புஷ்டிமார்க்கம் – ஒரு கடிதம்

திரு ஜெயமோகன்,

உங்கள் சமணத் தலங்கள் பயணக் கட்டுரை தொடர்ந்து படித்து வருகிறேன். பிரமிப்பும், பெருமையும், ஆனந்தமும் மாறி மாறி வருகின்றன. உங்களது இந்தப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

ஒரு நாள் முழுக்கப் பார்த்ததை ஒரு பக்கப் பதிவாக செய்திருப்பது குறைவாகத் தெரிகிறது. இன்னும் விரிவாக எழுதத் திட்டம் உள்ளதா?

கடைசிக் கட்டுரை பதினைந்தில் ஒரு சில விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன். இஸ்கான் புஷ்டி மார்க்க வைணவம் அல்ல. அது துவைத மார்க்கத்தை சேர்ந்தது. பிரம்ம-நாரத-மத்வ-கௌடீய சம்பிரதாயம் என அவர்கள் அதைக் கூறிக் கொள்கின்றனர். சைதன்யருக்கு மத்வரே குரு.

இன்னொன்று – வல்லபர் பற்றியது. அவர் தெலுங்கு பிராம்மணர். ஆனால் குஜராத்தில் பிறந்தவர். காசியில் படித்து அங்கேயே பெரும்பாலும் வாழ்ந்தவர். விரஜ (பிருந்தாவனம்) தொடர்பு உண்டென்றாலும் காசியே அவரது வாசஸ்தலம். அங்கேயே மறைந்தார். பூத உடலுடன் சித்தி அடைந்திருக்கின்றார். அவர் கங்கைக் கரையில் இருந்து ஆகாய மார்க்கமாக ஒளி வடிவமாக மறைந்தார் என்று சாட்சிகள் கூறிய பின்னரே அவர் உண்மையில் இறந்தார் என மக்கள் நம்பினார்.

வெங்கட்

அன்புள்ள வெங்கட்,

வல்லபர் பற்றிய தகவலுக்கு நன்றி. நினைவுப்பிழை. திருத்திவிடுகிறேன்.

இஸ்கானின் துவைத சித்தாந்தம் பற்றி மத்வ தத்துவம் பற்றிய கட்டுரையில் முன்னரே எழுதியிருக்கிறேன். அவர்கள் தத்துவார்த்தமாக புஷ்டிமார்க்கத்தில் இருந்து மாறுபட்டவர்கள்தான். அதேபோல சுவாமிநாராயண் இயக்கமும் புஷ்டிமார்க்கத்தில் இருந்து தத்துவார்த்தமாக மாறுபட்டதே.

ஆனால் வைணவ வழிபாட்டில் புஷ்டிமார்க்கம் ஒரு தனிப்போக்கை ஆரம்பித்தது. பரிபூர்ண சரணாகதியுடன் ஆடியும் பாடியும் ‘கோலாகல’ கிருஷ்ணனை வழிபடுவது அது. அதுவே ராதாமாதவ பாவனை எனப் பின்னாளில் இன்னும் விரிவடைந்தது. இந்தியாவின் பஜனை சம்பிரதாயத்தின் பெருவளர்ச்சி அதன் வழியாகவே நிகழ்ந்தது.

அந்த வழிபாட்டுமுறையே இஸ்கான் இயக்கத்துக்கும் சுவாமிநாராயண் இயக்கத்துக்கும் எல்லாம் அடிப்படையாக உள்ளது. அதையே நான் அக்கட்டுரையில் சுட்டிக்காட்டினேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபுரிதலின் ஆழம்
அடுத்த கட்டுரைஇந்தியா ஒன்றா?