ஆஸ்திரேலியா :கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ஆஸ்திரேலிய இலக்கியக்கூட்டங்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களை வாசித்தேன். அந்த நிகழ்ழ்சியைப்போலத்தான் பெர்த் நகரில் நிகழும் எந்த ஒரு இலக்கிய நிகழ்ச்சியும் இருக்கும். நீங்கள் உணர்ந்த அதே விஷயங்களை நானும் செஷேல்ஸ் முதலிய ஊர்களில் நிகழும் கூட்டங்களில்  உணர்ந்திருக்கிறேன்.

தங்கள் கருத்துக்கு நன்றி

வி ஸ்ரீனிவாசன்
பெர்த் ஆஸ்திரேலியா
அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரையில் தகவல்பிழைகள் பல உள்ளன.

நீங்கள் குறிப்பிடுவது நீலப்புரட்சி அல்ல. வெண்மைப்புரட்சி. அமுல் நிறுவனம் சர்தார் பட்டேல் அவர்களின் காலத்தில் திரிபுவன் தாஸ் அவர்களால் தொடங்கப்பட்டது. டாக்டர் குரியன் அதில் ஓர் எளிய ஊழியராக நுழைந்து அதை மேலெடுத்துச் சென்றார். பால்புரட்சி என்ற கருத்து லால்பகதூர் சாச்திரியினுடையது.

மொரார்ஜிதேசாய் இதில் எந்த பங்கும் வகிக்கவில்லை.

பிழைகளை திருத்திக்கொள்ளவும். வரலாற்றுத்தவறாக ஆகிவிடப்போகிரது

பாலா

அன்புள்ள பாலா,

வெண்மைப்புரட்சிதான், அது ஒரு நாக்குப்பிழை.நான் பாலைவிட்டுவிட்டேன், மீனுக்கு அடிமை– தெரியுமே.

அமுல் நிறுவனம் குறித்த ஒரு வரலாற்றுநூலில் அந்த கூட்டுறவு அமைப்பின் அடிப்படைக் கட்டுமானங்களை அமைத்தவர் மொரார்ஜி தேசாய்தான், அவர்தான் அதன் முதல் புள்ளி என்று படித்த நினைவில் எழுதினேன். இப்போது மொரார்ஜியின் வாழ்க்கை வரலாற்றில் சென்று அதைச் சரிபார்த்தும்கொண்டேன். விக்கிபீடியாவிலும் அது சொல்லபட்டிருக்கிறது.

எப்படி இருந்தாலும் இது உங்கள் துறை.

ஜெ

ஜெ..

இன்று காலை ஒரு மெயில் அனுப்பினேன். உங்கள் ஆஸ்திரேலியா கட்டுரையில் மொரார்ஜி தேசாயின் வழிகாட்டுதலில் குரியன் வெண்மைப் புரட்சி செய்ததாக எழுதப் பட்டிருந்தது

 

அமுல் நிறுவனம் சர்தார் வல்லப் பாய் படேலின் ஊக்கத்தில், திருபுவந்தாஸ் படேல் அவர்களால் துவங்கப்பட்டது. அதில் அணு விஞ்ஞானத்தில் டாக்டரேட் பட்டம் பெற்ற டாக்டர் குரியன், ஒரு காண்ட்ராக்ட் காரணமாக வேலைக்குச் சேர்ந்தார்.

பின்னர், லால் பகதூர் ஸாஸ்திரி ஒரு நாள் இரவு அமுல் கூட்டுறவு கிராமாத்தில் தங்கியிருந்து, அந்த இயக்கத்தினால் கவரப்பட்டு, அந்த மாடலை நாடு முழுதும் பரப்பிடுமாறு கேட்டுக் கொண்டார். தனால் பிறந்தது operation Flood.

மொரார்ஜியின் பங்களிப்பு இதில் இல்லை.

 

அன்புடன்

பாலா

                                       07-05-2009

அன்புள்ள நண்பர் ஜெயமோகனுக்கு, எனது கடிதத்தை பதிவுசெய்தமைக்கு நன்றி.
இன்று மாலை நான் வேலையால் வீடு திரும்பியவேளையில் ஒரு மகிழ்ச்சிதரும் செய்தி கிடைத்தது. அதனை தங்களுடனும் தங்கள் வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
 சிங்களமொழியில் புதுமைப்பித்தன்.
 இலங்கையில் எஸ்.முரளிதரனின் மொழிபெயர்ப்பில் புதுமைப்பித்தனின் சில சிறுகதைகள் சிங்களத்தில் தனி நூலாக வெளிவந்துள்ளது. இதனை இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் அண்மையில் கொழும்பில் வெளியிட்டிருக்கிறது. புதுமைப்பித்தனின் சில கடிதங்களும் அவரது துன்பக்கேணி, சாபவிமோசனம், தெருவிளக்கு ஆகிய சிறுகதைகளும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
 நூலின் பெயர்: தமிழ் கெட்டிக்கத்தா புரோகாமீ புதுமைப்பித்தன் ( தமிழ் அர்த்தம்:- தமிழ் சிறுகதை முன்னோடி புதுமைப்பித்தன்)
 இந்தத்தகவல் குறிப்புகளுடன் மல்லிகா நாராயணன் எழுதியுள்ள கட்டுரை, மல்லிகை ஏப்ரில் 2009-இதழில் வெளியாகியிருக்கிறது. மல்லிகை இன்று எனக்கு தபாலில் வந்ததும் அதனைப்படித்துவிட்டு தங்களுக்கு தகவல் தருகின்றேன். தங்களுக்கு தகவல் தந்திருப்பது பற்றி மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களுக்கும் தொலைபேசி ஊடாகத்தெரிவித்துள்ளேன்.
நன்றி.
அன்புடன் முருகபூபதி

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம்,3- எழுத்தாளர் விழா
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம், 4. தங்கவேட்டை