அள்ளிப்பதுக்கும் பண்பாடு,கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,

கலாசார மதிப்பீடு/குழப்பம் பற்றி ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முகமாக,  ஒரு அருமையான, ஆழமான பார்வையை இந்தக் கட்டுரையில் அளித்திருக்கிறீர்கள். எல்லாவற்றையும் ஒற்றைப் படுத்தியே பார்க்கும் (streotyping)  அல்லது கருப்பு-வெள்ளை என்றே பார்க்கும் போக்கு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில்,  இது போன்ற பரந்து பட்ட விளக்கங்கள் ஆசுவாசவும், நம்பிக்கையும் அளிக்கின்றன. 

பிரபல ஆங்கில எழுத்தாளர் வி.எஸ்.நய்பால் நீங்கள் குறிப்பிடும் ”குடிமை உணர்வு” (civic sense) இந்தியர்களிடம்  இல்லாதது பற்றி மிகவும், கறாராகவும், காட்டமாகவும் தனது நூல்களில் விமர்சனம் செய்திருக்கிறார். காரணம் இந்தியா ஒரு ”காயப் படுத்தப் பட்ட  நாகரீகம்” (wounded civilization) என்பதையும் அவர் மறக்காமல் குறிப்பிடுகிறார்.  உன்னத கட்டிடக் கலையும், கலாசாரமும் மேலோங்கியிருந்த  விஜயநகர பேரரசின் தலைநகரான  ஹம்பியில் முஸ்லீம் படையெடுப்புகள் நிகழ்த்திய சேதங்களையும், இடிபாடுகளையும் பற்றி பெரும் பதை பதைப்போடு குறிப்பிடும் அவர் அந்த வீழ்ச்சி பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாத மனிதர்களே அந்த ஊரைச் சுற்றிலும் இன்று வாழ்கின்றனர் என்றும்  கூறுகிறார் – “… அவர்கள் பழமையான  ஆலயங்களுக்குச் சென்றார்கள். ஆனால்  அந்த ஆலயங்களைக் கட்டியவர்களுக்கு இருந்த தன்னம்பிக்கையில் ஒரு துளி கூட அவர்களுக்கு இல்லை. அவர்களால் நின்று நிலைத்திருக்கும் எதையும் கட்ட முடியாது (they can not build  anything that will last long) “.

நய்பால் இதனை கொஞ்சம் அகம்பாவத்துடனும் (arrogance), பொறுமையின்மையுடனும், சில சமயங்களில் ஏளனமும், கோபமும் கலந்த தொனியிலும் சொல்கிறார்.  காலனியாதிக்க மேற்கிந்தியத் தீவுகளில் பிறந்து இன்றைக்கு பிரிட்டிஷ் பிரஜையாகி, பெருமளவில் அங்கீகாரங்கள் பெற்று அந்த சமூகத்தின் அங்கமாகவே ஆகிவிட்டவர் அவர்.

நீங்களும்  ஒருவகையில் இந்தக் கருத்தைத் தான் கட்டுரையில் சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் குரல்  சோகமும், கருணையும்,  புரிந்துணர்வும் (empathy) கூடியதாக இருக்கிறது.  அதில் கோபத்தின் சாயல் கூட இல்லை. ஏனென்றால் இந்த மண்ணிலேயே பிறந்து, உரம் கொண்டு வாழும் எழுத்து உங்களுடையது.  தான் விமர்சிக்கும் கலாசாரத்தின் இயல்புடனேயே அதுவும் இருக்கிறது.

அன்புடன்,
ஜடாயு

 

அன்புள்ள ஜடாயு,

என்னுடைய கனவு மானுடத்தின் முன்னேறும் அவாவையே அதன் அடிபப்டைச் சக்தியாகக் காண்பதில் இருந்து உருவானது. எத்தனையோ தேசங்கள் வீழ்ச்சியில் இருந்து எழுந்திருக்கின்றன. தங்கள் பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் மீட்டெடுத்திருக்கின்றன. அந்த அவாவே ஒட்டுமொத்தமாக நம்மை இயக்குகிறது. அது நிகழ்வது ஒரு ‘புரட்சி’யாக அல்ல ஒரு படிப்படியான சீரான மாற்றமாகவே அது நிகழும்…அதுவே இயற்கையானது

ஜெ

 

மதிற்பிற்குரிய ஜெயமோகன்,

தாமதத்திற்கு மன்னிக்கவும்.
தங்கள் கடிதம் எனக்கு பல புதிய திறப்புகளை தந்தது..தங்கள் கடிதத்திற்கு நன்றி.

சென்ற நூற்றாண்டின் பல தலைமுறைகள் பெரிய அளவில் பிழைப்பிற்காக பர்மா,இலங்கை போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்தது, ஒரு பெரிய கலாச்சாரம் சரிவை சந்தித்தது, மேலை நாட்டவரின் சில பண்புகள் நம்மிடம் இல்லாதது எலாவற்றையும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தவைகளின் பின்புலத்தில் விளங்கிக் கொள்ள முடிந்தது.

நான் என்னுடைய நண்பர்களுடன் இதை குறித்து விவாதித்து மேலும் புரிந்து கொள்ள முயன்ற பொழுது, இன்னும் சில விஷயங்களை அறிந்து கொண்டேன். அவற்றில் ஓன்று இவ்வளவு முக்கியமான, ஒரு கலாசாரத்தையே ஒரு நூற்றாண்டாக பாதித்த ஒரு சம்பவம் எப்படி, வரலாற்றில் ( குறைந்த பட்சம் எங்களுக்கு படிக்கக் கிடைத்த பாட நூல்கள் அளவிலாவது ,கல்லூரி அளவிலான வரலாற்று நூல்களும் இதில் அடக்கம். ) எவ்வித சுவடுமின்றி போகக் கூடுமென்பது.
தாது வருஷ பஞ்சம் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் என்றாலும், அது ஏதோ ஓரிரு வருட பஞ்சமாகவே இருக்குமென்றுதான் நினைத்தேன். அதை குறித்து அறிந்து கொள்ள இயன்ற அளவு புத்தகங்கள், அல்லது சென்ற நூற்றாண்டின் ஓவியங்கள் என தேடி அலைந்தேன். (மைசூரில் எங்களுக்கு நூற்றுக்கனக்கான ஓவியங்கள் காணக் கிடைத்தன. வெள்ளையர்கள் இங்கு வந்ததும் முதல் வேலையாக நம்முடைய நாட்டை ஓவியங்களாக பதிவு செய்தவையே அவை. குறிப்பாக தாமஸ் டேனியல், வில்லியம் டேனியல் ஓவியங்களை வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்கவும்  )  

அனால் அவை எதிலும் அதற்கான சிறு குறிப்பும் இல்லை. நம்முடைய கலை எப்பொழுதும்  ஒரு கூட்டுக் கலை வெளியாகவே இருந்து வந்திருக்கிறது. மன்னரை பற்றியோ, மதத்தை பற்றியோ தவிர வேறு எதை பற்றியும் கலைகளில் வெளிப்படுத்த சாத்தியமேயற்ற கலை வெளியாக இருந்திருக்கலாம் ( சங்க காலத்திற்கு பிறகான, நவீனத்திற்கு முன்பான காலம் )  என்று நினைத்துக் கொண்டோம். ஏனெனில், வெள்ளைக்காரர்களின் ஓவியங்களில் கிடைக்கும் சில உண்மையான கூறுகள் கூட நம்டைய நாயக்கர் கால ஓவியங்களை கிடைக்க வில்லை. (பல்லக்கு தூக்குபவர்கள் கருப்பாக இருப்பது, காலணி இன்றி இருப்பது போன்றவை.) இது எங்கள் தனிப்பட்ட புரிதல் மட்டுமே.
சமூகம் தணிக்கை செய்யாமலோ, அல்லது பொதுப் பார்வைக்கு முரணான ஒன்றை படைப்பில் வைப்பதோ அனுமதிக்கப்படாமல் இருந்திருக்கலாம். நீங்கள் குறிப்பிட ஜேசுசபை பாதிரியார்களின் குறிப்புகள் மற்றும் நாட்டார் பாடல்களும்
எங்கேனும் படிக்கவோ, கேட்கவோ வாய்ப்பிருப்பின் தெரிவிக்கவும். இது சம்பந்தமாக அறிந்து கொள்ள புத்தங்கள் இருந்தால் அவற்றையும் சிபாரிசு செய்யவும். 

****

அஜிதனை பற்றி நீங்கள் கூறியிருப்பது இன்றைய சூழலின் உண்மை நிலையையே காட்டுகிறது. என்றாலும்  அது குறித்து விசனப்பட ஒன்றுமில்லை. புத்தகங்கள் நிறைந்த வீட்டிலிருந்து வளரும் குழந்தைகள் ஒரு போதும் வீணாய் போவதில்லை.

நாளை அவர்கள் வாழப் போகும் சமுதாயம் எப்படி இருக்குமெனில், என்னுடைய களத்தை விடவும் குழப்பம் மிகுந்ததாகவே இருக்கும்.
இன்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு உதவிகள் என்ற பெயரில் கணிணிகள் வழங்கி, அது பற்றிய துறை அறிவையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நாளை அவர்களுடைய அலுவலக பின்புல பணிகளை முடிக்க அளவற்ற மனித வளமும், அவர்களின் சந்தைக்கு தேவையான நுகர்வோர்களையும் உருவாக்கவே. இங்கே இந்தியா போன்ற தேசத்தில் அதற்கான எந்த தேவையுமின்றி, பெற்றவர்களே இரவும் பகலும் உழைத்து. பிள்ளைகளுக்கு மடிக்கணினியும், அதற்கான அறிவையும் தந்து விடுவார்கள்…அது ஒன்றும் தவறில்லைதான். மூன்று வேலை சாப்பாடே பெரிய கனவாய் இருந்த ஒரு சமுதாயத்தில் இன்று வீட்டுக்கு ஒரு காரும், குடும்பத்திற்கு நான்கு செல் போனும், முப்பது வயதிற்குள் ஒரு வீடும் என்று வாழ்க்கை தரம் மாறி இருக்கிறது.
அனால் இது எல்லாமே  இந்த தலை முறையில்தான் ஆரம்பித்து இருகிறபடியால், நம்மால் இன்னும் அதன் விளைவுகளை முழுமையாய் உணர முடியவில்லை.நாம் கண்டு கொண்டிருப்பது எல்லாம் அதன் உடனடி விளைவுகளை மட்டுமே.

அந்த சூழழில் உள்ளே நின்று கொண்டிருபவன் என்ற முறையில், நான் கண்ணெதிரே பார்க்கும் விஷயங்களே என்னை இப்படி எல்லாம் சிந்திக்க வைக்கின்றன, சென்ற வருடம் திருமணம் செய்து கொண்ட என்னுடைய நான்கு நண்பர்களில் மூவருடைய திருமணம் விவாகரத்திற்கு அருகில் நின்று கொண்டிருக்கிறது. காரணங்கள் பல. இருவரில் யாரேனும் ஒருவர் அலுவல் சூழ்நிலை காரணமாக குழந்தை பெற்று கொள்வதை (ஆம்..அலுவல் சூழ்நிலை காரணமாக) தள்ளி போடுவதில் இருந்து, தவறான புரிதல்கள், அதை போக்க தேவையான நேரம் கூட ஒதுக்க இயலாமை, என்று நீள்கிறது பட்டியல்..அனால் எல்லாவற்றின் ஊற்றுக்கண்ணுமே இந்த வேலையும், அது சார்ந்த நிர்பந்தங்களுமே. நாம் செய்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் இந்த சமூகமும் மனிதர்களும் எந்த அளவு புரிதலுடன் செய்கிறார்கள் என்பது பெரிய கேள்வி.

மேலோட்டமாக பார்க்கும்பொழுது எல்லோரும் படித்துவிட்டதாகவும் வளர்ச்சி அடைந்து விட்டதாகவும் தோன்றினாலும் வாழ்க்கை இன்னும் குழப்பம் மிகுந்ததாகவுமே இருக்கிறது.உடை, உணவு மற்றும் இதர விஷயங்களில் மாறி விட்டாலும் அடிப்டையில் சில விஷயங்களில் மனிதர்கள் மாறவே இல்லை.    

குறிப்பாக  பெண்களை பற்றிய மதீப்பீடுகள், தனி மனிதர்களின் சுதந்திரத்தை மதித்தல். (நீங்கள் கூறிய குடியுரிமை பண்புகளில் இவையும் அடங்கும் என்று நினைக்கிறன் ) அவையே இந்த திருமணங்களின் தோல்விகளுக்கு காரணம். இவை பற்றிய எந்த அறிவையும் நம்முடைய படிப்போ, பெற்றோரோ, மீடியாவோ தருவதற்கில்லை.

இன்று பல குடும்பங்கள் இயங்கிக் கொண்டிருக்கிற காரணமே சென்ற தலைமுறையினரின் ஒத்துழைப்பே. இன்று என் பெற்றோர் எனக்கு அளிக்கும் நேரம் நாளை என் பிள்ளைகளுடன் என்னால் அளிக்க இயலுமா என்பது குறித்தும், அதற்கு எங்களுடைய வேலை அனுமதிக்குமா என்பது குறித்தும் எங்களுக்கு நெறயவே இருக்கிறது.

இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகளே நாளை நன்கு படித்து, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்து அமெரிக்கா சென்று ஒருவரை ஒருவர் சட்டுக் கொண்டு சாகிறார்கள், அல்லது பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கிணற்றில் வீசிக் கொள்கிறார்கள்.

http://www.bangaloremirror.com/index.aspx?page=article&sectid=12&contentid=2009033120090331210657971743d9bd2

 

இவை அனைத்தும் தனி வாழ்வில் என்றால், தொழில் வாழ்க்கை இன்னும் மோசம். இரவு பகல் பாராத வேலை, இங்கே எங்கள் அலுவலகத்திற்கு பேருந்து  வசதி உள்ளது. அதில் பயணம் செய்யும் அனைவரும் திங்கள் கிழமை காலையில் கூட தூங்கிக் கொண்டே அலுவலகம் சென்று கொண்டிருக்கிறார்கள். அதீத உழைப்பின் பெயரால் நம் ஒரு சமூகத்தையே, அதன் சிரிப்பை, இயல்பை உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.

இது போக, கலாச்சாரக் குழப்பம் வேறு. பொங்கலுக்கு விடுமுறை இல்லாத, க்ரிஸ்துமஸுகும், நியூ இயர் க்கும் பத்து நாட்கள் விடுமுறை தரும் நிறுவனங்கள் மெல்ல மெல்ல எனை அரை குறை அமெரிக்கனாய் அல்லது அரை குறை தமிழனாய் ஆகிக் கொண்டிருக்கிறது.

     
இவ்வளவையும்  நான் உங்களிடம் சொல்லக் காரணம் இருக்கிறது ஜெயன். இன்று வாழ்க்கை பற்றிய எந்த புரிதலுமற்று, வெறும் தொழில் நுட்ப அறிவை மட்டுமே கொடுத்து வளர்க்கப்படும் ஒரு தலை முறை, ஆய்தம் மட்டுமே கொடுக்கப்பட்டு , தற்காப்பே சொல்லி தராமல் வளர்க்கப்படும் சமூகத்திற்கு ஒப்பானது என்று தோன்றுகிறது. அதைத்தான் நாம் செய்து வருகிறோம். ( திருமணத்திற்கு முன்பு அருண்மொழியிடம் சொல்லி இருந்ததாய் நீங்கள் ஒரு முறை சொல்லி இருந்தீர்கள், ஒரு பொழுதும் பணத்திற்கு பின் ஓட மாட்டேன் என்று, இன்று அவ்விதம் சொன்னால் தொண்ணுறு குடும்பங்கள் விவாகரத்தில்தான் முடியுமென்று தோன்றுகிறது.)

இப்படி வாழ நேர்ந்த ஒரு தலைமுறையால் வளர்க்கப்படும் மற்றொரு தலை முறை எப்படி இருக்கக்கூடும்? நாளை அவர்கள் சோற்றுக்காக அடித்துகொண்டு சாகும்பொழுது அவர்களுடைய சுய சிந்தனையும், கலா உணர்வில் விளையும் ஆன்மீக உணர்வும், அவை தரும் விழிப்புணர்வும் மட்டுமே அவர்களை கரை சேர்க்கும் என்று நினைக்கிறேன்.அதை தருவதற்கு புத்தகங்களே நல்ல தொடக்கமாய் இருக்க கூடும். ஏனெனில் புத்தகங்கள் நிறைந்த வீட்டிலிருந்து வளரும் குழந்தைகள் ஒரு போதும் வீணாய் போவதில்லை.

ஆனால் என்னுடைய கவலை எல்லாம் நீங்கள் சொன்ன பொருள் சேர்க்கும் தலைமுறை அதில் தன்னை, தன் அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறது என்பதும் அது பற்றி யோசிக்கவும் நேரம் இன்றி அவர்கள் ஓடும் வேகமும் மிகுந்த கவலைக்குள்ளாகுகிறது ஜெயன்.

பொருள் சேர்ப்பது எனபது ஒரு முடிவே அற்ற போராட்டமாய் இருக்கிறது.எவ்வளவு சேர்த்தும் ஓயவே தோன்றுவதில்லை. ஆனால் ஓட்டத்தில் எலாவற்றையும் இழந்து விடும் அபாயமும் இருக்கிறது, வாழ்க்கை உட்பட.. 

*****

ஆனால் நீங்கள் எப்பொழுதும் மானுட அறத்தையே தங்கள் எழுத்துகளில் முன் வைக்கிறீர்கள்.அது ஒரு பொழுதும் தன் நம்பிக்கையை இழப்பதே இல்லை. அது ஒன்றே ஆறுதல் படுத்துகிறது இப்பொழுது.

*****
*****

நானே நினைத்துக் கொண்டிருந்தேன் தங்கள் கடிதத்தை இணையத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள் ஜெயன் என்று கேட்க. அதில் உள்ள தங்கள் உழைப்பும், காலமும் அந்த கடிதம் என் மின்னஞ்சல் பெட்டியில் மட்டுமே இருப்பது எனக்கு குற்ற உணர்ச்சியை தந்து கொண்டிருந்தது. அளவற்ற செல்வதை தனியே பதுக்கி வைத்திருப்பது போல.
அது இப்பொழுது என் போன்ற கேள்விகளுடன் அலையும் எல்லோரையும் சென்று சேர்ந்தது சந்தோஷமாக இருக்கிறது.
am an artist at my work : my work of art is my life

-Manikandan AV-
 
http://www.livingincolours.blogspot.com/

 

அன்புள்ள மணிகண்டன்

உங்கள் ஆதங்கங்களின் ஊற்றுமுகம் என்பது இலட்சியவாதத்தில் இருந்து எழுவது. இலட்சியவாத நோக்கு ஒரு வயதில் முன்னோக்கியதாக இருக்கிறது. எதிர்காலத்தில் இருக்கவேண்டியதாக எண்ணும் விழுமியங்களை நிகழ்காலத்தில் எதிர்பார்க்கும் மனநிலை அப்போது இருக்கிறது. ஒரு வயது ஆகும்போது நாம் திரும்பிப்பார்க்க ஆரம்பிக்கிறோம். வரலாற்றை ஆராய்கிறோம். அப்போது வாழ்க்கையின் வளர்ச்சி நம் கண்ணுக்குப்படுகிறது. படிப்படியாக ,சீராக வரலாறு தன்னை சீர்ப்படுத்திக் கொண்டிருப்பது நம் கண்ணுக்குப்படுகிறது. இலட்சியவாதம் ஒரு சமநிலையை அடைகிறது. நான் நம்பிக்கைவாதி…வரலாற்றில் இருந்து நான் அந்த நம்பிக்கையைப் பெறுகிறேன்

தாதுவருஷப்பஞ்சம் பற்றிய சிறந்த ஆய்வுகள் ஒன்றும் வரவில்லை. தாதுவருஷப்பஞ்சம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் அப்படி அழைக்கப்படுகிறது. வங்கத்தில் அது வங்கப்பஞ்சம் எனப்படுகிறது. அங்குமிங்குமாக சில பதிவுகள் உள்ளன. வெள்ளைய இதழாளர்களின் புகைபப்டங்களும் பதிவுகளும் முக்கிய்மன்வை. சென்னை மெக்கின்ஸி கீழ்த்திசை சுவடி ஆவணக்காப்பகம் [தரமணி]யில் நிறைய  ஆவணங்கள் உள்ளன. முறையான ஆய்வுகள் செய்யப்படவில்லை

இலக்கியத்தில் நான் அறிந்தவரை பன்னலால் படேலின் வாழ்க்கை ஒரு நாடகம் [குஜராத்தி] முக்கியமான பதிவு. ரேயின் அகானி சங்கேத் ஒரு முக்கியமான திரைப்படம்- வங்கப் பஞ்சத்தைப் பற்றியது.

நம்முடைய எந்தவரலாறுதான் நம்மால் முறையாக எழுதப்பட்டுள்ளது?

ஜெ

 

பண்பாடு: ஆதங்கம்,அவநம்பிக்கை:ஒரு கடிதம்

அள்ளிப் பதுக்கும் பண்பாடு

பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’

முந்தைய கட்டுரைஅறிவியல்கதைகள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதியானம் கடிதங்கள்