அன்புள்ள ஜெயமோகன்,
நலம் தானே? உங்களை ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன் ஹூஸ்டனில் சந்தித்த போது உங்களது ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் படித்திருந்தேன் (விஷ்ணுபுரம் – நண்பர் சண்முகத்தின் நல்ல ஆலோசனை). அதைப் படித்து முடித்த பிரமிப்பு நீங்குவதற்குள்ளாகவே உங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது நல்ல அதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அதிகம் தமிழில் படிக்காமல் இருந்த நான், அந்தச் சந்திப்புக்குப் பிறகு உங்களது அனைத்துப் புத்தகங்களையும் (ஏறக்குறைய – கொற்றவை தவிர்த்து) ஒருமுறையாவது படித்து இருக்கிறேன். உங்களது எழுத்தின் அசுர வேகம் திகைக்க வைக்கிறது. அடிக்கடி எழுத வேண்டும் என்று நினைப்பேன். உங்கள் நேரத்தை ஏன் விரயம் செய்வானேன் என்றே தவிர்த்து விடுவேன்.
நான் இந்தியாவை விட்டு வந்து இப்போது இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது – அவ்வப்போது வரும் போது, அம்மாவின் மனதிற்காக, இந்த மாமா வீடு, அந்த அத்தை வீடு என்று போய் வருவதற்குள் பதினைந்து நாள் விடுப்பு போய் விடும். அப்புறம் மீண்டும் பெட்டியைக் கட்டிக் கொண்டு இங்கே கிளம்பி வந்து விடுவது என்று வாழ்க்கை. இதே நிலைதான், என்னுடன் இருக்கும் பல நண்பர்களுக்கும்! நீங்கள் அண்மையில் எழுதிய “அருகர்களின் பாதை’ பயணத் தொடர் அற்புதம். என்னைப் போன்ற பலர் கண்டிராத ஒரு இந்தியாவை நீங்கள் அறிமுகப்படுத்தினீர்கள். உங்களது கவித்துவமான நடையும், விரிந்து/பரந்த வரலாற்று நோக்கும், என்னைப் போன்ற பலருக்கு இந்தியாவில் ‘ஊர் சுற்றும்’ ஆசையை வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய ஊர் சுற்றல், நம்மை நாமே அறிந்து கொள்ளும் பயணத்தில் ஒரு முக்கியமான நிலை என்று உங்கள் பயணக் குறிப்புகள் உணர்த்தின. அழகான கட்டிடங்கள், இடிந்த கோவில்கள், வறண்ட பாலை வனங்கள், அனைத்துமே நம் வரலாற்றை, நமக்கு உணர்த்தும் கட்டிட ஆவணங்கள். கலையை ரசிக்கும் கண்களைத் திறக்க வல்லவை.
மேலை நாட்டுப் பயணப் புத்தகங்கள் அழகிய சித்திரங்களோடு, வரலாற்றுக் குறிப்புகளோடு, வரை படங்களோடு, பயணக் குறிப்புகளோடு வெளி வருகின்றன. தனிப்பட்ட முறையில், என் பயணங்களில், அத்தகைய புத்தகங்கள் பெருமளவு உதவி இருக்கின்றன. இந்தப் பயணத்தில் நீங்கள் எழுதியதை உங்களையன்றி வேறு யாரும் எழுதிவிட முடியாது. இந்தக் கட்டுரைகள் நல்ல முறையில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டால், இது இந்தியப் பயணக் கட்டுரைகள் என்ற பிரிவில் இல்லாமல், ஒரு புதுப் பிரிவையே (Genre) உண்டுபண்ணும் என்று நினைக்கிறேன். இந்தத் தொடரை நீங்கள் அவசியம் மிகச் சிறந்த முறையில் வெளியிட வேண்டும் என்பதே என் விருப்பம். இது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் – இந்தியாவின் விஸ்தாரத்தை அறிந்து கொள்ள உதவும். இந்திய வரலாறு எழுத்தால் எழுதாத வரலாறு. கதைகளாகவும், புராணங்களாகவும் மட்டுமே பெரும்பாலும் இருந்து வரும் வரலாறு. நீங்கள் தேடித் பார்த்து படமெடுத்த கல் கோட்டைகளும், கோவில்களும், சிற்பங்களுமே, நம் எழுதப்படாத வரலாற்றின் பருப்பொருள் ஆவணங்கள். இந்த ஆவணங்கள் பொருளாதார நோக்கில் விரைவில் அழிக்கப்பட்டுவிடும். நீங்கள் எழுதிய கட்டுரைகள், படிக்கும் மக்களிடேயே இவற்றைப் பாதுகாக்கும் உணர்வையும் வளர்க்கும்.
என்னடா, என்னைப் போன்ற எழுத்தாளனை, ஒரு பயண நூலாசிரியனாகச் சொல்கிறானே என்று தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பலமுறை யோசித்துப் பார்த்தபின் குறை கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். நீங்கள் இன்னும் நூறு பயணங்களை மேற்கொள்ள (சுயநலத்துடன்) வேண்டி முடிக்கிறேன்.
அன்புடன்,
ராஜா
அன்புள்ள ராஜா.
எப்படியும் நானே வருடத்துக்கு நான்கு பெரிய பயணங்களைச் செய்பவன். அதை எழுதுவது நண்பர்களுக்குத் தேவையாகிறது. ஆகவே எழுதுவதே ஒரே வழி.
அருகர்களின் பாதை நூலாக வரும்.
ஜெ
இனிய ஜெமோ..
அருகர் பாதை படித்தேன்.
தங்கள் உதவியால் சமண மதம், இந்தியாவின் நிலப்பரப்பு, தொன்மை, வரலாறு, கலை, அழகியல் ஆகியவற்றை சிறிதாவது அறிந்து கொண்டேன். இக்கட்டுரையாலும், கலையாலும், கோவில்களின் சிற்ப அழகாலும் எழுந்த மன எழுச்சி இன்னும் அதிகமாக இந்தியாவைப்பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டுகிறது.
முப்பது நாட்களில் முடிவடைந்ததில் வருத்தம் இருந்தாலும், இது முடிவல்ல… “என் வாழ்வின் தேடுதலின்” புது தொடக்கம். இனி பயணம், ஆராய்ச்சி, மனித வாழ்க்கை என பல பரிமாணங்களை உங்கள் எழுத்துக்களில் பார்க்க இருக்கிறேன்.
மிக்க நன்றி .
நன்றி… தாஜ்மஹாலை கட்டியவனுக்கல்ல, காட்டியவனுக்கு !!
உமா
ப்ளோரிடா
அன்புள்ள உமா,
நன்றி.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பெரிய புரிதல் இடைவெளி உள்ளது. பெரிதும் நகர் சார்ந்தவர்கள் நிறைந்த, ஆங்கிலம் படித்தவர்களால் ஆன, நம்முடைய ஊடகம் இந்தியாவைப்பற்றி ஒரு பிழையான சித்திரத்தை அளிக்கிறது. சுவாரசியம், திகைப்பு ஆகியவற்றுக்காக கதைகள், பெரும்பாலும் அவை எதிர்மறையான சித்திரங்கள், நாம் அந்த பிரமைகள் வழியாகவே இந்தியாவை அறிந்திருக்கிறோம்..
நேரடியான பயணங்கள் அந்தச் சித்திரத்தை மாற்றும். இந்தியா வரும்போது நீண்ட சில பயணங்களைத் திட்டமிடுங்கள்.
ஜெ