பொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ மனிதர்களாலோ ஆபத்து அருகே வந்தது என உணர்ந்தால் மொத்த மீன்கூட்டமும் சிறு அம்புகள் போல சேற்றுப்பரப்பில் தைத்து வாலைச் சுழற்றி நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டுவிடும். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளுக்கு ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயர் ஊரில் உண்டு. கலக்குவது ஒரு ராஜதந்திர உத்தி. கலங்கலிலேயே வாழும் உயிரினங்கள் அக்கலங்கிய சூழலில் நீடிக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றன.
முந்நூறாண்டுகளுக்கு முன்னர் சின்னஞ்சிறு தீவைச்சேர்ந்தவர்களான பிரிட்டிஷார், இந்தியா என்ற பிரம்மாண்டமான நிலப்பரப்பைக் கையகப்படுத்தியபோது அது அவர்களுக்குப் புரிந்துகொள்ளமுடியாத மாபெரும் சிக்கலாக இருந்தது. மேலே மலர்கள் மலர்ந்திருக்க ஆழத்தில் கொடிகள் பின்னி அடர்ந்த தாமரைக்குளம் போல.
[தகழி]
ஏற்கனவே இருந்த மன்னராட்சிமுறை என்பது இந்தச் சிக்கலான அமைப்பு உருவானபோது அதனுடன் சேர்ந்து தானும் உருவாகி வந்த ஒன்று. இந்தியாவின் பண்டைப்பேரரசுகள் முதல் முகலாய ஆட்சி வரை இருந்த சமூக அமைப்பு என்பது அரசதிகாரம் மிக மேலோட்டமாக மட்டுமே செயல்படும் தன்னிச்சையான கிராம சமூகங்களின் கூட்டு. அதன் நிர்வாகம் மையப்படுத்தப்படாதது. நீதி, நிதி நிர்வாகங்களுக்கும் அரசுக்கும் அனேகமாகத் தொடர்பே இல்லை. அந்த அமைப்பு தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொண்டு வந்து செயல்பட்டுவந்தது.
பிரிட்டிஷார் அவர்களின் சிறிய தீவில் இருந்த மையஅரசாங்கம் சார்ந்த நிர்வாகத்தை இங்கே கொண்டுவர முயன்றார்கள். அதன்மூலம் மொத்த அதிகாரமும் தங்கள் கையில் இருக்குமென நினைத்தனர். அவர்கள் இந்த நாட்டின் நிதிச்சுழற்சியை முழுமையாகக் கட்டுப்படுத்த ஆசைப்பட்டார்கள். அதற்கு மையத்தில் குவியக்கூடிய ஒரு நிர்வாக முறையை இந்த நாட்டின்மீது உருவாக்க முயன்றனர். ஆனால் அவர்கள் முன் விரிந்து கிடந்தது அதிநுண்ணிய நரம்புச்சிக்கல்கள் கொண்ட ஒரு பெரும் உயிர்ப்பரப்பு என விரைவிலேயே கண்டுகொண்டார்கள்.
அதை நிர்வாகம்செய்ய அவர்கள் ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்தனர். அதன் மேற்பரப்பை மட்டுமே அவர்கள் பொருட்படுத்தினர். மேற்பரப்பைத் தங்கள் விருப்பப்படி அதிகாரத்தைக் கொண்டு மாற்றியமைத்தனர். ஆழத்தின் சிக்கல்களை அந்த மேல்மட்டத்தைக்கொண்டு தங்கள் விருப்பபடி கட்டமைத்துக்கொண்டனர். இந்தியாவின் அடித்தள மக்களின் வாழ்க்கையும் பிரச்சினைகளும் பிரிட்டிஷார் உருவாக்கிய அதிகார மேல்கட்டுமானத்தால் புரிந்துகொள்ளப்படவில்லை. நேர்மாறாக அந்த அதிகார மேல்கட்டுமானம் என்ன நினைத்ததோ, எதை உருவகித்துக் கொண்டதோ அதற்கேற்ப அடித்தளம் முரட்டுத்தனமாகத் திருத்தியமைக்கப்பட்டது.
அதாவது தங்களைப்பற்றி அரசும் அதிகாரவர்க்கமும் என்ன சொல்கிறார்களோ அதற்கேற்பப் பொதுமக்கள் தங்களை மாற்றிக்கொண்டாக வேண்டியிருந்தது. மிகச்சிறந்த உதாரணம், நம் சாதியமைப்பு. ஓரளவு ஆர்வமுள்ள ஓர் ஆய்வாளர் இந்திய சாதியமைப்பை ஆராயப்புகுந்தால் அதன் கொடிச்சிக்கலில் கால் சிக்கி மூச்சுத்திணறுவார். இங்கே உண்மையில் சாதி என ஒன்று இல்லை. ஒரு சாதி என நாம் நினைப்பது பல சாதிகளின் கூட்டு. அந்த உபசாதி ஒவ்வொன்றும் மேலும் மேலும் கூட்டங்களாக, கோத்திரங்களாக, குழு அடையாளங்களாகப் பிரிந்துகொண்டே செல்லும். சில இடங்களில் அப்பிரிவு இட அடிப்படையிலானது. சில இடங்களில் அது இனக்குழு அடையாளம் கொண்டது. சில இடங்களில் தொழில் சார்ந்தது.
[ஸ்ரீலால் சுக்லா]
இன்றுவரை சாதிகளின் உட்பிரிவுகள் உருவான விதம் மற்றும் அவற்றுக்கிடையேயான உறவுமுறைகளை ஆய்வாளர்கள் குறிப்பிடுமளவுக்குக்கூட ஆவணப்படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு வசதியான முறையில் சாதிகளை வரையறை செய்தார்கள். முதல் இந்திய சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பில் அவர்கள் புரிந்துகொண்ட விதத்தில் சாதிகளை வகுத்தார்கள். சமானமான சாதிகள் என அவர்கள் நினைத்தவற்றை ஒற்றைப்பெரும் சாதியாக ஆக்கினர்.
மக்கள் அந்த அடையாளப்படுத்தலை ஏற்றுக்கொண்டால்தான் அரசுடன் தொடர்புகொள்ளமுடியும் என்ற நிலை வந்தது. அரசியலுக்கு அது தேவையாகியது. ஆகவே அந்த அடையாளங்கள் மேல்தளத்தில் நிலைத்தன. ஆழத்தில் பழைய அடையாளங்கள் நீடித்தன. இந்தியர் ஒவ்வொருவருக்கும் ஒரு சாதி என்பது பல பிரிவுகளின் தொகை என்று தெரியும். ஆனால் அரசும் பாடப்புத்தகங்களும் வேறு மாதிரி சொல்வதையும் அவர் அறிவார். இந்தியர்களுக்கே உரிய முறையில் ஒவ்வொரு இந்தியரும் அரசுக்கும் அரசியலுக்கும் ஒரு சாதியுணர்ச்சியையும் தன் அந்தரங்கத்துக்கென ஒரு சாதியுணர்ச்சியையும் கொண்டிருக்கிறார். அரசுக்குத் தலையையும் சமூகத்துக்கு வாலும் காட்டுகிறார்.
இது சாதியைப் புரிந்துகொள்வதை இன்னமும் சிக்கலாகியது. ஒருவரின் சாதி பொதுவாக தேவர் என சொல்லப்படும். ஆனால் அவர் தன்னை அந்தரங்கமாக மறவர் என்றே உணர்வார். தேவரில் இன்னொரு பிரிவாகக் கருதப்படும் கள்ளர் அவருக்கு முற்றிலும் அன்னிய சாதியே. அதேசமயம் மறவர்கள் நான்குபேர் சேர்ந்தால் அவர் கொண்டையங்கோட்டையா, ஆப்பநாடா, செம்புநாடா என்பதே கேள்வியாக இருக்கும்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்த ‘மேலிருந்து அடையாளப்படுத்தும்’ வழிமுறை ஆட்சியாளர்களுக்குச் சாதகமானது. அவர்கள் தாங்கள் ஆட்சி செய்கிறோம் என்ற நிறைவை அடையமுடியும். நிர்வாகம் நடக்கும். ஆனால் இந்த வழிமுறை மக்களுக்கு மிகமிக எதிர்மறையானது. அவர்களுக்கும் அரசுக்கும் பெரும் இடைவெளி இருக்கும். அவர்களைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாதவர்களால் அவர்கள் ஆளப்படுவார்கள். ஆகவே ஆட்சியுடன் சம்பந்தப்படும் ஒவ்வொருமுறையும் நுணுக்கமான ஆனால் தீவிரமான சிக்கல்கள் உருவாகியபடியே இருக்கும். அச்சிக்கல்களைப் புரிந்துகொள்ளாமல் முரட்டுத்தனமாக நடவடிக்கை எடுக்கும் அரசு அச்சிக்கல்களை இன்னும் ரத்தம் கசிவதாக ஆக்கும். சமூகம் பேரழிவுகளை நோக்கிச் செல்லும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முழுக்க இதுதான் நடந்துகொண்டிருந்தது. அவர்களால் இந்திய வேளாண்மையை, இந்திய கைத்தொழில்முறையை எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் மேல்மட்டம் சார்ந்த நிர்வாகம் இங்குள்ள நீர்ப்பகிர்வுமுறை, சந்தைகள், தொழிற்குழுக்கள் அனைத்தையும் அழித்தது. விவசாயிகளையும் நெசவாளிகளையும் பிச்சைக்காரர்களாகத் தெருவுக்குக் கொண்டுவந்தது.
பெரும் பஞ்சங்கள் நிகழ்ந்தபோதும், கலவரங்கள் நிகழ்ந்தபோதும்கூட தங்கள் ஆட்சிமுறையின் அடிப்படைச் சிக்கல்களை பிரிட்டிஷார் உணர முன்வரவில்லை. தங்கள் புரிதல்களையும், அவற்றின் அடிப்படையிலான தீர்வுகளையும் அடக்குமுறை மூலம் சமூகம் மீது சுமத்தினார்கள். ஒருகட்டத்தில் இந்த மாபெரும் தேசத்தின் மொத்த மக்கள்தொகையில் நாலில் ஒருபங்கைக் கொன்றழித்தது அவர்களின் ’நிர்வாக’ முறை.
இந்தியாவில் பிரிட்டிஷார் உருவாக்கிய நிர்வாக முறையும், அதிகார அமைப்பும் அப்படியே சுதந்திரத்துக்குப் பின்னரும் நீடித்து இன்றும் உள்ளது. அதை நாம் இன்றும் பிரிட்டிஷ் நிர்வாகமுறை என உச்சிமேல் வைத்துக் கொண்டாடுகிறோம். இத்தனை நூற்றாண்டுகளில் அது மாற்றமுடியாத ஒன்று என்று தோற்றம் கொண்டுள்ளது. இந்த முறை மக்களுக்கு எதிரானது, மாற்றப்படவேண்டியது எனக் கண்டறிந்த ஒரே அரசியல் தலைவர் காந்தி மட்டுமே. தன் கிராமசுயராஜ்யம் என்ற முதல் கொள்கை அறிக்கை முதல் மரணம் வரை காந்தி அதைச் சொல்லிக்கொண்டே இருந்தார். இந்திய சமூகத்திற்கு ஏற்ப மையமற்ற ஒரு நிர்வாக முறைக்காக அவர் வாதாடினார்.
[கிருத்திகா]
ஆனால் மற்ற அரசியல்வாதிகள் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர்கள் ஆங்கிலக்கல்வி கற்றவர்கள், பெரும்பாலும் உயர்மட்டத்தினர். பலர் பிரிட்டிஷாரால் அவர்களின் நிர்வாகம் மற்றும் நீதிமுறைக்காக பாரிஸ்டர் அல்லது ஐ.சி.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். ஆகவே பிரிட்டிஷாரின் இந்தியப்புரிதலில் பிழை ஏதும் இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. மேலும் அவர்கள் ஒருபோதும் அதிகாரம் தங்கள் கைகளை விட்டு விலகுவதை விரும்பவில்லை. நல்ல நோக்கங்கள் கொண்ட நேரு போன்றவர்கள்கூட நல்லது செய்வதற்கு முழு அதிகாரம் தன் கையில் இருக்கவேண்டுமென நினைத்தார்கள். பிரிட்டிஷாரின் அதிகார இயந்திரத்தைத் தாங்கள் எடுத்துக்கொண்டால் போதும் என நினைத்தார்கள். அதிகார வர்க்கம் மேலும் பெருகியது.
பிரிட்டிஷார் உருவாக்கிய அதிகாரவர்க்கம் அவர்களின் நிர்வாகமுறையைச் சார்ந்த மனநிலை கொண்டது. அவர்கள் கீழே இருந்து எதையுமே தெரிந்துகொள்வதில்லை. மேலிருந்து கீழ் நோக்கி பேசக்கூடியவர்கள்தான் அவர்கள். அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுவதெல்லாம் இந்திய அதிகார மேல்கட்டுமானத்தின் விதிகளும் இயங்குமுறைகளும் மட்டுமே. அதன் சிடுக்குகளையும் சமரசங்களையும் ஊழலையும் அவர்களே கற்றுக்கொள்கிறார்கள். அதன் பின் அங்கே இருந்தபடி கீழ் மட்டத்தைக் ‘கட்டுப்படுத்துவதை’ மட்டுமே அவர்கள் செய்கிறார்கள்.
சென்ற இருபதாண்டுக்காலத்தில் தான்சார்ந்த துறையின், அத்துறை ஆளும் மக்களின் அடித்தளம் பற்றிய புரிதல்கொண்ட ஒரே ஒரு உயரதிகாரியைக்கூட நான் சந்தித்ததில்லை. அவர்களுடன் இடையீடு கொள்ளும்போது ஆரம்பத்தில் ஒருவகை பிரமிப்புதான் இருக்கும். ‘இப்படிக்கூட இருக்கமுடியுமா, இது சாத்தியமா’ என . மெல்லமெல்ல ‘இது இப்படித்தான்’ என்ற புரிதலை வந்தடைகிறோம். உயரதிகாரிகள் அனைவருமே ஒரே வார்ப்புதான். தாங்கள் கொண்டுள்ள அதிகாரம் பற்றிய உள்ளார்ந்த குதூகலமும், தனக்கு மேலே உள்ள அதிகாரம் பற்றிய பதற்றமும் ஒரேசமயம் கொண்டவர்கள். தான் ஏறி அமர்ந்துள்ள யானை என்பது பெருங்காட்டைத் தன்னுள் கொண்டுள்ள மிருகராஜன் என அறியாமல் தன் துரட்டிக்கம்பிலும் கட்டளையிலும் இயங்கும் இயந்திரம் எனக் கற்பனை செய்துகொள்ளும் அசட்டுப் பாகன்களைப் போன்றவர்கள் அவர்கள்.
பெரும்பாலும் நம் உயரதிகாரிகள் முற்றிலும் செவியற்றவர்கள். ஒரு எளிய நிதர்சனத்தைக்கூட அவர்களிடம் எந்தத் தொழிற்சங்கவாதியும், சமூகசேவகரும், அரசியல்வாதியும், சமூக ஆய்வாளரும் புரியச்செய்துவிட முடியாது. ஆனால் நம்பவேமுடியாத அளவுக்குத் தன்னம்பிக்கை கொண்டவர்கள். தங்களை அறிவுஜீவிகள் என்றும் ராஜதந்திரிகள் என்றும் கற்பனை செய்துகொண்டிருப்பவர்கள்.
[இந்திரா பார்த்தசாரதி]
கலங்கியநதியில் பொத்தைமீன்கள் போல பிரம்மாண்டமான ஒரு அதிகாரவர்க்கம் இன்று நம் மீது உள்ளது. கலங்கலுக்குள்ளேயே வாழக் கற்றுக்கொண்டவர்கள். பிரச்சினை என்றால் கலக்கிவிட்டுக் கலங்கலுக்குள் பதுங்கிக்கொள்வதை மட்டுமே வழிமுறையாகக் கொண்டவர்கள். இந்த அமைப்பில் எந்த ஒரு பிரச்சினைக்கும் அரசியல் தீர்வு என்பதே சாத்தியமல்ல. ஏனென்றால் பிரச்சினைகளுக்கும் அதிகார அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த அதிகார அமைப்பில் உள்ள எவருக்கும் பிரச்சினையின் விளைநிலம் பற்றி அதன் உள்ளோட்டங்கள் பற்றி எதுவுமே தெரியாது. ஆகவே செய்வதற்கு ஒன்று மட்டுமே உள்ளது, கலங்கச்செய்தல்.
கலக்குவதற்கு அவர்களுக்கென்றே உரிய வழிகள் உள்ளன. அதை விதிமுறைகள், நடைமுறைகள் என இரு பெரும் பிரிவுகளாக வகுத்து வைத்திருக்கிறார்கள். ‘சிவப்பு நாடா’ என அதை நாம் அழகிய குறியீடாக ஆக்கிவிட்டிருக்கிறோம். எந்த நிபுணராலும் ஊகித்துவிட முடியாத அளவுக்குச் சிக்கலானவை அவை. ஒன்றில் இருந்து ஒன்றாக பிரிந்து பெரிய வலையாக ஆகி நம்மைச் சூழ்ந்துகொண்டு முற்றிலும் செயலற்றதாக ஆக்கிவிடக்கூடியவை. எந்த ஒரு சிக்கலான பிரச்சினையையும் சிவப்பு நாடா எத்தனை காலம் வேண்டுமானாலும் கலக்கி கண்ணுக்கு முன் இருந்து மறைத்துவிடும்.
இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தொழிற்சங்கச் சூழலில் இதை மீண்டும் மீண்டும் கண்டுவந்தவன் நான். இந்திய யதார்த்தங்களில் மிகமிக முக்கியமான இதைப்பற்றி இந்திய இலக்கியங்களில் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. காரணம் இதை இந்த நிர்வாக அமைப்புக்குள் இருப்பவர்களே சரிவர எழுதமுடியும். உள்ளே இருப்பவர்களில் இலக்கிய ரசனையும் இதைக் காணக்கூடிய அக விலக்கமும் கொண்டவர்கள் மிகமிக அபூர்வம்.
[ஆதவன்]
என் பார்வையில் இந்தியாவின் இலக்கியப்படைப்புகளில் இந்த இந்திய யதார்த்தத்தை மிகச்சிறப்பாகச் சொன்ன நாவல் தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய ‘ஏணிப்படிகள்’ என்ற நாவல். மன்னராட்சியில் குமாஸ்தாவாக நுழைந்து, சுதந்திர ஆட்சியில் தலைமைச்செயலராக ஓய்வுபெறும் கேசவபிள்ளை என்ற கதாபாத்திரம் வழியாக இந்தியாவின் நிர்வாக அமைப்பின் எல்லா அபத்தங்களையும் நுட்பமாகச் சுட்டிச்செல்கிறார் தகழி.
மலையாளத்தில் மேலும் இரு நாவல்களை நான் சுட்டிக்காட்டுவேன். மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் ‘யந்திரம்’. இன்னொன்று இ.வாசு எழுதிய ‘சிவப்புநாடா’. யந்திரம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் இந்திய ஆட்சிப்பணிக்குள் நுழைந்து அந்த அர்த்தமற்ற மாபெரும் யந்திரத்தின் ஒரு திருகாணியாக ஆவதை, அவன் தன் மனசாட்சியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுவதைச் சித்தரிக்கும் முக்கியமான நாவல். சிவப்புநாடா ஒரு குமாஸ்தாவின் கதையைச் சொல்கிறது. அர்த்தமற்ற ஒரே வேலையை மீளமீளச் செய்வதன் சலிப்பில் அறிவும் நுண்ணுணர்வும் மழுங்கி சுயநிந்தனையும் கசப்பும் கொண்ட மனிதனாக உருவாகும் எளிய அடித்தட்டு ஊழியனின் அவலம் அது.
இந்த அவலத்தை நையாண்டியுடன் விவரிக்கும் பல பகுதிகள் கொண்ட நாவல் என ஸ்ரீலால் சுக்லாவின் ‘தர்பாரி ராகம்’ என்ற நாவலைச் சொல்லலாம். வேறு இந்திய, இந்திய ஆங்கில நாவல்கள் இருக்கலாம். நான் அவ்வகையில் அதிகம் வாசித்ததில்லை.
தமிழில் இந்த வகையான நாவல்களுக்கு முன்னோடிகள் இருவர். கிருத்திகா இந்திய அதிகார அமைப்பின் உள்ளேயே இருந்தவர். அவரது கணவரான பூதலிங்கம் இந்தியாவின் மதிப்புமிக்க உயரதிகாரி. இந்திய அதிகார அமைப்பை நுணுக்கமான கிண்டலுடனும், உருவகங்கள் மூலமாகவும் விமர்சிக்கும் தர்மஷேத்ரே, புகைநடுவினில் போன்ற நாவல்கள் தமிழில் இவ்வகைமைக்கான தொடக்கப்புள்ளிகள்.
[பி.ஏ.கிருஷ்ணன்]
இந்திரா பார்த்தசாரதி அறுபதுகளிலேயே தன்னுடைய ‘சுதந்திரபூமி’ ‘தந்திரபூமி’ என்ற நாவல்கள் மூலம் இந்திய அதிகார அமைப்பின் அபத்தமான இயக்கத்தை சித்தரித்திருந்தார். இந்திரா பார்த்தசாரதியின் கூறுமுறை நேரடியான, மெல்லிய கிண்டல் கலந்த, விமர்சனம் கொண்டது. உளவியல் பகுப்பாய்வுமுறையை ஒரு புனைவு உத்தியாக எடுத்தாண்டவர் இந்திரா பார்த்தசாரதி. இந்திரா பார்த்தசாரதியின் உளவியல் பகுப்பாய்வுமுறை, நேரடியான விமர்சனம் இரண்டையும் தன்னுடைய படைப்புகளிலும் தொடர்ந்த ஆதவன் அவரது ‘காகித மலர்கள்’ நாவலில் அதிகாரம் செயல்படும் அபத்தத்தின் சித்திரத்தை அளித்திருந்தார்.
பி.ஏ.கிருஷ்ணன் அவரே சொல்லிக்கொள்வது போல ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர். அவரது இரண்டாவது நாவலான ‘கலங்கியநதி’யின் தமிழாக்கத்தை ஒரு தமிழ்நாவலாக நான் வாசிக்கிறேன். கிருத்திகா முதல் நீண்டு வரும் ஒரு இலக்கியப்போக்கில் முக்கியமான ஒரு நிகழ்வு என இந்நாவலை நினைக்கிறேன்.
[மேலும்]