புல்வெளிதேசம்,3- எழுத்தாளர் விழா

 
ஏறத்தாழ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தஞ்சையில் சோழனுக்கு மெய்க்காவலர்களாக இருந்த ஒரு சிறிய உபசாதியினர் என்ன காரணத்தாலோ அங்கிருந்து துரத்தப்பட்டு இடம்பெயர்ந்து சேரமண்ணுக்கு வரும்படியாக ஆகியது. குமரிமாவட்டத்தில் குடியேறியவர்கள் தொழில்செய்து வாழும் கட்டாயத்துக்கு ஆளானார்கள். அக்காலத்திலும் சரி பிறகும் சரி தென்திருவிதாங்கூர் நாட்டில் நெசவுக்கு ஆள்பஞ்சம் உண்டு. ஆகவே இவர்கள் நெசவாளர்களாக மாறினார்கள். அவர்களுக்கு சாதிவகையில் ஓர் இழிவு அது. ஆனாலும் அவர்கள் அதைச்செய்ய வேண்டியிருந்தது. மேலும் அன்றிருந்த நெசவாளர்களான வாணியர் இந்த கூலித்தொழிலாளர்களை தங்களைவிட ஒருபடி கீழேதான் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணி ஒரு விதிசெய்தார்கள்.  இவர்கள் மேடைபோட்டு அமர்ந்து தறிநெய்யக்கூடாது என்றும் பள்ளத்துக்குள் அமர்ந்துகொண்டு நிலமட்டத்துக்கு உள்ள தறியில் நெய்ய வேண்டும் என்றும் வகுத்தார்கள்.

இன்றும் இந்த வழக்கம் நீடிக்கிறது. இவ்வாறு குடியேறிய சாதியினர் தங்களை கைக்கோளமுதலியார்கள் என்று சொல்கிறார்கள். தங்களுடைய தஞ்சாவூர் வேர்களையும் இவர்கள் குலச்சடங்குகளாகவும் குலதெய்வங்களாகவும் மாற்றிக்கொண்டு இன்றளவும் பாதுகாத்து வருகிறார்கள். அதேசமயம் அவர்கள் மீதான ஆதிக்கத்தின் குறியீடான அந்த பள்ளத்திலமர்ந்து நெசவுசெய்யும் வழக்கமும் அவர்களின் குலச்சின்னமாக நீடிக்கிறது.

வரலாறு முழுக்க மக்கள் புலம்பெயர்ந்தபடியே இருப்பதைக் காணலாம். படையெடுத்து வந்து நாடுகளைப்பிடித்து அங்கே குடியேறுவது எப்போதும் இருந்துவந்தது. தமிழகத்தில் உள்ள தெலுங்கர்கள் நாயக்கர்படையெடுப்பு காலத்தில் வந்தவர்கள். உருது-பட்டாணி முஸ்லீம்களும் படையெடுப்பில் வந்தவரக்ளே. இந்தியாவில் ஆரம்பகாலங்களில் சாதிவிலக்கு புலம்பெயர்வதற்கான ஒரு காரணமாக இருக்கிறது. பின்னர் போர்களும் பஞ்சங்களும். 1530ல் தலைக்கோட்டைப்போரில் விஜயநகரபேரரசு வீழ்ச்சியடைந்தபோதுதான் தென்னிந்தியாவின் மாபெரும் மக்கள்பெயர்வு நிகழ்ந்தது. ஆந்திர கர்நாடகப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக தமிழகம் வந்தார்கள். அதன்பின்னர் பதினேழு பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் பெரும்பஞ்சங்களில் பெருமளவில் தமிழர்கள் கூலி உழைப்பாளர்களாகக் கடல்தாண்டிச் சென்றார்கள். முதல் உலகப்போரிலும் இரண்டாம் உலகப்போரிலும் அவ்வாறு சென்றவர்களில் ஒருசாரார் மீண்டும் அகதிகளாக இந்தியா திரும்பிவந்தார்கள்.

புலம்பெயர்தலை எழுதாமல் இந்தியவரலாற்றை, தமிழக வரலாற்றை எழுத முடியாது. தேசப்பிரிவினையி ன்போது புலம்பெயர்ந்து தமிழகம் வந்தவர்கள் இங்குள்ள சிந்திகளும் மார்வாரிகளும். திபெத் அகதிகள் பெருமளவில் தமிழகத்துக்கு வந்திருக்கிறார்கள். சீனப்புரட்சியின்போதும் பர்மியப்போரின்போதும் ஏராளமான அகதிகள் தமிழகம் வந்திருக்கிறார்கள்.அந்தமானில் வங்கதேசப்பிரிவினை அகதிகள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேயிலைத்தோட்டங்களுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் மலையகமக்கள் என்ற பேரில் இலங்கையில் அங்குள்ள ஈழத்தமிழர்களாலும் சிங்களர்களாலும் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார்கள். பின்னர் அவர்களில் மூன்றில் ஒரு பங்கினரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். அறுபதுகளில் சாஸ்திரி -பண்டாரநாயகா ஒப்பந்தம் மூலமும் பின்னர் இந்திரா-சிரிமாவோ ஒப்பந்தம் மூலமும் வெளியேற்றப்பட்ட அம்மக்கள் இன்று தமிழகத்து மேற்குமலைக்காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட தேயிலைத்தோட்டங்களில் [Tantea] குடியமர்த்தப்பட்டு அப்படியே மறக்கப்பட்டு கிட்டத்தட்ட அதே அகதிவாழ்க்கையை மூன்றாம்தலைமுறையிலும் நீட்டித்து வாழ்கிறார்கள்.

புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் உயிர்வாழ்தலுக்காகவும் தங்கள் பண்பாட்டைப்பாதுகாப்பதற்காகவும் போராடவேண்டியிருக்கிறது. இரண்டும் இரு திசைகளில் செல்லும் போராட்டங்கள். உயிர்வாழ்தலுக்கான போராட்டத்தில் மெல்லமெல்ல தங்கள் பண்பாட்டை மறந்தே ஆகவேண்டியநிலை. தமிழகத்துக்கு வந்த சீனர்களும் பர்மியர்களும் இப்போது தனிச்சமூகமாக இல்லை. ஐம்பதுகளில்கூட சென்னை, திருச்சி, தஞ்சை பகுதிகளில் அவர்கள் பல்மருத்துவர்களாகவும் பல்வேறு ரசாயனப்பொருள் உற்பத்தியாளர்களாகவும் இருந்தார்கள். இங்கேயே திருமணம்செய்வதன்மூலம் திராவிடரத்தம் என்ற கடலில் கரைந்து மறைந்தார்கள். சென்ற வருடம் திருச்செந்தூர் அருகே உள்ள திருவள்ளுவர் காலனி என்னும் ஊருக்குச் சென்றேன். எண்பதுகளில் வந்த ஈழ அகதிகளுக்காக அரசு உருவாக்கிய குடியிருப்பு அது. அங்குள்ள ஈழமக்களில் ஈழத்தமிழ்கூட இல்லை. திருமணம் மூலம் அவர்கள் அப்படியே தமிழகத்தில் இணைந்துவிட்டார்கள்.
இது தவிர்க்க முடியாத விஷயம் என் நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற தென்னாப்ரிக்க எழுத்தாளர் ஒருவரின் கதைகளைப் படித்தேன். டீனா படையாச்சி என்ற அந்த அம்மையார் ஒருபேட்டியில் தன்னுடைய மூதாதையர் இந்தியாவில் எங்கிருந்தோ வந்தவர்கள் என்றும் தன்னுடைய இணைப்புப் பெயருக்கு என்னபொருள் என்று தெரியவில்லை என்றும் சொல்லியிருந்தார். அவர் தமிழகத்தைசேர்ந்த ஒரு வன்னியர் என்று அவர் அறிந்தாலும் அவருக்கு அது பொருள்படப்போவதில்லை. பாலி போன்ற தீவுகளில் இன்றுள்ள இந்திய வம்சாவளியினரிடம் எஞ்சுவது இந்தியப்பெயர்கள், சில சடங்காசாரங்கள், மதநம்பிக்கைகள் மற்றும் சில குறியீடுகள் மட்டுமே. மொழி சீக்கிரமே விலகிச்சென்றுவிடுகிறது. காரணம் மொழி என்பது ஓர் அன்றாடவிஷயம். குறியீடுகளையும் சடங்குகளையும் எப்போதாவது வெளியே எடுத்தால்போதும்.

இதுதான் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் விஷயத்திலும் நடக்கிறது. அவர்களின் புதிய தலைமுறையினருக்கு தமிழ் அனேகமாக தெரியாது. அவர்களில் கணிசமானோர் தமிழர்கள் அல்லாதவர்களை மணம்புரிந்து வருகிறார்கள். அன்றாட வாழ்க்கையில் தமிழடையாளம் ஏதும் இல்லை. அவர்களின் தமிழடையாளம் என்பது பெரும்பாலும் உணவு,சில உறவுகள், சடங்குகள், மதம் ஆகியவற்றில் மட்டுமே உள்ளது. வரும் தலைமுறையில் — அதாவது இப்போது வாழும் மூத்தவர்களின் மறைவுக்குப் பின்னர்– அந்தசடங்குகளும் மதமும் மெல்ல மெல்ல சுருங்கி சில ஆதாரமான குறியீடுகளாக மாறி நீடிக்கும். தனியடையாளத்துக்கான ஒரு சிறிய ஆதாரமாக அவை இருக்கும், அவ்வளவுதான். அவர்களை தமிழர்களாக அடையாளம் காண முடியும், அவர்கள் தமிழர்களாக இருக்க மாட்டார்கள்.

இந்த வழக்கமான விஷயம் நிகழ்ந்துவிடக்கூடாதென்று புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பண்பாட்டுக்கவலை கொண்டவர்கள் சிலர் கடுமையான முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஈழவாழ்க்கையின் ஈழப்பண்பாட்டின் நீட்சியை தாங்கள் வாழும் நாடுகளில் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அதை அடுத்த தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். இரு தளங்களில் இந்த முயற்சிகள் நிகழ்கின்றன. ஒன்று மதம், இன்னொன்று கலையிலக்கியம். ஈழத்தவரின் முக்கியமான மதம் சைவம். செல்லுமிடங்களில் அவர்கள் சைவத்தை தக்கவைத்துக்கொள்ள முயல்கிறார்கள். இது ஓரளவு வெற்றியை அளிக்கிறதென்றே நினைக்கிறேன். மொழியை விட்டுவிடும்போதும்கூட  நாலைந்து தலைமுறைக்கு முன்பு புலம்பெயர்ந்த ஆப்ரிக்க, தென்கிழக்காசிய புலம்பெயர்ந்த தமிழர்கள் மதத்தை விட்டுவிடுவதில்லை. காரணம் மதம் குறியீடுகளின் களஞ்சியம். ஆகவே பண்பாட்டு உரையாடல்களின் அடிபப்டைமேடை அது. மனிதர்கள் அதில்தான் பிறந்து விழுகிறார்கள். மொழிமாறினாலும் மதக்குறியீடுகள் மாறாது.

ஆனால் கலையிலக்கியங்களுக்கு அந்த இடம் இருக்கிறதா என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. மரபுக்கலைகளும் மரபிலக்கியமும் மதத்துடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாக ஓரளவு முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் மதத்துடன் உறவை வெட்டிக்கொண்ட நவீனகலையிலக்கியத்துக்கு மக்கள் மனதில் நீடிக்கும் வல்லமை இல்லாமலிருக்கிறது. ஈழநாட்டிலேயே இலக்கியம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டவர்கள் மிகச்சிலரே இருப்பார்கள். புலம்பெயர் வாழ்க்கையில் அது இன்னும் குறைகிறது.

லெ.முருகபூபதி ஒன்பதாண்டுக்காலமாக தனிமனிதபிடிவாதத்துடன் மெல்பர்ன் நகரில் ஓர் எழுத்தாளர் ஒருங்குகூடலை நடத்தி வருகிறார்.  அவுஸ்திரேலிய தமிழ் கலை இலக்கிய சங்கம் என்னும் இந்த அமைப்பின் மூலம் பொதுவான உதாசீனத்தை மீறி அதை நண்பர்கள் ஆதரவைத்திரட்டி நடத்துகிறார். இவ்வருடம் ஏப்ரல் 11 ஆம் தேதி மெல்பர்ன் நகரில் அந்த விழா நடைபெற்றது. அதற்காகத்தான் தெளிவத்தை ஜோசப் வருகை தந்திருந்தார். அவரது பவளவிழாவும் அங்கே கொண்டாடப்பட்டது. நான் அதற்கு பார்வையாளன் மட்டுமே. முழுக்க முழுக்க அது ஓர் ஈழத்தமிழ் விழா.

விழாவுக்காக கன்பராவில் இருந்து ஆழியாள்[ மதுபாஷினி ரகுபதி] வந்திருந்தார். முந்தினநாள் இரவு அவர்கள் முருகபூபதி வீட்டுக்கு வந்திருந்தார்கள். இரவு வெகுநேரம் வரை பேசிக்கொண்டிருந்தோம். மதுபாஷினிக்கு ஒரு பெண்குழந்தை, துகிதை . நடேசன் வந்திருந்தார். இலக்கியம் குறித்தும் இலக்கிய அரசியல் குறித்தும் பேசினோம். தமிழர்கள் இலக்கியம் படைக்கிறார்களோ இல்லையோ இலக்கிய அரசியலை கண்டிப்பாக படைத்துக்கொண்டே இருக்கிறார்கள். யாராவது ஏதாவதுசெய்யும்போது அதுவரை கண்ணுக்குத்தெரியாமல் இருந்த சக்திகள் தடைகளாக மாறி வந்து முன்னால் நிற்கின்றன.

தெளிவத்தை ஜோசப் அவரது நாவல் வந்த காலகட்டத்தில் அதை கைலாசபதி தலைமையிலான முற்போக்கு அணி எப்படி புறக்கணிக்க முயன்றது என்பதைச் சொன்னார். மலையக மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் அந்நாவலில் தொழிற்சங்க அரசியல் இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மலையக இலக்கியம் என்று ஜோசப் சொன்னபோது அது ஈழத்தை கூறுபோடும் முயற்சி என்று முத்திரை குத்தப்பட்டது. தொடர்ச்சியான விவாதம் மூலமே தன்னுடைய குரலை நிலைநாட்ட ஜோசப்பால் முடிந்தது என்றார்.

சிட்னியில் இருந்து ஜெயசக்தி பத்மநாதன் வந்திருந்தார். அவரை முருகபூபதி கொண்டுசென்று தன் மகள் வீட்டில் விட்டுவிட்டு வந்தார். இரவு தூங்க சற்றுநேரம் பிந்தியது. காலையில் எழுந்தபோது ஜெட்லாக் இல்லை. புத்தம்புதிதாக இருந்தது காலைநேரம். காலையில்  நாகர்கோயிலின் ஒலிகளே வேறு. இங்கே மாக்பீயின் கிராக் கிராக் ஒலி அதிகம் கேட்டது. குளித்து உடைமாற்றிவிட்டு கிளம்பினோம்.

அரங்கத்தில் ஓரளவே கூட்டம் இருந்தது. அரங்குக்கு வெளியே ஒரு பெரிய புல்மைதானமும் சுற்றிலும் நடப்பதற்கான சிமிண்ட் நடைபாதையும் இருந்தது. நானும் அருண்மொழியும் அதில் நடை சென்றோம். இனிமையான குளிரும் இளவெயிலும். நிறைய வெள்ளையர் நடந்துகோண்டிருந்தார்கள். எதிரே செல்பவர்கள் அனைவருமே முகம் மலர முகமன் சொல்லிச் சென்றார்கள். அது பொதுவாக மேலைநாட்டு வழக்கம். இந்தியாவில் அந்த வழக்கம் இல்லை. முன்பின் தெரியாத ஒருவர் நமக்கு வணக்கம் சொன்னால் என்ன செய்வதென நமக்குத்தெரியவில்லை.

ஒருமுறை குன்னூரில் நானும் கிருஷ்ணனும் சிவாவும் நடந்துகொண்டிருந்தபோது ஒரு வெள்ளையர் எதிரே வந்து ‘காலைவணக்கம், நல்ல பருவநிலை இல்லையா?’ என்றார். நாங்கள் சீரியசாக ‘ஆமாம்’ என்ரோம். பிறகுதான் அவர் முகமன் சொல்லியிருக்கிறார் என்று உணர்ந்து அடாடா மண்ணாந்தை மாதிரி இருந்துவிட்டோமே என்று வருந்தினோம். அதற்கென்றே அவ்வழியில் திரும்பி வந்தோம். அவரை மீண்டும் பார்த்தபோது ஒரு சில சொற்கள் மரியாதை நிமித்தம் பேசி சிரித்து  விடைபெற்றோம்.

பலர் நாய்களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். அதிகமும் டால்மேஷன் வகை சிறிய நாய்கள். ஒரு நாய் திபெத்திய நாய், லாசா என்று பெயர். கண்கள் கோலிக்குண்டுபோல இருக்கும். முகம்மீது முடி புதர்போல கிடக்கும். பாமரேனியன்போல உடல். டொரொண்டோவில் சேரன் வீட்டில் ஒரு லாசா நாய் இருந்தது. திபெத்திய மடாலயங்களில் காவலுக்கு வளர்க்கபடும் அந்த நாய் மிகமிக ஆபத்தான காவல்நாய். ஆனால் மிகச்சிறியது.

*வில் நாய் வளர்ப்பது பொதுவாக சிரமம். மிகவும்செலவாகும். பெரிய வீடும் வளைப்பும் தேவை. நாய் குரைத்து பக்கத்துவீட்டில் கேட்டால் அவர்கள் புகார்செய்துவிடுவார்கள். அபராதம் கட்டநேரிடும்.  நாய் உணவும் செலவேறியது. ஆனாலும் நாய்களை ஆசைக்காக வளர்க்கிறார்கள். வெளியே கிராமத்துப் பண்ணைகளில் பெரிய நாய்களைப் பார்த்தேன்.  அதிகமும் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்கள். புதர்த்தீ கிராமம் மேரிவில்லெயில் ஒரு நாயைப்பார்த்தேன். கிரேட் டேன் போன்ற மிகப்பெரிய நாய். ஆனால் புல்டாக் போன்று சதைமடிப்புகள் கொண்ட முகம். அதன்பெயர் லியோபால்ட் மஸ்டி·ப். நண்பர் வற்கீசின் வீட்டில் அப்படி ஒருநாய் இந்திய வெயிலை சகித்து வாழ்கிறது.

எதிரே ஒரு வெள்ளைக்காரப்பெண் வந்தாள். பெரிய ஸ்வெட்டர் போட்டிருந்தாள். வயது முப்பது இருக்கும் தள்ளுவண்டியில் அவள் குழந்தை ரோஜாநிற ஸ்வெட்டர் போட்டு வெளிர்சிவப்பு தாமரை மொட்டு போல அமர்ந்திருந்தது. ஆறுமாதம் இருக்கும். முழுக்கையையும் வாய்க்குள் செலுத்தியிருந்தது. தாய் வெள்ளை இனம். குழந்தை சீன இனம். மூக்கே இல்லை. கண்கள் இரு சிறு வைரத்துண்டுகள்.  அவள் எங்களுக்கு வாழ்த்துசொல்லிக் கடந்துசென்றாள்.

கூட்டம் ஆரம்பிக்கவிருக்கும்போது திரும்பி வந்தோம். மெல்பர்னில் நிகழும் ஆகப்பெரிய இலக்கியவிழா என்ற அளவில் பார்த்தால் மிகக் குறைவான கூட்டம்தான். இத்தனைக்கும் கூட்டத்தை பரவலாக அனைவரும் பங்குபெறும்விதமாக பொதுத்தலைப்புகள் சார்ந்துதான் ஒழுங்கமைத்திருந்தார் முருகபூபதி. காலையில் மாணவர்கள் பங்குகொள்ளும் கருத்தரங்கு. பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் ஓர் அரங்கு.  மாணவர்களில் ஒருவர் அவர் ஆஸ்திரேலியாவில் கள ஆய்வு செய்தபோது அங்குள்ள தமிழ் முதியவர்களின் நிலைமை பற்றி கவனித்ததை கட்டுரையாக எழுதியிருந்தார். கவனத்துக்குரிய கட்டுரையாக இருந்தது அது.

பொதுவாக புலம்பெயர்தல் முதியவர்களுக்குக் கஷ்டமானது. முதியவர்கள் புதிய சூழலுக்கு தங்களை மாற்றுவது கஷ்டம். புதிய மொழிகள் புதிய பழக்க வழக்கங்களை அவர்கள் கற்றுக்கொள்ள முடியாது. தட்பவெப்பநிலை மாறுவது அவர்களுக்கு கடுமையாக இருக்கிறது– குறிப்பாக வெப்பநிலத்து தமிழர்கள் குளிரை பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும் அவர்களின் வாழ்க்கை என்பது நினைவுகளில் , கடந்த காலத்தில், இருக்கிறது. அவர்களுக்கு நிகழ்காலம் முக்கியமில்லை, எதிர்காலம் இல்லை. அந்த நினைவுகள் கைவிட்டு வந்த மண்ணில் இருக்கின்றன. ஆகவே அவர்களுக்கு வாழ்க்கை நரகமாகவே இருக்கிறது. ஒரு கார் இல்லாதவருடைய வாழ்க்கை கிட்டத்தட்ட சிறைதான் அங்கு.

அவர்கள் தங்கள் அடுத்த தலைமுறையினரை நம்பி வாழவேண்டியிருக்கிறது. ஆனால் அடுத்த தலைமுறை தங்களை நிலைநாட்டிக்கொள்ளும்பொருட்டு கடுமையாக உழைக்கிறது. எதையும் கவனிக்க அவர்களுக்கு நேரமில்லை. அந்த கைவிடப்பட்ட நிலையை இளைஞரின் கட்டுரை அழகாகவே சொன்னது. ஒரே உணவை தானே  எடுத்து சூடு பண்ணி சூடுபண்ணி சாப்பிடும் நிலைமை பற்றி ஒரு பெண்மணி புலம்பியிருந்தாள்.  மருமகனின் கடுமையான சொர்களைப்பற்றி இன்னொருத்தி வருந்தினாள். புதுவகை உறவுகளையும் மரபு மீறலையும் புரிந்துகொள்ள சிரமப்படுகிரார்கள் –ஆனால் அது ஒரு புதிய நிலத்தின் நெறி.

ஆஸ்திரேலிய பள்ளிகளில் தாய்மொழிக்கல்விக்கு ஓர் இடம் அளிக்கிறார்கள். அந்த மதிப்பெண்கள் கல்லூரி நுழைவுக்கு உதவுகின்றன. அவ்வாறு தாய்மொழிக்கல்வி பெறுபவர்களில் தமிழில் மட்டும் முழு மதிப்பெண் வழங்கப்படுவதில்லை, இலக்கணப்பிழை எழுத்துப்பிழை என்று பார்த்து மதிப்பெண்களைக் குறைத்துவிடுகிறார்கள், ஆனால் சிங்களம், இந்தி போன்ற மொழிகளில் முழு மதிப்பெண் போடுகிறார்கள் என்று ஒரு மாணவியின் கட்டுரை சொல்ல அதை ஒட்டி ஒரு விவாதம் நிகழ்ந்தது. தமிழில் தேர்ச்சி பெறுவதன் அளவுகோலை எப்படி நிலைநிறுத்துவது என்பதில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அது இந்தியாவிலும் உள்ள சிக்கல்தான். பல பொதுத்தேர்வுகளில் தமிழில் எழுதி வெல்வது மிகக் கடினம். தமிழாசிரியர்கள் ஒற்று புள்ளி பார்த்தே சுழித்துவிடுவார்கள்.

டென்மார்க் எழுத்தாளர் ஜீவகுமாரன் எழுதிய ‘மக்கள் மக்களால் மக்களுக்காக’ என்ற நாவல் வெளியிடப்பட்டது.ஜீவகுமாரன் டென்மார்க்கில் இருந்து வருகைதந்திருந்தார். புலம்பெயர்ந்த ஈழமக்களின் நிலைநிற்பதற்கான போராட்டத்தின் சிக்கல்களைக் கூறும் நாவல் அது. அதன் மீதான கருத்துரையை டாக்டர் நடேசன் முன்வைத்தார். ஜீவகுமாரன் இணையத்தமிழ் குறித்து ஒரு கட்டுரை வாசித்தார். லண்டன் வாழ்தமிழரான முல்லை அமுதன் ஈழ இலக்கியவாதிகளைப் பற்றிய குறிப்புகளை இலக்கியப்பூக்கள் என்ற பேரில் தொகுத்து வரிசையாக வெளியிட்டுவருகிறார். 44 படைப்பாளிகளைப்பற்றிய தொகை நூல் வெளியிடப்பட்டது. பாடும்மீன் ஸ்ரீகந்தராஜா அதைப்பற்றிப் பேசினார்.

இரண்டு இதழ்களின் மலர்கள் வெளியிடப்பட்டு அவற்றின் மீதான கருத்துரைகள் முன்வைக்கப்பட்டன. டொமினிக் ஜீவா யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடும் மல்லிகை கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக வந்துகொண்டிருக்கும் ஒரு சிற்றிதழ். பிரம்மாண்டமான வரலாற்றுக் கொந்தளிப்பின் நம்பமுடியாத இன்னல்களுக்கு நடுவிலும் கடும் முயற்சியில் ஜீவா விடாது வெளியிட்டுவரும் அந்த இதழ் ஈழ இலக்கியத்தின் முக்கியமான குரலாக ஒலிக்கிறது. அதன் 44 ஆவது ஆண்டுமலரின் வெளியீட்டுவிழா நடந்தது. கொழும்பிலிருந்து வெளியிடப்படும் ஞானம் நூறாவது இதழை மலராக வெளியிட்டிருக்கிறது. எல்லாவகை வாசகர்களுக்கும் உரிய இதழாக அது வெளிவந்துகோண்டிருக்கிறது.

தெளிவத்தை அவர்களின் பேச்சு அன்று குறிப்பிடும்படியாக இருந்தது. மலையகத்தமிழர்கள் எப்படி இந்தியாவில் இருந்து கூலித்தொழிலாளர்களாக கப்பலில் ஏற்றப்பட்டு கொழும்புவுக்கும் அங்கிருந்து மாத்தளைக்கும் அங்கிருந்து பல்வேறு தோட்டங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டார்கள் என்பதை மிக விரிவாக விளக்கினார். தமிழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம்தான் அவர்களை கண்காணா நாட்டுக்குச் செல்லவைத்தது. மிகப்பெரும்பாலானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். கணிசமானவர்கள் தலித்துக்கள். சென்ற இடங்களில் அவர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டார்கள்.  லைன்கள் என்று சொல்லப்படும் தகரப்பெட்டி வீடுகளில் பட்டிமிருகங்கள் போல தங்கவைக்கப்பட்டு வாழ்ந்தார்கள்.

இந்தியாவில் தான் நடத்திய இதழுக்காக நிதிவசூலிக்க கொழும்புவந்த நடேசய்யர் என்ற தொழிற்சங்கவாதி தோட்டத்தொழிலாளர்களைப்பற்றிக் கேள்விப்பட்டு அங்கே ரகசியமாகச் சென்று அவர்களின் வாழ்க்கையை  நேரில் கண்டார். அவர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர்களுக்குத் தொழிற்சங்கத்தம் உருவாக்கி அவர்களை ஒருங்கிணைத்தார். அவர்தான் மலையகத்தின் முதல் இலக்கியகர்த்தா. அவர் எழுதிய ‘ராமசாமி சேர்வையின் சரிதம்’ என்ற கதையே முதல் மலையகக் கதை என்றார் தெளிவத்தை.

அதன்பின் ராமையா அவர்களின் ‘ஒருகூடைக் கொழுந்து’ வந்தது. இலக்கணப்படியும் அழகியல்சார்ந்தும் முக்கியமான கதை இது. வழக்கம்போல  அம்மக்களின் வறுமையைச் சொல்லும் கதை அல்ல அது. தேயிலைபறிக்கும் ஒரு பெண்ணின் தன்மானத்தையும் தோற்றுக்கொடுக்க மறுக்கும் தலைநிமிர்வையும் சித்தரிக்கும் அழகிய கதை. அத்துடன் மலையக இலக்கியம் வலிமையுடன் பிறந்தது. ஆனால் அதை யாழ்ப்பாணத்தமிழர் அங்கீகரிக்க மேலும் பலகாலம் செல்லவேண்டியிருந்தது என்றார் தெளிவத்தை

கூட்டம் முடிய மாலைநேரம் ஆகியது. தெளிவத்தை ஜோசபுக்கு நான் ஒரு நினைவுப்பரிசு வங்கச் சொன்னார்கள்.  அருண்மொழி எடுத்த ஒரு படம்கூட சரியாக விழவில்லை. ஆகவே அன்றைய நாள் விழாவின் பதிவுகள் என ஏதுமில்லை. அங்கே பல நண்பர்களைச் சந்தித்தேன். உற்சாகமான உரையாடல்கள் நிகழ்ந்தன.

ஆனால் பொதுவாக எனக்குப்பட்ட குறை என்பது தமிழகத்தில் வழக்கமாக நிகழும் சம்பிரதாயமான புகழ்ச்சிகள் சம்பிரதாயமான வரவேற்புகள் அர்த்தமில்லாத மேடைப்பேச்சுகள் முதலியவை. ஒரு அரங்குக்கு வரும் வருகையாளன் அவனுக்கு உதவக்கூடிய ஏதாவது அங்கே கிடைக்குமா என்று அறியத்தான் வருகிறான். ஆகவே ஒருமேடையில் அங்கிருக்கும் வருகையாளருக்கு ஆர்வமூட்டாத , உதவாத எதையுமே பேசலாகாது என்பது ஒரு நாகரீகம். மேடையில் இருக்கும் ஒருவரை இன்னொருவர் பதினைந்து நிமிடம் புகழ்ந்து பேசுவதனால் அவருக்கும் புகழப்படுபவருக்கும் லாபம் இருக்கலாம், கேட்பவர்களுக்கு என்ன லாபம்? சில கல்லூரிகளுக்குச் சென்றால் அதே கல்லூரி முதல்வரை அதே கல்லூரி துறைத்தலைவர் அதே கல்லூரி மாணவர்கள் முன்னால் வைத்து அரைமணிநேரம் புகழ்ந்து பேசுகிறார். வரிசையாக மரியாதைப்பேச்சுகள் நிகழ்ந்தால் ஒருவர் எத்தனை நேரம்தான் அதைக் கேட்டிருக்க முடியும்?

தமிழகத்தில் இந்த வகையான போலிப்பேச்சுகள் மற்றும் மரியாதைகளை மேடைகளில் இருந்து அகற்றியபின்னர்தான் இப்போது இலக்கியக் கூட்டங்களுக்கு ஓரளவுக்கு மக்கள் வருகிறார்கள்.  அதேபோல எந்த ஒரு கூட்டத்தையும் அதிகபட்சம் மூன்று மணி நேரத்தில் முடிக்க வேண்டும். அதை ஒட்டியே நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்ய வேண்டும். முழுநாள் நிகழ்ச்சி என்றால் அதில் கலைநிகழ்ச்சிகள் இருக்க வேண்டும். தமிழர்கள் இந்த வழக்கங்களை கைவிடாதவரை உருபப்டியான கூட்டங்களை நடத்த முடியாது.

முருகபூபதி மிகவும்  உற்சாகமாக இருந்தார். இருநாட்களாகவே அவரிடம் இருந்த பதற்றம் மெல்லமெல்ல விலகி சிரித்துக்கொண்டே இருந்தார்.  அந்நிகழ்ச்சி ஒரு வெற்றி என்றே சொல்லவேண்டும். என் வரையில் தெளிவத்தை அவர்களின் சிரப்பான பேச்சு ஒரு முக்கியமான அனுபவமாக அமைந்தது. என்னளவில் அந்நிகழ்ச்சி  புலம்பெயர் வாழ்வில் தமிழ் மெல்ல மெல்ல மறைவதன் சித்திரமாகவே இருந்தது. வந்திருந்தவர்கள் அனேகமாக அனைவருமே வயதானவர்கள். சிலர் நடுத்தர வயதினர். நாலைந்து மாணவர்கள் அந்தக் கருத்தரங்குக்காக ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு கொண்டுவரபட்டவர்கள். அவர்களில் ஒருவர் மட்டுமே அங்கே பிறந்து படித்தவர். பிறர் இலங்கைநாட்டில் இருந்து வந்தவர்கள்.

இந்திய மளிகைப்பொருட்கள் விற்கும் இடத்துக்கு வரும்கூட்டம்கூட அந்த நிகழ்ச்சிக்கு இல்லை. சம்பலில் உள்ள ஆர்வம்கூட இலக்கியத்தில் இல்லை. அதுவே இயல்பானது, சாதாரனமானது. இந்த விழா போன்றவை முருகபூபதி போன்றவர்களின் ஆற்றாமையும் கடைசிவரை போராடிப்பார்க்கும் முயற்சியும் காரணமாக உருவாக்கபடுபவை.

 

 பயணம்

ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி

  • பயணம்:கடிதங்கள்
  • ஊர்திரும்புதல்
  • அவுஸ்திரேலியாவில் தமிழ்
  •  
  • முந்தைய கட்டுரைஆஸ்திரேலியா :கடிதம்
    அடுத்த கட்டுரைஆஸ்திரேலியா :கடிதங்கள்