ஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு

திருவையாறின் ஐயாறப்பர் கோவிலின் சுவரோவியங்கள், உட்கருவறையை ஒட்டியுள்ள குறுகலான இரண்டாம் திருச்சுற்றின் சுவரில் காணப்படுகின்றன. இங்கு ஓவியங்கள் இரண்டு அடுக்குகளாக வரையப்பட்டுள்ளன. அவை 17 அல்லது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால ஓவியங்கள். இருநூறு அடி தொடராக அமைந்த இந்த ஓவியங்கள் தலவரலாற்றினை விவரிப்பவை.

நம்முடைய வரலாறு அதிகமும் பதிவு செய்யப்பட்டது இது போன்ற ஓவியங்களிலும் புடைப்புச் சிற்பங்களிலுமே. ஏற்கனவே பட்டீஸ்வரத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன் வரை இருந்த ஓவியங்களை இன்று அதன் கும்பாபிஷேகத்திற்காக நடந்த புதுப்பித்தலில் இழந்துவிட்டோம்.

திருவையாற்றில் 1970-ல் ஆலயப்புதுப்பிப்பு என்ற பெயரில் நிறைய ஓவியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்பொழுது எஞ்சியவற்றையும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இங்கு உள்ள கோவில்களில் புதுப்பித்தல் என்பது இந்த ஓவியங்களின் மீது கண் கூசும் வண்ணங்களைக் கொண்டு சாதாரண சுவரோவியர்கள் சம்பந்தமில்லா புதிய வடிவங்களைத் தீட்டிவிடுவதாகவே நடைபெறுகின்றது.

இவற்றை அழிப்பதால் நாம் இழப்பது சில ஓவியங்களை மட்டுமில்லை, நம்முடைய அழிவற்ற மரபையும் அதன் கலைச்செல்வங்களையும்தான். அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது.

உடனடியாக ஏதேனும் செய்தாகவேண்டும். ஒரு கூட்டு மனு அனுப்பலாம். நீதிமன்றத்தடைகூடப் பெறலாம். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனப் பொறுப்பில் உள்ளது. சாதாரணக் கோரிக்கைகள் அவர்களைச் சென்று அடையாது.

ஏ.வி.மணிகண்டன்

http://www.livingincolors.com/

முந்தைய கட்டுரைகாந்தியின் இன்றைய முக்கியத்துவம்
அடுத்த கட்டுரைகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1