தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்

அன்புள்ள ஜெயமோகன்,

விரிவான பதிலுக்கு மிக்க நன்றி.

பல கோயில்கள் இன்று உள்ளூர் தெய்வங்களின் ஆலயங்களாக உள்ளன. அப்படி ஏராளமான சமண ஆலயங்கள் தமிழகத்தில் உருமாறிய வடிவில் உள்ளன’.

நீங்கள் பிரசுரித்த புகைப்படங்களைப் பார்த்தபின் எனக்குத் தோன்றியது எப்படி சற்றும் மாறாமல் இந்துக் கோயில்கள் போலவே அவை உள்ளன என்பதே!

என்னைப் போல இந்தியாவை நேசிக்கும் ஆனால் இந்தியாவை முழுக்க அறியாத பலருக்கு உங்கள் பல கட்டுரைகள் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றன.

நம் சிற்பக்கலையில் சமணர்களின் பங்களிப்பின் அளவிற்கு பௌத்தர்களின் பங்களிப்பு உள்ளதா என்பதை அறியவும் ஆவலாய் உள்ளேன்.

அன்புடன்,
விஷ்வேஷ்

எகிப்தின் குடைவரை கோயில்

அன்புள்ள விஸ்வேஷ்,

சமண ஆலயங்களை இந்து மன்னர்களே பெரும்பாலும் கட்டியிருக்கிறார்கள். இந்து ஆலயங்களைக் கட்டிய அதே சிற்பிகள்தான் கட்டியிருப்பார்கள். பெரும்பாலும் ஒரு காலகட்டத்தின் சமணர் கோயில்களும் இந்து ஆலயங்களும் ஒரே சிற்பக்கலை மரபைச் சேர்ந்தவையாகவே எங்கும் உள்ளன.

மேலும் சமண ஆலயங்களில் உள்ள சிற்பங்களில் வித்யாதேவிகள், யட்சிகள் போன்ற சில சமண தேவதைகளைத் தவிர்த்தால் பெரும்பாலானவை இந்து தொன்மங்களைச் சேர்ந்தவையே. மும்மூர்த்திகளும் தேவியரும் அதிகமாகக் காணப்படுகின்றன. கணபதி, விஸ்வகர்மா, காலபைரவன் போன்ற மூர்த்திகளையும் அதிகமாகக் காணமுடிந்தது. அவற்றைக் கட்டுவித்த மன்னர்களின் நம்பிக்கையும் அவற்றில் பிரதிபலித்திருக்கலாம்.

பௌத்தம்தான் இந்தியாவில் ஆலயக் கட்டிடக்கலைக்கு அடிப்படைகளை அளித்தது என்று ஒரு கருத்து நவீனப் பண்பாட்டாய்வாளர்களால் கூறப்படுகிறது. இன்றைய கல் கட்டுமானங்களில் மிகப்பழையது எகிப்திய கட்டிடக்கலையே. அது மத்திய ஆசியாவின் கட்டுமானமுறையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. அந்தக் கட்டிடக்கலை காந்தாரக்கலை வழியாக பௌத்தத்துக்கு வந்தது. பௌத்தம் உருவாக்கிய பெரும் குடைவரை விகாரங்கள் அந்தக் கலைப்பாணியையும் தொழில்நுட்பத்தையும் கொண்டவை.

இதை அஜந்தா எல்லோரா குகைக் குடைவுகளில் காணலாம். கார்லே குகைவிகாரம் மத்திய ஆசிய அல்லது ஐரோப்பிய சிற்பிகளாலேயே செதுக்கப்பட்டிருக்கலாம். ஐரோப்பிய [யவன] பண்பாட்டுத்தாக்கம் அவற்றில் அதிகம். அவற்றில் உள்ள சிற்பங்களின் முகங்களே கூட ஐரோப்பியச் சாயல் கொண்டவை. கார்லே குகைவிகாரம் கட்ட யவன வணிகர்கள் நன்கொடை அளித்திருக்கிறார்கள் என்பதற்கான கல்வெட்டாதாரங்கள் உள்ளன.

இந்தியாவில் அதற்கு முன்பிருந்த ஆலயங்கள் மரத்தாலும் செங்கல்லாலும் ஆனவை. பௌத்தக் கட்டிடக்கலை வழியாக முதலில் குடைவரைக்கோயில்களும் பின்னர் ஒற்றைக்கல் செதுக்குக்கோயில்களும் வந்தன. பின்னர் கல்லடுக்கிக் கட்டப்பட்ட கோயில்கள் உருவாயின. இக்கோயில்களின் உறுப்புகள் பற்றிய கலைச்சொற்கள் எல்லாமே பௌத்தக் குடைவரை சிற்பக்கலையில் இருந்து பெறப்பட்டவை என்கிறார்கள். கோயில்களின் அமைப்பு பழைய மரக்கட்டிடங்களின் பாணியையும் குடைவரை விகாரங்களின் பாணியையும் கலந்து உருவாக்கப்பட்டது. இதுவே பௌத்தர்கள் நம் சிற்பக்கலைக்கு அளித்த முக்கியமான கொடை.

கார்லே மாபெரும் குடைவரை

பௌத்த சிற்பக்கலை இந்தியாவின் பிற சிற்பக்கலை மரபில் இருந்து நிறைய வேறுபாடுகள் கொண்டது. அஜந்தா, எல்லோரா குடைவரைகளிலும் சாஞ்சி, அமராவதி தூபிகளிலும் உள்ள சிற்பங்களில் பௌத்த தொன்மங்களை ஒட்டிய சிற்பங்களின் அளவுக்கே சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிற்பங்களும் நிறைய உள்ளன. இந்த அம்சம் பௌத்த சிற்பக்கலையின் தனித்தன்மை என்று சொல்லப்படுகிறது.

பௌத்த சிற்பங்களில் புத்தரின் நின்ற,இருந்த,கிடந்த தோற்றங்கள் முக்கியமானவை. பலவகையான யட்சிகள், கின்னரர்களின் சிற்பங்கள் உண்டென்றாலும் தாராதேவியின் சிற்பமே பௌத்த சிற்பங்களில் தனித்துவமும் அழகும் கொண்டது.

ஆனால் சமணச் சிற்பக்கலையும் இந்து சிற்பக்கலையும் பின்னாளில் வளர்ச்சி அடைந்த அளவுக்கு பௌத்த சிற்பக்கலை வளர்ச்சி அடையவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் பௌத்த சிற்பக்கலை பதினொன்றாம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குப் பின்னால் அமைக்கப்பட்ட பௌத்த விகாரங்களும் சைத்யங்களும் இந்தியாவில் இல்லை. பக்தி இயக்கத்தை ஒட்டி பௌத்தம் இந்தியாவில் மெல்லமெல்ல மக்களாதரவை இழந்து பின்வாங்கியது. மன்னர்கள், மற்றும் வணிகர்களின் ஆதரவால் சில இடங்களில் மட்டும் எஞ்சியிருந்தது.

சாஞ்சி,சாமானியர் சித்தரிப்பு [ஐரோப்பியச்சாயல்]

1193இல் பக்தியார் கில்ஜி நாலந்தா பல்கலையை அழித்துப் பல்லாயிரம் பிக்குகளைக் கொன்றது இந்தியாவில் பௌத்தம் கிட்டத்தட்ட முழுமையாகவே அழியக் காரணமாக அமைந்தது. மாறாக, சமணம் இஸ்லாமிய ஆதிக்கம் உருவானபின்னரும் தொடர்ந்து பெருவணிகர்களால் ஆதரிக்கப்பட்டது. விஜயநகர சிற்றரசர்களாலும், பேஷ்வாக்களாலும் வணிகர்களாலும் சமண ஆலயங்கள் மீண்டும் உருவாக்கப்பட்டன. அது பௌத்ததுக்கு நிகழவில்லை. பௌத்தக்கலை இந்தியாவுக்கு வெளியே அடைந்த மலர்ச்சியை இந்தியாவில் பெறவில்லை.

தமிழகத்தில் தொன்மையான பல பௌத்த விகாரங்களும் சைத்யங்களும் இருந்திருக்கின்றன. அவை எல்லாம் செங்கல்லாலும் மரத்தாலும் ஆனவை. இங்கே குடைவரை சைத்யங்களும் விகாரங்களும் உருவாகவில்லை. அதற்கான சில காரணங்களை ஊகிக்கலாம். பௌத்தர்கள் ஆலயங்களைக் கட்டுவதில்லை, துறவிகள் தங்கும் விகாரங்களையும் வழிபடும் சைத்யங்களையுமே அமைப்பார்கள். பௌத்தர்களில் தேரவாதிகள் பொதுவாகப் பெரிய கட்டுமானங்களை அமைப்பதில்லை [ஆனால் இந்தியாவிலேயே பெரிய குடைவரை சைத்யமான கார்லே குகை தேரவாதிகளால் உருவாக்கப்பட்டதே]. தேரவாதிகள் சிலைவழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள். தமிழகத்தில் ஆரம்பத்தில் செல்வாக்குடன் இருந்தது தேரவாதமே. ஆகவே சாதாரணமான கட்டிடங்களே உருவாக்கப்பட்டிருக்கக்கூடும்.

சோழர் காலத்தில் புகழுடன் இருந்த நாகை சூடாமணி விகாரம் ஸ்ரீவிஜய நாட்டின் மன்னரான சைலேந்திர வம்சத்தினைச் சேர்ந்த திருமாற விஜயோத்துங்கவர்மனால் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் அதற்கு நிவந்தமாக ஆனைமங்கலம் என்ற ஊரை அளித்தான். அதை அவன் மகன் ராஜேந்திரனும் உறுதிப்படுத்தினான். இத்தகவல்களைத் தாங்கிய செப்பேடுகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைத்த புத்தரின் செப்புத்திருமேனிகள் முந்நூறுக்கும் மேல். அவை நாகை புத்தர் சிலைகள் என அழைக்கப்படுகின்றன.

பராக்கிரம பாகு என்னும் இலங்கை மன்னன், கி.பி 1256 இல் சோழ நாட்டில் இருந்து பௌத்த பிக்குகளை இலங்கைக்குக் கொண்டு சென்று அங்கே பௌத்த மரபை வளர்த்தான் என இலங்கை வரலாறு சொல்கிறது. ஆகவே சோழர்காலத்தின் கடைசி வரைக்கும் சோழநாட்டில் பௌத்தம் வலுவாக இருந்திருக்கிறது. 1311இல் மாலிக் காபூர் படையெடுப்பில் நாகை சூடாமணி விகாரம் அழிக்கப்பட்டது என அமிர் குஸுரு குறிப்புகள் காட்டுகின்றன. அதன் பின் தமிழகத்தில் பௌத்தக் கட்டுமானங்களாக எதுவும் எஞ்சவில்லை.

ஆனால் பௌத்தர்கள் பதினாறாம் நூற்றாண்டு வரைக்கும்கூட தமிழகத்தில் ஆங்காங்கே இருந்தார்கள். கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்தின் உட்பிரகார நிலைக்காலில் உள்ள ஒரு கல்வெட்டை முனைவர் ஜம்புலிங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

1580இல் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு செவ்வப்ப நாயக்கன் தஞ்சையை ஆண்டபோது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது. இங்குள்ள திருமலைராஜபுரம் அந்தணர் கிராமம். அருகே உள்ள எலந்துறை அல்லது திருவிளந்துறை பௌத்தர்களின் கிராமம். திருமலைராஜபுரத்துக்கு ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டது. அதனால் எலந்துறைக்காரர்களின் கொஞ்சம் நிலம் பறிபோயிற்று. இதை ஈடுசெய்ய செவ்வப்ப நாயக்கரின் ஆணைப்படி திருமலைராஜபுரம் மக்கள் தங்கள் ஊரில் அதே அளவு நிலத்தை புத்தர் கோயிலுக்கு அளித்தார்கள். அந்நிகழ்ச்சியை இக்கல்வெட்டு சுட்டுகிறது.

இதை ஏன் கவனிக்கவேண்டும் என்றால், தமிழகத்தில் சமண, பௌத்த ஆலயங்களை இந்து மன்னர்கள் இடித்தார்கள், சமண பௌத்த மதங்களை அழித்தார்கள் என ஒரு பொய் கடந்த சில ஆண்டுகளாக இடதுசாரி வரலாற்றுத் திரிபாளர்களால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு நிலைநாட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஆதாரமாகக் காட்டுவது சைவ வைணவ நூல்களில் உள்ள பௌத்த, சமண மதக் கண்டனங்களையும் சில தொன்மக்கதைகளையும் மட்டுமே.

தமிழகத்தில் கடுமையான மதப்பூசல் இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தப்பூசல் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் நடுவேயும் இருந்தது. பக்திமரபினருக்கும் தாந்த்ரீகர்களுக்கும் நடுவேயும் இருந்தது. அதற்கு அப்பால் மக்கள் மதப்பூசலிட்டதற்கோ மன்னர்கள் மதநிலையங்களை அழித்தமைக்கோ ஒரு சான்றுகூட இல்லை என்பதே உண்மை. நேர் மாறாக மன்னர்கள் எல்லா மதங்களையும் சமமாக ஆதரித்தமைக்கு ஏராளமான திட்டவட்டமான கல்வெட்டாதாரங்கள், செப்பேட்டுச்சான்றுகள் உள்ளன.

தமிழகத்தில் கடைசியாக ஆண்ட இந்து மன்னர்கள் நாயக்கர்கள். அவர்கள் பெரும்பாலும் வைணவர்களாக இருந்தாலும் சைவத்தை ஆதரித்தனர். சமண, பௌத்த ஆலயங்களையும் ஆதரித்தனர். பதினாறாம் நூற்றாண்டுவரைக்கும்கூட பௌத்தர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மன்னர்கள் கவனம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் மத ஒற்றுமையுடன் விட்டுக்கொடுத்து வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு சமணரேனும் எஞ்சும் ஊர்களில் இன்றும்கூட சமண ஆலயங்கள் அப்படியே நீடிப்பதை வடதமிழகத்தில் காணலாம். தென் தமிழகத்தில் முழுமையாகவே மக்கள் சமணத்தை விட்டுவிட்டு, சமணத்தின் பண்பாட்டுத்தடங்கள் கூட மக்கள் வாழ்க்கையில் இல்லாமலான பிற்பாடு, கைவிடப்பட்டுக் கிடந்த சமண ஆலயங்கள்தான் சைவ, வைணவ மதங்களுக்குரியவை ஆயின. அதுவும் அந்த மக்களாலேயே வழிபாட்டிடங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

ஆகவே தமிழகத்தில் எந்த சமண பௌத்த ஆலயங்களும் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. சமண ஆலயங்கள் பல நிலைகளில் இன்றும் உள்ளபோது பௌத்த சிலைகள் மட்டுமே எஞ்சுகின்றன என்பதை வைத்துப்பார்த்தால் தமிழக பௌத்த மடாலயங்கள் மரத்தாலும் செங்கல்லாலும் ஆனவையாக இருந்திருக்கலாம் என்று ஊகிக்கலாம். அவை காலப்போக்கில் கைவிடப்பட்டு அழிந்திருக்கலாம். தமிழகத்தின் பல பகுதிகளில் புத்தர்சிலைகள் உள்ளன. சில ஊர்களில் புத்தர்சிலைகள் நாட்டார் தெய்வங்களின் பெயர்களில் வழிபடப்படுகின்றன.

தமிழக புத்தர் சிலைகளில் நாகப்பட்டினம் சிலைகள் மட்டுமே கலைரீதியாக முக்கியமானவை என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவை சென்னை, தஞ்சை அருங்காட்சியகங்களில் உள்ளன. பிறசிலைகள் வெறும் வழிபாட்டுச் சின்னங்கள் மட்டுமே. தமிழகத்தில் மற்றபடி முக்கியமான பௌத்த தலங்கள் ஏதும் இல்லை என்பதே என் எண்ணம்.

ஜெ

கார்லே ஃபாஜா குடைவரை விகாரங்கள்


எல்லோரா குறிப்பு

சாஞ்சி பயணக்குறிப்பு

பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி

சோழநாட்டில் பௌத்தம்

போதி இணையதளம்


சோழநாட்டில் பௌத்தம், இணையதளம்

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 25, 2012

முந்தைய கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 5
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60