செத்தவரை, ஆவூர், உடையார் புரம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் சென்று வந்த செத்தவரை, தொட்டி, கஞ்சியூர், ஆவூர், உடையாநத்தம் போன்ற ஊர்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

செத்தவரை தமிழ்நாட்டில் உள்ள பழமையான பாறை ஓவியப் பகுதி ஆகும். இந்த கிராமம் செஞ்சியில் இருந்து வேட்டவலம் போகும் வழியில் இருக்கிறது. இங்குள்ள அய்யனார்மலை என்ற பாறைக்குன்றில் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்ட பல ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் விலங்கின ஓவியங்களே காணப்படுகின்றன. தமிழ்நாட்டிலேயே மீன் உருவம் உள்ள பாறை ஓவியம் இங்குதான் இருக்கிறது. விரல்களுடன் கூடிய மனித உள்ளங்கை ஓவியங்களும் நிறைய இருக்கிறது. இங்குள்ள மான் வடிவம் மிகவும் அழகானது. இதன் காலம் கி மு 1500.

தொட்டி கிராமம் திருக்கோயிலூருக்கு அருகில் சங்கராபுரம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள சிறிய குன்றில் உள்ள பஞ்ச பாண்டவர் படுக்கை சற்று வித்தியாசமானது. இந்தப் படுக்கைகள் மிகவும் சிறியவை. சிறுவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதைக் கொண்டு சமணத்துறவிகளில் சிறுவர்களும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. இந்தப் படுக்கைகளுக்குப் பின்புறம் உள்ள இரண்டு படுக்கைகள் பெரியவை. இதன் காலம் கி பி பத்தாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.

கஞ்சியூர் குன்றில் உள்ள குகையில் இரண்டு இடங்களில் ஐந்து படுக்கைகளாக மொத்தம் பத்து கற்படுக்கைகள் காணப்படுகின்றன. படுக்கைகளுக்கு அருகில் ஒரு கல் இருக்கையும் இருக்கிறது. குகைகளின் மேலே வெள்ளை வண்ணத்தில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் சிந்து சமவெளி குறியீடுகள். பல அழிந்து போயுள்ளன. இந்தக் குன்றின் அருகில் உள்ள கிராமத்தில் சமணர்கள் சிலர் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆவூர் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் போகும் வழியில் உள்ள ஒரு கிராமம். பாண்டியர்கள், சோழர்கள், நவாப்கள் ஆண்ட நெடிய வரலாறை உடைய ஊர். இங்கு உள்ள முக்கிய தொழில் கோரைப்பாய் பின்னுவது. ஏறக்குறைய 400 குடும்பங்கள் 200 வருடங்களாக இந்த குடிசைத் தொழிலில் இருக்கின்றனர். பெரும்பாலும் இசுலாமியக் குடும்பங்கள். 1971 இல் இருந்து இயந்திரங்களுக்கு மாறியுள்ளனர். திருப்பூர் போன்று, மையப்படுத்தப்படாத, இந்தியத்தொழில் கூறை உடையது இந்த குடிசைத்தொழில். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் வேலை செய்கின்றனர். தற்போது கடுமையான மின்வெட்டால் இந்தத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

உடையானத்தம், கீழ்வாலை பாறை ஓவிய இடத்திற்கு அருகில் உள்ள ஊர் . இங்கிருந்து வடக்கே 3 கி மீ தூரத்தில் உள்ள ஆதிலியம்மன் கோவிலுக்கு சற்று முன்னே ‘விசிறிப்பாறை’ என்றழைக்கப்படும் பழங்காலத் தாய் தெய்வ வடிவம் ஒன்று உள்ளது. அருகில் உள்ள கீழ்வாலை, செத்தவரை, புறாக்கல் (அரை நாள் அலைந்தும் இந்த இடத்தைக் கண்டறிய முடியவில்லை) போன்ற பாறை ஓவியக் குன்றுகளும், இந்தத் தாய் தெய்வ வடிவத்தையும் வைத்துப் பார்க்கும் போது இந்தப் பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் பெருமளவில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று கூறலாம். இந்தப் பயணத்திற்கு உதவியவர்கள் யுவராஜ், பாலசுப்ரமணியன் என்ற இரண்டு சிறுவர்கள். கிட்டத்தட்ட 2 கி மீ என்னோடு வெயிலில் நடந்து வந்து உதவினார்கள். அதிலும் ஒருவன் செருப்பில்லாமல் வந்தான். இருவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி தயங்கியபடி தங்களை எஸ் சி என்று கூறிக் கொண்டனர். பின்னர் புகைப்படம் அனுப்புவதற்காக முகவரி கேட்ட போது, எஸ் சி மாரியம்மன் கோவில் தெரு என்று சொன்னார்கள். (இன்னொரு மாரியம்மன் கோவிலை எம் பி சி மாரியம்மன் கோவில் என்றனர்). சங்கடமாகப் போய்விட்டது.

தொட்டியைத் தவிர அனைத்து இடங்களும் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் உள்ளன.

இவை குறித்து இணையத்தில் பதிவு செய்தவற்றை இணைத்துள்ளேன்.

நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.

விக்கிபீடியா கட்டுரை

1) http://en.wikipedia.org/wiki/Settavarai

2) http://en.wikipedia.org/wiki/Kanchiyur

யு டியூப் காணொளிகள்

செத்தவரை

1) http://www.youtube.com/watch?v=54FzessOsvY&feature=plcp&context=C4e10a14VDvjVQa1PpcFMmMIU9t7zYiaCaDzPHz9Mm73heJTh86ks%3D

2) http://www.youtube.com/watch?v=X4eF62iSva4&feature=related

3) http://www.youtube.com/watch?v=fO1rdTtDyMA&feature=related

தொட்டி

1) http://www.youtube.com/watch?v=D-gjFSDj9YA&feature=related

2) http://www.youtube.com/watch?v=p6hNHPWLdEk&feature=related

கஞ்சியூர்

1) http://www.youtube.com/watch?v=ksy6U6Wsku0&feature=plcp&context=C4d4b86aVDvjVQa1PpcFMmMIU9t7zYiQpbwi_fFWZ66zY12RbGrZ8%3D

2) http://www.youtube.com/watch?v=QpswRhPtBjE&feature=related

3) http://www.youtube.com/watch?v=784jIK_yPjs&list=UUppaK1uqALtjRqhta8L0EKw&index=2&feature=plcp

ஆவூர்

1) http://www.youtube.com/watch?v=YqTIgMQ5_8w&feature=related

2) http://www.youtube.com/watch?v=_0PRmgorpQ8&feature=related

3) http://www.youtube.com/watch?v=_Aj4wFZnvV8&feature=related

உடையாநத்தம்

1) http://www.youtube.com/watch?v=fMCWgPyc0nA&list=UUppaK1uqALtjRqhta8L0EKw&index=1&feature=plcp

முந்தைய கட்டுரைபொதுப்பிரச்சினையும் புரிதலும்
அடுத்த கட்டுரைடாக்டர் தெபெல் தேவ்