ஆதிமூலம் நினைவிதழ்

தமிழ் சிற்றிதழுலகில் சுந்தர ராமசாமிக்கு உரிய இடம் ஆதிமூலத்துக்கும் ஒருவகையில் உண்டு. எழுபதுகளில் சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவந்து அவை மட்டுமே அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு உரிய ஒரே தளம் என்ற நிலை இருந்தபோது அவற்றின் முன்னுதாரணர்களாக இருவரும் இருந்தார்கள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவரை இன்னொருவர் எப்போதும் நினைவுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.சிற்றிதழ்சார்ந்து வாசிக்க ஆரம்பிக்கும் ஒர் இளம் வாசகன் எழுபதுகளில் சந்திக்க விரும்பும் இரு ஆளுமைகளாக அவர்கள் இருந்தார்கள்.

நிமிர்வான தோற்றமும், கவனமான பேச்சுமுறையும், நிதானமான அணுகுமுறையும், எவரையுமே புறக்கணிக்காமல் சமானமாக நடத்தும் குணமும் இருவருக்கும் பொதுவாக இருந்தன. அவை அவர்கள் தங்கள் இடதுசாரிக் கடந்தகாலம் மூலம் பெற்றுக் கொண்ட பண்புகள். இருவருக்குமான பொதுக்கூறாக அவர்கள் தங்கள் உடல்நிலையை எதிர்கொண்ட விதத்தையே சொல்லலாம். சுந்தர ராமசாமி ஒரு பிறவி நோயாளி என அவரை நன்கறிந்தவர்கள் கூட அறிந்திருக்க மாட்டார்கள். ஆதிமூலம் ஐந்துவருடங்களாக ரத்தப்புற்றுநோயால் மரணம்நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் என நெருக்கமான நண்பர்கள் கூட அறியவில்லை

ஆகவேதான் சுந்தர ராமசாமியின் மரணம்போலவே சிற்றிதழாளர் நடுவே ஆதிமூலத்தின் மரணமும் அழுத்தமான வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறது. தமிழ் சிற்றிதழ்த் தடத்தில் பணியாற்றும் கணிசமானவர்களுக்கு ஆதிமூலத்துடன் நெருக்கமான தனிப்பட்ட தொடர்பு இருந்திருக்கிறது. அவரது தனிப்பட்ட பண்புநலன்கள் அவர்களை கவர்ந்திருக்கின்றன. பலருக்கு தனிவாழ்க்கையில் அவர் பெரிய உதவிகள் செய்திருக்கிறார்.ஏராளமானவர்களுக்கு அவர்களுடைய முதிராவயதில் எழுச்சியூட்டும் முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார்.

ஆதிமூலம் சிற்றிதழியக்கத்தின் முகமாக திகழ்ந்தாரென்பதை இப்போது ஒரு சிற்றிதழ்க் கண்காட்சியை பார்க்கும்போது எவரும் உணரலாம். சிற்றிதழ்களுக்கே உரிய எழுத்துருமுறை ஒன்றை அவர் உருவாக்கியளித்திருக்கிறார்– பழைய கல்வெட்டுகளில் இருந்து எடுத்துக் கொண்டது அது. பெரும்பாலான சிற்றிதழ்களில் அவரது கோட்டோவியங்களே அட்டைப்படங்களாக இருக்கின்றன. பெரும்பாலான கவிதை நூல்களில் அவரது கோட்டோவியங்கள் அட்டையையும் உள்ளையும் நிறைத்திருக்கின்றன. கைப்பணம் செலவழித்து ஒரு ஆர்வத்துடன் தொடங்கி ஒரே இதழில் நின்றுபோகும் சிறிதழ்களுக்கெல்லாம் அவர் தயங்காமல் வரைந்திருக்கிறார். அதன் மூலம் ஓர் ஓவியராக அவரது துறையில் அவருக்கு எந்த லாபமும் இல்லை. ஓவியராகப்பார்த்தால் முற்றிலும் நேரவிரயம்தான். அது சிற்றிதழியக்கம் மேல் ஆதிமூலத்துக்கு இருந்த நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் காட்டுவதாகும்

அந்தச் சிற்றிதழ் முன்னோடிக்கு சிற்றிதழ்கள் சார்பில் செய்யபப்ட்ட தகுந்த மரியாதை என ‘மணா’ தொகுத்து ‘உயிர்எழுத்து’ வெளியிட்டுள்ள ‘ஆதிமூலம்- அழியாக்கோடுகள்’ என்ற நூலை சொல்ல முடியும். ஆதிமூலத்தின் நெடுநாள் நண்பரும் தமிழ் சிற்றிதழ் இயக்கத்தின் தூண்களில் ஒருவருமான எஸ்.வி.ராஜதுரை எழுதிய அணிந்துரை ”ஆதிக்கு ஒரு மலர்வளையம்” நேர்த்தியான மொழியில் நெகிழ்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது.

‘மனப்பதிவுகள்’ என்ற தலைப்பில் ஆதிமூலத்தின் விரிவான பேட்டி, அவரது வாழ்க்கைபற்றி அவரே சொன்னவை, யூமா வாசுகியின் ரத்த உறவு நாவலுக்கு அவர் எழுதிய விமரிசனக்குறிப்பு ஆகியவை இட்ம்பெற்றுள்ளன. அத்துடன் ஈழக் கலைவிமரிசகரான த.சனாதனன், தமிழகக் கலைவிமரிசகர் இந்திரன் ஆகியோர் ஆதிமூலத்தின் கலைபற்றி எழுதிய விரிவான விளக்கக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆதிமூலத்தின் பலமுகம் கொண்ட ரசனைகள், அவரது கலைநோக்கு ஆகியவற்றைப்பற்றிய நுண்ணிய பதிவு இப்பகுதி.

இரண்டாம் பகுதி ‘உறவின் குரல்’ .பொதுவாக இத்த¨கைய அஞ்சலி நூல்களில் வராத ஒன்று. ஆதிமூலம் பற்றி அவரது சகோதரர்கள் கெ.எம்.ரங்கசாமி, பங்காரு, கெ.எம்.சோமசுந்தரம், ஆதிமூலத்தின் பிள்ளைகள் அபனீந்திரன், அபராஜிதன் மற்றும் நணப்ர்கள், அவருக்கு சிகிழ்ச்சையளித்த மருத்துவர் ஆகியோரின் நினைவுகள் பதிவாகியுள்ளன.

மூன்றாம் பகுதி தூரிகை நேசங்கள். தமிழக கலையிலக்கியச் சூழலில் இருந்து ஆதிமூலத்துடன் தொடர்புகொண்டிருந்த ஓவியர்கள் கவிஞர்கள் சிற்றிதழாளர்கள் ஆகியோரின் நினைவுகள். ஏறத்தாழ நூலின் பாதிப்பங்கு இதுவே. பெரும்பாலான நினைவுகள் நட்பின் நெகிழ்ச்சியுடனும் மதிப்புடனும் ஆத்மார்த்தமாக எழுதப்பட்டவை. கசடதபற இதழுடன் ஆதிமூலம் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். அவ்விதழை நடத்திய ஞானக்கூத்தன், சா.கந்தசாமி,ந.முத்துசாமி, கி.ஆ.சச்சிதானந்தம் போன்றவர்களின் நினைவுகள் நெருக்கமும் நட்பும் இழைபவை.

ஆனால் செழியன், கவிஞர் சுகுமாரன், கி.ராஜநாராயணன் ஆகியோரின் குறிப்புகளில் மட்டுமே ஆதிமூலத்தின் தனிப்பட்ட ஆளுமை, அவரது வசிப்பிடம் பற்றிய கலைபூர்வமான சில சித்திரங்கள் உள்ளன. மற்றவை பொதுவான அஞ்சலிக்குறிப்புகள். இத்தகைய ஒரு நூலில், இத்தனை படைப்பாளிகள் பங்குகொண்டிருந்தும்கூட, மறைந்த ஆளுமையின் ஒரு நல்ல சொற்சித்திரம் காணக்கிடைக்கவில்லை என்பது குறையே

நான்காம் பகுதி ‘ஆதிமூலம் கோடுகளில் இருந்து வண்ணத்துக்கு’ ஆதிமூலத்தின் கலையின் பரிணாமத்தைக் காட்டும் சித்திரங்கள் அடங்கியது. கோட்டுச்சித்திரங்களில் தொடங்கிரவர் அரூப ஓவியங்களுக்கு வந்த வழியை இதில் காண முடிகிறது

ஆதிமூலத்தின் அபூர்வமான புகைப்படங்களுடன் மிக அழகாக பக்கங்கள் வடிவமைக்கப்பட்ட இந்நூல் அவருக்குச் செலுத்தப்பட்ட முக்கியமனா அஞ்சலி

‘ஆதிமூலம்- அழியாக்கோடுகள்’ தொகுப்பு மணா. வெளியீடு உயிர்எழுத்து. 9 முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம்,திருச்சி 1

[email protected]

முந்தைய கட்டுரைவன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்
அடுத்த கட்டுரைவிகடனை எண்ணும்போது…