அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
குடி என்னும் கட்டுரையை வாசித்தேன். நானும் குடிநோயால் நெடுங்காலம் அவதிப்பட்டவன். நான் சின்னவயதில் குடித்தவன் அல்ல. என்னுடைய குடும்பச் சூழலிலெ குடி மிகவும் தப்பான விசயமாகத்தான் சொல்லியிருந்தார்கள். [நான் செட்டியார்] ஆனால் பிசினஸ் விசயங்களில் அலைச்சல் ஆரம்பித்தபோது குடிக்க ஆரம்பித்தேன். பிசினசுக்காக நான் எல்லா ஊருக்கும் போவேன். பஸ்ஸிலேதான் போவேன். லாட்ஜுகளிலே தங்குவேன். இந்தமாதிரி பயணம் செய்பவர்கள் தங்குவதற்கு லாட்ஜுகள் உண்டு. அதிலே உள்ளவர்கள் எல்லாருமே அனேகமாக சாயங்காலம் குடிப்பவர்கள்தான். என்னை அவர்களில் பலர் அவ்வப்போது கட்டாயப்படுத்தி குடிக்கக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். நான் குடிப்பேன். சில பெண் விசயங்களும் இருந்தன
பத்து வருசத்துக்கும் மேலாக நான் குடிப்பது என் மனைவிக்குக் கூட தெரியாது. அப்படி குடிப்பேன். உள்ளூரிலே குடிக்கவே தோன்றாது. எண்பத்திஏழிலே வியாபாரத்திலே பலத்த நஷ்டம் வந்தது. பிசினசிலே எப்படி நஷ்டம் வந்தது என்று நஷ்டம் வந்தபிறகு ரொம்பகாலம் தாண்டி நம்மால் சொல்ல முடியும். அது தப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் நாம் நம்புவதுபோல ஏதாவது ஒன்றை நம்மால் சொல்ல முடியும். இதெல்லாம் என் அனுபவம். ஆனால் பிசினஸ் குறையும்போது ஆரம்பத்தில் சரியாகிவிடும் என்று நம்புவோம். ரொம்பநாளைக்கு நாமே நம்மை சமாதானம் செய்துகொள்ளுவோம்.அப்புறம் எல்லாம் மோசமாக ஆகிவிட்டது என்று தெரியும். அப்போது கூட எதையாவதுசெய்து சரிபண்ணிவிடலாம் என்று தோன்றும்.
அந்த காலகட்டத்திலே எனக்கு ரொம்பநாள் சரியான தூக்கம் இல்லை. காலையிலே எந்திரிக்கும்போதே மனசு படபடவென்று இருக்கும். வீடிலே எல்லாரிடமும் சண்டை போடுவேன். மனைவி நகைகளை எல்லாம் தந்தாள். வீட்டை அடமானம் வைக்க சம்மதிக்கவில்லை. ஆகவே மன உளைச்சல். தினமும் சண்டை. அவளை பழிவாங்கவேணும் என்று நினைத்து நன்றாக குடிக்க ஆரம்பித்தேன். குடித்துவிட்டால் ஒரு தைரியம் வரும். சண்டைபோடவேண்டும் என்று தோன்றும். பல பிரச்சினைகளை செய்வேன்.
பிறகு குடிக்காமலேயே இருக்க முடியாது என்ற நிலைமை வந்தது. காலையிலேயே குடிப்பேன். கடையை மூடினேன். எல்லா பொருளையும் விற்று குடித்தேன். கடையிலே வைத்திருந்த பழைய வாஷ்பேசினைக் கொண்டுபோய் 100 ரூபாய்க்கு விற்று குடித்தேன். ஒருநாள் என் வீடிலே கிடந்த பழைய துணிகளை எல்லாம் சேர்த்து கொண்டுபோய் விற்று 15 ரூபாய்க்கு குடித்தேன் . காலையிலே குடித்தால் மட்டும்தான் என்னால் எந்திரிக்கவே முடியும். குடிக்காமல் சிந்தனை செய்யக்கூட முடியாது.
எட்டுவருசம் நான் குடித்து சீரழிந்தேன். என் மாமனார் செலவுக்கு பணம் கொடுத்து உதவினார். இல்லாவிட்டால் என் பிள்ளைகள் பட்டினி கிடந்து செத்திருப்பார்கள். எனக்கு அப்போது வெட்கம் மானம் ரோசம் ஒன்றுமே இல்லை. யாரைப்பார்த்தாலும் கடன் கேட்பேன். என் கடையிலே வேலைபார்த்த பையனின் வீட்டுக்கு காலையிலே போய் என் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி கடன் வாங்கியிருக்கிறேன்.
என் பையன் டிகிரி படித்தான். மாமனார்தான் படிக்க வைத்தார். அவன் வேலைக்குப்போனபிறகு குடும்பத்திலே பிரச்சினை குறைந்தது. ஆனால் எனக்கு மரியாதையே இல்லை. நாய் போல நடத்தினார்கள். போதை இல்லாதபோது அதையெல்லாம் நினைத்து கண்ணீர் விட்டு அழுவேன். ஆனால் குடிக்காமல் இருக்க முடியாது.
என் பழைய கிராக்கிதாரர் ஒருவர் பகவான் ரமணரின் பக்தர். அவர்தான் என்னை திருவண்ணாமலைக்குக் கூட்டிக்கொண்டு சென்றார். நான் ரமணாசிரமத்துக்குள் போனதுமே கைகூப்பிக்கொண்டு கதறி அழுதேன். அழுதுகொண்டே அங்கேயே கிடந்தேன். பிறகு லாட்ஜுக்கு வந்தும் அழுதுகொண்டிருந்தேன். சாமியாராக போகலாம் என்று நினைத்தேன். ஆனால் என்னால் அதற்கு தைரியம் வரவில்லை.
பகவான் அருளால் நான் குடியில் இருந்து மீண்டு வந்தேன். அதன்பிறகு ஒரு நான்குதடவை குடித்திருக்கிறேன். ஒருமுறை நான் குடித்துக்கொண்டு வந்தபோது லாரி ஒன்று என்னை மோதி தள்ளிவிட்டது. அந்த லாரியிலே பகவான் என்று எழுதியிருந்தது. பகவான் என்னை பார்த்துக்கொண்டே இருந்தார் என்று தெரிந்தது
இப்போது பதிமூன்று வருசமாக நான் குடிப்பது இல்லை. அந்தப்பழக்கமே போய்விட்டது. பகவானை தினமும் பூசைசெய்கிறேன். பாண்டிச்சேரி அன்னையையும் பூசை செய்கிறேன். எனக்கு மனநிம்மதி இருக்கிறது. இப்போது நான் கம்மிஷன் ஏஜெண்டாக இருக்கிறேன். நான் முன்புசெய்த அதே தொழிலில்தான் செய்கிறேன். நல்ல வரும்படியை பகவான் கொடுக்கிறார். பெண்ணுக்குக் கல்யாணம்செய்து வைத்தேன். ஒரு குறையும் இல்லை. வயது 64 ஆகிறது. ஆன்மீக புத்தகங்கள் வாசிப்பேன். உங்களுடைய ஆறு தரிசனங்களை வாசித்து கடிதம் போட்டிருக்கிறேன். சோதிடமும் ஆர்வம் உண்டு. நீங்கள் பகவத் கீதை எழுதியதை வாசிக்க வேண்டி இந்த கம்யூட்டர் சைட்டை வாசிக்கிறேன்.
குடி என்பது மூதேவி. மூதேவிக்கு ஒரு குணம் உண்டு. அவள் நாம் கூப்பிட்டால்தான் வருவாள். நாம் கூப்பிடாமல் வர அவளுக்கு அனுமதி இல்லை. நாம் நம்முடைய பலவீனத்தால் அவளை கூப்பிடுகிறோம். அவள் நண்பர்கள் வடிவத்திலே வந்து நம்மை கூட்டிக்கொண்டு செல்கிறாள். மூதேவியை ஜெயிப்பது கஷ்டம். அதற்கு நாம் அருள்கொண்டவர்களை சரணடைய வேண்டும். நான் இதோ என்னை உனக்கு கொடுத்துவிட்டேன். இனி நீதான் என்று சொல்லி அப்படியே விழுந்துவிடவேண்டும். இல்லாவிட்டால் வெளியே வர முடியாது.
வெளியே வந்தால் அது எவ்வளவு அசிங்கமான ஒரு விசயம் என்று தெரியும். அசிங்கமான கனவு மாதிரி அது. அதிலே இருந்து வெளியே வந்தால் அது அப்படியே விலகி போய்விடும். அதைத்தான் நான் சொல்ல ஆசைப்படுகிறேன்
பகவான் துணை
எஸ்
பிகு என் பெயரை நீக்கிவிட்டு அச்சிடவும்