வாசிப்பின் வழிகள் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

சமகால வாசிப்பு பற்றிப் “பண்படுதல்” நூலில் வாசித்தேன். முதன் முதலாக சிறுவர் மலர்களில் வெளியான பீர்பால்,தெனாலி ராமன் கதைகளே நான் வாசித்தவை. விகடனைத் தொடர்ந்து வாசித்த போது சுஜாதா.நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது எஸ்.ராவின் “கதாவிலாசம்” அதில் தொடராக வெளிவந்தது. தமிழில் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதே வியப்புக்குரியதாக இருந்தது. அதில் எஸ்.ரா. குறிப்பிட்ட அத்தனை நூல்களையும் வாசித்துவிட வேண்டும் என்று ஏறத்தாழ கோவையில் உள்ள அத்தனை புத்தகக் கடைகளிலும் ஏறி இறங்கி இருக்கிறேன். பொது நூலகங்களில் பெரும்பாலும் ஜெயகாந்தன் கிடைப்பார். அசோகமித்ரனோ வண்ணநிலவனோ சுந்தர ராமசாமியோ இன்னும் முப்பது நாற்பது வருடங்கள் கழித்துக் காணக் கிடைக்கலாம். மாணவனாகிய எனக்குத் தரப்படும் மிகச்சிறிய தொகையையும் மிச்சப்படுத்தியே என்னால் புத்தகங்கள் வாங்க முடியும். புத்தகம் வாங்கப் பணம் கொடுங்க என்றால் என் தந்தையிடம் இருந்து ஒரு முறைப்பு பரிசாகக் கிடைக்கலாம். ஆதலால் என்னால் எழுத்தாளர்களைத் “தேடி” அலைய முடியாத சூழ்நிலை. விமர்சகர்களால் பாராட்டப்படும் ஆக்கங்களையே என்னால் வாங்க முடியும். வாசிக்க முடியும்.

நானாகவே ஒரு முடிவெடுத்து அப்புத்தகம் ரசமானதாக இல்லாவிடில் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகிறேன். எதுக்கு வம்பு? தற்சமயம் புத்தகம் வாங்கச் செல்கிறேன் என்றால் “நவீனத் தமிழ் இலக்கிய” அறிமுகத்தை ஓரிரு முறை புரட்டிய பின் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல முக்கியமான ஆக்கங்களில் நான் ஏதேனும் படிக்காமல் விடுபட்டிருப்பின் அதைத் தேடி அலைகிறேன். இப்பொழுது அப்புத்தகம் எனக்கு மனப்பாடம். பிரபலமான பல கடைகளிலேயே ரமேஷ்-பிரேமின் படைப்புகள் கிடைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன்பு பிரபல கடைக்குச் சென்று அங்கு வேலை பார்க்கும் பெண்ணிடம் “பின் தொடரும் நிழலின் குரல் இருக்குங்களா?” என்று கேட்டேன். “இருங்க..கேட்டு சொல்றேன்” என்று உள்ளே சென்றவர் விடுவிடென்று போன வேகத்தில் வெளியே வந்து “நான் பின்தொடரும் பெண்ணின் நிழல்னு ஒரு புக்கும் இல்லீங்களே” என்றார். எட்டுத்திக்கும் மத யானையை எல்லா திக்குகளிலும் தேடியாயிற்று. Out of Stock. என்னுடைய ரசனையை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கிறீர்கள். ஒரு எழுத்தாளரைப் புதிதாக வாசிக்கிறேன் என்றால் அவருடையதில் ஆகச் சிறந்த படைப்பு எது என்பதை அறிந்து கொள்வேன். அது பிடித்திருந்தால் அவருடைய எல்லா ஆக்கங்களையும் படித்துவிட்டுத்தான் அடுத்த எழுத்தாளருக்குத் தாவுவேன். யுவனைப் பகடையாட்டத்தில் ஆரம்பித்து பயணக்கதை வரை வாசித்தாயிற்று.

இது என் வாசிப்பு முறை. சோதனைகள் மேற்கொள்வதற்குப் போதிய சுதந்திரம் எனக்கில்லாத பொழுது தங்களைப் போன்றவர்களைப் பெரிதும் சார்ந்திருப்பதில் தவறொன்றும் இல்லை. அது உங்கள் வாசிப்பின் மீதான நம்பிக்கை. அதே சமயம் எனக்கொரு தனி ரசனை உண்டு அல்லது அப்படியொரு பிம்பத்தை சுமந்துகொண்டு அலைகிறேன். வாசிப்பதனால் ஏற்படும் கர்வமும் உண்டு. இந்த இருபது வருட வாழ்க்கையில் உருப்படியா என்ன செஞ்சிருக்க என்று யாரேனும் வினவினால் இடைவிடாத வாசிப்பைத்தான் பதிலாக சொல்வேன். ஆம். எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கும் அளித்த செயல் ஒன்று இருக்குமானால் அது வாசிப்பே. நான் என்னுடையது மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்கையை வெவ்வேறு காலங்களை சூழ்நிலைகளை அவதானித்திருக்கிறேன். வாழ்ந்திருக்கிறேன். இன்னும் இப்பாதை முடிவற்று நீள்கிறது. உலகின் ஒட்டுமொத்த ஞானத்தையும் உள்ளங்கையில் அடக்கிவிட யத்தனித்திருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
கோகுல்ப்ரசாத்

அன்புள்ள கோகுல்பிரசாத்,

உங்கள் ஊக்கம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வயதில் உலக ஞானத்தை எல்லாம் அள்ளவேண்டும் எனத் தோன்றுவது ஒரு கொடுப்பினை. வாழ்த்துக்கள்.

சுந்தர ராமசாமியின் ஒரு வரி உண்டு. ‘நாம் நூல்களைத் தேட ஆரம்பித்தால் நூல்களும் நம்மைத் தேட ஆரம்பிக்கும்’. நூல்களைப் பற்றிய கவனத்துடன் இருந்தால் எங்கெங்கோ அவை தட்டுப்படும். ஒரு நூல் இன்னொன்றுக்கு இட்டுச்செல்லும்.

நான் எழுதிய அறிமுக, விமர்சன நூல்கள் [நவீனத்தமிழிலக்கிய அறிமுகம், கண்ணீரைப் பின் தொடர்தல், நவீன இலக்கிய முன்னோடிகள் வரிசை [7 நூல்கள்], உள்ளுணர்வின் தடத்தில், புதிய காலம், மேற்குச்சாளரம் போன்றவை பல நூல்களையும் ஆசிரியர்களையும் அறிமுகம் செய்பவை. இந்த இணையதளத்திலேயே நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் நூல்களும் சுட்டப்பட்டிருக்கிறார்கள்.

எஸ்.ராமகிருஷ்ணனும் பல இலக்கிய நூல்களையும் ஆசிரியர்களையும் அறிமுகம் செய்து எழுதியிருக்கிறார். தொடர்ச்சியான கவனமிருந்தால் நூல்களைக் கண்டடைந்து வாசிப்பது எளிதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைபயணம்: கடிதங்கள்
அடுத்த கட்டுரைசமண அறம்