8888
அன்புள்ள கிறிஸ்,
உங்கள் குறிப்புகளை கதைக்கான கதைச்சுருக்கக் குறிப்பு என்று சொல்லலாம். பொதுவாக கதைகளுக்கு இப்படி எவரும் எழுதிக்கொள்வதில்லை. சினிமாவுக்குத்தான் இப்படி எழுதிக்கொள்ளவேண்டும். ஏனென்றால் சினிமாவுக்கு அடிப்படையில் ஒரு வடிவகச்சிதம் முன்னரே நிபந்தனையாக ஆக்கப்பட்டிருக்கிரது. அப்போதுகூட சினிமாவையும் நேரடியாக கதையாகவே எழுதிக்கொள்வதே நல்லட்ர்கு என்பதே என்னுடைய எண்ணம்.
இந்தக்குறிப்புகளை கதையாக ஆக்கவேண்டுமென்றால் முக்கியமாகச் செய்யவேண்டியது இந்தச் சம்பவத்தை உங்கள் மனக்கண்ணில் ‘காணுங்கள்’ அப்படி கண்டதை நுட்பமாகவும் முழுமையாகவும் வாசகனாகிய எனக்குச் சொல்ல முயலுங்கள்.
உங்கள் குறிப்புகளிலேயே போதிய தகவல்கள் உள்ளன. ‘அடிமைப்பெண்’ணில் இருந்தே ஆரம்பிக்கலாமே. ‘எம்ஜிஆர் வாளை உருவினார். சூரைமீன் அறுப்பதற்கான கத்தியைக்காட்டிலும் கொஞ்சம்தான் பெரிசு. தீட்டிக்கொள்ளவில்லை. ஏற்கனவே அது கூர்மையாகத்தான் இருந்தது. சவேரியார் காலை நீட்டினான். முன்னால் இருந்தவன் திரும்பிப்பார்த்தான். ”போவட்டு போவட்டு” என்று சொல்லிக்கொண்டு சவேரியார் காலை மடக்கிக் கொன்டான். அந்த குறுகிய இருண்ட கொட்டகைக்குள் அப்படி நெடுநேரம் இருக்க முடியாது என்று தோன்றியது. ஒரு கர்ப்பபைக்குள் இருப்பதுபோல இருந்தது. கர்ப்பபைக்குள் நாநூறு பேர். எல்லாரும் சகோதரர்கள்….ஒருவகையில் அப்படித்தான். ஒரே கடற்கரை, ஒரே சாதி, ஒரே ரத்தம்…அப்படியென்றால் கண்ணெதிரே ஓடிக்கொன்டிருக்கும் அந்தக் காட்சிகள் என்ன? ஏதோ பூர்வஜென்ம நினைவுகளா?
சவேரியார் எழுந்தான். அவன் தலைமேலேயே அடிமைப்பெண்ணின் ஒரு துண்டு ஓடியது. குனிந்துகொன்டே வெளியே நடந்தான். ஒரு பீடிக்காக வாயும் நெஞ்சும் ஏங்கின….”
இப்படி சவேரியாராக உங்களை கற்பனைசெய்துகொண்டு அவன் எண்ணங்கள் உணர்வுகள் எல்லாவற்றையும் அவன் காணும் காட்சிகள் மற்றும் அவனது செயல்பாடுகளுடன் இணைத்து சொல்லிக்கொன்டே செல்லுங்கள்.அதுதான் கதை. கதையின் தொழில்நுட்பம் மிக எளிது. அதில் வாழ்க்கையைக் கோன்டுவருவதும் தேடலை நிகழ்த்துவதும் மட்டுமே கடினமான சவால்கள்.
**
ஒன்றுசெய்கிறேனே.இந்த குறிப்புகளை அப்படியே பிரசுரிக்கிறேன். என் வாசகர்கள் எவராவது ஆர்வமிருப்பின் எழுதி அனுப்பட்டும். பலர் பல கோணங்களில் எழுதியதைப்பார்க்கையில் உங்களுக்கு இதன் சாத்தியங்கள் தெரியவருமே. நீங்கள் உங்கள் வடிவத்தை எழுத அது உதவியாக இருக்கும் அல்லவா?
முழுக்கதையைப்பற்றிய என் கருத்தை பின்னர் விரிவாக சொல்கிறேன். அது ஒரு நல்ல கதையாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
ஜெ
***
வாசக நண்பர்கள் இந்த அத்தியாயத்தை மட்டும் ஏன் தங்கள் மொழிநடையில் எழுதி அனுப்பக்கூடாது? ஒருவாரத்தில் எழுதியனுப்பலாம். அதைவைத்து இந்தவிஷயத்தை நாம் விரிவாக விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்
ஜெ
நண்பர் கிறிஸ்டோபர் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார். கதை என்னும் தொழில்நுட்பம் குறித்தது இந்த வினா. கதைத்தொழில்நுட்பம் என்பது இலக்கியத்தின் முதல்படி– முதல்கட்ட பயிற்சி. அது பழகி தேர்ச்சிகொள்ளவேண்டிய ஒன்று. அதில் ஆரம்ப தயக்கங்களும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கே உரிய சிக்கல்களும் உண்டு
கதைத்தொழில்நுட்பத்தை முயற்சிசெய்யும்போது நம்முடைய பலமும் பலவீனமும் நமக்கே தெரியும். சிலரால் நல்ல வசனங்களை எழுத முடியும்.சிலரால் ந்அல்ல சித்தரிப்பை அளிக்க முடியும்.சிலரால் உணர்ச்சிகளைச் சொல்ல முடியும். அந்த சாத்தியங்களை நாம் எழுதி எழுதித்தான் கண்டுபிடிக்க முடியும். அது நம்மை நாமே கண்டுபிடிப்பது போல.
இந்தக் கடிதம் மூலம் அப்பயிற்சியை சிலர் செய்துபார்க்க முடியும் .அது கிறிஸ்டோபருக்கும் உதவியாக இருக்கும் என்று தோன்ருகிறது.
88888
கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…