அழகு-ஒருகடிதம்

அன்புள்ள ஜெ,

ஆனால் இந்த அழகு… பிதற்றச்செய்கிறது இந்த பிரம்மாண்டம். இத்தனை பேரழகையும் மனிதன் எதற்காகத் தேடுகிறான்? அவனுள் இருக்கும் அழகுக்கான தாகம் இத்தனை பிரம்மாண்டமானதா என்ன? இத்தனை கட்டிய பின்னும் அது அப்படியே இன்னும் எஞ்சுகிறதா என்ன?

போன வருடம் தனியனாக ஃப்ளோரன்ஸில் சுற்றிக்கொண்டிருந்த போது, பளிங்கு தேவாலயங்கள், பிரம்மாண்டமானதும், நுண்ணிய வேலைப்பாடு கொண்டதுமான அதன் தூண்கள், உயர்ந்த, ஓவியங்கள் செறிந்த விதானங்கள், உயிர்ப்பான ஒரு கனத்தில் உறைந்துவிட்டன போன்ற ஊணர்ச்சி ததும்பும் சிற்பங்கள் என ஒவ்வொன்றையும் சூழல் நினைவே அற்று முழுமையாக அனுபவித்துப் பார்த்துக்கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு மென்சோகம், விரக்தி கலந்த வெறுப்பு மனத்தைப் பீடிக்க பாதியிலேயே திரும்பி விடுதி அறைக்குள் வந்து படுத்துக் கொண்டேன். மகிழ்ச்சியாக இருக்கும் போதே வந்த இந்த மனக்குழப்பத்தின் காரணம் புரியாமல் தவித்தேன்.

அங்கே இருந்த நான்கு நாட்களும், பார்க்கும் ஒவ்வொரு சிற்பமும் முந்தைய சிற்பத்தை விட பேரழகும், முழுமையும் இருப்பதாகத் தோன்றும். “இதற்கு மேல் எதுவும் இல்லை, ஐயோ இப்படி கண்ணை குருடாக்குகிற அழகா? உயிரைக் குழைச்சு செதுக்கி இருக்கிறானே படுபாவி சிற்பி” என்று தனிமையில் வாய்விட்டு புலம்பிய படியே இருந்தேன். அமைதியாக இருப்பதை விட அந்தப் புலம்பல் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

பின்னர் எதேர்ச்சையாக இணையத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது இந்த விஷயம் தெரியவந்தது.

இது ஒரு வகைக் ‘கலைப்பித்து’. ஆம், மகத்தானதும், அதியழகும், அற்புதமுமான கலைப் படைப்புகளையோ, இயற்கை காட்சியையோ ஒரே இடத்தில் தொடர்ந்து காண நேரும்போது, மனம் களிவெறியில் பிதற்றும் ஒரு வகை நோய்க்கூறு. இதற்கு “ஃப்ளோரன்ஸ் சிண்ட்ரோம்” என்று பெயர். இதனால் இதயம் அதிவேகமாகத் துடிப்பதும், குழப்பமும், உருவெளிக்காட்சிகளும், மயக்கமும் வரும். ஃபிரஞ்சு எழுத்தாளர் ஸ்டெண்தால் என்பவர் 1817 இல் ஃப்ளோரன்ஸ் நகரைச் சுற்றிப் பர்க்கையில், குறிப்பாக அங்குள்ள ‘உஃபிஸி’ கலைக்கூடத்தை (இங்கே பிக்காசோ, லியனார்டோ டவின்ஸி, மைக்கேல் ஏஞ்சலோ உள்ளிட்ட பெரும் கலைஞர்கள் அத்தனைபேரின் மிகச்சிறந்த படைப்புகளும் உள்ளது) பார்வையிடும் போது இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டதாக தனது Naples and Florence: A Journey from Milan to Reggio என்னும் நூலில் பதிந்துள்ளார். அதனால் இது ‘ஸ்டெண்தால் சிண்ட்ரோம்’ என்றும் அழைக்கபடுகிறது.

ஈரோட்டிலிருந்து அதிகாலையில் நீங்கள் பயணத்தைத் தொடங்குகையில், நண்பர் விஜயராகவன் வீட்டிலிருந்து ஈரோடு பேருந்து நிலையம் வரையில் உங்கள் வண்டியில் தொற்றிக்கொண்டு வந்ததில் நானும் இந்தப் பயணத்தில் மூன்று கிலோமீட்டர் ஒட்டிக்கொண்டதாக சந்தோஷப்பட்டுக் கொண்டேன் :) அருகர்களின் பாதையில் தொடர் கட்டுரையின் புகைப்படங்களைப் பார்க்கையில், ஏதாவது ஒரு கோயிலில் நான் நிச்சயம் மனச்சமன் குலைந்திருப்பேன் என்றே நினைத்துக் கொண்டேன். இப்போது தோன்றுகிறது, அப்படியே குலைந்தால் தான் என்ன? சாதாரண மனத்தின் கற்பனை எல்லைக்கு வெளியே காலத்தைத் தாண்டி நிற்கும் அற்புதங்களின் முன் பித்தானால் தான் என்ன? பெயர், ஊர், குடி என தனது அடையாமாக எதையும் வெளிக்காட்டாமல், ஒரு புதிர்போலத் தன் படைப்புக்குள் ஒளிந்து கொண்டு வசீகரிக்கும் கலைஞனின் இருப்பை, நம் மனம் சுயத்தை மறந்து பித்து கொள்ளும் ஒவ்வொரு தருனமும் மீண்டும் மீண்டும் நியாயம் செய்யும் என்று தோன்றுகிறது.

நன்றி,
பிரகாஷ்.
www.jyeshtan.blogspot.com

முந்தைய கட்டுரைமானுடம் வெல்லும், வானம் வசப்படும்
அடுத்த கட்டுரைகாவல்கோட்டம் – கடிதம்