறேன். அதற்காக அப்பகுதி மக்கள் மீதும், வருங்கால சந்ததிகள் மீதும் அக்கறை இல்லை என்று நினைக்கவேண்டாம்.

அன்புடன்,
அ.சேஷகிரி,
ஆழ்வார்திருநகரி.

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை – டைம்ஸ் ஆப் இண்டியாவில்
அடுத்த கட்டுரைகமலாம்பாள் சரித்திரம்