கமலாம்பாள் சரித்திரம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

சமீபத்தில் ‘கமலாம்பாள் சரித்திரம்’ படித்தேன்.

இரண்டு ஆச்சரியங்களைத் தவிர வேறு எதுவும் சொல்லும்படியாக இல்லை.

1. மொழி நடையைத் தவிர சம்பவங்கள், வர்ணனை, கேலி, கிண்டல் போன்றவை சம காலத்தைப் போன்று இருந்தது.

2. எழுதும்போது அவரது வயது 26.

க.நா.சு. போன்றவர்கள் இந்த நாவலை ஓஹோவென்று பாராட்டியிருந்தது அதை விட ஆச்சரியம்.

அன்புடன்
இளம்பரிதி

அன்புள்ள இளம்பரிதி,

கமலாம்பாள் சரித்திரம் தமிழின் முதல்நாவல். தமிழில் நமக்கு அக்காலகட்டத்தில் உரைநடையே சரியாக உருவாகி இருக்கவில்லை. செய்யுளும் நாட்டுப்புறக் கதைமரபும் புராணமும்தான் நமக்குப் பழகியவை. அந்நிலையில் கமலாம்பாள் சரித்திரத்தின் பாய்ச்சல் ஆச்சரியகரமானதே.

ஒட்டுமொத்தமாக அன்றைய காலகட்டத்தில் பல சிக்கல்கள் இருந்தன. அவை எல்லாமே நமக்கு மரபில் இருந்து வந்தவை. அன்று நூல்கள் அறிவைப் பகிர்வதற்கானவை, நல்லொழுக்க போதனை செய்வதற்கானவை என்ற நம்பிக்கை வலுவாக இருந்தது.

ஆகவே ஒரு நூலை வெளிப்படையான நல்லொழுக்க போதனையுடன் எழுதவேண்டிய கட்டாயம் இருந்தது. முன்னுரையிலேயே அந்த நோக்கத்தைச் சொல்லியாகவேண்டும். காவியமரபில் அதற்கு ஃபலச்சுருதி என்று பெயர்.

மேலும் இந்தியா நவீன காலகட்டம் நோக்கி கண்விழித்தெழுந்த காலம் அது. அன்று எல்லா கல்வியாளர்களும் சீர்திருத்த நோக்கம் கொண்டவர்களாகவே இருந்தனர். ஆகவே எல்லா இந்திய மொழிகளிலும் உரைநடை சீர்திருத்தப்பிரச்சாரமாகவே இருந்தது – மாதவையாவின் பத்மாவதி சரித்திரமே உதாரணம்.

அன்று அதிகம் வாசித்தவர்கள் மாணவர்கள் மற்றும் அரசூழியர்கள். அதிகம் படிக்காதவர்கள் அவர்கள். அவர்களின் ரசனையை ஒட்டியே நம் ஆக்கங்கள் எழுதப்பட்டன. கொஞ்சம் மேல்நாட்டுச்சாயல் கொஞ்சம் நாட்டுப்புற கதைச்சாயல் என ஒரு கலவை வடிவம்.

ஆனால் இந்த எல்லா எல்லைகளையும் ராஜம் அய்யர் மீறிச்சென்றிருக்கிறார். அவரது நாவல் இலக்கணப்படியே நாவல். கருத்துப்பிரச்சாரம் மேலோங்கவில்லை. நுட்பமான நகைச்சுவையும் குணச்சித்திர வரைவும் உள்ளது. ஆடுசாப்பட்டி அம்மையப்ப பிள்ளை ஓர் உதாரணம்.

அதேபோல நுண்ணிய உளவியல் சித்தரிப்பும் அதில் சாத்தியமாகியிருக்கிறது. அக்கால திருமணங்களில் சிறுவர்களும் சிறுமியரும் கலந்து விளையாடுவதில் உள்ள முதல் பாலியல் திறப்பு அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்தியமொழிகளின் முதல்கட்ட நாவல்களில் நான் வாசித்தவரை கமலாம்பாள் சரித்திரமே மேலானது.

ஜெ

முந்தைய கட்டுரைகூடங்குளம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகூடங்குளம் – சில கடிதங்கள்