அறிவியல்கதைகள்:கடிதங்கள்

 
அன்புள்ள ஜெயமோகன்,

உற்று நோக்கும் பறவை என்ற கதையை உங்கள் இணையதளத்தில் படித்தேன். மிகவும் ஆச்சரியமளித்த கதை. இதற்கு முன்பு இதற்கிணையாக மனித மனத்தின் அகவயமான செயல்பாட்டை [குறிப்பாக அதன் இரட்டை இயக்கத்தை] ஒரு கதை வழியாகச் சித்தரித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இது முழுக்க முழுக்க கற்பனை சார்ந்ததா அல்லது துவாத்மர்கள் என்ற ஒரு வகை ஆன்மீக இயக்கம் இருந்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஆசை

ஓப்லா விஸ்வேஷ்

அன்புள்ள விஸ்வேஷ்,

துவாத்மர்கள் என்று யாரும் இல்லை. அந்தக் கதையும் கருத்தும் முழுக்க முழுக்க கற்பனையே. ஆனால் ஆன்மீக சாதனைகளுக்கு குறிப்பிட அளவில் போதைப்புகைகளை பயன்படுத்தும் ஒரு மரபு நம்மிடம் இருந்திருக்கிறது. மனதை கஞ்சா போன்றவற்றின்மூலம் இரண்டாக ஆக்க முடியும் என்றும் அதன் மூலம் மிக எளிதாக யோகசாதனைகளுக்கு எதிரான விசையாக இருக்கும் காமகுரோதமோகம் சார்ந்த எண்ணங்களை விலக்க முடியும் என்றும் சொல்லும் சில தாந்த்ரீக குழுக்கள் இன்றும் உள்ளன

ஜெ 

அன்புள்ள ஜெ,

உங்கள் கதையில் திருவனந்தபுரம் -நாகர்கோயில் நடுவே பறவைகள் குஞ்சுபொரிக்கும் எஸ்டுரிகள் உள்ளன என்று எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் அப்படி உள்ளனவா என்ன?

ஞான.செல்வகுமார்

அன்புள்ள செல்வகுமார்,

முறையாக அறிவிக்கப்பட்ட எஸ்டுவரிகள் இப்பகுதியில் இல்லை. ஆனால் கேரளத்தில் திருவனந்தபுரம்- கொல்லம் பாதையில் கடலோரமாக சிறையின்கீழ் பகுதியில் எஸ்டுவரிகள் உள்ளன என்று கேரள பறவை ஆய்வாளரான வி.டி.இந்துசூடன் எழுதி வாசித்திருக்கிறேன். திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல் நூலில் நான் கதையில் சொல்லும்பகுதியில் கொல்லங்கோடு அருகே பறவைகள் வந்து தங்கும் சதுப்புகள் இருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது– இப்போது அவையெல்லாம் மீன்பிடிக்கிராமங்களும் தோப்புகளுமாக ஆகிவிட்டன

ஜெ
ஜெ,

உங்கள் அறிவியல்புனைகதைகள் நூலை இப்போதுதான் வாசித்தேன். அதில் எல்லாவகையிலும் கச்சிதமான கதை என்பது பித்தம்தான் என்று எனக்கு தோன்றுகிறது. அதில் உள்ள வட்டார அடையாளம்தான் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஒரு அறிவியல்புனைகதையில் இப்படி ஒரு வட்டாரத்தன்மையை நான் இதுவரை கவனித்ததே இல்லை. அது ஒரு நாஞ்சில்நாடன் கதைபோலவே உள்ளது. ஆனால் விஞ்ஞானத்தில் உள்ள அடிப்படையான பிரச்சினையைப் பற்றி ஆழமாகப் பேசுகிறது. விஞ்ஞானத்தில் உள்ள முக்கியமான தத்துவ அடிப்படை என்பது இதுதான் — ‘பிரபஞ்சத்தை அறிய மனிதனுக்கு உரிமை உண்டு’ இதை வேண்டுமானால் ‘பிரபஞ்சத்தை அறிவதற்கு மனிதன் விதிக்கப்பட்டிருக்கிறான்’ என்றும் சொல்லலாம். ஏன் மனிதன் பிரபஞ்சத்தை அறிகிறான் என்றால் அவனுடைய இயல்பு அது என்பதுதான். அப்படி அறிவதனால் அவன் நன்மையை அடையலாம். தீமையையும் அடையலாம். ஆனால் அது அவனுடைய இயல்பு.  அவன் முயற்சி செய்துகொண்டேதான் இருப்பான். அதைத்தான் அந்த ரசவாதி பண்டாரம் சொல்கிறார். மிக அருமையாகச் சொல்கிறார். ஆனால் சரியான கிராமத்து மொழியிலே…அதுதான் ஆச்சரியம்.
சுப்ரமணியம்
டெல்லி
அன்புள்ள சுப்ரமணியம்,

பிரபஞ்சத்தை அறிவதென்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை பிரபஞ்சத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவே உணரப்பட்டது. அதுதான் ரசவாதத்தில் ‘தீமை’ என்று சுட்டப்பட்டது. அதுதான் பலரை அழித்தது. அறிதல் என்பது மனிதனுக்கு ‘விதிக்கப்பட்டிருக்கிறது’ என்றே நானும் எண்ணுகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஇரு கட்டுரைத்தொடர்கள்
அடுத்த கட்டுரைஅள்ளிப்பதுக்கும் பண்பாடு,கடிதங்கள்