தற்கொலையும் தியாகமும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

தற்கொலை தியாகமாவது நீங்கள் சொன்னது போல் அதன் நோக்கத்தினால் மட்டுமே… ஆனால், அந்த நோக்கத்தை யார் அளவிடுவது.

9/11 “தீவிரவாதிகளின்” நோக்கத்தை எதிர்மறை என்கிறோம். ஒரு பாலஸ்தீனியராகவோ அல்லது ஈரானியராகவோ இருந்தாலும் இதையே சொல்வோமா?

தற்கொலை இங்கே மிகப்பெரிய அரசியல்… தொண்டர்களின்/சாமானியர்களின் தற்கொலை மூலம் ஆதாயம் தேடமுயலாத கட்சிகள் இந்தியாவில் எங்கும் கிடையாது. இந்தக் கோணத்தில் தான் முத்துக்குமாரின் தற்கொலையை விமர்சனம் செய்பவர்களுடன் நான் ஒத்துப்போகிறேன்.

தற்கொலை உன்னதமாக்கப்படுவதை விட வியாபாரமாக்கப்படுவதே நம் ஊரில் அதிகம். எல்லா விழுமியங்களும் காலப்போக்கில் மாறவேண்டும். தற்கொலை தியாமாக்கப்படுவதும் அதில் சேரும் என்றே நினைக்கிறேன்.

பிகு: வடக்கிருத்தலையும், உண்ணாவிரதங்களயும் தற்கொலை என்பதை விட, ஒரு ஆன்ம விரதமாகவே பார்க்கிறேன் (காரணம்: கணநேர உணர்ச்சி மூலம் இதை நடத்திவிட முடியாது). நான் மேலெ எழுதிய கருத்துக்கள் இதில் அடக்கமில்லை.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

பாலஸ்தீனியரோ ஈரானியரோ மனசாட்சியைக்கொண்டு மதிப்பிடுவார் என்றால் உண்மையை உணர முடியும். வெறியைக்கொண்டு மதிப்பிட்டால் உண்மை விலகிச்செல்லும்

இதற்கு புறவயமான அளவுகோல்கள் இல்லை.

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் “தற்கொலை தியாகமாகுமா” பதிவு படித்தேன். அந்தக் கருத்துக்குத் தொடர்பான ஒரு ஸ்பானிய திரைப்படம் உண்டு: “Mar Adentro”. உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம். உங்கள் பதிவு படித்த பின்னர் தோன்றும் கேள்வி: Ramón Sampedro ஏன் வடக்கு என்ற வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது தான்!

அன்புடன்,
-கார்த்திக்

***

அன்புள்ள கார்த்திக்,

மிக எளிமையான பதில். அவருக்கு அவரது வாழ்க்கை முடிந்துவிட்டதென தோன்றவில்லை. அதற்கு நம் மரபில் திருஷ்ணை என்று பெயர். அதுவே வாழ்வதற்கான விருப்பை, இன்பத்துக்கான தேடலை, வெற்றிக்கான துடிப்பை நம்முள் நிறைக்கிறது.

அவர் உதிர, முழுமையாக மறைய விழையவில்லை. நினைவில் நீடிக்க, இன்னொருவகையில் வாழ விரும்புகிறார். உறவுகளை உதறவில்லை, உறவுகளை நுண்வடிவில் நீடிக்க விரும்புகிறார்.

திருஷ்ணை என்பது ஒரு மாபெரும் பிரபஞ்ச சக்தி. ஒவ்வொரு உயிர்த்துளியிலும் ததும்பும் பிரம்மம் அது என்கிறது நம் மரபு.

அந்த திருஷ்ணை அத்தனை உயிர்களுக்கும் கடைசிக் கணம் வரை நீடிக்கும். ஒரு கணம் கூட உயிர்களால் அதில் இருந்து விலக முடியாது. அதுதான் பிரபஞ்சசக்தியின் மாபெரும் மாயை.

அந்த மாபெரும் மாயையை மிகமிகச் சிலரால் மட்டுமே வெல்ல முடியும். ஒருவர் பிரபஞ்ச இயக்கத்தின் வலையை உணரும்போதே தன்னுடைய இடத்தையும் உணர்கிறார். அந்நிலையில் மட்டுமே அவரால் அந்த மாயையை வெல்ல முடியும். இருப்பதைப்போலவே இல்லாமலாவதும் இயல்பே என உணர முடியும்.

அவர்களாலேயே தானாக உதிரவும் முடியும்.

ஜெ

***

திரு ஜெ

தற்கொலை தியாகமா ? என்னும் தலைப்பில் தாங்கள் அளித்த பதில் தற்போது என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்கொலை செய்தவர்கள் பேயாய் அலைவார்கள் என்பது கிறித்தவ மற்றும் பாலைவன மதங்களின் நம்பிக்கை என்பது போல் எழுதியிருந்தீர்கள்.

இதன் தத்துவப் பின்னணி பற்றி சில வருடங்கள் முன்பு ஆராய்ந்தேன். கீதை இரண்டாம் அத்தியாயத்தில் தான் விடை கிடைத்தது. நம்முடைய சேதன பகுதி ‘நிலையானது’, “அசையாதது”, “எங்கும் இருப்பது ” போன்ற பண்புகள் கொண்டது என விவரிக்கிறது. ஆனாலும் உடலுக்கு உடல் மாறுவது எனவும் கூறுகிறது. அசையாத ஒன்று எப்படி பிரயாணிக்கும் ?

இதற்கு விவேகானந்தர் ஒரு பதிலும் ஓஷோ ஒரு பதிலும் கூறுகின்றனர். விவேகானந்தர் “the atma has you as the center and infinity as the periphery” என்று அத்வைத கருத்தை முன் வைக்கிறார். ஓஷோ தன கீதை உரையில் ” பிரயாணிப்பது ஆத்மா அல்ல . அதனை பிடித்துக் கொண்டிருக்கும் சூக்கும மற்றும் காரண சரீரங்களே என்று கூறி விடுகிறார். ஆக, பேய்கள் என விவரிக்கப் படுபவை உண்மையில் இந்த பிரேத சரீரங்கள் தான். இதை மிகச் சில அறிஞர் மட்டுமே உணர்ந்த பேருண்மை என இறுமாப்புடன் சுற்றிய போது, கருட புராணம் இதை பாமர மக்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு சென்று விட்டது என அறிந்தேன்.

கைவல்ய நிலையை அடைந்தவர்கள் உடலை நீத்தல் என்பது வேறு. பாமரர் செய்வது வேறு.முன்னது முதிர்ச்சி. அதில் இயற்கையை மீறுதல் இல்லை. அவர்கள் இயற்கையை வென்றவர்கள். பின்னது இதன் எதிர் நிலை. சமீபத்தில் கீதா பிரஸ்ஸின் மாத இதழான ‘ கல்யாண கல்பதரு ‘ வில் ஆண்டு இதழ் வந்தது. அதில் பத்திரிக்கை செய்தி மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் பெறப்பட்ட செய்திகள், அவற்றின் தத்துவப் பின்னணி பற்றி இருநூறு பக்கங்கள் இருந்தன. இந்த பிரேத சமாசாரம் முற்றும் உண்மையே என நிரூபிக்கும் புத்தகம்.

வருண தருமத்தில் கூட சத்திரியன் போரிலோ, அந்தணன் தவத்திலோ, உயிர் துறந்தாலும் அது துர்மரணம் அல்ல என்றே உள்ளது. கிருஷ்ணர் போர் உனக்கு திறந்து கிடக்கும் சுவர்க்க வாயில் என்று அருச்சுனனுக்கு கூறுகிறார்.

வெங்கட்

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 18 – டோலாவீரா
அடுத்த கட்டுரைமலர்கள்