கயா – கடிதங்கள்

அன்பின் ஜெ,

மிக நடுநிலையான கட்டுரை.

ஏதிலார் குற்றம் போல் குறள் நினைவுக்கு வந்தது.

spritualism தவிர்த்து, rituals ஐக் கொண்டாடும் குணமே உலகெங்கும் உள்ள மதங்களின் சாபக்கேடு. நாம் நமது மதம் அடுத்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டுமெனில், அதற்கான ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவதே சரியான வழியாக இருக்க முடியும்.

மரபுரிமையான அரச பதவி உனக்கு இல்லை என்று தந்தை சொன்னதாகத் தன் சித்தி சொன்னதையே தேவ வாக்காகக் கொண்டு வணங்கி, அதை விடுத்துச் சென்ற ராமனே மிகச் சரியான உதாரணம்.. அவர் பெயரில் நாலு ஏக்கர் நிலத்திற்காக சண்டையிடுவதல்ல.. கண்ணுக்குப் பதில் கண் எனில் உலகமே குருடாகிவிடும் என்னும் வாக்குதான் எவ்வளவு உண்மை.

ஒரு ஆயிரம் ஆண்டுகாலம், வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், இந்தியப் பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டதா என்ன?

என்றோ நடந்த முட்டாள்தனங்களை இன்று பேசி பகைமை வளர்ப்பதை விட, முன்னோக்கிப் பார்ப்பது நல்லது என்று படுகிறது..

அன்புடன்,

பாலா

அன்புள்ள பாலா,

எப்போதுமே ஆன்மீகம் பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை. சடங்குகளே புரிகின்றன. சடங்குகள் லௌகீகமானவை, பெரும்பாலான மக்கள் லௌகீகமானவர்கள்.

மீண்டும் மீண்டும் சடங்குகளுக்கு மேலாக ஆன்மீகத்தை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

ஜெ

அன்புள்ள ஜெ,

உங்கள் கயா பற்றிய கட்டுரையை வாசித்தேன். மிக நடுநிலையாக எழுதப்பட்ட ஆழமான கட்டுரை. இன்று பல இந்துக்கள் நடுவே ஒரு நம்பிக்கை உள்ளது. நெடுங்காலமாக இந்துமதம் தணிந்து போவதாக இருக்கின்றது, ஆகவே இனிமேல் இந்துமதம் தாக்கும்தன்மை கொண்டதாக ஆகவேண்டும் என நினைக்கிறார்கள். இந்த மனநிலை மிகக்குறுகிய மதவெறியாக எளிதில் உருமாற்றம் ஆகிவிடுகிறது. அதன்பின்னர் நட்பு எது பகை எது என அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் சொல்வதை ஏற்காத எல்லாருமே எதிரிகள் என்று எதிர்த்தரப்பிலே சேர்த்துவிடுகிறார்கள். மாற்றுத்தரப்பு மேலே மரியாதையை காட்டுவதில்லை. எல்லாவிதமான முத்திரைகளையும் குத்தி வசைபாடுகிறார்கள். இந்துத்துவர்களின் இணையதளமான தமிழ் ஹிந்துவிலே இந்த மனநிலையைக் காணலாம். வசைபாடுவது வழியாக தங்கள் தரப்பின் நியாயங்களைக்கூட இவர்கள் மழுங்கச் செய்துவிடுகிறார்கள். இதன் இழப்பு என்பது இந்துசமூகத்துக்குத்தான்.

அருமையாகச் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். இந்துமதமும் இந்திய தேசியமும் திட்டமிட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதைக் கண்டு மனம் குமுறும் இந்துக்களின் எல்லா செயல்பாடுகளையும் ஜாதி வெறியர்களும் சுயநலமிகளும் தங்களுக்குச் சாதகமாக சுயநலத்துடன் மாற்றிக்கொள்கிறார்கள். இதுதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சாதிவெறியர்களுடன் சேரவேண்டுமா என்ற தயக்கம் காரணமாகத்தான் பெரும்பாலான இந்துக்கள் ஒதுங்கி இருக்கிறார்கள்.

அன்புடன்,

ராம் சுப்ரமணியன்

அன்புள்ள ராம்,

ஒரே வரியில் இதற்கு விடை சொல்கிறேன். சாதிப்பற்றுடன் இருப்பதை விட வேறு எதுவாக இருப்பதும் மேல்தான்.

ஜெ

  • குறிச்சொற்கள்
  • கயா
முந்தைய கட்டுரைஆலயங்களில் காமம்
அடுத்த கட்டுரைஓர் இசையலை