மானுட ஞானம் அழிகிறதா?

அன்புள்ள ஜெ,

நீண்ட நாட்களாய் ஒரு கேள்வி, அச்சம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. “மானுட ஞானம்” அழிகிறதா?

மானுடன் பரிணாம ரீதியாகத் தன்னைவிடத் தாழ்ந்த உயிரினங்களோடு இந்த பூமியில் இருக்கின்றான். மிகச்சிறிய உயிரினங்களும் அதன் அடுத்த மேல் நிலை சிக்கலான உயிரினங்களோடு சேர்ந்திருக்கின்றன. நுண்ணுயிர்களான பாக்டீரியாவும், வைரஸும், புழுவும், பூச்சியும், மீனும், பறவையும், தேளும், பாம்பும், குதிரையும், யானையும், புலியும் மனிதன் என்கிற உயிரினத்தோடு வாழுகின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன. சில அழிந்துமிருக்கின்றன. (கரப்பான்பூச்சி நம்மைவிடப் பல காலம் பழைய உயிரினம்!!!)

இச்சங்கிலி இந்த பூமியில் நிலைநிறுத்தவும், வளரச்செய்யவும் செய்கிறது. ஆனால் “மனிதன்” என்கிற உயிரினம் தன்னை விட மேலான உயிர்களோடு இந்த பூமியில் வசிக்கவில்லை. அப்படி ஒரு சாத்தியக்கூறு இருப்பதாகவும் தெரியவில்லை. (யார் என்ன சொன்னாலும் அது ஒரு வாதமாக இருக்குமே தவிர சாத்தியமாகாது. ஒரு உயிரியலாளனாக என்னால் கூறமுடியும்!!) (படம் 1)

Intel நிறுவனர் Andy Groveவின் “inflection point theory” நிர்வாகவியல் வட்டத்தில் மிகவும் பிரபலமானது. அதை மானுட ஞான தத்துவ வளர்ச்சியில் பொருத்திப்பார்த்தேன். இப்படித் தோன்றுகிறது. (படம் 2)

அறிவியலில் ஒரு கொள்கை அல்லது விதி உள்ளது – “bell curve”. அதை ஆக்கமும் அழிவும் எனக் கொள்ளலாம். எந்த நிகழ்விற்கும் நான்கு நிலைகள் உண்டு. (ஆக்கம், வளர்ச்சி, முதிர்ச்சி, அழிவு)

எது உருவானாலும் அது அழிந்தேதீரும். .மானுட வாழ்விற்கும், ஞானத்திற்கும் அது பொருந்தும். அதை மானுட ஞானத்திற்குப் பொருத்திப்பார்க்கையில் வருவது சூன்யமே!!! (படம் 3)

அதாவது இன்னும் ஓரு ஐநூறு/ஆயிரம் வருடம் கழித்து படித்துத் தெரிந்து கொள்ள இக்காலத்தில் ஒரு காவியமோ, புது வேதமோ உருவாகவில்லையே. எதன் அடிப்படையில் பிற்காலத்திய மானுட ஞானம் வளரும்? இன்னும் சொல்லப்போனால், மானுட உயிரினமாகிய நாம், நம்மைவிடக் கீழ் நிலை உயிரினத்தோடுதானே போர் செய்கிறோம்?? (மருத்துவ ரீதியாகவும், பரிணாம ரீதியாகவும்)

இப்புவியில் உயிரின் வளர்ச்சியில் கிடைத்த ஞானம் மானுடத்தில் உச்சமடைந்து விட்டதா? மானுட ஞானம் அடுத்த நிலைக்குச் செல்லாதா? கடந்த ஆயிரம் ஆண்டு சரித்திரத்தையே நோக்கினால் உலகளவில் ஒரு முற்றும் புதிய ஞான மார்க்கமோ/அறிதலோ ஏற்படவில்லை. ஞானத்திற்கு ஊன்றுகோல்களான – தொன்மங்கள் / படைப்புகள் (வேதம், உபநிடதம் /காவியங்கள், சித்தாந்தகள் மற்றும் பல) புதிதாகத் தோன்றவில்லையே. பல ஆயிரம் வருடங்கள் முந்திய வேதங்களும், புராணங்களும்தானே இன்னும் நம்மிடையே உள்ளது. அவை மருவி இருக்கலாம். ஆனால் புதிதாய் ஒன்றும் இல்லையே.

சில நூற்றாண்டுகளாக எந்த ஒரு புதிய சிந்தனையும் மானுடத்தைத் திசை திருப்பவில்ல.(பொருளியல் தவிர.. இதற்கும் ஒரு வாதம் – தங்கிவாழ்தல் மற்றும் வியாபாரம். ஒரு பண்டமாற்று விஷயமாகத் தோன்றி, இன்று பொருளியல் மட்டுமே உலகத்தை இயக்குகிறது. இது ஒரு கசப்பான உண்மை!! இனி வரும் காலங்களில் பொருளியல் சேர்க்கையும், பலமுமே தங்கிவாழ்தலுக்கான அடிப்படையாகிவிடும்) ஒரு புது மதமும் உருவாகவில்லை (கிறிஸ்து, இஸ்லாம், பௌத்தம் போன்று), இன்று புழக்கத்தில் இருக்கும் பல விஷயங்கள் சடங்குகளும், சம்பிரதாயங்களும் மருவி வந்தவையே.

உங்களின் பயணக்கட்டுரையைத் தொடர்ந்து படித்து வருகிறேன். பல இடங்களும், ஆலயங்களும், கட்டிடங்களும் பல நூற்றாண்டுகளுக்கு எந்த விதத் தொழில்நுட்பத் துணையுமின்றி அமைக்கப்பட்டவைதானே!! காரணம் – மானுடனின் தேடல். அதன் உந்துதல் – பல நூறு வாழ்க்கையை ஒரு வாழ்நாளிலேயே வாழும் இச்சை கலைகளாய், காவியங்களாய், ஓவியங்களாய், சிற்பங்களாய் தன்னை வெளிப்படுத்திய அந்தத் தேடலில், ஆக்கத்தில் வந்தடைந்த ஞானம். அது கனிந்து நமக்கருளிய வாழ்வு. மானுடன் மற்ற உயிரினங்களைவிடத் தன்னை வேறுபடுத்திகொள்ளவும், தான் கண்டடைந்த ஞானத்தைச் சொல்லவும், பகிரவும், விட்டுச்செல்லவும் இத்தனையும் படைத்தான். அந்தத் தேடல் இன்று இல்லையோ?

ஒன்றைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். நான் ஞானமெனக் குறிப்பிடுவது பரிணாம வளர்ச்சியாக வரும் மூளையின் வளர்ச்சி அல்ல. அது விஞ்ஞான வளர்ச்சி. “நான் மானிடன்”, மற்ற உயிரினங்களுக்கில்லாத ஒரு வரம் எனக்குள்ளதால் நான் வேறுபட்டவன் என்ற உணர்வு மட்டுமே மானிடனை மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தியிருக்கிறது. அந்த உணர்வின் அடிப்படையிலேயே இத்தனை தூரம் வந்திருக்கிறோம். .

இது போன்ற ஒரு சிந்தனையே ஒரு வேலையத்த வேலை, லூசுத்தனம்என சிலசமயம் தோன்றுகிறது. இன்று மானுடன் வாழ்வது, கற்பது, அனுபவிப்பது ஒரு உயிரியல் – தத்துவ வளர்ச்சியின் பலனே. மானுடனாய் இச்சிந்தனையே என்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ள உயிரினத்தோடு வேறுபடுத்துகிறது. இதுவே என் பலம். மானிடனாய் முக்காலமும் என் சிந்தை ஓடி அலைந்து, தேடி, குழம்பி, தெளிந்து உணர்வதே அந்த ஞானத்தின் வெற்றி. அந்த ஞானம் நம்மையும் தாண்டிச்செல்ல, மானிடனாய் நாம் விட்டுச்செல்ல நம் முன்னே வேறு உயிரினமில்லையே?? அதனால்தான் “மானுட ஞானம்” அழிகிறதோ என ஒரு கேள்வி.

அறிவியல் பூர்வமாய்ச் சிந்தித்தால் இதைத்தான் பல “அறிஞர்கள்” பரிணாமம் என்று “உட்டாலக்கடி” செய்து கூறியிருப்பார்கள்!!!! மனதின் எங்கோ ஒரு ஓரத்தில், நானும் மிருகத்தின் எச்சம்தானே என்ற உணர்வும், மானிடனாய் நான் அடைந்த ஞானமும் நேருக்குநேர் சந்திக்கும் கணங்கள் பூதாகாரமாய் விரிகின்றன… (படம் 4)

தத்துவ சிந்தனையில் முதிர்ச்சியுள்ள உங்களைப்போன்ற ஒருவர் மட்டுமே விடைதர முடியுமென நம்பிக்கையில் எழுதுகிறேன்.

(இதை ஒரே அமர்வில் எழுதவில்லை. இதை எழுத ஆரம்பிக்கும்போது உங்கள் பயணக்கட்டுரை துவங்கவில்லை. அதைப் படிக்கப் படிக்க இக்கேள்வி வலுப்பெற்றுக்கொண்டே சென்றது. அதனால் சில இடங்கள் முன்னும் பின்னும், தொடர்பில்லாமல் இருக்குமெனத் தோன்றுகிறது. ஆனால் சாராம்சம் என்னவென்று புரிந்திருக்குமென நம்புகிறேன். )

சதீஷ் (மும்பை)

அன்புள்ள சதீஷ்,

தத்துவ சிந்தனையில் மட்டும் ‘லூசுத்தனமான’ எண்ணங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. தத்துவ சிந்தனையின் பயன் என்ன என்ற கேள்வியை ஒருபோதும் எழுப்பிக்கொள்ளக்கூடாது. இதைப்பற்றி வில் துரந்த் அவரது The Story of Philosophy: the Lives and Opinions of the Greater Philosophers : Will Durant நூலின் முன்னுரையில் விவாதித்திருக்கிறார்.

உங்கள் கேள்வி நிறைய சிந்திக்கச் செய்கிறது. பல கோணங்களில். இந்தக் கேள்விக்கு நடராஜ குரு அல்லது நித்யா என்ன சொல்லியிருப்பார்கள் என்றுதான் நான் முதலில் யோசித்தேன். உண்மையில் இப்படி ஒரு கோணத்தில் சமீப காலத்தில் நான் சிந்தித்ததில்லை. அதற்கு நன்றி.

இப்படி ஓர் ஐயம் அல்லது கேள்வி நம் முன் வரும்போது நாம் செய்யவேண்டுவது ஒன்றுண்டு. இந்த ஐயத்தை அல்லது கேள்வியை நமக்குள் உருவாக்கும் கருத்துநிலைகள் என்னென்ன, அவை எந்த அளவுக்கு அடிப்படையானவை என்ற வினாவை எழுப்பிக்கொள்வதுதான் அது. தத்துவப்பேராசிரியரான நித்யா எந்த ஒரு ஆதாரமான தத்துவக் கேள்விக்கும் இந்த முறைமையை கடைப்பிடிப்பதைக் கண்டிருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், ஏன் நமக்கு இப்படி கேட்கத்தோன்றுகிறது, எந்த அடிப்படைகளைக்கொண்டு இந்தக் கேள்வியை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்?

அந்த ஆய்வில் நித்யா இந்த சொற்களனில் உள்ள முக்கியமான கலைச்சொற்களின் வேரை, அச்சொற்கள் பயன்படுத்தப்படும் அர்த்தங்களை நுணுக்கமாக விவாதிப்பார். ஏனென்றால் ஒரு தத்துவக் கேள்வி அடிப்படையில் ஒரு மொழிக்கட்டுமானமும் கூட. அந்த மொழிக்கட்டுமானத்தை தெளிவாக வகுத்துக்கொள்ளுதல் அக்கேள்வியை வகுத்துக்கொள்ளுதல்தான். ‘மனிதன் ஏன் இன்று மகிழ்ச்சியாக இல்லை’ என ஒரு கேள்வி என்றால் ‘மனிதன்’ ‘மகிழ்ச்சி’ ‘இன்று’ என்னும் மூன்று சொற்களும் எதைக் குறிக்கின்றன என வகுத்துக்கொள்ளாமல் நித்யா அக்கேள்விக்குள் செல்வதில்லை.

இது ஒரு பொதுவிவாதத்திற்கு இன்னும் முக்கியமானது. ஏனென்றால் நானும் நீங்களும் விவாதிக்கும்போது சொற்களுக்கு நாம் அளிக்கும் பொதுவான பொருள் இருக்கவேண்டும். நான் அளிக்கும் பொருள் என்ன என நீங்கள் தெளிவாக அறிந்திருக்கிறீர்களா என எனக்குத் தெரிந்தாகவேண்டும்.

இந்த அடிப்படை வழிமுறைகளினூடாக உங்கள் கேள்வியை பரிசீலிக்கிறேன்.

உங்கள் கேள்விக்கான அடிப்படைகள் ‘மனிதன்’ ‘ஞானம்’ ‘பரிணாமம்’ ஆகியவற்றுக்கு நீங்கள் அளிக்கும் விளக்கங்களில் உள்ளன.

நீங்கள் மனிதன் என்ற சொல்லை உயிர்க்குலத்தில் முதன்மை கொண்ட இருப்பு, பரிணாமத்தின் உச்சம், உயிர்க்குலத்தில் இருந்து தன்னைப் பிரித்தறியும் மனம் என்னும் பொருள்களில் கையாள்கிறீர்கள். ஞானம் என்பதை மனிதகுலம் பொதுவாகத் திரட்டி வைத்திருக்கும் புறவயமான அறிதல் என்று வரையறை செய்கிறீர்கள். பரிணாமம் என்பதை உயிர்க்குலங்கள் முரணியக்கம் மூலம் கொள்ளும் வளர்ச்சிமாற்றம் என்று அர்த்தம் செய்கிறீர்கள்.

இந்த அடிப்படைகளை நவீன அறிவியல் இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் தத்துவ சிந்தனை அவற்றை அப்படி ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதில்லை.

உங்கள் கேள்வியின் முதல் முற்கோள் என்பது மனிதன் பரிணாமத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்பதும், பிற உயிர்கள் எல்லாமே அவனைவிடக் கீழ்நிலையில் இருக்கின்றன என்பதும்தான். இது கடந்த ஒருநூற்றாண்டாக மேலை அறிவியலில் ஏறத்தாழ முடிவாகச் சொல்லப்பட்டுவரும் விஷயம். பரிணாமமே மனிதனை உருவாக்குவதற்காக நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லும் எல்லைவரை அது சென்றிருக்கிறது. இது செமிட்டிக் மதங்களின் மனிதமைய நோக்குடன் இணைந்து போவதனால் அதை இப்போது மேலைக்கல்வி கற்கும் அனைவரும் இயல்பாக ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.

இந்த விவாதத்தை நீங்கள் நித்யா முன் வைத்தால் இந்த முற்கோள்மீதுதான் அவர் தாக்குதல் தொடுப்பார். நீங்கள் இந்த விவாதத்தை மேலைஅறிவியலின் வட்டத்துக்குள், அல்லது செமிட்டிக் மதங்களின் சொற்களனுக்குள் நின்று விவாதிக்க விரும்புகிறீர்களா என்றுதான் கேட்பார். இல்லை என்று சொன்னீர்கள் என்றால் இந்த முற்கோளின் எல்லைகளை உங்களுக்குச் சுட்டிக்காட்டுவார்.

உங்கள் முற்கோளுக்கான அடிப்படைகளை அரிஸ்டாடில் காலத்திலேயே ஐரோப்பிய சிந்தனையில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உயிரினங்களை ஆராயும்போது தனித்தனி அலகுகளாக எடுத்துக்கொண்டு அவற்றின் தனித்தன்மைகளை கவனித்து அட்டவணையிடுவதும், அந்த தனித்தன்மைகளில் இருந்து பொதுத்தன்மைகளை நோக்கிச் செல்வதும், அப்பொதுத்தன்மைகளைக்கொண்டு ஒட்டுமொத்தத்தை உருவகித்துக்கொள்வதும்தான் அரிஸ்டாட்டிலிய முறை இல்லையா?

அதில் இருந்துதான் மனிதன் பரிணாமத்தில் முதன்மையானவன் என்ற நிரூபணத்துக்கான தரவுகளும் தர்க்கமுறையும் கட்டமைக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் ஒரு தனிமனிதனை எடுத்துக்கொள்கிறீர்கள், ஒரு தனி நாயை, ஒரு தனிச் செடியை, ஒரு தனி வைரஸை அவனுடன் ஒப்பிடுகிறீர்கள். இந்த முறை மனிதனுக்கு தன்னைச்சுற்றியிருக்கும் உயிருலகை தன் தேவைக்கேற்றபடி புரிந்துகொள்ளவும், பயன்படுத்தவும் உதவுகிறது என்பது உண்மை. ஆனால் இதை ஏன் தத்துவத்திலும் மெய்யியலிலும் முழுமுற்றானதாகக் கொள்ளவேண்டும்?

பரிணாமத்தில் தனித்தன்மையை வளர்த்துக்கொள்வது மனிதனின் பரிணாமவழி என்றால் பொதுத்தன்மையை வளர்த்துக்கொள்வது வைரஸின் வழியாக ஏன் இருக்கக்கூடாது? பரிணாமத்தையும் மானுடவரலாற்றையும் பார்க்கையில் மனிதன் தன் தனித்தன்மையை, தனிமனத்தை, தனியடையாளத்தை, தனிச்சிந்தனையை உருவாக்கிக்கொண்டே இருக்கும் சித்திரத்தை அடைகிறோம். இயற்கை, உயிர்க்குலம், மானுடம் என்ற பொதுமைகளில் இருந்து மெல்லமெல்ல தன்னைப் பிரித்துக்காண்பவனாகவே மனிதன் பரிணாமம் கொண்டபடி இருக்கிறான்.

பிறந்த கணம் முதல் சுயத்தை அவன் துளித்துளியாக கட்டமைத்துக்கொள்கிறான். அதன்பின்னர் அந்த சுயம் மூலம் பெற்ற அறிதல்களை மானுடப்பொதுவாக ஆக்க முயல்கிறான். அதற்காக மொழியையும் படிமங்களையும் பயன்படுத்துகிறான். இவ்வாறு மானுடஞானம் மனிதனுக்கு வெளியே ஒரு பெரிய கட்டுமானமாகத் திரண்டபடியே உள்ளது. அதன் பிரம்மாண்டம் நம்மை பிரமிக்கச்செய்கிறது. ஆனால் எந்த மனிதனுக்கும் இது இயல்பாகக் கிடைப்பதில்லை. அது எப்போதும் மனிதனுக்குப் புறத்தேதான் உள்ளது. தன் திறனுக்கு ஏற்ப கொஞ்சத்தை அவன் அதில் கிள்ளிக்கொள்ளலாம், அவ்வளவுதான்.

மனிதன் உருவாக்கிக் கொண்ட இந்தப் புறவயமான கட்டுமானத்தை பரிணாமத்தின் உச்சகட்ட சாதனையாகக் கருதும் முற்கோளில் இருந்தே உங்கள் வினா உருவாகிறது. ஆனால் நம்மைச்சுற்றி இருக்கும் பேரியற்கையின் பரிணாமச் செயல்பாட்டில் வேறு பாதைகளும் இருக்கலாமே? ஒரு வைரஸ் அல்லது ஒரு பாக்டீரியா முற்றிலும் சுயமில்லாததாக, ஒட்டுமொத்தம் மட்டுமேயாக பரிணாமம் கொண்டபடி இருக்கலாம் இல்லையா? அந்த ஒட்டுமொத்தம் மனித ஞானத்தைவிட பிரம்மாண்டமான ஞானத்தைத் திரட்டி ஒட்டுமொத்தமாக தனக்குரியதாக வைத்திருக்கலாம்.

ஒரு தனி வைரஸில் அல்லது தனி எறும்பில் அந்த ஞானம் இல்லாமல் இருக்கலாம். அவற்றின் இயல்பின் காரணமாக அந்த ஞானத்தை அவை புறவயமாக உருவாக்கி நிறுத்தவும் வேண்டியதில்லை. அந்த ஞானம் முழுக்க அவற்றின் இருப்பிலேயே கலந்து அவற்றின் அடிப்படைகளாகவே மாறி அவற்றுடன் இருந்துகொண்டிருக்கலாம். மானுட ஞானத்தைவிட மிகப்பிரம்மாண்டமானதாக அது இருக்காது என எப்படிச் சொல்லமுடியும்?

ஆகவே அதில் இருந்து உருவாகும் உங்கள் இரண்டாவது கருதுகோளையும் அதே கோணத்தில் ஆராயலாம். மற்ற உயிர்கள் எல்லாம் அவற்றை விட ‘மேலான’ உயிரினங்களுடன் முரணியக்கம் கொண்டு முன்னகர்கின்றன இல்லையா? மனிதன் அப்படி முரணியக்கம் கொள்ள அவனைவிட பெரிய உயிரினங்கள் இல்லை இல்லையா? ஆனால் இதை ஏன் தனித்தனி அலகுகளாக எடுத்துக்கொள்ளவேண்டும்? வைரஸின் ஒட்டுமொத்தம் மானுட ஒட்டுமொத்தத்தைவிட மேலானது என ஏன் சொல்லக்கூடாது? மனிதன் முரணியக்கம் கொள்வது அந்த ஒட்டுமொத்தத்துடன்தான் என ஏன் சொல்லக்கூடாது?

கடைசியாக இன்னொன்று. மேலைச்சிந்தனை முரணியக்கம் என்பதை இயக்கவியலின் ஒரே வழிமுறையாக நினைக்க கிரேக்கர் காலம் முதல் பழகிவிட்டிருக்கிறது. நிர்வாகவியல்வரை இந்த நோக்கு செல்வாக்குடன் உள்ளது. உங்கள் சிந்தனையில் முரணியக்கத்தை மட்டுமே இயல்பான வளர்ச்சி வழிமுறை என்று எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இந்திய தத்துவச் சிந்தனை மரபைக் கொண்டு பார்த்தால் முரணியக்கம் [அதாவது யோகாத்ம தர்சனம்] ஒரு இயங்கியல் மட்டுமே. இன்னும் பலவகையான இயக்கவியல்கள் இயற்கையில் உண்டு. நாமறியாத பலவகை இயக்கவியல்களும் இருக்கலாம். ஒத்திசைவு ஓர் இயக்கவியலே. சுழற்சி ஓர் இயக்கவியலே. இவற்றை இந்திய தத்துவத்திலும் மருத்துவம் போன்ற அறிவியல்களிலும் காணலாம். ஏன், இயற்கை தன்னை அவ்வப்போது முழுக்க அழித்துக்கொண்டு முற்றாக புதியதாக உருவாவதை ஒரு இயக்கவியலாகக் கொண்டிருக்கலாம். இந்து சிந்தனையில் இந்த வகை இயக்கவியலுக்கு ஒரு முக்கியமான இடமுண்டு.

ஆகவே மானுட ஞானம் என்பது முரணியக்கம் வழியாக மட்டுமே முன்னகர முடியும் என்பதும், முரணியக்கச் சாத்தியக்கூறுகள் இல்லாமையால் அந்த வளர்ச்சி நின்றுவிட்டிருக்கிறதா என்பதும் முழுமையான நோக்கைக் காட்டவில்லை. அது மேலை அறிவியல் உருவாக்கியச் சொற்களனுக்குள் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு வினா மட்டுமே.

சுருக்கமாகச் சொன்னால், மனிதனை ஒரு தனி அலகாகக் காணாமல் உயிர்க்குலத்தின் ஒட்டுமொத்தத்தின் ஒரு துளியாகக் காணும்போது இந்தக் கேள்வியின் அடிப்படை மாறுபடுகிறது. ஞானம் என்பதை மொழியிலும் படிமங்களிலுமாக புறவயமாக திரட்டப்பட்ட அறிவு எனக் கொள்ளாமல் உயிர்க்குலம் தன் இருப்பின் பகுதியாகவே ஆக்கிக்கொண்ட அறிதல்களையும் சேர்த்துக்கொண்டால் உங்கள் கேள்வியின் அடிப்படை மாறுபடுகிறது.

அதாவது மனிதன் தன் மரபணுவில் சேர்த்துக்கொண்ட ஞானம் அவன் புறவயமாக சேர்த்துக்கொண்ட ஞானத்தை விட பலமடங்கு மேலானதாக இருக்கலாமே என நான் சொன்னால் எப்படி மறுப்பீர்கள்? மனிதனை விட மேலும் பலமடங்கு அதிக ஞானத்தை வைரஸ் தன் ஒட்டுமொத்த மரபணுநினைவில் சேர்த்திருக்க வாய்ப்பில்லையா என்று கேட்டால் எப்படி மறுப்பீர்கள்?

கடைசியாக, பரிணாமம் என்பது முரணியக்கம் வழியாக நிகழாமல் ஒத்திசைவு மூலமோ சுழற்சி மூலமோ நிகழ்கிறதெனக் கொண்டாலும் உங்கள் வினாவின் அடிப்படை மாறுபடுகிறது.

மானுடஞானம் ஏன் இன்று மாபெரும் செவ்வியல் நூல்களை உருவாக்கவில்லை என்கிறீர்கள். மானுட ஞானம் தரையில் விழுந்த ஒரு நீர்ப்படலம்போல எனக் கொள்ளுங்கள். அது தன் எல்லா விளிம்புகளிலும் வளர, பரவத் துடிக்கிறது. ஓரு பள்ளம் கிடைத்ததும் அங்கே அது வழிகிறது. பின் இன்னொரு விளிம்பு இன்னொரு பள்ளத்தைக் கண்டு கொள்கிறது. அந்த நிலத்தின் சாத்தியக்கூறுகளே நீரின் வளர்ச்சியை, நகர்வை தீர்மானிக்கின்றன.

மானுட நாகரீக வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தில் மானுடமனம் [அல்லது மானுட படைப்பூக்கம்] இயற்கையை வகுத்துக்கொள்ள, அடையாளப்படுத்த வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்திலேயே மொழி என்ற வடிவம் உருவானது. மொழிகளை மானுடம் உருவாக்கிக்கொண்ட அந்தக் காலகட்டத்தின் படைப்பூக்க வேகத்தை கற்பனையே செய்ய முடியவில்லை. எவ்வளவு கற்பனை, எவ்வளவு தர்க்கம், எவ்வளவு உள்ளுணர்வு, எவ்வளவு பிரம்மாண்டமான கூட்டான உழைப்பு! அந்தக் காலகட்டமே இன்று நம் புரிதலுக்கு அப்பால் உள்ளது.

அதன்பின்னர் அந்த மொழியைக்கொண்டு இரண்டாம்கட்டப் புரிதல்களை உருவாக்க வேண்டியிருந்தது. வாழ்க்கையையும் இயற்கையையும் இணைத்து புரிந்துகொள்ளவேண்டிய தேவை எழுந்தது. இயற்கையில் இருந்து விழுமியங்களை உருவாக்கி நிறுவ வேண்டியிருந்தது. இலக்கியமும் கலைகளும் உருவாயின. அவை உருவான ஆரம்ப கட்டத்திலேயே அவற்றில் உச்சகட்ட சாதனைகள் உருவாகிவிட்டன. உலகமெங்கும். வேதங்களும் கிரேக்க புராணங்களும் சீனப்பேரிலக்கியங்களும் எல்லாம் உருவான காலகட்டம்.

இன்றைய காலகட்டத்தின் சவால் இன்னொன்று. இன்னொரு திசையில் மானுடஞானம் பீரிட்டுக்கொண்டிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் ஆரம்பித்த அறிவியல்யுகம் இது. கருவிகளைக் கண்டுபிடித்த மனிதன் பின் அக்கருவிகளைச் சார்ந்த சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டே செல்கிறான்.

மகாபாரதத்தை எழுதிய மேதையான வியாசனால் ஏன் புரி [ஸ்க்ரூ] போல எளிமையான நவீனக் கருவிகளை கண்டுபிடிக்க முடியவில்லை? பெரும் தத்துவங்களை உருவாக்கிய கிரேக்க ஞானிகளால் ஏன் ஆவி இயந்திரங்களை உருவாக்க முடியவில்லை? மானுட ஞானம் அப்போது திறந்த வழியின் திசை வேறு என்பதே அதன் பதில். அது தத்துவத்தின் யுகம், செவ்வியலின் யுகம். இது தொழில்நுட்பத்தின் யுகம், அறிவியலின் யுகம். நாளை முற்றிலும் புதிய இன்னொரு வழி திறக்கலாம். புதிய யுகம் உருவாகலாம். அதை இன்று நம்மால் ஊகிக்க முடியாது.

அந்தப் பரிணாமம் முரணியக்கம் வழியாக மட்டுமே உருவாகும் என மானுட வரலாற்றைப் பார்த்தால் சொல்ல முடியாது. அதாவது இந்த யுகத்தின் தொடர்ச்சியாக அது உருவாகவேண்டும் என்பதில்லை. இந்த யுகம் அப்படியே அறுபட்டு நிற்க, முற்றிலும் புதிய வகையில் அந்த யுகம் திறந்துகொள்ளலாம். மானுடம் அவ்வழியே மேலும் செல்லலாம். மானுட ஞானம் என நாம் இன்று சொல்லக்கூடியது அன்று முற்றிலும் இன்னொன்றாக ஆகலாம். இந்தப் பிரபஞ்சமும், பூமியும், இயற்கையும் பரிணாமம் வழியாக எங்கே செல்கின்றன என்பது நம் அறிதலுக்கு அப்பாற்பட்டது.

மனிதனைப்பற்றி, இந்த பூமி உருவாகி உருமாறி உயிர்க்குலம் பரிணாமம் கொண்டதைப்பற்றி, நாம் அறிந்ததெல்லாம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கைச்சூழல், இந்தப் புலன்கள், இந்த மூளையின் சாத்தியங்களுக்குள் நாம் உருவகித்துக்கொள்வது மட்டுமே. இதை முழுமுற்றான ஞானம் என நாம் நினைப்பது ஒரு மூடநம்பிக்கை. அந்த மூடநம்பிக்கை மீதுதான் மானுடம் உருவாக்கிக்கொண்டுள்ள எல்லா தத்துவங்களும் அறிவியல்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதாவது நாம் மானுடர்கள் என்பதனாலேயே நம்மால் மானுடஞானத்தை மட்டுமே அறிய முடியும். முழுஞானத்தை அல்ல. நாம் நம் இருப்பால், இயல்பால் நாமறியும் விஷயங்களை எல்லைக்கு உட்பட்டதாக ஆக்கிக்கொள்கிறோம். அந்த எல்லைக்குள் உள்ள ஞானத்தை மட்டுமே அறிகிறோம். நாம் வாழும் பூமியும் இதன் இயற்கையும் நம்மைவிட மிகமிகப் பிரம்மாண்டமானவை.

நம் இருப்பு என்னும் எல்லைக்குள் நின்று அதன் இயக்கத்தை நம்மால் முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது. நாம் அறிவது நம் அறிதலின் சாத்தியங்களை மட்டுமே. அவற்றைக்கொண்டு நாம் நமக்குத்தேவையான ஞானத்தை மட்டுமே உருவாக்கிக்கொள்ளமுடியும். அதைக்கொண்டு நம்மால் முழுமுற்றான கேள்விகளுக்கு இறுதி விடைகளை சொல்லிவிடமுடியாது.

முழுமையான அறிதல் என்பது நம் இருப்புக்கு அப்பால் சென்றால் மட்டுமே நம்மால் அறியப்படக்கூடியது என்று வேதாந்தமும் பௌத்தமும் சமணமும் வகுத்தன. இருப்பின் ஒரு துளி எஞ்சுவது வரை அறியப்படுவது அரை உண்மையையே.ஆகவே உண்மையை அறிவதென்பது கொஞ்சம் கொஞசமாக சுயத்தை உதறி முன்செல்லும் பயணம்தான்.

நடராஜ குருவின் அரிய வரி ஒன்றுண்டு ‘ All human truths are phenomenal truths and all phenomenal truths are half truths’

நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதைப்பற்றி யோசித்துப்பாருங்கள். அந்தப்பதில் உயிர்ப் பரிணாமத்தின் நோக்கத்தைப் பற்றிய திட்டவட்டமான ஒரு விளக்கமாக மட்டுமே இருக்க முடியும் அல்லவா? அதை விளக்க பிரபஞ்ச இயக்கத்தை விளக்க வேண்டியிருக்கும் இல்லையா?

ஜெ

முந்தைய கட்டுரைபுதிய பிரபஞ்சம் பற்றி
அடுத்த கட்டுரைபயணம் – கடிதங்கள்