ன்புள்ள நண்பர் ஜெயமோகனுக்கு, நலம். நாடுவதும் அதுவே.
தங்களின் ஆஸ்திரேலிய பயணத்தொடரின் தொடக்கத்தையும் படங்களையும் பார்த்தேன். சுவாரஸ்யமாக தொடங்கியிருக்கிறீர்கள்.
சிறு திருத்தங்கள்: நான் இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில்தான் பத்து (1977-87) ஆண்டுகள் பணியாற்றினேன். மெல்பன் விமானநிலையத்துக்கும் எமது வீட்டுக்கும் சுமார் இருபது கிலோ மீற்றர்கள்தான் தூரம்.
இலங்கையில் சில சிங்கள. நாவல்களும் நூற்றுக்கணக்கான சிங்களச்சிறுகதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மார்டின் விக்கிரமசிங்காவின் ‘கம்பெரலிய’ கிராமப்பிறழ்வு என்ற பெயரிலும் ‘மடோல் தூவ’ மடோல்த் தீவு என்ற பெயரிலும் கருணாசேன ஜயலத்தின் ‘கொளுஹதவத்த’ ஊமை உள்ளம் என்ற பெயரிலும் டி.பி.இலங்கரத்தினாவின் ‘அம்ப யஹலுவோ’ உயிர்த்தோழர்கள் என்ற பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் மூன்றும் சிங்களத்தில் திரைப்படமாகி பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றவை.
குணசேன விதான எழுதிய சிறந்த கதையான பாலம என்ற சிறுகதை ஜெயகாந்தன் ஆசிரியராகவிருந்த கல்பனாவில் பாலம் என்ற பெயரில் பிரசுரமாகியுள்ளது.
மல்லிகை, மற்றும் ஞானம் இதழ்களில் பல சிங்களச்சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாகியுள்ளன.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சில சிறுகதைகள் பத்ரே பிரசூத்திய என்ற பெயரில் சிங்களத்தில் தனி நூலாகவே வெளியாகியுள்ளது. எந்தவொரு இதழிலும் பிரசுரமாகாத- பிரசுரிக்கத்தயங்கிய எனது மனப்புண்கள் சிறுகதை (தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்ட எனது சமாந்தரங்கள் தொகுப்பில் –1988 இடம்பெற்ற சிறுகதை ) சிலுமின சிங்கள வார இதழில் சிங்களமொழியில் பிரசுரமானது.
நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பேத்தி சரோஜினி அருணாசலம், தம்பிஐயா தேவதாஸ், இப்னுஅஸ_மத், கனகரத்தினம் எம்.எச்.எம்.சம்ஸ் உட்பட மேலும் பலர் தமிழ்-சிங்கள மொழிப்பரிவர்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கலாநிதி உவைஸ் மொழிபெயர்த்த ( சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர்) கிராமப்பிறழ்வு (கம்பெரலிய) நாவலின் மொழிபெயர்ப்புத்தொடர்பாக விமர்சனங்களும் உண்டு. பௌத்த பிக்கு ரத்ணவன்ஸதேரோ (என்னிடம் தமிழ் படித்தவர்.) செங்கை ஆழியானின் வாடைக்காற்று நாவலை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். ஆனால் அதனை அச்சிட்டுத்தருவதாகச்சொன்ன ஒரு சிங்கள அன்பர் அதனைத்தொலைத்துவிட்டார். அந்தச்சோகத்துடன் வாழ்ந்த அந்தத்துறவி சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
செங்கை ஆழியானின் அந்த நாவல் திரைப்படமாகி பாராட்டுப்பெற்றது. செங்கை ஆழியானின் சில சிறுகதைகளும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. அந்த நூலை ரத்ணவன்ஸ தேரோ அவர்களுக்கே சமர்ப்பணம் செய்திருந்தார். ஆனால் அந்த நூலை வாசிக்கமுடியாமல் கண்பார்வையை இழந்திருந்த பிக்கு சிலவருடங்களின் பின்னர் நிரந்தரமாகவே கண்களை மூடிக்கொண்டார்.
அருண்மொழிக்கும் குழந்தைகளுக்கும் நானும் மாலதியும் அன்பைத்தெரிவிக்கின்றோம்.
அன்புடன் முருகபூபதி