கலங்கிய நதி நாவலில் அழகிய குறியீட்டுத்தன்மையுடன் ஒரு சித்தரிப்பு வருகிறது. கலங்கியநதி என்பது நேரடியாகப் பெருவெள்ளம் சுழித்தோடும் பிரம்மபுத்திராவைக் குறிக்கிறது. ‘அழகிய நதி, பார்த்தால் சலிக்காதது’ என்று சொல்லும் டெல்லி வருகையாளனுக்கு உள்ளூர்க்காரன் ‘அதன் கரையில் வெள்ளத்தை பயந்து வாழ்ந்தால் தெரியும்’ என பதில் அளிக்கிறான்.
அஸ்ஸாமின் பிரச்சினையை பிரம்மபுத்ரா நதியுடன் பலகோணங்களில் நாவல் ஒப்பிட்டுச் செல்கிறது. அதில் ஒன்று இந்த விவரிப்பு. வெளியே இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பெருக்குள்ள நதி கொப்பளித்து ஓடும்போது விடுதிக்குள் கொஞ்சம் பெரிய குளியல்தொட்டியா எனத் தோன்றும் நீச்சல்குளத்தில் அதிகாரிகள் திளைத்துக் குளிக்கிறார்கள். இருவர் குளித்தால் மூன்றாமவர் கரையில் நிற்க வேண்டும். அதிகாரிகள் வந்தால் குளிப்பவர் கரையேற வேண்டும், கரையேறாவிட்டால் காவல்நிலையத்துக்குக் கூட்டிச்சென்று முட்டிக்கு முட்டி தட்டுவார்கள்.
சரியாக இந்த நிலையில்தான் இந்திய அதிகாரவர்க்கம் இந்நாட்டை ஆள்கிறது. வெளியே பெருக்கெடுக்கும் இந்தியா பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. அது அவர்களுக்கு அச்சமூட்டுகிறது. கட்டற்றதும் அசுத்தமானதும் உயிர்த்துடிப்பானதுமான இந்தியா. அதில் இருந்து குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு குளோரின் சேர்த்துத் தொட்டியில் சேர்க்கப்பட்ட வரைபட இந்தியாவில்தான் இந்த உபரிவர்க்கத்தால் திளைக்க முடியும். இந்நாவல் அதன் எல்லா நிகழ்வுகளிலும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறது.
ரமேஷ் சந்திரனின் மொழியில் சொல்வதானால் இச்சூழலில் மூளைகுழம்பிப்போகாதவராக இருந்துகொண்டிருப்பவர் காந்தியவாதியான ராஜவன்ஷி மட்டுமே. காரணம் அவர் மட்டும்தான் அந்தப் பெருநதியில் இறங்கி நீந்துகிறார். அதன் அலைகளையும் சேற்றையும் தன் தோள்களாலும் கால்களாலும் அறிந்துகொண்டிருக்கிறார். இந்நாவலின் ஒளிமிக்க கதாபாத்திரம் ராஜவன்ஷி. சென்ற நூற்றாண்டில் காந்தி உருவாக்கிய நம்ப முடியாத அற்புதத்தின் எஞ்சும் உதாரணம்.
காந்தியின் சாதனை என்ன? அவரது கோட்பாடுகள், நம்பிக்கைகள், அவர் அடைந்த அரசியல் வெற்றிகள் எல்லாமே சரிதான். அவரது முதற்பெரும் சாதனை இலட்சியவாதிகளினாலான ஒரு பெரும் சமூகத்தையே உருவாக்கிக் காட்டியதுதான். காந்தியின் குரலைக்கேட்டு அவர் பின்னால்சென்று தாங்களும் காந்தி ஆன மகாத்மாக்கள் ஏராளம். நம்முடைய ஒவ்வொரு கிராமத்திலும் அத்தகைய தன்னலமற்ற தியாகி ஒருவராவது இருப்பார். எப்படி ஒரு மனிதர் லட்சக்கணக்கான மனிதர்களைத் தன்னைப்போல ஆக்கினார்? அத்தனை மனங்களிலும் பற்றிக்கொள்ளுமளவுக்கு உக்கிரமாக இருந்ததா அவரிடமிருந்த நெருப்பு?
இன்று கேட்கும்போது அது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. ராஜவன்ஷி காந்தியின் குரலைக்கேட்டு அக்கணமே அனைத்தையும் துறந்து அவர் பின்னால் சென்றதைப்பற்றி அவர் சொல்லிக் கேள்விப்படும்போது ‘இப்படித்தான் எல்லாக் கதைகளும். இது உண்மையிலேயே இப்படியா?’ என்றுதான் ரமேஷ் சந்திரன் கேட்கிறான். ‘ஆமாம், இப்படியேதான்’ என்று ராஜவன்ஷி பதில் சொல்கிறார், சிரித்தபடி. காந்தியின் அடிகளைப் பின் தொடர்ந்து ராஜவன்ஷி வாழ்ந்த மகத்தான தியாகவாழ்க்கையின் கடைசிக்காலங்களை ரமேஷ் சந்திரன் தொட்டு அறிகிறான்.
ராஜவன்ஷி உண்மையில் அஸ்ஸாமின் மூத்த காந்தியவாதியான ஸரத் சந்திர ஸின்ஹாவின் இலக்கியவடிவம்தான். ஏற்கனவே கிருஷ்ணன் அவரைப்பற்றி நேரடியாக எழுதியிருந்தார். நாவலில் அதிக மாற்றம் இல்லாமல் அப்படியேதான் சின்ஹா வெளிப்படுகிறார். 93 ஆவது வயதில் மறைந்த சின்ஹா பதினைந்தாண்டுக்காலம் முதல்வராகப் பணியாற்றியவர். பதவிக்காலம் முடிந்ததும் பையை எடுத்துக்கொண்டு தன் எளிய வாடகை வீட்டுக்குச் சென்றவர். ராஜவன்ஷியை சந்திக்கச்செல்லும் ரமேஷ் சந்திரன் அவரது சாதாரண வீட்டையும் எளிமையான வாழ்க்கையையும் கண்டு திகைப்புறுகிறான். அதனூடாகவே அவன் அவரைக் கண்டுகொள்கிறான்.
ரமேஷ் சந்திரன் வாழும் உலகுக்கு நேர் எதிரான இன்னொரு உலகில் இருக்கிறார் ராஜவன்ஷி. ரமேஷ் சந்திரனும் அவனுக்கு எதிராகச் செயல்படும் அஸ்ஸாம் தீவிரவாதிகளும் ஒரே வகை அதிகாரத்தையே கையாள்கிறார்கள். அவ்விரண்டுக்கும் எதிர்த்தரப்பு என நாம் ராஜவன்ஷியைச் சொல்லலாம். ஒரு வகையில் அவரும் அதிகார அரசியலில்தான் இருக்கிறார். ரமேஷின் அதிகாரம் மேலிருந்து கீழே செல்லக்கூடியது என்றால் ராஜவன்ஷி பிரதிநிதிகரிக்கும் அரசதிகாரம் கீழிருந்து மேல் நோக்கி எழக்கூடியது. எளிய மக்களின் அதிகாரம். மண்ணில் இருந்து முளைக்கும் அதிகாரம். ரமேஷ் சந்திரனின் அமைப்பின் அதிகாரம் அடக்குமுறையால் ஆனது. ராஜவன்ஷியின் அதிகாரம் அறத்தின் அடிப்படையில் அமைந்தது.
உலகமெங்கும் மாபெரும் இலட்சியவாதத்தைப் பேசியவர்களில் காந்தி வேறுபட்டவர். அவர் அரசியலில், அதிகாரத்தைக் கையாளும் நிலையில் இருந்தாகவேண்டிய இலட்சியவாதத்தை முன்வைத்தார். பற்றற்றுக் கையாளவேண்டிய அதிகாரம். நூற்றாண்டுகளாக முழுமையான வன்முறை மூலமே கையாளப்பட்ட அரசதிகாரத்தை அறத்தின் அடிப்படையில் கையாள்வதற்கான ஒரு கனவையே காந்தி முன்வைத்தார். ராஜவன்ஷி அக்கனவை உண்டு வளர்ந்தவர்.
ராஜவன்ஷி எப்படித் தோற்றுப்போனார் என்ற கேள்வி இந்நாவலின் விவரணையில் நேரடியாக எழவில்லை. ஆனால் வாசகனிடம் எழலாம். அந்த மகத்தான மனிதரால் தலைமை தாங்கப்பட்ட அஸ்ஸாமிய அரசியல் எப்படிக் கலங்கியநதியாக ஆகி வன்முறைக்காடாகியது? அதற்கான பதில் அஸ்ஸாமிய முதல்வரை ரமேஷ் சந்திரன் சந்திக்கும் இடத்தில் உள்ளது. ஹிதேஷ்வர் சைக்கியாவின் இலக்கிய நகல் அவர். நல்லவர். உண்மையானவர். ஆனால் செயலற்றிருக்கிறார். அவர் ராஜவன்ஷியின் மாணவர்தான்.
ராஜவன்ஷி பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் என்பது பிரிட்டிஷ் பாணி அதிகார அமைப்பைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டிய ஒன்றல்ல. ஆகவேதான் காந்தி அந்த அதிகார அமைப்பையே மெல்லமெல்லக் கரைத்துவிடவேண்டும் என்றார். இன்னொரு மையமற்ற நிர்வாக முறைமையை முன்வைத்தார். ஆனால் பிரிட்டிஷ் கல்வியில் ஊறி வந்த காந்தியின் சீடர்களுக்கு அது புரிந்துகொள்ளமுடிவதாக இருக்கவில்லை. அவர்கள் அந்த அமைப்பை உருவாக்கவில்லை. பிரிட்டிஷ் அமைப்பையே நீட்டித்தனர். அவர்கள் அதை மாற்றவில்லை, அவர்களை அது மெல்லமெல்ல பிரிட்டிஷாராக மாற்றியமைத்தது.
சுதந்திரத்தை ஒட்டி உருவான மாபெரும் கலவரங்களும், அக்காலகட்டத்தில் பீகாரிலும் வங்கத்திலும் உருவான பெரும் பஞ்சமும் இல்லையேல் காந்தியின் நிர்வாகக் கனவு இவ்வளவு மூர்க்கமாக நிராகரிக்கப்பட்டிருக்காது என நான் நினைப்பதுண்டு. அந்தக்கலவரமும் பஞ்சமும் வலுவான ஓர் அரசு தேவை என்ற எண்ணத்தை நேரு, அம்பேத்கார் போன்றவர்களின் மனங்களில் உருவாக்கின. கலவரங்கள் அதிகாரப்பகிர்வு மற்றும் மையம் அழிப்பு மேல் அவநம்பிக்கையை உருவாக்கின. வலுவான திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் உடனடியான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று பஞ்சங்கள் எண்ணச்செய்தன. நேருவும் அம்பேத்காரும் அறிவாளிகள், இலட்சிவாதிகள். இலட்சியவாதியான அறிஞன் சமூகத்தைத் தன் இச்சைப்படி மாற்றியமைக்கவே கனவுகாண்பான்.
ஆகவே அப்படியே நீடித்த பிரிட்டிஷ் நிர்வாக முறைக்குள் ராஜவன்ஷி போன்றவர்கள் முடிந்தவரை செயலாற்றினார்கள். அவர்கள் செய்த அனைத்தையும்விட செய்ய முடியாமல் போனவையே அதிகம். அவையே அஸ்ஸாமிய மக்களை அன்னியப்படுத்தின. பிரிவினைப்போக்கை உருவாக்கின. பேரழிவுக்கு அந்நிலத்தைக் கொண்டுசென்றன. அவருடைய மாணாக்கரான முதல்வரோ முற்றிலும் செயலிழந்துபோய், கலக்கப்பட்ட நீரில் கண்ணிழந்த ஆமைபோல அமர்ந்திருக்கிறார்.
அஸ்ஸாமியப் பிரச்சினையின் காரணம், அது உருவான விதம், அதற்குச் சாத்தியமான தீர்வுகள் எதை நோக்கியும் பி.ஏ.கிருஷ்ணனின் நாவல் திறக்கவில்லை. நாவலின் இலக்கு அது அல்ல. நாவலின் நோக்கில் அஸ்ஸாம், பஞ்சாப், காஷ்மீர், தெலுங்கானா, மாவோயிஸ்ட் பிரச்சினைகள் எல்லாமே ஏறத்தாழ ஒன்றுதான். தங்களைப் பிரதிநிதிகரிக்காத அரசமைப்புக்கு எதிரான மக்களின் அதிருப்தியை அதிகாரம் தேடுபவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் புதிய அதிகார மையங்களாக ஆகிறார்கள்.
ஆனால் இந்த அதிகாரச் சமரில் ஏழை மக்கள், நம்பிக்கையாளர்களான இளைஞர்கள் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். என்றாவது ஒரு நாள் தங்கள் மீது தங்களை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் அமர்ந்திருக்கும் அதிகாரத்தைக் கவிழ்த்துவிட்டு தங்களுடையதான அதிகாரத்தை உருவாக்கமுடியுமென அந்த இளைஞர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது அசட்டுத்தனமான ஒரு நம்பிக்கை மட்டுமே. அவர்களுக்குக் கிடைப்பது அதே அதிகாரத்தின் இன்னொரு நகலும் தொடர்அழிவும் மட்டுமே.
இரு வலுவான உவமைகள் வழியாக ரமேஷ் சந்திரனின் அந்த எண்ணம் நாவலில் பதிவாகிறது. ஒன்று, பறவைகள் கூட்டம்கூட்டமாகத் தற்கொலைசெய்துகொள்ளும் ஜதிங்காவின் சித்தரிப்பு. விளக்கமுடியாத ஏதோ காரணத்தால் பறவைகள் அங்கேவந்து உயிர்விட்டுக்கொண்டே இருக்கின்றன. இரண்டாவது உவமை ஆந்திராவில் சிம்மாசலத்தின் கிருஷ்ணன் கோயிலுக்குக் காணிக்கையாக்கப்படும் கன்றுகள் உடனே கசாப்புக்கடைகளுக்கு விற்கப்படுதல். கடவுளின் காணிக்கையாகச் சென்று அவ்வழியே மரணம் நோக்கிச் செல்கின்றன அவை.
மாற்று வழி என்ன? நாவலில் ரமேஷ் சந்திரனால் அந்த வினாவை நோக்கி முழுமையாகச் செல்லமுடியவில்லை. அவன் மனம் சென்று படியும் புள்ளி ராஜவன்ஷி முன்வைக்கும் காந்தியம்தான். எளிய மக்களிடமிருந்து மையம் நோக்கி எழும் அதிகாரம். எளிய மக்களால் நேரடியாகக் கையாளப்படும் மையப்படுத்தப்படாத ஒரு நிர்வாக முறை. அத்தகைய ஒரு அமைப்பு ராஜவன்ஷியை அதிகாரமுள்ளவராக ஆக்கியிருக்கலாம்.
ரமேஷ் சந்திரன் ஒரு மார்க்ஸிய நம்பிக்கையாளனாக இளமையில் இருந்தவன். கோட்பாடுகளைக் கற்பதில் ஆர்வமுடையவன். அவனுடைய மார்க்ஸியக் கோட்பாட்டு நம்பிக்கையைத் தகர்ப்பது வரலாற்று நிகழ்வுகள் அல்ல. அவன் நேரடியாகப் பங்குகொண்டு அறியும் அதிகாரமையச் செயல்பாட்டில் உள்ள அபத்தம்தான். மார்க்ஸியம் உருவாக்க நினைப்பதும் அதேபோன்ற இன்னொரு வகை மைய அதிகாரத்தையும் அதிகாரிவர்க்கத்தையும்தானே? அதுவும் அடிப்படையில் மக்களை விரும்பியவண்ணம் வரையறை செய்துகொண்டு வசதிப்படி கையாளும் ஓர் அமைப்பாகத்தானே இருக்கமுடியும்?
மக்களை நோக்க நோக்க மார்க்ஸிய அரசியல் செயல்திட்டத்தை அர்த்தமில்லாத ஒன்றாக உணரும் ரமேஷ் சந்திரன் மார்க்ஸிய இலட்சியவாதத்தை மேலும் மேலும் ஒளிமிக்கதாக உணர ஆரம்பிக்கிறான். தன்னலமில்லாத மக்கள்சேவை என்பதே மார்க்ஸின் சாராம்சம், தொழிலாளிவர்க்கப்புரட்சியெல்லாம் அல்ல என அவன் உணரும் ஒரு தருணம் நாவலில் மின்னிச் செல்கிறது. அந்தப்புள்ளியில் இருந்துதான் அவன் ராஜவன்ஷியையும் காந்தியையும் நோக்கிச் செல்கிறான்.
ரமேஷ் சந்திரனின் ஆழத்தில் காந்தியின் குரல் இளமையிலேயே பதிவாகியிருக்கிறது என்று நாவல் காட்டுகிறது. காந்தியவாதியும் இலக்கிய ஆர்வலருமான அவனுடைய தந்தை இந்நாவலில் முக்கியமான கதாபாத்திரம். அதிக விவரணைகள் அளிக்காமல் அக்கதாபாத்திரம் செதுக்கப்பட்டுள்ளது. காந்தியின் இலட்சியவாத அறைகூவலை ஏற்றுக்கொண்டவர், ஆனால் அதைப் பின்பற்றிச் செல்லும் உலகியல் துணிவில்லாமல் தங்கி விட்டவர். அந்தக் குற்ற உணர்ச்சியால் ஒவ்வொருநாளும் தன்னை சோதனை செய்து மேம்படுத்திக்கொண்டே செல்பவர்.
தன் கிராமத்தில் இருந்து டெல்லிக்கு வருகிறார் ரமேஷ் சந்திரனின் தந்தை. காந்தி சமாதியில் ஒரு முறை தியானம் செய்வதற்காக மட்டும். அதன்பின் டெல்லியிலேயே உயிர்துறக்கிறார். இந்த முடிவுடன் ரமேஷ் சந்திரன் தனக்காக நாவலில் தேடிக்கொள்ளும் முடிவு இணைவது கவனிக்கத்தக்கது. ரமேஷின் அப்பா அவருடைய அந்தரங்கமான ஒரு பயணம் வழியாக காந்திசமாதி வரை வந்திருக்கிறார். அவரது நிறைவுக்கணம் அது. தன்னுடைய வழியினூடாக அந்த இடத்துக்குச் செல்ல ரமேஷும் முயல்கிறான் போல.
இன்னொரு வகையில்கூட பார்க்கலாம். ரமேஷ் அவனுடைய தந்தையிடம்தான் தொடங்குகிறான். அவர் தன் காலகட்டத்து இலட்சியவாதமான காந்தியத்தால் ஈர்க்கப்பட்டது போல அவன் தன் காலகட்டத்து இலட்சியவாதமான மார்க்ஸியத்தால் ஈர்க்கப்படுகிறான். ஆனால் அவரைப்போலவே அவனும் நதியில் இறங்காமல் கரையில் கால்நடுங்க காத்து நிற்கிறான். அந்தக் கலக்கம்தான் இந்நாவல் முழுக்கப் பலகோணங்களில் விவரிக்கப்படுகிறது. ஆர்வமும் விரக்தியும் எழுச்சியும் கசப்பும் மாறி மாறி வரும் அவன் மனநிலை அதையே காட்டுகிறது.
நேர்மாறானவர் ராஜவன்ஷி. அவர் நதியில் குதித்து நீந்துபவர். கடைசிக் கணம் வரை நம்பிக்கை இழக்காத போராளி அவர். அவரிடம் தன் தந்தை சென்றிருக்கக்கூடிய தூரத்தை அடைந்திருக்கக் கூடிய ஆளுமையை ரமேஷ் சந்திரன் காண்கிறான் போலும். சின்ஹாவிடம் நான் உங்கள் மகனைப்போல என பி.ஏ.கிருஷ்ணன் சொல்லும் இடம் அவரது கட்டுரையில் வருகிறது. தன் தந்தையின் தயக்கத்தில் இருந்து ராஜவன்ஷியின் துணிச்சலை நோக்கித் தாவுவதற்கான யத்தனத்தில் இருக்கும் ரமேஷ் சந்திரனை நாவலில் காண்கிறோம்.
அவனுடைய தாவல் இந்நாவலில் அவன் எழுதும் நாவல் வழியாகவே நிகழ்கிறது. தொட முடியாத தூரத்தை எம்பி எம்பிப் பார்த்துவிட்டு கற்பனையால் தொட்டுவிடும் குழந்தைபோல அவன் இருப்பதையே அவன் எழுதும் இந்நாவலில் காண்கிறோம். அந்த மயக்கநிலையையே ‘கலங்கிய நதி’ என வாசிக்கலாம்.
*
வடிவ ரீதியாக முழுமை பெறாது போன பல விடுபடல்களை விமர்சன நோக்கில் சுட்டிக்காட்டமுடியும். ஒன்று இந்நாவலில் ஆரம்பத்தில் ப்ரியாவின் கடிதங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ப்ரியாவின் ஆளுமை பிறகு விரியவில்லை. இந்நாவலில் ப்ரியா அவளுடைய மரணத்தைத் தவிர்த்து வகிக்கும் பங்கும் தெளிவுறவில்லை.
அதேபோல நாவல் மீது வாசிப்பை முன்வைக்கும் இரு வாசகர்கள் சுபீரும் ஹெர்பர்ட்டும். இவர்கள் பி.ஏ.கிருஷ்ணன் இந்திய ஆங்கில நாவல்களை வாசிக்கும் வாசகர்களுக்கான இரு மாதிரிகளாக உருவகித்தவர்கள் என்பது தெளிவு. இந்தியா மேல் அக்கறைகொண்ட ஆங்கிலேய வாசகர் ஒருவர். ஆங்கிலத்தில் புழங்கும் இந்திய வாசகர் ஒருவர். இவர்களில் சுபீரின் மனநிலை சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய இந்திய ஆங்கில அறிவுஜீவியின் நம்பிக்கையற்ற சுயஏளனம் மிக்க விமர்சன நோக்கு அது. ஆனால் ஹெர்பர்ட் இந்நாவலுக்கு எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. அவர் அறிமுகமாகும் அந்த நீண்ட காட்சியின் நிகழ்ச்சி நாவலுக்கு மேலதிகப் பங்களிப்பேதும் அளிக்கவுமில்லை.
இந்நாவலின் கட்டுமானத்தில் உள்ள மூன்று ஓட்டங்களான ரமேஷுக்கும் சுகன்யாவுக்குமான உறவு, அதிகார அமைப்புடன் ரமேஷ் கொள்ளும் மோதல், அஸ்ஸாமின் பிரச்சினை ஆகியவை சரியாக ஒன்றுடன் ஒன்று இணையவில்லை. ஒன்று இன்னொன்றைத் தீர்மானிக்கும் விதம் நாவலில் நிகழவில்லை. மூன்றும் ரமேஷ் சம்பந்தமானவை என்ற இணைப்பு மட்டுமே உள்ளது. ரமேஷின் உளவியல் வழியாக மூன்றையும் வாசகன் இணைத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.
அவ்வப்போது வரும் சில சித்தரிப்புப் பிசிறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. உதாரணமாக, கோஷை மீட்கச்செல்வதற்காக வரும் அந்த முதியவரை அறிமுகம் செய்யும்போது அவரும் மனைவியும் படுக்கையில் இருக்கும் காட்சியை ரமேஷ் சாளரம் வழியாகப் பார்ப்பது என்ன நோக்கத்தை நிறைவேற்றுகிறது? இந்திய ஆங்கில நாவல்கள் பலவற்றில் இந்தவகையான பாலியல் சார்ந்த சில துள்ளல்கள் நிகழ்வதை வாசிக்க நேர்கிறது. இதற்கான கட்டாயம் ஏதும் உண்டா தெரியவில்லை.
முற்றிலும் நவீனச்சூழலில் காந்தி நுட்பமான அரசியல் பிரக்ஞையுடனும் நடைமுறை நோக்குடனும் மீட்டெடுக்கப்பட்டிருப்பதையே இந்நாவலின் முக்கியமான சாதனையாக நினைக்கிறேன். உணர்ச்சிவேகங்கள் இல்லாமல் காந்தியைக் கண்டடைகிறது இந்நாவல். காந்தியைத் தீர்வாக முன்வைக்கவில்லை. காந்தியக் கோட்பாடுகளை சிரமேற்கொள்ளவில்லை. ஒரு சாமானியன் அகழ்வாய்வில் கிடைத்த வைரத்தைத் தொட்டுப்பார்ப்பது போல ஆர்வத்துடனும் அச்சத்துடனும் அவநம்பிக்கையுடனும் பரவசத்துடனும் காந்தியத்தை மெல்லத் தொட்டு நோக்கி நின்றுவிடுகிறது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் எளிதில் அந்தக் குழம்பிய மனநிலையுடன் தன் அகத்தை அடையாளம் காணமுடியும். அந்த நம்பகத்தன்மையே இந்நாவலின் சாதனை.