எழுத்தாளருக்கு வணக்கம்,
எழுத்தாளர் ஜெயகாந்தன் புத்தகங்கள் மூலமாகத்தான் எனக்கு இலக்கியம் அறிமுகம். I shaped my conduct based on his writings. So, he is more than a writer to me. இத்தனைக்கும் அவருடைய ஒரு சில புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். எனக்கு இலக்கிய நண்பர்கள் யாரும் இல்லை. தெரிந்த நண்பர்களுக்கு சிறுவர்மலர், வாரமலர் போன்றவையே இலக்கியம். தற்செயலாக ஏதோ இணையத்தில் தேடி உங்கள் தளத்திற்கு வந்து சேர்ந்தேன். உங்கள் மூலமாகத்தான் எனக்குத் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் அசோகமித்திரன், கி.ரா. பற்றித் தெரிந்தது.
தமிழின் முக்கியமான நாவல்கள் ஓரளவு படித்திருக்கிறேன். வாசிப்புப் பழக்கம் வந்தபிறகுதான் நிறைய மனக்கொந்தளிப்பிற்கு ஆளாகியிருக்கிறேன். இப்போது சில மாதங்களாக வாழ்கையின் நிலையின்மை, அர்த்தமின்மை போன்ற சிந்தனைகளே என் மனதை நிறைத்துள்ளன, அதனால் எனக்கு நிறைய விஷயங்களில் சோர்வும் வாழ்க்கையில் சலிப்பும் வந்துவிட்டது. நன்றாக ஞாபகம் இருக்கிறது, “மானுடம் வெல்லும்” படிக்கும்போதுதான் இது ஆரம்பம் ஆனது, தொடர்ந்து சில போர் திரைப்படங்கள் பார்த்தேன்.
என்னால் இப்போது எதையும் சலிப்பின்றி செய்யமுடிவதில்லை. I am stagnant now and even don’t show interest in my career. என்னுடைய நண்பர்களை இப்போது பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. நான் இலக்கியத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லையா? How to suppress these thoughts?
நேரம் இருந்தால் பதில் அனுப்பவும்.
அசோக் குமார்
அன்புள்ள அசோக் குமார்,
இலக்கியம் உண்மையில் உணர்ச்சிச் சமநிலையையும், லௌகீகத்தில் இருந்து ஒரு மெல்லிய விலக்கத்தையும் உருவாக்கும். நாம் அதற்கு முன் ஆவேசப்பட்ட,கொந்தளித்த பல விஷயங்களைப் புறவயமாகப் பார்க்கக் கற்றுக்கொள்வோம். நம்மை நாமே கவனிக்க ஆரம்பிப்போம்.
ஆனால் சிலருக்கு ஆரம்ப நிலையில் ஒரு கொந்தளிப்பையும் உள்நோக்கிச் செல்லலையும் உருவாக்கலாம். அது அவர்களின் ஆளுமையைச் சார்ந்தது. அதற்கும் இலக்கியத்துக்கும் நேரடியான சம்பந்தமில்லை என்றே நினைக்கிறேன். புதிய விஷயங்களைச் சந்தித்ததும் அவற்றை உள்வாங்கிச் செரித்துக்கொள்ள முடியாமையின் விளைவு அது, அவ்வளவுதான்.
நாம் நம் அகஇருப்பை தத்துவார்த்தமாக வகுத்து வைத்திருக்கிறோம். நியாயப்படுத்தல்கள், விளக்கங்கள், கொள்கைகள் என ஏராளமாக நம்முள் உள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் இவற்றைக்கொண்டே நாம் புரிந்துகொள்கிறோம். இது சரி, இது தவறு, இது இப்படி, இது இதனால் என வகுத்திருக்கிறோம். அதாவது நாம் நம் உள்ளத்துக்குள் ஒரு கருத்தியல் கட்டுமானத்தைக் கட்டி வைத்திருக்கிறோம்.
பெரும்பாலானவர்களுக்கு இந்தக் கட்டுமானம் சூழலால், அம்மா அப்பாவால், பள்ளியால் அளிக்கப்படுகிறது. அவர்களுடைய கருத்தியல் கட்டுமானம் அவர்களுக்கே தெரியாது. அதை நம்பி அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய அந்தக் கருத்தியல் கட்டுமானம் நேரடி அனுபவங்களால் அசைவுறும்போது அவர்கள் நிலைகுலைகிறார்கள். கொந்தளிக்கிறார்கள். குழம்பிப்போகிறார்கள்.
ஆனால் ஓர் இலக்கியவாசகனுக்கு நல்ல இலக்கியப்படைப்புகளால் அவனுடைய அகக் கருத்தியல் கட்டுமானம் அசைக்கப்படுகிறது. அவன் நம்பிய எதுவும் உண்மையில் அப்படி இல்லையா என்ற எண்ணம் எழுகிறது. அவனும் கொந்தளிப்பும் குழப்பமும் அடைகிறான்.
அந்தக் கொந்தளிப்பையும் குழப்பத்தையும் வெல்ல ஒரே வழிதான் உள்ளது. சிந்தனை. வாசிப்பவற்றை வாழ்க்கையுடன் சேர்த்து சிந்தனை செய்து அடுக்கி மெல்லமெல்ல புதிய ஒரு அகக்கருத்தியல் கட்டுமானத்தை உருவாக்கிக்கொள்வது மட்டும்தான் அது. அதாவது உங்கள் உள்ளுக்குள் உள்ள கட்டிடம் நொறுங்கிவிட்டது. அதைப்பொறுக்கி இன்னும் வலுவாக புதிய ஒன்றைக் கட்டிக்கொள்ளவேண்டும். இலக்கியம் அவ்வாறுதான் உங்களை வளர்க்கும்.
அவ்வாறு சிந்தனை உங்களுக்குள் நிகழும்போது அதை ஒருபோதும் அன்றாட வாழ்க்கையுடன் இணையவிடக் கூடாது. அது உங்கள் அகத்துக்குள் ஒரு பகுதியில் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்க வேண்டும். அதன் கொந்தளிப்புகளை ஒரு போதும் அதனுடன் சம்பந்தப்படாதவர்களிடம் காட்டக்கூடாது. அது நம் புறவாழ்க்கையை, தொழிலை, படிப்பை பாதிக்க அனுமதிக்கக் கூடாது.
இந்த அக உலகம் ஒரு அந்தரங்கவிஷயம் என்றும் அதற்கும் புற உலகுக்கும் தொடர்பே இல்லை என்றும் திரும்பத்திரும்ப எண்ணிக்கொள்வதே அதற்கான முதல் வழி. அன்றாட வாழ்க்கையின் செயல்களின்போது அதை மட்டுமே கவனிக்கவேண்டும்.
இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எல்லாரும் செய்வதுதான். ஒவ்வொரு இளம் மனதுக்குள்ளும் பாலியல் கொந்தளிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதைப் புறவாழ்க்கையுடன் சம்பந்தப்படாத அக உலகமாக வைத்துக்கொண்டு வாழ எல்லாரும் பழகியிருக்கிறார்களே. எவருக்கும் தொழிலோ படிப்போ அதனால் பாதிக்கப்படவில்லையே? இதை மட்டும் பழகிக்கொள்ளமுடியாதா என்ன?
இந்த அக-புற சமநிலையைக் கற்றுப் பழகிக்கொண்டே ஆகவேண்டும். வாழ்க்கைக்காக மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய கலைகளில் இதுவே முதன்மையானது. பல சமயம் ‘நான் சிந்திப்பவன், ஆகவே கொஞ்சம் வேறு மாதிரித்தான் இருப்பேன்’ என நாமே நம்மைப்பற்றி எண்ணிக்கொள்ளும் ஒரு சுயபாவனையே இதற்குத் தடையாக ஆகிறது.
என்னைப்பொறுத்தவரை என்னை நான் பல ஆளுமைகளாகப் பகுத்துக்கொண்டு ஒவ்வொரு ஆளுமையிலும் என் செயலை முடிந்தவரை தீவிரத்துடன் முழுமையுடன் செய்யவே முயல்கிறேன். அந்தச் சமநிலையையே முக்கியமான பண்பாக நினைக்கிறேன். சாதாரண மத்தியவர்க்கக் குடும்பத்தலைவனாக, அரசூழியனாக, தொழிற்சங்கவாதியாக என் ஆளுமைகளை நான் எழுத்து வாசிப்பு சிந்தனையுடன் இணைத்துக்கொண்டதே இல்லை.
வாசிப்பினால் நீங்கள் நிலைகுலைவதாகச் சொன்னீர்கள். நான் எழுத்தினால் நிலைகுலைந்ததே இல்லை.
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 2, 2012