நன்றி
ரத்தன்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
என்னுடைய புரிதல் என்ன வென்றால் :
வளர்ந்த நாடுகள் (developed) – முதல் உலகம்
வளரும் நாடுகள் (developing ) – இரண்டாம் உலகம்
பின்தங்கிய நாடுகள் (underdeveloped ) – மூன்றாம் உலகம்
என்பதுதான். இது சரியா என்று தெரியவில்லை.
ஆனால் உண்மையான மூன்றாம் உலக நாடான நைஜீரியாவில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தியா ஒரு மூன்றாம் உலகம் இல்லை என்று சொல்ல காரணங்கள் இருக்கின்றன. நைஜீரியாவைப்பற்றி சிலவற்றை எழுதுகிறேன். அது இந்தியாவுடன் ஒப்பிட்டுப்பார்க்க வசதியாக இருக்கும். பின்னர் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடா என்று முடிவு செய்ய வசதியாக இருக்கும்.
நைஜீரியா:
அரசியல் நிலைத்தன்மை இல்லாமை. கிறிஸ்தவர் ஒருவர் நாட்டின் அதிபராக உள்ளார். இது வடக்கே பெருன்பான்மையான மக்களை வைத்து அரசியல் நடத்தும் கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தினமும் போகோ ஹராம் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பால் வடக்கு நகரங்களில் ஒரு குண்டு வெடிக்கிறது. நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நிரந்தரமான ஒரு தனிநபர் பாதுகாப்பற்ற தன்மை இருக்கிறது. ஆள்கடத்தல் வழிப்பறி போல குற்றங்கள் தினமும் நடக்கிறது. நாடெங்கும் வழிப்பறிகள், வீடு புகுந்து ஆயுதம் தாங்கிய கொள்ளைகள் சர்வ சாதாரணம். மாலை ஏழு மணிக்குமேல் ஊரே அடங்கிவிடும். காவல் துறைக்குக் குற்றங்களைக் கட்டுப்படுத்த அவசியமும் இல்லை. திறமையும் இல்லை. வசதியும் இல்லை. சம்பளமும் போதுமானதாக இல்லை.
எந்த ஒரு நைஜீரியக் குடிமகனும் அன்றாட உணவுக்கு வேலை செய்தால்தான் உண்டு. இங்கே petroleum கிடைகிறது. அதுதான் நைஜீரியாவின் வருவாய். ஆனால் நைஜீரியாவில் அதன் பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவு. கட்டணம் என்று ஒன்றும் இல்லை. அந்தந்த நேரத்துக்கு ஏற்றாற்போல் வாகன ஓட்டிகள் வாங்குவதுதான் கட்டணம்.
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மின்சாரம் கிடைத்தால் அதுவே ஒரு வரம். எங்கும் ஜெனரேட்டர்கள். ஜெனரேடர் வாங்க வசதி இல்லாதவர்கள், பெட்ரோல் போட வசதி இல்லாதவர்கள் மின்விசிறிகூட இல்லாமல் தூங்கப் பழகிக்கொள்ள வேண்டும். கல்விக்குப் பெரும் பணம் செலவிட்டால்தான் உள்ளேகூட நுழைய முடியும். அப்படிக் கல்வி கற்று வந்தால்கூட வேலைகள் கிடைபதில்லை. ஏனென்றால் மின்சார வசதிகள் காரணமாகவும், பாதுகாப்புக் குறைவாலும் இந்த நாட்டில் எந்த ஒருவரும் தொழில் தொடங்கத் தயங்குகிறார்கள். பாதுகாப்பான குடிநீர் என்பது இங்கே அறவே இல்லை. மருத்துவ வசதிகள் இல்லை. இங்கே பகல் நேரத்தில் மட்டுமே நீண்ட தூரப் போக்குவரத்துகள் இயங்குகின்றன. இரவில் பயணம் செய்தால் ஆயுத வழிப்பறிகள் உறுதி. ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் பெண்களைக் கண்டிப்பாகப் பாலியல் கொடுமைகள் செய்வார்கள்.
இந்தியாவை ஒரு மூன்றாம் உலக நாடா என்று தீர்மானிப்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். நான் ஒரு இந்தியன் என்பதால், நாட்டுப்பற்று கொண்டு இதை எழுதவில்லை. ஒரு பொதுவான அணுகுமுறையோடு இதை எழுதுகிறேன்.
அன்புடன்
குரு
லாகோஸ், நைஜீரியா
அன்புள்ள ஜெ,
இதைப் போன்ற அனுபவங்கள் நேரடியாக வாய்க்கப் பெற்றவருக்கு அல்லது குறைந்த பட்சம் அப்படிப்பட்டவர்களின் அனுபவங்களை நம்பிக் கேட்டவர்களுக்குத் தெரியும் நீங்கள் எழுதியுள்ள வரிகளின் சத்தியம். ஊரில் எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு நண்பர். வயது 75. பிரம்மச்சாரி. 16 வயதில் பகவத் கீதையை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி காசி, ஹிமாலயம், அமர்நாத், நேபாளம் என்று சுற்றி அலைந்தவர். கிட்டத்தட்ட 55 வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஊருக்கே வந்துவிட்டார். அவர் தரிசித்த புண்ணியத்தலங்களை மையமாக்கியதல்ல அவருடைய கடந்த கால வாழ்க்கையின் இன்றைய ஞாபகங்கள். அவருக்குப் பசி என்று தோன்றிய போதெல்லாம் ஏந்திய கரங்களில் அதிசயமாக வந்து விழுந்த சோறும், சோறு போட்டு அவரைப் போற்றிய இந்த தேச மக்களும் தான் அவருடைய தரிசனமும், தெய்வங்களும். நர்மதைக் கரையின் காடுகளில் வழிதவறி மாட்டிக் கொண்டு மயங்கிய போதும் சோறிட்ட ஏழைக்கிழவியும், கோனார்க்கில் 23 வயதுடைய இளைஞன் தன் மனைவியிடம் இரவு ஷிப்டுக்கு வேலைக்குக் கிளம்பும் முன் ‘இவருக்கு ரொட்டி கொடுத்து வீட்டிற்குள் படுக்க வை’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியதும், அமர்நாத்தில் தனியாகப் போய் பனியில் உறைந்தபோது எங்கிருந்தோ ஒருவர் வந்து சூடாக சப்பாத்தியும், சாயாவும் கொடுத்து உயிர் கொடுத்து மறைந்ததும் இன்னும் இது போல நூறுநூறு ஞாபகங்களும் தான் அவரின் பாரத தரிசனம்.
‘எப்போதாவது உணவிடாமல் துரத்தப்பட்ட அனுபவம் உண்டா?’ என்று கேட்டேன். அதற்கு பதிலளிக்க அவர் சொன்ன வார்த்தையே எனக்கு மிகவும் பிடித்துப் போனது; “ஒருதரம் கூட ரெண்டாந்தரம் கேட்டதில்ல அம்பி”. சொல்லும் போதே அவர் கண்களிலிருந்து அடக்கமுடியாமல் கண்ணீர் வந்துவிட்டது. “ஒரு வேளை சாதம் போட்டுட்டு, முப்பது வருஷம் வேலை வாங்கிட்டா அன்னபூரணி அம்மா” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். ஆம், கடைசி முப்பது வருடம் அவர் காசியில் தருமபுர மடத்தின் அன்னசத்திரத்தில் உணவு பரிமாறுதல், சமையல், கணக்குப்பிள்ளை, என்று எல்லா வேலையும் பார்த்தார். இந்த அனுபவங்களை வைத்து ஒரு கதை எழுதினேன் (அன்னதாதா), நண்பர்கள் பலருக்குப் பிடித்திருந்தாலும், சிலருக்கு ‘நல்ல கற்பனை – அவ்வளவுதான்’. இப்படியெல்லாம் இந்த நாட்டில்தான் நிகழமுடியும் என்கிற அனுபவமும், நம்பிக்கையும் இல்லாமல் இருப்பவர்களை எண்ணி நகைத்துக் கொண்டேன்.
இந்த முறை ஊருக்குச் சென்றபோது உங்கள் பயணம் பற்றியும், பயணமுறை பற்றியும் எங்கும் கிடைக்கும் தர்ம உணவைப் பற்றியும் சொன்னேன். “ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்கறா மாதிரி ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு குணம் உண்டு. இது நம்ப நாட்டோட ஆன்மவாசனை. இன்னும் ஐயாயிரம் வருஷம் ஆனாலும் இது மாறாது” என்றார். எனக்கு நம்பிக்கையாக இருந்தது.
நன்றி,
பிரகாஷ்