தியானம் கடிதங்கள்

வணக்கம் குரு.,

 
        தியானம் என்ற சொல்லே மிகவும் வசீகரமானது! உங்கள் கட்டுரையில் (கடிதமே தற்போது கட்டுரை வடிவில் தானே அமைகிறது!!) உள்ள விளக்கம் மிகவும் பயனுள்ளது. தியானம், யோகம் சார்ந்து ஏற்படும் இவை போன்ற கேள்விகளுக்கு உங்களின் “பதஞ்சலி யோக சூத்திரத்திற்க்கு ஒரு எளிய விளக்கம்” ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தியது. தாங்கள் குறிப்பிட்டது போல் அதன் தொடர்ச்சியை ஆரம்பித்தால் மேலும் இவை போன்ற கேள்விகளுக்கு அதிலேயே பதில் கிடைக்கும். அதன் முன்னுரையில் குறிப்பிட்ட விளக்கமே பெரும் தெளிவை ஏற்படுத்தியது. நீங்கள் அளிக்கும் உரை வரும் தலை முறையினருக்கு நீங்கள் குறிப்பிட்டது போல் “யோகத்தை புரிந்து கொள்வதற்க்கும், யோகத்தை புரிவதற்க்கும்” பெரும் பயனுள்ளதாக அமையும். 
 
        ஆன்மீகம் சார்ந்த எந்த கேள்விகளுக்கும், கலந்துரையாடலுக்கும் நீங்கள் விரிவான பதிலையே ஒவ்வொரு முறையும் அளிப்பது நீங்களும் குருவின் வழிகாட்டலில், முறையான பாதையில் சென்றதற்க்கான சான்று. வேறு ஒரு எந்த இலக்கியவாதிகளுக்கும் இல்லாத ஒரு மேன்மையை நீங்கள் ஆன்மீகத்தில் பெற்றுள்ளது குருவின் அனுக்கிரகம் தான் என்பதில் எந்த ஐயமுமில்லை. நான் புதிதாக சொல்வதற்க்கில்லை தங்களின் நேர்மையான, செயலூக்கமான பணியாலே நீங்களும் குருவின் இடத்தில் இருப்பதனால் தான் மானசீகமாக பலர் உங்களை குருவாக ஏற்றுகொண்டுள்ளார்கள். குருவும் சீடனும் நூலில் உங்களின் முன்னுரை வாசிக்கும் போது கூட அதற்க்கு அனைத்து தகுதியும் உடையவர் தாங்கள் தான் என எண்ணிக்கொண்டேன். தங்களின் தொடர் பணியால் என் போன்ற மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பதற்க்கு மிகவும் நன்றியுடன்., மகிழவன்.


அன்புள்ள மகிழவன்,

தியானத்தைப்பற்றி எழுதுவதில் உள்ள முக்கியமான சிக்கல் என்னவென்றால் தியானத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று அதைப்பற்றி விவாதிக்கக் கூடாது என்பதே. இதை எல்லா தியான ஆசிரியர்களும் சொல்வார்கள். ஏனென்றால் தியானம் சிந்தனைக்கு நேர் எதிரானது. சிந்தனையே தியானத்தின் பெரிய தடை. எந்த அளவுக்கு தியானத்தைப்பற்றி பேசுகிறோமோ அந்த அளவுக்கு நாம் அதை தருக்கப்படுத்துகிறோம். அந்த அளவுக்கு நாம் தியானத்தில் இருந்து விலகிச் செல்லவும் ஆரம்பிக்கிறோம். இது மிக விபரீதமான ஒரு சுழற்சி. தியானத்தை பற்றி பிறரிடம் சொல்வது , நமக்குநாமே சொல்லிக்கொள்வது எல்லாமே தியானத்துக்கு ஊறு விளைவிப்பவை. இந்த எல்லைக்குள் நின்றபடித்தான் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது

ஜெ 

 

தியானம்

முந்தைய கட்டுரைஅள்ளிப்பதுக்கும் பண்பாடு,கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம்.1,மெல்பர்ன்