காவல்கோட்டம் – கடிதம்

அன்புள்ள ஜெ,

படிப்பது எனக்கு பிடித்தமான விஷயம். என்னுள் இருக்கும் நோய்க்குப் படிப்பதும் ஒரு வித மருந்தாகவே அமைகிறது. காவல்கோட்டம் பற்றிய என் கருத்துக்கள்.

ஒன்றரை ஆண்டு முன்பு காவல்கோட்டம் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டு பக்கங்கள் படித்தவுடன் ‘இத்தகைய நாவல் தமிழில் வந்திருக்கிறதே’ என்ற மகிழ்ச்சியுடன் என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் படித்தவுடன் அவர்களும் படித்து நல்ல நாவல் என்றே பாராட்டினர். நாங்கள் அப்பொழுது இணையக் குழாய்ச் சண்டையை அறிந்திருக்கவில்லை.

1. காவல் கோட்டம் எனக்கு நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. ‘தலை சிறந்த’ என்ற conceptஇல் எனக்கு உடன்பாடு இல்லை. பத்து நல்லவர்களைக் குறிப்பிட்டு அவர்களில் இவரே தலைசிறந்த நல்லவர் என்று முடிவு கட்டுவது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இந்தத் ‘தலை சிறந்த நாவல்’ concept. இதைத் ‘தலை சிறந்த நாவல்’ என்று கொண்டாடுபவர்களும் அதை எதிர்ப்பவர்களும் எவ்வளவு பலவீனமானவர்கள்,அவர்களின் மனம் எவ்வளவு தூரம் விரிவடையவில்லை என்பதையே காட்டுகிறது.

கல்லூரி நாட்களில் நான் ‘ஒவ்வொரு பக்கத்தையும் postmortem’ செய்வேன்… எனக்கு இப்பொழுது அது ஒரு சிறுபிள்ளைத்தனம் என்றே தோன்றுகிறது. தவறுகளைச் சுட்டிக்காட்டலாம், ஆனால் இந்த நாவலில் இது இடம் பெறவில்லை, 1920இல் முடித்துவிட்டார் என்ற வாதங்கள் ஒரு படைப்பாளியின் உரிமையை எதிர்க்கும் வாதங்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாவல் ‘almost perfect’ ஆக இருந்தால் நல்லது. ‘perfect’ என்ற ஒரு concept இருந்தால் மனிதனின் தேடுதல் என்றோ முடிவுற்றிருக்கும். மனித வாழ்க்கையும் perfect இல்லை. இறக்கத்தான் போகிறோம் .

2. 200 பக்கம் தாண்ட முடியவில்லை, கஷ்டப்பட்டுப் படித்தேன் என்று விமர்சனம் செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஒரு நல்ல படிப்பாளி ‘Unknown Territory’இல் பயணம் செய்யவேண்டும். தனக்குத் தெரிந்த சமாச்சாரத்திலே மூழ்கக் கூடாது. ஒரு பக்க சினிமா விமர்சனமும், ஒரு பக்க எகனாமிஸ்ட் கட்டுரையும் ஒரே கால அளவில் படிக்க முடியுமா? இரண்டும் ஒன்றா? இவர்கள் சொல்வதைப் பார்த்தால் தினத்தந்தியில் வரும் ‘கன்னித்தீவு’ சிறந்த வரலாற்று நாவலாகும். எழுத்தாளர் சுஜாதாவை எனக்குப் பிடிப்பதற்கு ஒரே காரணம் அவர் நல்ல படிப்பாளி. இவர்கள் நெருடாவையும், சங்க இலக்கியத்தையும் ஒரே மூச்சிலா படித்துப் புரிந்து கொண்டார்கள்? அவை ‘சங்க இலக்கியம், நெருடா எழுதியது’ இது வெறும் சு. வெங்கடேசன் எழுதியது. தடை எங்கே இருக்கிறது என்று விமர்சனம் செய்பவர்கள் புரிந்துகொண்டால் நல்லது.

3. இங்கே குழாயடிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு இருக்கும் ஒரே ஆச்சரியம் இவர்களுக்கு ‘எங்கே அவ்வளவு நேரம் கிடைக்கிறது?’அவர்களின் வீட்டில் விசாரித்தால் இவர்களின் நிலைமை என்ன என்று தெரியும். இப்படி சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் இவர்கள் எப்படி நல்ல இலக்கியம் படைப்பார்கள். இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஏராளமான ஐரோப்பியர்கள் இன்னும் படம் எடுக்கின்றனர். அதற்காக அவர்கள் செய்வது திருட்டு ஆகுமா? Inspirationக்கும் copyக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இங்கு அதிகமாக விமர்சனம் எழுதுகின்றனர். இதில் வேறு இவர்கள் தங்களை சாமான்யர்களின் அறிவாளிகள் என்று கூறிக்கொள்கிறார்கள். கஷ்டம் தமிழுக்கு.

தன்னுடைய முதுமையில் இவர்கள் தங்களின் பங்களிப்பை யோசித்துப் பார்த்தால் வெறும் வருத்தம் மட்டுமே மிஞ்சும் . சு.வெங்கடேசன் அப்படி வருந்தத் தேவையில்லை.

எல்லோருக்கும் இங்கே பிரச்சனை ‘நான்தான் அடுத்த ஜெயகாந்தன்’ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் யாரோ ஒருவர் விருதைத்தட்டிச் சென்றுவிட்டார் என்பதே. கண்டிப்பாக வயிற்றெரிச்சல் இருக்கத்தான் செய்யும்.

பால்.

அன்புள்ள பால்,

நன்றி.

காவல்கோட்டம் இலக்கியத்தன்மையுடன் இல்லை என்று எண்ணும் தலைசிறந்த வாசகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்களை நான் முக்கியமாகவே நினைக்கிறேன். ஒரு படைப்பு பற்றி மாற்றுக்கருத்து வருவதும் வேறுபட்ட மதிப்பீடுகள் நிகழ்வதும் மிகமிக இயல்பானது. நான் குறிப்பிடுவது அந்நாவலை முன்வைத்து நிகழும் தனிப்பட்ட தாக்குதல்களைப்பற்றி மட்டுமே.

நேர்மாறாக எனக்கு வெங்கடேசன் மீது பெரிய மதிப்பும் நட்பும் இல்லை. அவர் எழுதி பேசி நான் அறிந்ததெல்லாமே வெறும் கட்சி அரசியல். அதிலும் அவரது பிராமண வெறுப்பரசியல் பேச்சு அவர் மார்க்ஸியரா இல்லை திராவிடர் கழகத்தவரா என சந்தேகம் கொள்ளச்செய்வது.

என்னைப் பொறுத்தவரை ஒரு படைப்பை வாசிக்கையில் அது மட்டுமே முக்கியம். தனிப்பட்ட விஷயங்கள் மனதில் நுழைவதில்லை என சொல்லமாட்டேன், இருக்கும்தான். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்தப் படைப்பு உருவாக்கும் புனைவுலகுக்குள் சென்றுவிடுவேன். அதன்பின் அந்த உலகம் மட்டுமே எனக்கு முக்கியம். அதை எழுதியவர் அல்ல. அவ்வகையில்தான் காவல்கோட்டத்தை மதிப்பிடுகிறேன்.

இலக்கியப்படைப்புகளை வரிசைப்படுத்துவது உலகமெங்கும் உள்ளதுதான். அது ஒரு விமர்சனமுறை. ஆனால் முழுமுற்றாக அப்படி வரிசைப்படுத்த முடியாதென்பதையும் ஒப்புக்கொள்கிறேன். எந்த விமர்சனமுறையும் அப்படித்தானே? முழுமையான புறவய மதிப்பீடு என ஒன்று இல்லை. ‘இன்னின்ன காரணங்களால் நான் இப்படிச் சொல்கிறேன்’ என்பதே இலக்கிய விமர்சனம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅழகு-ஒருகடிதம்
அடுத்த கட்டுரை‘கருத்துவேறுபாடு’