அன்புள்ள அய்யா,
கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது. இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள்? கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தா மனம் அலைபாயும் இல்லீங்களா? பிறகு எப்பிடி முழு மனமும் தெய்வீகத்துல போகும். ஒரு வேளை காமமும் தெய்வீகம்னு சொல்ல வராங்களா? அப்பிடி இருந்தாலும், ரெண்டு பொண்ணுங்க மூணு ஆண்கள்னு இருக்கற சிற்பங்கள், அது எதை விளக்க வருது? இப்படிப்பட்ட சிற்பங்கள், வடக்கில் மட்டும் இல்லாமல், நம்ம தெற்கிலும் ஒரு மிகப் பெரிய கோவிலில் இருக்குதுங்க அய்யா. சரியான புகைப்பட ஆதாரத்துடன் சீக்கிரம் உங்களுக்கு அனுப்பறேன். ஏதோ ஒரு மிகப் பெரிய மர்மம் இந்தக் காமத்துக்கும் நம்ம தெய்வீக நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கற மாதிரி இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?
தாழ்மையுடன்,
சரவணகுமார்
அன்புள்ள சரவணகுமார்,
கோயில்களில் உடலுறவுச்சிலைகள் மட்டும் இல்லை. வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தைக் காட்டும் பலவகையான சிலைகள் உள்ளன, அவற்றில் உடலுறவுச்சிலைகளை மட்டும் தவிர்ப்பது இந்து மதத்தின் வழக்கம் அல்ல. வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு ஒரு முழுமையை உருவகிக்கவே அது முயல்கிறது. ஆகவே துறவுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் காமத்துக்கும் இருக்கும்.
இந்தச்சிலைகள் இரு பெரும் மரபுகளைச் சார்ந்தவை. நிலவளம் பெருகுவதற்காகச் செய்யப்படும் வளச்சடங்குகள் [விருஷ்டி அனுஷ்டானங்கள்] தொன்மையான பழங்குடி வாழ்க்கையிலேயே உள்ளவை. அவை போகத்தை செழிப்பின், உயிர் உற்பத்தியின் குறியீடாகக் காண்கின்றன. இறைவனின் லீலையின் கண்கூடான ஆதாரம் அது எனப் புரிந்து கொள்கின்றன.
ஆகவே சூரியனை வழிபடும் சௌர மதத்தில் அச்சிலைகள் பெருமளவு இருந்தன. பின்னர் சௌரம் வைணவத்தில் கலந்தபோது அச்சிலைகள் விஷ்ணு ஆலயத்திலும் இடம்பெற்ற்றன.
காமத்தை மனிதனின் இயற்கையான ஆற்றலாக எண்ணுபவை தாந்த்ரீக மதங்கள்.அந்த ஆற்றலை அறிவதும் அறிவதன் மூலம் கடந்துசெல்வதுமே மானுட உண்மையின் உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின் வழியாகக் கண்டன. அந்தத் தாந்த்ரீக மரபும் பாலியல் சிற்பங்களை உருவாக்கியது. சைவ, சாக்த ஆலயங்களில் அவை காணப்படுகின்றன.
இந்து மதம் நீங்கள் மன ஒருமை கொண்டு கற்போடு வாழ்வதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நன்னெறித்தொகுப்பு அல்ல. அது வரலாற்றில் பல்வேறு வழிபாட்டுமரபுகளும் சிந்தனைகளும் பின்னிக்கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை.
எளிமையான கேள்வியை மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள். அந்தச் சிற்பங்கள் மட்டும் இல்லையேல் உங்களுக்கு மன ஒருமை கைகூடி விடுகிறதா? உங்கள் மனதில் காமம் எந்நேரமும் கொந்தளித்துக்கொண்டுதானே இருக்கிறது? அது நிகழாத, வேறெதிலாவது உங்கள் மனம் நிலைத்திருக்கக்கூடிய, எத்தனை மணிநேரம் வாய்க்கிறது உங்கள் வாழ்க்கையில்?
காமச்சிற்பங்கள் தேவை இல்லை என்றால் கோயிலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்று சொல்லலாமே.அவர்களைப்பார்த்தால் காமசிந்தனை வரலாமே. ஏன் பெண்கள் வராவிட்டால்கூட மல்லிகை மணம் வந்தாலே போதுமே? இசை, ஓவியம் எதுவாக இருந்தாலும் அதே காம ஈர்ப்பு நிகழலாமே?
மன ஒருமை எதையும் இறுக்கமாக மூடிவைப்பதன் வழியாக நிகழ்வதில்லை. பிரச்சினை மனதில் இருக்கிறது, வெளியே அல்ல. கொஞ்சம் கண்மூடினால் அந்தச் சிற்பங்களை விட பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமாக உங்கள் மனதில் பிம்பவெளி ஓடுவதை நீங்களே காணலாம்.
எல்லாம் கடவுளின் லீலை என நம்பி ஏறிட்டே பார்க்காமல் நேராகச் சென்று கும்பிட்டு மீள முடிந்தால் அதைச்செய்யுங்கள். அது பக்தியின் வழி. நம்மில் தொண்ணூறு சதவீதம் பேர் அதையே செய்கிறார்கள்.
அது ஏன் என அறிவதே அதைக் கடந்து செல்லும் வழி. அதுவே ஞானத்தின் பாதை. அனைத்தையும் ஒரு மாபெரும் கட்டுமானத்தின் பகுதிகளாகக் காணும்போது உருவாகும் முழுமை நோக்கு மூலமே நாம் விடுபடுகிறோம்.
இதைப்பற்றி முன்னரே நிறைய எழுதியிருக்கிறேன். இணைப்புகளை வாசியுங்கள்.
ஜெ
மேலதிக வாசிப்புக்கு முந்தைய கட்டுரைகள்
எம்.எஃப்.ஹுஸெய்ன், இந்து தாலிபானியம்
தாந்த்ரீகமும் மேலைநாடுகளும்: கடிதம்
தாந்திரீகம் பற்றி